பரமக்குடி படுகொலையை முன்வைத்து சர்ச்சையொன்று கிளம்பியிருக்கிறது. ஒவ்வொரு முறையும் தலித் மக்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டவிழ்க்கப்படும் போதெல்லாம் – இந்த சர்ச்சை கை கால்கள் முளைத்துக் கொண்டு அலைவது வழக்கம். குறிப்பாக, பட்டியல் சாதியினரில் ஒரு பிரிவினரான பள்ளர்கள், தங்களை தலித் என்று விளிப்போரை கடுமையாக சாடுவதோடு, தாங்கள் தலித்துகளே அல்லர் என்பதை நிறுவும் பொருட்டு – புதிய புதிய விளக்கங்களையும் வரலாற்றுக் கதைகளையும் கூறுகின்றனர்.

பள்ளர்கள் தாங்கள் மட்டுமே மருத நிலத்தை ஆண்ட வேளாண் குடிமக்களான மள்ளர்கள் என்றும், மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் மள்ளர்களே என்றும் கூறிக் கொள்கின்றனர். எந்த அடிப்படையும் ஆதாரமுமற்ற இத்தகு கட்டுக் கதைகள், இச்சாதிய சமூகத்தில் ஆற்றவிருக்கும் பங்கு, நிலைத்து நின்றுவிட்ட இந்துமத சூழ்ச்சிகளுக்கும் நீடித்து வரும் பார்ப்பன ஆதிக்கத்திற்கும் துரும்பளவு கூட எதிர்வினையாற்றப் போவதில்லை. மாறாக, இச்சாதியக் கட்டமைப்பின் கெட்டித் தன்மைக்கு மேலும் வலுவேற்றும் வேலையையே அது ஆற்றும்.

உலகம் முழுவதிலும் குறிப்பாக இந்தியாவில் மொழி மற்றும் பண்பாட்டுப் பாகுபாடின்றி, இம்மண்ணின் தொல்குடிகள் அனைவருக்குமே செருக்கோடு பகிர்ந்து கொள்ளக் கூடிய வரலாறு நிச்சயம் உண்டு. அதைப் போலத்தான் வேளாண் தொழில் செய்து வந்த பள்ளர்கள் குறித்த குறிப்புகள், மள்ளர்கள் என்ற பெயரில் சங்க இலக்கியங்களில் இடம் பெற்றுள்ளன. உணவு உற்பத்தி எக்காலத்திலும் முதன்மைத் தொழிலாக இருக்கும்போது, நதிக்கரையோர நிலங்களை வைத்துக் கொண்டு விவசாயம் செய்தவர்களே முதன்மை பெற்ற சமூகமாக இருந்ததில் வியப்பேதுமில்லை. இது, அவர்களின் புவியியல் சார்ந்த வாழ்வியல். இதே போன்ற புவியியல் சார்ந்த வாழ்வியல் ஒவ்வொரு நில மக்களுக்கும் இருந்தது.

இதில் எதுவொன்றையும் உயர்வானதாகவோ, மற்றொன்றை தாழ்வானதாகவோ கருத நியாயமில்லை. வேளாண் தொழிலில் ஈடுபட்டிருந்தவர்களைத் தவிர, பிற தொழில் செய்கிற மக்களும் அக்காலத்தில் வாழ்ந்தனர். அவர்களின் உழைப்பை அக்கால மள்ளர்கள் பெறவே செய்தனர். எத்தொழில் செய்த மக்களும் சுயமரியாதையோடும் சம தகுதியோடுமே வாழ்ந்திருக்கிறார்கள். இந்நிலையில், வேளாண் தொழில் மட்டுமே புனிதமானது என்ற கருத்தியலை பள்ளர்களும் முன் வைக்கக் காரணம், பிற தலித் பிரிவினரைப் போல மலமள்ளுவது, பறையடிப்பது போன்ற இழிதொழில்களைத் தாங்கள் செய்யவில்லை என நிறுவுவதற்காகவே!

இம்மண்ணில் ஜாதி வேரூன்றி, இரண்டாயிரம் ஆண்டுகள் ஆகிவிட்டன. பிரம்மனின் உடலில் எங்கெங்கிருந்து யார் யார் தோன்றினார்கள் என்ற வர்ணாசிரம வரையறையும் அதற்கு முன்பே தோன்றிவிட்டது. இந்து மதக் கட்டமைப்பின் ஆதிக்க வரலாற்றைப் புறந்தள்ளாமல், சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் மள்ளர்களே எனக் குறிப்பிடுகின்றனர் பள்ளர்கள். வரலாற்று ரீதியாக நிரூபிக்கப்படாத விஷயங்களை, தங்களின் வசதிக்கேற்ப வளைத்துக் கொள்வது ஆதிக்கவாதிகளின் செயல். பள்ளர்களும் ஏன் அம்முயற்சியில் ஈடுபடுகிறார்களெனில், தங்களின் அடிமை அடையாளத்தை மட்டும் எப்படியேனும் அறுத்தெறிந்துவிட வேண்டும் என்பதுதான் அவர்களின் குறிக்கோள். அதனாலேயே ஆண்ட பரம்பரை என்றும், சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் குலம் என்றும், போர்வீரர்களாகவும், விவசாயிகளாகவும் தங்களை அடையாளப்படுத்திக் கொள்கின்றனர்.

ஜாதி உருவாகி இரண்டாயிரம் ஆண்டுகளாகிவிட்டன. ராஜராஜசோழனின் ஆயிரமாண்டு சதய விழா கடந்த ஆண்டு கொண்டாடப்பட்டது. இம்மன்னர்களும் அவர்கள் ஆட்சியின் கீழிருந்த மக்களும் மட்டும் எப்படி சாதி என்ற கட்டமைப்பிற்கு வெளியே இயங்கியிருக்க முடியும்? நாடுகளை வளைத்துப் பேரரசரான பின்னரும் கூட சிவாஜியால், தன் விருப்பப்படி சத்ரியனாக முடியவில்லை. ஒரு சூத்திரர் சத்திரியராக முடியாதபோது, பஞ்சமர்கள் மட்டும் சத்திரியர்களாகி ஆட்சி செய்வதற்கான சாத்தியங்கள் ஏது? இந்த நாகரிக காலத்திலும் நவீனங்களை உள்விழுங்கிக் கொண்டு, ஜாதி வளர்வதால்தான் – இன்று வரையிலும் கூட, எம்மாநிலத்தின் ஆட்சிப் பொறுப்பிலும் தலித் மக்களால் அமர முடியவில்லை. சுதந்திர இந்தியாவில் வெகு சில விதிவிலக்குகள் உண்டு.

அரசமைப்புச் சட்டம் தீண்டத்தகாத மக்களுக்கு வைத்திருக்கும் வரையறைக்குள் தாங்கள் வரவில்லை என பள்ளர்களுக்கான சில தலைவர்களும் அமைப்புகளும் வாதிடுகின்றனர். தென்மாவட்டங்களில் உள்ள ஜாதிய பாகுபாடுகளும் தீண்டாமை வடிவங்களும் வெறும் பொய்களால் மறைக்கப்படக்கூடியவை அல்ல. அப்பகுதியில் அதிக எண்ணிக்கையில் தலித்துகளாக இருக்கும் பள்ளர்கள், தொடர்ச்சியான வன்கொடுமைகளுக்கும் தீண்டாமைக்கும் இழிவுகளுக்கும் ஆளாகியே வருகின்றனர் என்பது கண்கூடு.

இரட்டை டம்ளர் முறை, ஊர் தெருக்களுக்குள் அனுமதி மறுப்பு, கோயில்களுக்குள் செல்லத் தடை, அரச வன்முறை என தீண்டாமைக் கொடுமைகள் எப்போதும் உச்ச நிலையிலேயே இருக்கின்றன. பள்ளர்களையும் சாதி இந்துக்களையும் உள்ளடக்கிய எந்த ஊரையும் இதற்கு எடுத்துக்காட்டாகச் சொல்ல முடியும். சேரியில் நாங்கள் வாழவில்லை என்றும், தீண்டாமை என்ற ஒன்றே தங்களுக்குக் கிடையாது என்றும் உண்மைகளை மறைத்துவிட்டுப் பேசுபவர்கள், உத்தப்புரத்தில் ஊரை இரண்டாகப் பிரித்து எழுப்பப்பட்ட சுவருக்கு அர்த்தமென்ன என்பதை விளக்க வேண்டும். அம்மக்கள் காலங்காலமாக அனுபவித்து வரும் கொடிய பாகுபாடுகள் அவர்களுடைய போர்க்குணத்தினால் உண்டான விளைவல்ல; அவர்கள் சார்ந்த சாதிக்காக விதைக்கப்பட்ட அநீதி.

