"அரசியல் அமைப்பு சமூக அமைப்பின் மீதுதான் அமைந்துள்ளது என்பதை நிரூபிப்பதற்கு எந்த வாதங்களும் தேவையில்லை. உண்மையில் அரசியல் அமைப்பின் மீது சமூக அமைப்பு ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதில் அய்யமில்லை. சமூக அமைப்பு அரசியல் அமைப்பின் செயல்பாட்டை மாற்றலாம்; அதைச் செல்லுபடியற்றதாக்கலாம்; இன்னும் சொல்லப்போனால் அதனைக் கேலிக்கூத்தானதாகவும் ஆக்கலாம். இந்தியாவைப் பொருத்தவரை, இந்து நாகரிகம் மற்றும் பண்பாட்டின் ஒரு தனித்துவமான விளைபொருளான ஜாதி அமைப்பின் மீதே இச்சமூக அமைப்பு கட்டப்பட்டுள்ளது.'' டாக்டர் அம்பேத்கர், ஆங்கில நூல் தொகுப்பு : 1, பக்கம் : 167

இந்திய நாடாளுமன்றத்தின் 16 ஆவது மக்களவைத் தேர்தல் முடிவுகள் மே மாத இறுதியில் வெளிவந்த பிறகு, இந்தியாவில் மீண்டும் ஜனநாயகம் தழைத்தோங்குவதாக ஆளும் வகுப்பினரும் ஊடகங்களும் தம்மைத்தாமே பாராட்டிக் கொள்ளும். இந்த அரசியல் ஜனநாயகம் தழைத்தோங்க வாக்காளர்களுக்கு கோடிக்கணக்கான பணம் லஞ்சமாக கொடுக்கப்பட்டது பற்றியோ, மக்கள் நம்பும் கடவுளர்களையும் மதங்களையும் முகமூடியாக அணிந்துளர். வாக்கு அறுவடை செய்தது பற்றியோ, இந்தியா முழுவதும் உள்ள வாக்காளர் தொகுதிகளில் தலித் மக்கள் தீண்டத்தகாத சிறுபான்மையினராக, 66 ஆண்டுகளுக்குப் பிறகும் தாங்கள் விரும்பும் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க முடியாத கொடுமையைப் பற்றியோ இந்த ஜனநாயக நாட்டில் விவாதிக்க வாய்ப்பில்லை.

ஜாதி அமைப்பு ஜனநாயகத்திற்கு நேர் எதிரானது. ஆனால் ஜாதியை முன்னிறுத்தியே எல்லா தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் தீர்மானிக்கப்படுகின்றனர். ஆனாலும் இது ஜனநாயக நாடுதான்.

தேர்தலில் மோடி பயங்கரவாதம் குறித்து எதிரும் புதிருமாக நாடெங்கும் பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டன. பத்து ஆண்டுகளுக்கு முன்பு வாஜ்பேயி என்ற "மென்முகத்தை' காட்டி வாக்கு கேட்ட இந்துத்துவ சக்திகள், இம்முறை மோடி என்ற வன்முகத்தை காட்டியே வாக்கு கேட்கத் துணிந்துள்ளன. பா.ஜ.க. ஆட்சியில் எண்ணற்ற நெருக்கடிகளை நாடு சந்தித்த நிலையிலும், இந்துத்துவ ஆபத்து என்பது மதச்சிறுபான்மையினருக்கான ஆபத்து என்பதாக மட்டுமே பார்க்கப்படுகிறது. அதனால்தான் பா.ஜ.க.வுடன் மதச் சிறுபான்மைக் கட்சிகள் கூட்டு சேர்வதில்லை. ஆனால், தலித் மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட கட்சிகள் எல்லாம் கூட்டணி சேர்கின்றன.

மதவாதக் கட்சிகள் ஆட்சிக்கு வரக்கூடாது என்று நீண்ட காலமாக முழங்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள், அவ்வாறு அவை வராமல் தடுப்பதற்கு எந்த முயற்சியையும் செய்ய வில்லை. அ.தி.மு.க. வெளிப்படையாக பா.ஜ.க.வுடன் உறவை ஏற்படுத்திக் கொள்ளும் என வெளிப்படையாகத் தெரிந்தாலும் கம்யூனிஸ்டுகள் வெளியேற்றப்படும்வரை அந்த அணியில் இருந்தன. ஆனால் காங்கிரசுடனும் பா.ஜ.க.வுடனும் கூட்டணி இல்லை என தி.மு.க. வெளிப்படையாக அறிவித்த பிறகும் தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துக் கொள்ள அவர்கள் தயாரில்லை.

ஒரு கட்சி என்ற அளவில் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் பா.ஜ.க.  ஆட்சிக்கு வருவதைத் தடுக்க இயலாது. மூன்றாவது (மாற்று) அணியை உருவாக்குவதிலும் அவர்கள் இறுதிவரை சுணக்கம் தெரிவித்தே வந்தனர். இறுதியில் வெற்றி தோல்விகளைப் பற்றி தங்களுக்கு கவலை இல்லை என்று தனித்து நின்று வாக்குகளைப் பிரிப்பதற்கே அவர்கள் வழிவகுத்தனர்.

தமிழகத்தைப் பொருத்தவரை, தேர்தல் முடிவுகளுக்குப்பிறகும் பா.ஜ.க. என்ற மதவாத – ஜாதிவாத அணி எதிர்காலத்தில் தலைதூக்காதவாறு அணி சேர்க்கைகள் அமைய வேண்டும். தலித்துகள், மதச்சிறுபான்மையினர் பிரதிநிதித்துவத்தை உள்ளடக்கிய குறைந்தபட்சம் தேர்தல் அறிக்கையிலும் முற்போக்கு செயல்திட்டங்களை அளித்துள்ள தி.மு.க. தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணியே மத்தியில் பா.ஜ.க. அல்லாத அணிக்கு ஆதரவளிப்பதாக இருக்க வேண்டும்.

தமிழகத்தில் காங்கிரஸ் படுதோல்வியைத் தழுவ வேண்டும் என்று தமிழக மக்களின் விருப்புரிமையாக இருந்தாலும், மதவாத அணியை முறியடிப்பதற்கு அதன் ஆதரவை எளிதில் புறந்தள்ளிவிட முடியாது. பா.ஜ.க., காங்கிரஸ் அல்லாத மாற்று அணி உருவாக வேண்டும் என்பதற்கு உண்மையில் எந்தக் கட்சியும் முனைப்பு காட்டாமல் பேசுவதால் மட்டுமே அது சாத்தியமாகிவிடாது.  

Pin It