சென்னையையும் பெங்களூருவையும் இணைக்கும் தங்க நாற்கரச் சாலை அது. அந்தச் சாலை வழியில் அமைந்திருக்கின்ற ஒரு கிராமம் மின்னூர். வேலூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்து இருக்கும் முக்கிய கிராமங்களில் அதுவும் ஒன்று. மின்னூரில் தலித்துகள் மற்றும் முதலியார் சாதியைச் சார்ந்த மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அவ்வூரின் ஊராட்சிமன்றத் தலைவர் தலித் சமூகத்தைச் சார்ந்தவர்; துணைத்தலைவர் முதலியார் சாதியை சார்ந்தவர். ஓராண்டுக்கு முன்பு தலைவருடன் ஒத்துழைக்காமல் காசோலைகளில் கையெழுத்துப் போடாமல் பல்வேறு பிரச்சனைகள் நடந்திருக்கின்றன. அதையெல்லாம் தங்களுக்கேயுரிய சாதிய சாதுர்யத்தோடு கமுக்கமாய் மறைத்து விட்டனர் சாதி இந்துக்கள்.

Dalit womenவிஜயலட்சுமி என்பவர் வேலூர் தொரப்பாடியில் அமைந்துள்ள தமிழகத்தின் மிகப்பெரிய சிறையில் பெண்கள் சிறைப் பிரிவின் காப்பாளராகப் பணி புரிகிறார். ஏறக்குறை பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக அத்துறையில் அவர் பணியாற்றி வருகிறார். மின்னூரில் உள்ள தலித் சமூகத்தைச் சேர்ந்த இவருக்கும் அதே ஊரைச் சார்ந்த முதலியார் சாதியை சார்ந்த சாரதி என்பவருக்கும் இருபது ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. காதல் திருமணம் செய்பவர்களையே விடாத சாதி வன்மம், அப்போது இவர்களை என்ன பாடுபடுத்தியிருக்கும் என்பதை நாம் கற்பனையே செய்யத் தேவையில்லை. இருவரும் தனித்தே வாழ்ந்திருக்கின்றனர். யாரும் அவர்களுக்கு உதவவில்லை. சாரதியின் குடும்பத்தார் அவரை முழுவதுமாகப் புறக்கணித்து விட்டனர்.

கடந்த வாரம் விஜயலட்சுமி வேலைக்கு சென்றுவிட்ட பிறகு அவருடைய கணவர் சாரதி திடீரென்று இறந்துவிட்டார் என்று செய்தியைக் கேட்ட விஜயலட்சுமி பதறியடித்துக் கொண்டு ஓடி வந்து, தன்னுடைய கணவரின் உடலைக் கண்டு அழுது துடித்திருக்கிறார். கணவருக்கு செய்ய வேண்டிய இறுதிச் சடங்குகளைச் செய்ய நினைத்த விஜயலட்சுமி, கணவருக்கு தானே கொள்ளிப் போடுவேன் என்று சொல்ல, அதுவரை விலகியே இருந்த சாரதியின் சாதியினர் தலித்துகள் சிலரை தங்களுடன் வைத்துக் கொண்டு அப்படிச் செய்யக்கூடாது; வேண்டுமென்றால் தூர உட்கார்ந்து அழு என்று கூறி அவரைத் துரத்தியிருக்கின்றனர். அவருக்கு ஆதரவாகப் பேசிய அருந்ததியின மக்களையும் அவர்கள் பிணத்தின் அருகேகூட சேர்க்கவில்லை.

சாவின் கொடுமையைவிட இது மிகவும் வருத்த, பெண்களுடன் சேர்ந்து ஆம்பூர் கிராமிய காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வந்திருக்கின்றனர் அவர்கள். காவல் துறையில் வேலை செய்பவர் என்று கூட பார்க்காமல் சாவின் கோலத்திலே வந்திருக்கின்றாரே ஒரு பெண் என்றும் பாராமல், அவர்களை காவல் நிலையத்தினுள்ளே கூட அனுமதிக்கவில்லை காவல் நிலைய அதிகாரிகள். அவர்கள் கொடுத்த புகார் மனுவைக்கூட பெறவில்லை என்று விஜயலட்சுமியின் உறவினர்கள் நம்மிடம் கோபத்தோடு கூறினார்கள். ஆம்பூரில் இருக்கும் தலித் அமைப்புகளுக்கு இந்த செய்தி பரவ இந்திய குடியரசுக் கட்சி, அம்பேத்கர் மன்றம், மனித உரிமைகளுக்கான குடிமக்கள் இயக்கம் மற்றும் சமூக ஆர்வலர்கள் காவல் நிலையத்திற்கு வந்தனர். அழுது கொண்டிருந்த விஜயலட்சுமியையும் மக்களையும் பார்த்த அவர்கள் காவல் நிலைய ஆய்வாளரிடம் இது பற்றி கேட்க, அவர் எது வழக்கமோ அதைச் செய்ய வேண்டும் என்று வழக்கமான பதிலையே சொல்லி இருக்கிறார். கணவனை இழந்த அந்தப் பெண்ணின் உரிமையைப் பெற்றுத்தர அவருக்கு ஆர்வமில்லை.

பல்வேறு சமூக எதார்த்தங்களை எடுத்துக் கூறி இது பண்பாட்டு மாற்றம் என்றும் அதைத் தடுக்க முடியாது என்றும் தலித் அமைப்புகள் கண்டிப்பாகக் கூற வேறு வழியின்றி விஜயலட்சுமி கொள்ளி வைக்க காவல் துறை ஒத்துக் கொண்டு, சாதி இந்துக்களுக்கு இந்த தகவலைச் சொன்னது. எல்லாவற்றையும் பேசிவிட்டு வரும்போது மாலை ஏழு மணியாகிவிட்டது. காவல் துறையினர் சொன்னதைக் கேட்டவுடன் ஒரு சாதி இந்துகூட அந்தப் பிணத்தின் அருகே இல்லாமல் எல்லாவற்றையும் அப்படியே போட்டுவிட்டுப் போய்விட்டனர். இருண்டத் தொடங்கிய அந்த நேரத்தில் மழை பெய்தது. யாருமே இல்லாமல் இருந்த பிணத்தை அடக்கம் செய்ய தலித்துகள் மட்டுமே இருந்தனர். விஜயலட்சுமி அவருடைய கணவருக்கு கொள்ளி வைத்தார். மழை அடங்கியது.

எத்தனை ஆண்டுகள் ஆனால்தான் என்ன, சாதியின் பிடி தளராத இந்து சமூகத்தின் ஆணி வேரை அசைக்க முடியாமல் தானே கிடக்கிறோம். ஆனாலும் மின்னூரில் சொல்லுகிறார்கள் : "நாங்க சாதியெல்லாம் பாக்கிறது இல்லைங்க; அண்ணந்தம்பியாட்டந்தான் வாழுறோம்.'

Pin It