அண்மையில், ஊர் கோயிலுக்குள் நுழைந்த பள்ளர்களுக்கு கிடைத்த சமநீதியை பொறுக்கமாட்டாமல் வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு, கதறியழுத உத்தப்புர சாதி இந்துக்களிடம் நாம் கண்ட வெறுப்புணர்வு – வெறுமனே போட்டியாளர்கள் என்பதால் வந்ததல்ல. மள்ளர்களாக தங்களை முன்னிறுத்துகிறவர்கள் – முக்குலத்தோருக்கும் தங்களுக்குமான வெறுப்புணர்வை – சமமானவர்களுக்கிடையிலான சண்டை என்பதாகக் குறைத்துக் காட்ட முனைகிறார்கள். பொது மக்களை விடுங்கள், அண்மையில், பள்ளர் சமூகத்தைச் சேர்ந்த உயர் நீதிமன்ற நீதிபதி கர்ணன், பிற சமூக நீதிபதிகளால் தான் தீண்டாமைக் கொடுமைக்கு ஆளாவதாகக் குறிப்பிட்டாரே அதையும் மறுதலிப்பார்களா? தங்கள் மீதான தீண்டாமையை மக்கள் வெளிப்படையாக ஒப்புக் கொண்டு, அதற்கெதிராகப் போராடவும் உயிரை விடவும் கூட தயாராக இருக்கும்போது, அதை மூடி மறைக்க இவர்கள் யார்?

'ஆண்ட பரம்பரை' என்ற சொற்களின் மூலம் கிளர்ச்சியூட்டுவது ஒன்றையே மள்ளர் அமைப்புகள் தங்களின் அரசியல் பாதையாக வைத்திருக்கின்றன. “அடிமையிடம் நீ அடிமை எனச் சொல், அவன் கிளர்ந்தெழுவான்'' என்றார் அம்பேத்கர். தாங்கள் அடிமைப்படுத்தப்பட்டிருக்கிறோம் என்பதை உணராமல், எல்லாம் விதி என வாழ்கிறவர்களிடம் ஆண்ட பரம்பரை என சொன்னால், எப்படியொரு கண்மூடித்தனமான கிளர்ச்சி உண்டாகுமோ, அதுதான் பள்ளர்களை எப்பொழுதும் ஆட்டுவிக்கிறது. தன் மீது சுமத்தப்பட்ட அடிமைத்தனத்திற்கு எதிராகப் போராடாமல், சாதியக் கட்டமைப்பின் வன்முறைக்கு பதில் சொல்லாமல், தங்களது ஆதிக்கத்தை நிறுவுவதற்கான வாய்ப்புகளைத் தேடுகின்றனர். அடித்தால் திருப்பி அடிக்க வேண்டும் என சொல்லித் தரும் தலைவர்களின் வழி நடத்தலில், நாம் அடிமைகள் அல்லர், ஆதிக்கவாதிகள் என முறுக்கிக் கொண்டு எழுகிறார்கள். ஆண்ட பரம்பரை என்ற வாதத்திற்கு வலு சேர்க்கவே மள்ளரியத்தை துணைக்கழைக்கின்றனர்.

மன்னராட்சியின் சர்வாதிகாரங்கள் நிராகரிக்கப்படும் மக்களாட்சிக் காலத்தில், அடிமைத்தனத்திற்கு எதிராகப் போராட வேண்டிய மக்களுக்கு சர்வாதிகார உணர்வை ஊட்ட சில அமைப்புகள் தொடர்ந்து முயல்கின்றன. மன்னர்கள் பார்ப்பனர்களுக்கு அடிவருடிகளாக இருந்து, ஜாதியை காப்பாற்ற எடுத்த முயற்சிகளை சமூக வரலாறுகளும் ஆய்வுகளும் வலுவாக முன் வைக்கின்றன. பல தார மோகம், பெண்களை பாலியல் தொழிலில் தள்ளியது, சிரச் சேதம் உள்ளிட்ட மனித உரிமை மீறல்களை அரங்கேற்றியது என ராஜ ராஜ சோழன் உள்ளிட்ட மன்னர்களின் சர்வாதிகார அத்துமீறல்கள் நாமறிந்ததே! மன்னர்களின் உண்மை வரலாறு, மனித உரிமை மீறல்களின் ஒட்டுமொத்தப் பதிவாகவே இருக்கிறது எனும்போது, மள்ளர் அமைப்புகள் எப்படி அவர்களோடு தம்மை தொடர்புபடுத்தி பெருமை பாராட்டுகின்றன?!

மள்ளர் அமைப்புகள் சில, தங்களின் பண்டைய செல்வாக்கையும் பெயரளவிலான ராஜ குலப் பின்னணியையும் துருப்பாக வைத்துக் கொண்டு, இச்சாதிய சமூகத்திடம் முன் வைக்கும் கோரிக்கைகள் சுயநலமிக்கவை. "அரசமைப்புச் சட்டம் வரையறுக்கும் தீண்டத்தகாத மக்களுக்கான வரையறைக்குள் தாங்கள் இல்லை; அதனால் பட்டியல் சாதியிலிருந்து விடுவிக்க வேண்டும்" என்கிறார்கள். நல்லது. பட்டியல் சாதியிலிருந்து வெளியேற விழையும் பள்ளர்களின் இந்த விருப்பமானது, இந்து மதத்தின் சாதியக் கட்டமைப்பைத் தகர்க்கும் முயற்சியா என்றால், அதுதான் இல்லை. இந்து மதத்தை விட்டு வெளியேறும் முயற்சியா என்றால், அதுவும் இல்லை.

இந்தியாவில் சாதியை முற்றாக அழித்தொழிக்க விரும்புகிறவர்கள், அம்பேத்கர் முன்வைத்த மதமாற்றம் ஒன்றையே ஆயுதமாகக் கையிலெடுக்கின்றனர். இதற்கு மாறாக, இந்து மதத்தில் இருந்து வெளியேற விரும்பாத மள்ளர் அமைப்புகள், தங்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டுமென வலியுறுத்துகின்றனர். இந்து மதத்தைத் துறந்து கிறித்துவம், இஸ்லாம் போன்ற மதங்களைத் தழுவினால் – மிக எளிதாகவே பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இணைந்துவிடமுடியும். ஆனால், இதைச் செய்ய மறுத்து, 'இந்து பிற்படுத்தப்பட்டோர்' பட்டியலில் சூத்திரர்களாக இடம் பிடிக்கவே துடிக்கின்றனர்!

பட்டியல் சாதிப் பிரிவில் இருப்பதால், சாதி இழிவு யாரையும் ஆட்கொள்ளவில்லை. பிறப்பால் சாதி இழிவுக் கரையை சுமந்து கொண்டிருந்ததாலேயே எல்லோரைப் போலவே பட்டியல் சாதிப் பிரிவில் பள்ளர்கள் வர நேர்ந்தது. பட்டியலில் இருப்பதுதான் பிரச்சனை என்றால், 78 சாதிகளும் கூட வெளியேறி விடலாமே! தன் ஆயுட்காலத்தை முழுவதுமாக அர்ப்பணித்து அம்பேத்கர் அவர்கள் எழுதிய சமூக வரலாற்றையும், அரசமைப்புச் சட்டத்தையும் இடது கையால் நிராகரிக்கிறவர்களில் பெரும்பாலானோர், இட ஒதுக்கீட்டின் பயனை அனுபவித்து வளர்ந்தவர்களாகவே இருக்கின்றனர்! கல்வி, வேலைவாய்ப்பு, மற்றும் சட்டமன்ற, நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தைப் பெற்றுவிட்ட பின்னர், இன்று சாதிச் சான்றிதழ்களில் எஸ்.சி.யை, பி.சி.யாக்கப் போராடுகின்றனர்.

இன்றளவும் சாதிய ஒடுக்குமுறைகளுக்கு ஆளாகி, சமூக நீதி என்பது முற்றிலுமாக மறுக்கப்பட்டு அடிப்படைக் கல்வி கூட கிட்டாதவர்களைப் பற்றி இவர்களுக்கு துளியும் அக்கறையில்லை. ஆறு பேர் படுகொலை செய்யப்பட்ட பரமக்குடியில் கூட, பெரும்பான்மை பள்ளர்கள் விவசாயக் கூலிகளாகவே வேலை செய்கின்றனர். அவர்களுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய பிரதிநிதித்துவத்தைப் பிடுங்கியெறிய இவர்களுக்கென்ன உரிமை இருக்கிறது? சாதிச் சான்றிதழ் என ஒன்று (ஒரு நூற்றாண்டுக்கு முன்னால் எந்த சான்றிதழ் இருந்தது? எந்தப் பட்டியல் இருந்தது?) இருப்பதன் பயன் தெரியாமலேயே எத்தனை மக்கள் தங்கள் வாழ்நாட்களை கடந்து போகிறார்கள்? இவர்களுக்கு தெரிந்ததெல்லாம் சாதியின் பெயரால் நிகழும் ஒடுக்குமுறைகளும் அத்துமீறல்களும் சுரண்டல்களும் மட்டுமே! எஸ்.சி. – பி.சி.யானால் என்ன நடந்துவிடும் என்பதைக் கூட அவர்கள் அறிந்திருக்கப் போவதில்லை.

பள்ளர்களை தலித் என்றோ, ஆதி திராவிடர் என்றோ அழைக்கக் கூடாதென தொடர்ச்சியாக மள்ளர் அமைப்புகள் மிரட்டல் விடுக்கின்றன. மண்ணின் மக்கள் என்ற அர்த்தத்தை உள்ளடக்கிய தலித் என்ற சொல்லின் மீது, இவர்களுக்கு அப்படியென்ன வெறுப்பு? ஊடகங்களிலும் உலகளவிலும் தலித் என்பது, சாதி ரீதியாக ஒடுக்கப்பட்டோர் தங்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடுவதன் குறியீடாக மாறியிருக்கின்ற நிலையில், பள்ளர்கள் மட்டும் அதிலிருந்து தங்களை துண்டித்துக் கொள்ள நினைப்பதன் நோக்கம் என்ன? உண்மையில் இவர்கள் பிற பட்டியல் சாதியினரை விட தங்களை உயர்ந்தவர்களாகக் கருதுவதால், அவர்களோடு தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள விரும்பவில்லை.

தங்கள் மீது இழிவைத் திணிக்கும் சாதி இந்துக்களை எதிர்க்கும் அதே வேளையில், பறையரையும் சக்கிலியரையும் கீழானவர்களாகக் கருதும் மனநிலைதான் பள்ளர்களிடம் ஓங்கி நிற்கிறது. சாதி இந்துக்களைப் போலவே எல்லாவிதமான தீண்டாமையையும் பறையர் மற்றும் சக்கிலியர் மீது பள்ளர்கள் செலுத்துகின்றனர். பிற்படுத்தப்பட்டோராகிவிட்டால், சாதி இந்துக்களோடு சமத்துவம் கிடைப்பது ஒரு பலனெனில், தலித்துகளை இன்னும் வீரியத்தோடு ஒடுக்க முடியும் என்பது மற்றொரு பலன்.

மள்ளர் – மள்ளர் அல்லாதோர் என்று சமூகத்தை செங்குத்தாகப் பிரித்துப் பார்க்கவே மள்ளர் அமைப்புகள் தீவிரம் காட்டுகின்றன. நாம்தான் ஆண்ட பரம்பரை, நாம்தான் வேளாண் குடி, நாம்தான் மன்னர்கள், நாம்தான் தமிழர்கள் என்ற முழக்கத்தின் மூலம் – மற்றவர்களை வந்தேறிகளாகவும், அடிமைச் சமூகமாகவும் சித்தரிக்க முயல்கின்றன. பார்ப்பனியத்தைப் போலவே இது ஒட்டுமொத்தமான ஆதிக்க உளவியலன்றி வேறென்ன?

எதற்கும் கட்டுப்படாதவர்களாகவும், பெருந்துணிச்சல்காரர்களாகவும் சாதியக் கட்டமைப்பை மிஞ்சியவர்களாகவும் தங்களை முன்னிறுத்திக் கொள்கிறவர்களால், தம்மை அடக்கி ஒடுக்கி அடிமைப்படுத்திய இந்து மதத்தையும், அது உருவாக்கிய சாதியையும் ஒருபோதும் துறக்க முடிவதில்லை. பள்ளர்கள் சாதி வேண்டாமெனச் சொல்லவில்லை; அடிமைச் சாதி வேண்டாம் என்கிறார்கள். சிவன், இந்திரன், விஷ்ணு ஆகியோரை முன்னோர்களாக வணங்குகின்றனர். சிவனுக்கு கோயிலை கட்டியதாலேயே ராஜராஜ சோழனை மள்ளர் எனக் கொண்டாடுகின்றனர். வேந்தன் என்பது இந்திரனையும் மன்னனையும் குறிக்கிறது என்பதால், தேவேந்திர குலம் என தங்களை அடையாளப்படுத்தவும் துணிகின்றனர். ஆனால், இவையெல்லாம் ஒருபோதும் அவர்களின் பிறப்பின் அடிப்படையிலான சாதி இழிவைப் போக்கப் போவதில்லை.

தென் மாவட்டங்களில் குறிப்பாக ராமநாதபுரத்தில் தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் சாதிய அத்துமீறல்களுக்கும், அரச பயங்கரவாதத்திற்கும் கடந்த அய்ந்தாண்டுகளில் பள்ளர்கள் எதிர்கொண்ட உயிர், உடைமை, உரிமை இழப்புகளைத் தடுக்கவோ அதற்கு ஈடு செய்யவோ ஆளில்லை. ஆறு பேரை பலிகொண்ட அரச பயங்கரவாதத்திற்கு கூட, பாதிக்கப்பட்டவர்களுக்காக சட்ட ரீதியான, தார்மீக ரீதியான உதவிகளை செய்ய முன் வராமல், செய்கிறவர்களையும் விரட்டியடிக்கும் செயலில் ஈடுபடுகின்றனர். 'பெயருக்கு' அரசியல் செய்வோர், சாதிவெறியின் அன்றாட அழுத்தங்களால் கொதி நிலையில் இருக்கும் மக்களின் உணர்வுகள் போர்க் குணமென்ற பெயரில் களத்தில் உயிர்பலி கொடுக்கவே பயன்படுகிறது. மாறாக, அவர்களை நெறிப்படுத்தவோ, வாழ்வியல் தரத்தை உயர்த்தவோ, பகுத்தறிவூட்டவோ, ஏன் அரசியல்படுத்தவோ கூட முன்வரவில்லை.

தலித் மக்கள் யாராக இருந்தனர் என்பது முக்கியமில்லை; யாராக இருக்கிறார்கள் என்பதும், யாராக இருக்கப் போகிறார்கள் என்பதுவுமே முக்கியம். பாட்டனுக்கு பாட்டன் மன்னனாகக் கூட இருந்திருக்கலாம். ஆனால், இடையில் பின்னப்பட்ட சூழ்ச்சியில் தலைமுறைகள் அடிமைகளாகிவிட்டன. அடிமைத்தனத்தின் வலி என்னவென இப்போது நன்றாகத் தெரியும். ஆதிக்கத்தை பிறப்புரிமையாகக் கருதி அதைக் கோருவதா? இல்லை, அடிமைத்தனத்தை பிறவி இழிவாகக் கருதி, அதை எதிர்த்து சமத்துவத்திற்காகப் போராடுவதா? புத்தரும் அம்பேத்கரும் பெரியாரும் இரண்டாம் கேள்வியோடு நின்றார்கள். இன்றைய தலித் அமைப்புகள் முதல் கேள்வியோடு நிற்கின்றன.

பிரித்தாளும் பார்ப்பனிய சூழ்ச்சி, மக்களை சாதிகளாகத் துண்டாடியது. மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டிருந்தாலும் பல்வேறு சாதிகளாக சமூகங்கள் சிதறுண்டு கிடக்கின்றன. எட்ட முடியாத உயரத்தில் அமர்ந்து கொண்ட பார்ப்பனர்கள், சாதிய அடுக்கை நுணுக்கமாகக் கட்டமைத்ததில் நமக்கு கீழ் நான்கு பேர் இருப்பதில் மகிழ்ச்சியடைந்து கொண்டோம். தலைக்கு மேலே எத்தனை பேர் இருந்தாலும் சரி, காலுக்குக் கீழே யாராவது இருந்தாக வேண்டும். சாதியச் சுழலுக்குள் சிக்கி உழலும் ஒவ்வொரு இந்தியனின் / இந்துவின் உளவியலும் இப்படித்தான் இருக்கிறது.

பிற்படுத்தப்பட்டோர் தலித்துகளை ஒடுக்குவதும், தலித் மக்கள் அதற்கு எதிர்வினையாற்றுவதுமாக அல்லது தலித்துகளே தலித்துகளோடு மல்லுக்கட்டுவதுமாக – இந்த சண்டை கீழேயே நடந்து கொண்டிருக்க, இந்நாட்டின் வளங்கள், துறைகள், அதிகாரங்கள் என உயர்நிலையில் உள்ள எல்லாவற்றையும் ஒரு சிறு குழு அனுபவித்துக் கொண்டிருப்பது பற்றியோ, அதில் தங்களுக்கான நியாயமான பங்கை கோருகிறவர்களை திரண்டு வந்து, அக்குழு தாக்குவது குறித்தோ நமக்கு அக்கறையில்லை. உண்மையான வந்தேறிகளும் கொள்ளைக்காரர்களுமான அவர்களை சுதந்திரமாக உலவவிட்டு, நசுங்கி ஒடுங்கிக் கிடப்பவர்கள் தங்களுக்குள்ளாகவே சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றனர்.

பிரித்தாள்வது பார்ப்பனியத்தின் சூத்திரமெனில், அதற்கெதிராக ஒன்றிணைவது ஒன்றே ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கான திறவுகோலாக அமைய முடியும். அம்பேத்கரும் பெரியாரும் இதையே வலியுறுத்தினர். தலித் மக்களை திரட்டும் தலைமைகள் ஆதாரமற்ற வரலாற்றுக் கதைகளைச் சொல்லி, தன் மக்களை மேலும் தனிமைப்படுத்தும் செயலையே செய்கின்றனர். பள்ளர்களிடம் மட்டுமல்ல; பறையர், சக்கிலியர், புதிரை வண்ணார் என எல்லோரையுமே இந்நோய் பீடித்திருக்கிறது. இந்து மத சூழ்ச்சியை தகர்த்தெறியவும் சாதியக் கட்டமைப்பை உடைக்கவும் இவர்களிடம் எந்த செயல் திட்டங்களும் இல்லை. மாறாக, ஆளாளுக்கு ஒரு சாதிய அடையாளத்தை உருவாக்கி, அதை வைத்து அரசியல் செய்யவே முனைகின்றனர்.

இந்தியா முழுவதிலுமுள்ள ஒடுக்கப்பட்ட மக்களின் மொழியும் பண்பாடுகளும் வெவ்வேறானதாக இருந்தாலும், அவர்களின் வலியும் வேதனையும் கொண்டாட்டங்களும் இழப்புகளும் ஒன்றுதான். அதை உணரும் சுரணையற்றதாக ஒடுக்கப்பட்ட சமூகம் சுணங்கிக் கிடக்கிறது. வடகோடியில் வாழும் தலித்தும் தென் எல்லையில் வாழும் தலித்தும் சம அளவிலான சவால்களையே சாதி ரீதியாக எதிர்கொள்கின்றனர். எனும்போது, அவர்கள் கருத்தியல் ஓர்மையுடன் இணைவதைத் தவிர, சாதியொழிப்பு வேறெப்படி சாத்தியப்பட முடியும்?

ஆனால், சாதி ரீதியான அடக்குமுறையில் துவளும் தலித்துகளுக்கு ஆதிக்க வெறியை ஊட்டும் வேலைகள்தான் பெரும்பாலும் இங்கே நடந்து கொண்டிருக்கின்றன. தன்னிலை உணர்ந்து சுய மரியாதையையும் உரிமைகளையும் பெறப் போராடுவது என்பது வேறு; ஆதிக்கசாதிகளுக்கு இணையாக தன்னையும் ஆதிக்கவாதியாக ஆக்கிக் கொள்வது என்பது வேறு! இந்த வேறுபாட்டை நிச்சயம் ஒடுக்கப்பட்ட மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்த புரிதல் உண்டாவதற்கு, ஒடுக்கப்பட்ட ஒருவர், தான் ஒடுக்கப்பட்டுதான் இருக்கிறோம் என்பதை முதலில் உணர வேண்டும்.

உட் சாதி என்பது, பார்ப்பனியத்தின் உயர் சதி. இந்த உண்மை புரியாமல், ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கு இடையிலான மோதலானது, எதிரி யார் என்ற தெளிவில்லாமலேயே நடந்து கொண்டிருக்கிறது. எதிரியை இணங்காணாத இந்த சண்டை, காற்றுடன் மல்லுக்கட்டுவதற்கு சமம். சாதி ஆதிக்கத்தை தங்கள் செருக்கெனக் கொண்டாடும் முக்குலத்தோருக்கு இணையாக தேவேந்திரர் குலமென தங்களைச் சொல்கிறவர்கள், பறையர்களையும் சக்கிலியரையும் இணையற்றவர்களாகக் கருதுகின்றனர். ஒருவரோடு ஒருவர் கைகோக்க விரும்பாத இவர்கள், தாங்கள் ஒன்றிணைய வேண்டியதன் கட்டாயத்தை உணராமல் – பகைமையையும் வெறுப்புணர்வையும் ஆழப்படுத்தி, தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளத் துடிக்கின்றனர்.

தன்னை அடித்தவர்களை அடிக்க கரங்களை வலுவேற்றுவது, வெட்டியவர்களை வெட்ட ஆயுதங்களை கூர் தீட்டுவது என நபர்களுக்கும் நிகழ்வுகளுக்கும் மட்டுமே பதில் சொல்லத் துடிப்பவர்கள், படிநிலைப்படுத்தப்பட்ட இந்த சாதிய கட்டமைப்புதான் தங்களை இந்நிலைக்கு ஆளாக்கியது என்பதை புரிந்து கொள்ளவோ, ஏற்கவோ மறுப்பது வேதனைக்குரியது. அதனாலேயே இக்கட்டமைப்பைத் தகர்த்தெறிய முனையாமல், அதை திருத்தியமைக்க வேண்டுமென கோருகின்றனர். ஆனால், உண்மை என்னவெனில், சாதியப் படிநிலைகளை ஒரு போதும் மாற்றியமைக்க முடியாது. தன் மீது திணிக்கப்பட்ட இழிவை துடைத்தெறிய வேண்டுமெனில், சாதியை தகர்ப்பதைத் தவிர, ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கு வேறு மாற்றோ, தேர்வோ இல்லை. ஆகப் பெருஞ்செயலான அது, ஒடுக்கப்பட்ட சமூகங்கள் ஒன்றிணையும் போது மட்டுமே நடக்கும். அதனால், 'உங்களை எல்லாம் விட உயர்ந்தோர் நாங்கள்' என்ற முழக்கத்தை மாற்றி, நாமெல்லோரும் சமம் என சொல்லத் தொடங்குங்கள். சாதிக்கான சண்டையை சாதிக்கு எதிரான சண்டையாக மாற்றுங்கள். அப்போது உண்டாகும் திரட்சி, சாதியத்திற்கெதிரான பெரும் புரட்சியாக நிச்சயம் மாறும்.

Comments

21 comments

21
செ.சரவணன்
அற்புதமான ,ஆழமான சிந்தனை உள்ள கட்டுறை. பாராட்டுக்கள் தோழி!

செ.சரவணன்.
Nethaji
உன்மைதான் . ஏற்றுகொள்ள தயக்கம் அல்லது பிடிவாதம். உன்மையான தாழ்த்தபட்டவன் இந்து மதத்தை ஏற்று கொள்ள முடியாது. இந்து மதமே அவனை தாழ்த்தியது, அதை ஏற்று கொள்ளும் மன பக்குவம் இல்லை என்றே தோன்றுகிறது. ......................வருத்தமளிக்க கூடிய விஷடயம்தான்.
ஆறுமுகம்
பள்ளர்கள் தங்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க கோருகின்றனரா? எப்போது? கிருஸ்தவத்திற்க்கு மாறினால் பிற்பட்டோர் தான் அப்படியானால் அதிகாரி உமாசங்கர் நீதிபதி அசோக்குமார் போன்றவர்கள் கிருஸ்தவர்களாக இருந்தாலும் ஏன் தாழ்த்தப்பட்டோர் அடையாளத்தை வைத்துள்ளனர் ? அதை நிருபிக்க போராடுகின்றனர். வோளான் தொழிலை ”வெள்ளாளர்” என்படும் சமுத்தினரும் செய்ததாகவும் கூறப்படுவ தோடு வேளாளர் என்பது கோவையில் பிற சமுகத்தினரும் பயன்படுத்துவது ஏன்? பள்ளர்கள் தாழ்த்தபட்டவர்கள் என்றால் அவர்களை விட சமுகரீதியாக மற்றவர்களை எவ்வாறு குறை ந்தவர்க ளாக என்னுகி ந்றனர் ? வண்ணார் நாவிதர் போன்ற சமுத்தினர்க ள் அவர்களை விட குறை ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள எப்படி பிற்படுத்தப்பட்ட பட்டியலி் ல் வந்து சேர்ந்தனர்? காரணம் ஓட்டு வங்கி என்னிக்கையில் குறைவாக இருந்ததாலா? ஏன் அருந்ததியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கிய தை எதிர்த்து போராட வேண்டும். கிருஸ்தவர்கள் தங்கள் சிருபான்மையினர் என்று கூறி தங்க ள் கல்வி நிறுவனங்களில் லட்சக்கணக்கில் பணியிடங்களை பெற்றுக் கொண்டு அரசு வேலை வாய்ப பிலும் அதை குறிப்பிட் சதவீதம் அடை ய என் நியபோது பாதிக்கபட்டு உள் இடஒதுக்கீடே வேண்டாம் என்று போராடினார்களே ஏன்? அப்படியானால் அவர்கள் உள் இட ஒதுக்கீடு கேட்டது ஏன்? அல்லது யார் கோட்டது ? ”அரசமைப்புச் சட்டம் வரையறுக்கும் தீண்டத்தகாத மக்களுக்கான வரையறைக்குள் தாங்கள் இல்லை; அதனால் பட்டியல் சாதியிலிருந்து விடுவிக்க வேண்டும்" என்கிறார்கள் .. தங்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டுமென வலியுறுத்துகின்றனரா ? அதனால் யாருக்கு ஆதாயம். நல்ல கற்பனை. முற்பட்ட சமு தாயத்தினர் கூட இன்று பட்டியலில் சேர தயங்குவதில்லை. பிள்ளைமார் போன்றவர்கள் பெரும்பாலும் பிற்படுத்தபட்டவர்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ள ஏதோ ஒரு பிரிவின ராக சான்றிதழ்கள் வைத்துள்ளனர். காட்டுநாயக்கன் சான்றிதழ் அந்த சமுதாயத்தினருக்கே கூட கிடைப்படதில்லை என்பது கட்டுரையாளருக்கு தெரியு மா? ஏன? ”ஆதி திராவிடர் ” என்ற பெயரி லேயே ஒரு சாதி இருப்பது கட்டுரையாளர் நினை வில் கொள்ள வில்லை. பிரித்தாள்வது பார்ப்பனியத்தின் சூத்திரமெனில் அதற்கெதிராக ஒன்றி யமால் யார் தடுத்தார்கள். . ? அதுவும் பார்ப்பனர்கள் தா நா? அப்படியானால் சுயமாக சிந்திக்கும் சக் தி அற்றவர்களா? ஆளுக்கு ஒரு பழக்கவழக்கம் கடைபிடிக்கபடுவது பாகுபாட்டை உருவாக்குகிறது. இன்றும் பெண்னை திருமணத்திற்கு கூட அழைக்து செல்லாமல் திருமணம் செய்த பின் நர்தான் வீட்டை டவிட்டு வெளியே அணுப்பும் பழக்கம் உள்ளது கட்டுரையாளருக்கு தெரியுமா ? பல்வேறு பட்ட பழக்க வழங்கங்களை சில அமைப்புகள் ஏற்றுக் கொள்ளும் சில அமைப்புகள் ஏற்றுக் கொள்வதில்லை. விளைவு கட்டுபாடுகள் தனிபட்ட அடையாளங்கள். சாதிகளுக்குள்ளும் பிரிவுகள் தோன்ற காரணம் இதுவே. இது பார்ப்பனியத்தால் வந்ததில்லை ஒரு குழுவின் விருப்பு வெருப்பு நடையுடை போற்வை சார்ந்து அமைதது.எதர்கெடுத்தாலும் பார்பனர்களை சாடுவது ஒரு நோயகவே ஆயிற்று. அப்படி கூறவில்லை யென்றால் தங்கள் கருத்து நிற் காது எடுபடாது என்பதே இதற்க்கு காரணம். இது ஒரு கருத்தடிமை தனம் ஆகும். அடுத்தவ ந் தாழ்த்தினால் அதை முறியடித்து முனனேறுவதே அறி வுடைமை அதை விடுத்து முன்னே றியவனை வசை பாடுவது நொண்டி சாக்கே. இடஒருக்கீட்டில் முன்னேறி பின்னரும் அடுத்த தலை முறையினரும் இடஒதக்கீட்டில் தொடருவது ஏன்? அப்படி யானால் அந்த சமுகத்தில் உள்ள இடஒருக் கீட்டை பெறமுடியாத தலைமுறை எப்படி முன்னேரும் ? இட ஒதுக்கீடு அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வதை ஏன் தடுக்க மு டியவி ல்லை அல்லது முயல வில்லை? இட ஒ துக்கீட்டால் பயனடைந்தவர்கள் தங்கள் சாதி இலலை சமுதாயம் முன்னேர என் ந செய்துள்ளனர் ? தங்கள் குடும்பத் தினர் மட்டும் பயன் அடைந்ததை தவிர. இட ஒதுக்கீ ட்டில் மற்றொருவரி ந் வாய்ப்பை தான் ஒதுக்கீடு மூலம் ஒருவர் பெறுகிறார் அப்படியானால் அவ ரால் அந்த சமுதாயம் அடைந்த நன்மை என்ன?
சாதியப் படிநிலைகளை ஒரு போதும் மாற்றியமைக்க முடியாது எனும் போது தியை தகர்ப்பது சாத்தியமா? பட்டியல் சாதியினர் என்பது ” தாழ்த்த பட்டோர்” என்றும் பிந்தங்கியர்கள் ”பிற்படுத்தபட்டோர்” என்றும் கூறுவது ஏன.? யார் தாழ்த்தினர் ? யார் பிற்படுத்தினர் ? அதற்க்கு அதி காரத்தில் உள்ளவர்கள் தான் காரணம் என்றால் மாவட்டங்கள் வளர்ச்சி அடையாத போது அதை பின் தங்கிய மாவட்டம் பகுதி என கூறுவதேன். அது பிற்படுத்தபட்ட மாவட்டம் என் கூற தயங்குவதேன் ? அப்படி கூறினால் தாழ்த்தபட்ட பிற்படுத்த பட்ட என்று அதிகார வர்க்கத்தை சுட்டிக் காட்டிய வர்கள் மீதே சுட்டும் என்பது தானே? அப்படியானால் சிந்திக்க தெரியா த கூட்டமா? தமிழின கூட்டம். பல கேள்விகளுக்கு பதில் இல்லாவிட்டாலும் கூட சில உண்மைகளை தைரியமாக முன்வைத்தது பாராட்டுக்குரியது.
erivankudumbanar
vanakkam, thangalin karuthuku natri. moothleeil neegal arriya venthiyahu what is mean of DALITH.you say its maeans cittizen of land.or mannin manithan. then why yoyare not say DALITH THEVER, DALITH PALLI,DALITH CHEETIYAR,.DALITH is not a tamil word. its from italin word
kazhanjiyam
இக் கட்டுரை குறிப்ப்ட்டது போல பள்ளர்கல் ஒன்ரும் ஒடுக்கப்பட்டோருக்கு எதிரானவர்கலும் அல்ல ஆதிக்கத்தை நேசிப்பவர்களும் அல்ல.
19 -ம் நூற்றாண்டின் முற்பகுதியில் சாதீய அடக்குமுறைக்கு எதிராக பள்ளர்களுக்காக மட்டுமில்லாமல் அணைத்து ஒடுக்கப்பட்டோருக்ககவும் குரல் கொடுத்தவர்கள் பள்ளர்கள். குறிப்பாக இம்மானுவேல், தேக்கம்பட்டியார், ராஜபாளயம் அண்ணாமலை போன்றோரும் ஒடுக்கப்பட்டோர் தளங்களில் இருந்தே குரல் கொடுத்திருக்கிறார்கள். ஒடுக்கப்பட்டோர் அரசியல் தளங்களான வை.பா, திருமா, பூவை, இளையபெருமாள் போன்றோரோடு இணைந்தும் போராடியவர்கள் தன இந்த பள்ளர்கள். 1982 உஞ்சனை கலவரத்துக்கு பிறகு, பள்ளர்களே முழுக்க பதிக்கபட்டாலும் ஒரு பறையர் ஆறுமுகத்தை தேர்தலில் நிறுத்தி 26000 வாக்குகள் பெற்று தந்தது பள்ளர்கள். சமூக ரீதியாக பறையர்களோடு அதிகமாக திருமணம் முடித்தவர்கள் பள்ளர்கள் - குறிப்பாக காஞ்சிபுரம் செங்கல் பட்டு மாவட்டங்களின் பல பள்ளர் கிராமங்கள் பறையர் கிராமங்களாகி இருப்பதாய் இன்றும் காணலாம். சிவகங்கை ராமநாதபுரம் பகுதிகளில் தலை மறைவு படைகளை அமைத்து ஒடுக்கப்பட்டோருக்கு உறுதுணையாக இருந்தது பள்ளர் சமூகம். அனால் காலப்போக்கில் ஒடுக்கப்பட்டோரில் எல்லா சமூகங்களும் பள்ளர்களை இழித்தவாயர்களாக ஆகியதுதான் மிச்சம். பள்ளர்களை விட்டுவிட்டு சுயநல அரசியலில் அதிகம் செய்ய தொடங்கிவிட்டார்கள். மரகதம் சந்திரசேகர் பிரதமர் ராஜீவ் காந்திக்கு ஒரு கடிதம் எழுதி பள்ளர்களை ச்ச் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்றும் பள்ளர்களுக்கு ம்ப் மற்றும் மந்திரி பதவி கொடுக்க கூடாது என்றும் வலியுறித்தியுள்ளார். ச்ச்/ச்ட் அச்சொசிஅடிஒன் பெயரில் அவர்கள் செய்த அடாவடியும், வட மாவட்டங்களில் பள்ளர்களுக்கு வேலை கிடைக்காமல் செய்த தந்திரங்களும் வழக்குகளாகவும் பதிவாயிருக்கிறது என்பதுதான் உண்மை. திருமா கட்சி பள்ளரால் உருவானதும் அதன் பின் அவர் அக்கட்சியில் ஒரு பள்ளரை கூட பதவி அமர்த்ததும் பள்ளர் மத்தியில் பெரிய அதிர்ச்சியாகவே உள்ளது. தேவர்கள் பள்ளர்களை தாக்கும் போதெல்லாம் பதிலடி கொடுக்கும் பள்ளர்கள் - பறையர்கள் தாக்கினால் திருப்பி தக்கவதில்லை - எந்த ஊரிலும் பள்ளன் எந்த ஒடுக்கப்பட்டோரையும் தாக்கியதாக வரலாறு இல்லை. அனால் பறையர்கள் கடந்த சில ஆண்டுகளாக - முல்லிகுண்டு ஸிவகங்கை, விருதுநகர்- புதுபட்டி, கம்சபுரம், நெசவாளர் களனி, தேனீ- அவரம்பட்டி, மதுரை- முடுவர்பட்டி என்று 20 க்கும் மேற்பட்ட பள்ளர்கள் கொலை செய்திருக்கிறார்கள். இருப்பினும் தேவர்கல் திருப்பி தாக்குவதை போல் ஒடுக்கப்பட்டோரை திருப்பி தாக்கியதில்லை.
எனவே பள்ளர்கள் மற்ற ஒடுக்கப்பட்ட சமூகத்தோடு சமூக ரீதியாகவும், போராட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் கரம் கொடுத்ததை யாரும் மறுக்க முடியாது. அப்படிப்பட்ட பள்ளர்களுக்கு கிடைத்த பலன் இன்று தனித்து நின்று போராடும் சூழல் ஏற்பட்டிருப்பது காலத்தின் கட்டாயம். ஆசிரியர் குறிப்பிட்டது போல மள்ளர்கள் ஆதாரமில்லாமல் எங்கள் வரலாற்றை பதிவு செய்யவில்லை, மாற்றாக அறிவியல், தோல் பொருள் ஆய்வு, இலக்கியம் வாயிலாக நிரூபணம் செய்த உன்னமைகலையே உலகத்தின் முன் வைக்கின்றோம். சாதி ஒழிப்பு போராட்டம் என்றல் அது பள்ளர்களால் தோற்றுவிக்கப்பட்டதே. 50 வருட சாதீய போரில் அடிமை என்று சொல்லி போராடி வெற்றி பெற முடியாத பள்ளன் இன்றைக்கு மண்ணின் மைந்தன் - மள்ளன் என்று மார் தட்டி போராடுவது - எம் இளைஞருக்கு புத்துணர்ச்சியை கொடுத்திருக்கிறது - புது வியுகத்தை கொடுத்திருக்கிறது - பள்ளர் அல்ல மள்ளர் என்கிறோம் - பறையர் அல்ல மறையர் என்று சொல்லுங்கள் என்றும் சொல்கிறோம். ஒருபோதும் பள்ளர்கள் அதிக்கவதியாக மாட்டார்கள்- மாற்று சமூகம் என்று தெரிந்தும் தன் சாதி தலைவனாக கிருஷ்ணசாமியை ஏற்று கொட்டது பள்ளர் சமூகம். கடைசியாக; தளங்கள் மாறினாலும் பள்ளர்கள் போராடுவது ஒரே குறிக்கோள் தான்.....பள்ளன் இல்லாமல் எந்த ஒடுக்கப்பட்டோருக்கும் விடுதலை கிடைத்துவிடாது ....எந்த தமிழனுக்கும் விடுதலை கிடைக்காது என்பதே எதார்த்தம்
ramar
தங்கள் கருத்துக்கு நன்றி. மேலும் முக்கியமான கருத்துக்களை குறிப்பு இல்லாமலும் ஆதாரம் இல்லாமலும் பேசுவதை தவிர்க்கவும். எதிர்வினை கொடுத்த நண்பர் கழஞ்சியம் அவர்கள் சில ஆதர கருத்துகளை கூறியுள்ளார். அதற்க்கு தங்களால் உருப்படியாக என்ன பதில் கூற போகிறீர்கள்.
Muthumaari
பல உண்மைகளை எடுத்து தெளித்துள்ளீர்கள். இதன் சில உண்மைகள்:தேவேந்திரர் குல வேளாளர்களின் சமஸ்கிருதமயமாக்கம்,தலித்தியத்தை மறுதலித்து கடந்து செல்ல நினைப்பவர்கள், ஆதிக்கத்தை விரும்பும் ஓர் அடிமைச்சமூகம், அரசியல் படுத்தப்படாதவர்கள், இல்லாத ஒரு கடந்தகாலத்தை வைத்துக்கொண்டு அது ஊட்டும் மனக்கிளர்ச்சியில் வன்முறையில் குதிப்பவர்கள். தேவேந்திரர் குல வேளாளர்களின் நிலையைப்பற்றி நீங்கள் தெரிந்துள்ள அளவிற்கு கூட அவர்களுக்கு தங்களைப்பற்றி தெரியவில்லையே என நினைக்கும் போது ஒடுக்குமுறைக்காக போராடிக்கொண்டிருக்கும் உங்களைப்போல பலருக்கும் இது அறியப்பட‌ வேண்டிய செய்தியாகின்றது. இதை படிக்க படிக்க தேவேந்திரர் குல வேளாளர்கள் இப்படி இருக்கின்றார்களே என்று மிகவும் கவலையாக உள்ளது.ஒடுக்குமுறைக்கு எதிராக போராடிக்கொண்டிருந்த அண்ணல் அம்பேத்கர் அவர்கள் இந்தியச் சமூகத்தில் சாதியின் இருப்பை எந்த இடத்திலும் மறுதலிக்க முனையவில்லை அதனால்தான் அவர் 'பட்டியல் சாதிகள்', அழுத்தப்பட்ட சாதிகள்/ஒடுக்கப்பட்ட சாதிகள் எனும் பொருளிலான வார்த்தைகளை மட்டுமோ அல்லது 'மகர்' போன்ற சாதியின் தனிப்பெயரை வெளிப்படையாகவோ பயன்படுத்தினார். எந்த ஒரு நிலையிலும் ஒரு சாதி மற்றொரு சாதியை ஒடுக்குவதை அவர் விரும்பவில்லை. ஏதாவது 'ஒற்றைப் பண்பாட்டு' தன்மையுள்ள சொல்லைப் (தலித் எனும் எபிரேய மொழ்ச்சொல்லைப்)போல பயன்படுத்தப்போய் அதன் முகமுடியின் மறைவில் பதுங்கிக் கொண்டு எந்த ஒரு சாதியாவது ஒடுக்கும் சாதியாக மாறிவிட்டால் அந்த அடக்கும் சாதி எது என்று அடையாளமே தெரியாமல் போய்விடும் என்று நினைத்தாரோ என்னவோ? ஆனால் தமிழகத்தில் கொலைவெறி கொண்டு ஒடுக்கும் சாதிகளுக்கு எதிராகவும், ஒடுக்குமுறைக்கு எதிராக எழும்பி நிற்கும் அண்ணலின் சிலைகள் குறிவைத்து உடைக்கப்பட்ட போது அதன் சத்தம் மறைவதற்குள்ளேயே ஆதிக்க குறியீடுகளையும் நொறுக்கி காட்டிவிட்டு தேமே என்றிருக்கும் தேவேந்திரர்கள் அரசியல் படுத்தப்படாமல் இருப்பதை நினைத்து நீங்கள் உருகுவது புரிகின்றது. தேவேந்திரர்கள் இதைப்படித்தாவது திருந்த மாட்டார்களா? என்பது யாருக்கும் தெரியவில்லை.

ஆனால் தொடர்ந்து அரசியல் படுத்தப்பட்டு இந்திய தேசிய அளவில் மிகச்சிறந்த குறைந்தது பத்து தலைவர்களையாவது உருவாக்கிவிட்ட, அரசியலில் பழம் தின்று கொட்டை போட்ட‌ பறையர்/தலித் சமூகம் தொடர்ந்து தேவேந்திரர்களின் தியாகத்தை விற்பனைசெய்து தேவேந்திரர்களுக்கான‌ பனைமரத்து நிழலாய் உருமாறியிருப்பதைத் தவிர ஒடுக்குமுறைக்கெதிராக உருப்படியாய் இதுவரை சாதித்துக் கிழித்தது என்ன? எனும் போக்கில் களஞ்சியம் மள்ளர் அவர்களும், இராமர் தேவெந்திரர் அவர்களும் உங்களை கேட்டிருக்கும் கேள்விக்கு எவ்வாறு பதில் சொல்லப்போகின்றீர்கள், பழக்கதோசத்தில் தேவேந்திரர்களின் கால்களை வாரிவிட்டா?

ஆதிக்கம் செய்ய ஒவ்வொரு கணமும் முயன்று கொண்டிருக்கும் ஆதிக்கவாதிகளுக்கு எதிரான‌ ஆதிக்கத்தை விரும்புபவர்கள் தேவேந்திரர் குல வேளாளர் எனில் முழித்திருக்கும் போதே கண்ணைப் பிடுங்க நினைக்கும் உங்களையும் உங்கள் சமூகத்தையும் பற்றி நீங்கள் எவ்வாறு உள்ளொலி(ளி)ப் பயணம்(சுய விமர்சனம்) மேற்கொள்ளப் போகின்றீர்கள் ? என்பதே பெரும்பான்மையான தேவேந்திரர் குல வேளாளர்களின் கேள்வியாகும்.

தலித்‍ அரசியலுக்கான வாக்கு வங்கியாகவும்,தலித் இலக்கிய நியாயவிலைக் கடைக்கான நுகர்வோராகவும் தேவேந்திரர்குல வேளாளர்களை மாற்ற நினைக்கும் உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் தோழர் மீனாமயில். வீறுகொண்டெழுந்த அண்ணல் அம்பேத்கர் தமிழகத்தின் தவறான கைகளில் ஆயுதமாகிவிட்டார் என்று நினைத்து ஒதுங்கி கடந்து செல்வதைத் தவிர தேவேந்திரர்களால் இப்போதைக்கு வேறு என்ன செய்துவிடமுடியும். ஊருக்கே சோறு போட்ட அவர்களுக்கு கைகொடுத்த அம்பேத்கரியத்தையும் ஒருநாள் அவர்கள் மீட்டெடுப்பார்கள், ஆனால் மானுடத்திற்கான‌ மள்ளரியப்பாதையில்......
muthuraj
அர்புதமான விவாதம் ஒருவரை ஒருவர் விமர்சித்து காலம் வினாக வென்டும், எது எபபடி ஆனாலும் ஆதிக்க சாதியினர் சொல்வது இரு பிரிவினரும் ஒன்ருதான் , எந்த ஜாதியும் நம்மை முன்னெர விடாமல் நம்மில் என்ன தடைகல் உல்லன என யொசிக்காமல் ந்ம்மில் யார் பெரியவன் என யொசித்தால் எனன பயன்

முத்துராஜ்
karthik
தேவேந்திரர்கள் தலித் இல்லை.....தல்தபட்டவர்களும் இல்லை....அவர்கள் உன்னதமான வேளான் தொழில் செய்து பிழைக்கும் விவசாயிகள்....தேவேந்திரர்களின் உட்பிரிவில் உள்ள காலடி, மூப்பன், பண்ணடி,,,போன்ற சதிகள் ப்ச் , ம்ப்ச் மற்றும் ட்ண்ச் போன்ற இனத்தில் உள்ளது......இன்று அதெல்லாம் ஒன்றாக்கி பட்டியல் இனத்திலிருந்து வெளியில் வர முயல்கிறோம்...இது தவற? எங்களுக்கு யாரும் அடிமையும் இல்லை....நங்கள் யாருக்கும் அடிமையும் இல்லை......தேவேந்திரர்களை தலித் ஆக்கும் உங்கள் முயற்சியை கை விடுங்கள்........- முகவை மள்ளர்கள்
kumaresan
கரெக்ட சொன்னிங்க மல்லர் வீர நான் sc paraiyan
Mallar vamsam veera
Muthalil dalit yendra vaarthaiyai Sc list la ulla jathikalai kuripittu sollavendam avarkalukendru thanipatta jathi name ullathu for exam ..pallar,paraiyar,vannar,valluvan..etc ippadi irukka mochukku munnooru thadava yean Sc (pattial ina makkal) ivarkalai mattum Dalit yendru sollureenga sari intha katturai yeluthiya thozhi sollukiraar dalit yenpathu Mannin mainthar yendru artham..ok appadi yendral Dalit kallar,dalit pillaimai,dalit koonar,.etc ippadi solla vendiyathu dhanea...dalit yendru tamil agaraathiyl illatha sollai yean payan paduthireenga..?
Ranjith
Hello friends please read "DISCOVERY OF INDIA" written by JEVAHARLAL NEHUR, then you can find out the real history of INDIA and the origen of HINDU RELIGION
கலை குடும்பன்
பள்ளர்கள் எந்த அடிப்படை ஆதாரமும் இல்லாமல் தங்களை மள்ளர் என்று கூறுகிறார்கள் என்பது முற்றிலும் தவறான தகவல்."பள்ளர்களே பாண்டியர்கள்",மள்ளர்களே இந்நாட்டை ஆண்ட மன்னர்கள்,பள்ளர்களே மள்ளர்கள்" என்பதற்கு போதுமான வரலாற்று ஆவணங்கள் உள்ளது.
நாங்கள் யார் என்பது எங்களுக்கு தெரியும்.உங்களுக்கு சந்தேகம் இருப்பின் திரு.செந்தில் மள்ளர் எழுதிய "மீண்டெழும் பாண்டியர் வரலாறு" வாங்கி படிக்கவும்......அதில் உள்ள வரலாறு பொய்யானவை என்று நிருபிப்பவர்களுக்கு ஒரு லட்ச ரூபாய் பரிசு அருவிக்கப்படுள்ளது. உங்களால் முடியுமா?
நாங்கள் யார் என்பதற்கு எங்களுடன் வரலாற்று ஆதாரங்கள் உள்ளது.....அதை பொய்,கட்டுக்கதை என்று நிருபிப்பதற்கு உங்களால் முடியுமா?........

http://maruppukalam.blogspot.in/
http://namvaralaaru.blogspot.in/
saravanan devendran
பள்ளர்கள் ஒன்றும் தீண்டத்தகாதவர்கள் அல்ல.இன்றும் பல ஊர்களில் பள்ளர்களுக்கு கோவில் திருவிழாக்களில் முதல் மரியாதை உண்டு மற்றத் தாழ்த்தப்பட்ட சாதிகளுக்கு உண்டா? வாய்க்கு வந்தப் படி பேச வேண்டாம். எஸ்.சி பட்டியல் உருவாவதற்க்கு முன்பு ஆங்கிலேயர் ஆட்சியில் பள்ளர்கள் தாழ்த்தப்பட்டோர் பிரிவிலேயே இல்லை அவர்கள் வன்னியர்களுடன் விவசாயத் தொழிலாளர்கள் என்ற பிரிவில் இருந்தனர். எங்கள் இனத்தின் வரலாற்றை கண்டு பொறாமைக் கொள்ளாமல் உங்கள் வேலையை மட்டும் பார்க்கவும். ஒரு நாள் இல்லை ஒரு நாள் பள்ளர்கள் எஸ்.சி பட்டியலில் இருந்து வெளியே வந்தேத் தீருவர் இதை எந்தக் கொம்பனாலும் தடுக்க முடியாது ********* வாழ்க தேவேந்திர குல்ம் *********
ஆர்.தியாகு
அக்காலத்தில் ஒரு சமூகத்தை ஸ்ச் பட்டியலில் சேர்ப்பதற்கு அன்றைய ஆங்கிலேய அரசு சில வரையறைகளை வகுத்திருந்தனர். அவற்றில் முக்கியமானவை கீழே:

1. தீண்டாமையை அனுபவிப்பவர்கள்

2. கோவிலில் நுழைய அனுமதியில்லாதவர்கள்

3. பிராமணர்களுடன் தொடர்பு அற்றவர்கள்

4. மாட்டுக் கறியை உண்பவர்கள்

5. பசுவை வணங்காதவர்கள்

6. தீட்டுப்படுத்தும் தொழிலை செய்பவர்கள்
மேலே குறிப்பிட்ட சட்டதிட்டங்களுடன் ஆய்வாளர் எட்கர் தர்ஸ்டன் எழுதிய ‘தென் இந்திய குலங்களும் குடிகளும்’ என்ற புத்தகத்தில் உள்ள மேற்கோள்களையும் பரிசீலித்தே தமிழகத்தில் ஸ்ச் பட்டியல் தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
chendrn
பழணீ செப்புபட்டயம் ஒன்று போதாது ஆதாரத்திற்கு.நாங்கள் ஆண்டவர்கள் என்பதற்கு. அதையெல்லம் வசதியக மறப்பீர்களே. கா.அப்பாத்துரையார் எழுதிய தென்னகதுபோர்க்களங்கள் என்ற நூலின் 399 ம் பக்கம் பார். ஆண்டவர் யார் என்று தெரியும்.
karthik
தம்பி கட்டுரை எலுதுவது என்பது கடினமான விசயம் , உன்னுடய கதை நன்ட்ராக இருகிரது

but i have few question to ask ??

1. who are you?.

2. why you are mentioning particularly (denying) pallar-mallar - devendra kula vellalar are dalit and they are claiming they are the rulers of ancient tamil land.

* whether Kallar, agamudayar, maravar also claiming the same y you are not mentioning them

just use your brain. if you captured any nation then you will surely suppress the original rulers and people of that land like that only after the invasion of naayak rule they suppressed the original ruler (pandyan) with the help of some tamil peoples and appoint them as their chief. if you want real time example see in srilanka .. original leader died(prabharan with their people). now who is sharing the power like MR.karuna. and some other fellows , among with who are all helping srilankan govt during the war.

3. if they are dalit- mannin mainthargal then the other caste people are came from other counties are not?

4. according to your statement above if these people are the original heir to this land then automatically their claim of moovendhar must be true..?/

here now the people are all same ..... dont make your own caste politics for your article....... if you want to write some useful thing write about srilankan people, somalia people, iranianian people, and aslo about the peoples who are all suffering in the border. or simply write about the koodangulam truth..... dont take cast politics........

*for your kind attention

from your writing itself every one can able to identify who you are and your real face.

apart from that addtional information....

according to your manu saasthraa

other than brahmin every other people were considered to be lower caste.. this is happening in our country.... so dont try too smart.

if you want to speak and write before that write about that caste system and your manu sasthiram......

kindly fight for to change that manu shastra........ its against human rights and vioalation......
esakki
meena mail avargle pallargal mallargal alla entru solvathrrkum velanmai ilitholil entru cholvatharkum neengal enna santru vaithirukireerkal. ask u more questions 1. sanru engalidam niraya irukinrathu santru illamal pesuvathu thappu entru ungal arivuku eppodhu ettum. 2. nangal sathi padinil uyarnthal ungaluku enna 3. ungalin ulaviyalil niraya sikkal irukinrathu tholiye ellam therinthu pesuvathu than maturity ethuvum theriyalmal pesinal adhu madamai. 4. neengal ungal article la kurippita ellam poi . 5. ungaluku enna mallar samugathin meethu poramai avargal munnerinal ungaluku enna? 6. ivargalai mattum vimarsanam enra peyaril ilivupaduthum nokkam enna? 7. neengal matra sathiyai ippadi ungalal vimarsam seyya muyaluma? 8. idharku munnal oru samugam sc pattiyalil irundhu mel nokki senra podhu nengal enge sentreegal? ippadi niraya irukinradhu agayal therinthal pesavum illayarntral summa irukavum.
இளங்குமரன்
ஆதிக்கத்தை நேசிக்கும் அடிமைச் சமூகம்/// அப்படியானால் நீங்களே முடிவு செய்துவிட்டீர்களா? எதைவைத்து முடிவு செய்தீர்கள்???
P GOPAL
Nan pirapal devendran , siva mathathai sernthavan..
Prakash mallar
1.மார்கோ போலோ பயண குறிப்பில்
(13ம் நூற்றாண்டு) பண்டைய தமிழகத்தில் முகமதியரின் தனி குடியிருப்புகள்
2.தமிழக வரலாற்று ஆய்வாளர்கள்- 11ம் நூற்றாண்டில் இராமநாதபுர கடற்கரை பகுதியில் முக்குலத்தோர் குடியேற்றம்
3.தேவ ஆசிர்வாதம்(1980 களில் ஆய்வு முடிவு) - முக்குலத்தோர் அரேபிய முகமதியர்வழி வந்தேரிகள்
4.Indian academy of science-RESEARCH NOTE (2008)-Genetic study of Dravidian castes of Tamil Nadu- Genetic study of mukkulathor caste- ##முக்குலத்தோர் மத்திய தரைகடல் பகுதியிலிருந்து வந்தவர்கள்;
##பறையர், மறவர்,சேர்வை,கள்ளன் ஒரே பிரிவில் வரும் இரத்த சம்பந்தம் உடையவர்கள்.
##தமிழக உழவர் குடியினரான பள்ளர்,வன்னியர்,கவுண்டர் நெருங்கிய இரத்த சம்பந்தம் உடையவர்கள்
########
நாங்கள் பாண்டியர்கள் என்பதை வரலாறு மற்றும் மரபியல்( genetic)வழியாக நிரூபிக்க முடியும்.

பள்ளர்,வன்னியர்,கவுண்டர் (உழவர் குடியினர்)முறையே தங்களை பாண்டியர்,சோழர்,சேரர் என கூறிவருகின்றனர்.
மூவரின் குடியிருப்பு பகுதியும் தமிழகத்தை மூன்றாக பிரித்தால் சரியாக பொருந்தும்.இது பண்டைய சேர ,சோழ,பாண்டியரின் ஆட்சி பகுதிகளுக்கும் சரியாக பொருந்தும்.

வந்தேரிகளால் அன்றைய உயர் வேளாண்குடியினரோடு இணைய முடியவில்லை.அதேசமயம் காடுகளில் வாழ்ந்த விலங்குகளை உண்டு வாழ்ந்த இன்றைய பறையரோடு மணவுறவு கொண்டருக்கிறார்கள்.மரபணு ஆராய்ச்சி முடிவுகளும் அதைதான் காட்டுகறது.

(சங்க இலக்கியத்தில் வரும் ''ஆநிரை கவர்தலும்-ஆநிரை மீட்டலும்'' விலங்கினங்களை உணவாகக்கொண்ட காடுகளில் வாழ்ந்த சமூகத்திற்கும்(இன்றைய பறையர் மூதாதையர்) உழவுக்கு கால்நடைகளை பயன்படுத்திய உழவர் குடியினருக்கும்(சேர சோழ பாண்டியர்) இடையேயான வாழ்வியல் நிகழ்வு.இந்த சங்க கால வாழ்வியல் நிகழ்வுக்கும் இடையில் வந்த வந்தேரிகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
(உழவருக்கு மற்றவர் கால்நடைகளை திருடவேண்டிய அவசியம் இல்லை.திருடுபோனவற்றை மீட்கவேண்டிய அவசியம் இருந்தது)

மேற்கு மண்டலத்தில்.... கவண்டர் அன்று முதல் இன்றுவரை வந்தேரிகளிடம் தோல்வியடையாத காரணத்தால் உயர் வகுப்பினராக(OC) உள்ளனர்.

வடக்கில்.......................சோழருக்கும் கீளைசாளுக்கயருக்கும் மணவுறவு(குலோதுங்கச்சோழன்)ஏற்பட்டதால் சோழர்கள்(வன்னியர்)இரண்டாம் தர குடிமக்களாயினர்(வன்னியரில் தெலுங்கு கலப்பின சாதி உண்டு).
நாயுடு,ராவ் முதன்மை சாதியினர் ஆகினர்.

தெற்கில்.........................பிற்கால பாண்டிய பேரரசனான குலசேகரபாண்டியனின் வாரிசுகளுக்கிடையேயான போட்டியால், வாரிசுகளில் ஒருவன் முகமதியனையும் இன்னொருவன் தொலுங்கனையும் அழைத்துவந்ததால் பாண்டியர்கள்(சைவர்கள்) தொலுங்கனிடம் அடிமைப்பட்டு கீழ்சாதியினராயினர்.
தொலுங்கு வந்தோறிகளுடன் அரேபிய முகமதிய வந்தேறிகள் ''தெலுங்கு வைணவத்தை '' ஏற்றுக்கொண்டு பாண்டியருக்கு எதிராக செயல்பட்டனர்.முள்ளிவாய்காளில் ஏற்பட்டது போன்ற இன அழிப்பு தாய் தமிழகத்தில் அப்போதே நடத்தப்பட்டது. நிலங்கள் பிடுங்கப்பட்டது,ஊர் பெயர்கள் மாற்றப்பட்டது,மக்கள் பண்ணை அடிமைகளாக முள்வேலிக்குள் அடைக்கப்பட்டார்கள்.இன்றளவும் இரத்தம் ஓடிக்கொண்டிருக்கிறது...................

இழந்த எங்கள் முன்னோர்களின் வரலாற்று
பெருமைகளை நாங்கள் மீட்டெடுப்போம்.
நாங்கள் வரலாறு மற்றும் அறிவியல்ரீதியாக ஆதாரத்துடன் எங்களுடைய பெருமைகளை பேசினால் மற்றசமூகத்தைவிட தாழ்த்தப்பட்ட
சமூகத்தினரிடமருந்தே அதிக விமர்சனங்கள்
வருகின்றன. கத்துகிறார்கள்,கதறுகிறார்கள்,தூற்றுகறார்கள் இவர்கள் எங்கள்மீது அக்கறையில் இவ்வாறு செய்யவில்லை பொறாமையினால் நடந்துகொள்கிறார்கள்

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.