ஒரிசாவின் கனிம வளங்கள் மீது முதலீடு செய்வதில் வேதாந்தாவுடன் போட்டியில் இறங்கியுள்ளது இன்னொரு பன்னாட்டு நிறுவனம். 51 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் தென் கொரிய நிறுவனமான "போஸ்கோ' (POSCO – Pohang Steel Co of Korea), ஒரிசாவில் தனது இரும்பு உருக்காலையை நிறுவ, 2005 இல் காங்கிரஸ் தலைமையிலான அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. போஸ்கோ நிறுவனம் ஒரிசாவில் தோண்டியெடுக்கும் எக்கு மற்றும் இரும்பு தாதுக்களின் ஒப்பந்த மதிப்பு 1 கோடியே 20 லட்சம் டன்கள். வேதாந்தாவின் பித்தலாட்டம் ஒரு வகையினம் எனில், போஸ்கோ இன்னொரு வகையினம்.

சனவரி 2007இல் "பயன்முறை பொருளாதார ஆய்வுக்கான தேசிய ஆலோசனைக்குழு' (National Council of Applied Economic Research - NCAER) என்ற தனியார் அமைப்பு "சமூகப் பயன் மதிப்பு' எனும் நோக்கில் போஸ்கோ உருக்காலைத் திட்டம் குறித்து ஆய்வறிக்கையொன்றை வெளியிட்டது. போஸ்கோ உருக்காலை அமைந்தால், நேரடியாகவும் மறைமுகமாகவும் 8.7 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்க இருப்பதாகவும், 2017இல் மாநில அரசின் பொருளாதாரம் 11.5 சதவிகிதம் அளவிற்கு உயர இருப்பதாகவும் இந்த அறிக்கை தெரிவித்தது. NCAER–இன் இந்த ஆய்வுக்கு போஸ்கோ நிதியுதவி அளித்திருப்பதாக செய்திகள் வந்துள்ளன.

goa_mine_370ஆனாலும் தங்கள் ஆய்வு முறைகளின் அறம் வழுவாமல், இந்த அறிக்கையைத் தயாரித்திருப்பதாக இவ்வமைப்பின் தலைமை இயக்குநர் கூறுகிறார். ஆனால், "சுரங்கப் பகுதி வாழ் மக்கள் ஆதரவுக் குழு' என்ற வெளிநாட்டு வாழ் இந்திய வல்லுநர்கள் குழு ஒன்று, இந்த அறிக்கையை ஆய்வு செய்து இதன் புள்ளிவிவரங்கள் தவறானவை என்றும், பயன் மதிப்புகள் மிகைப்படுத்தப்பட்டுள்ளன என்றும் அம்பலப்படுத்தியுள்ளது. "எக்கு மற்றும் இரும்பு – போஸ்கோ இந்தியாவின் கதை' என்னும் தலைப்பில் வெளியிடப்பட்டிருக்கும் இக்குழுவின் அறிக்கை, விலையைக் குறைத்தும், வருவாயை மிகைப்படுத்தியும் காட்டப்பட்டிருக்கும் முரணைச் சுட்டிக்காட்டி, "போஸ்கோவிடம் பணம் பெற்றுக் கொண்டு NCAER மோசடியாக சமரசம் செய்து கொண்டுள்ளது, என கண்டனம் தெரிவிக்கிறது'.

“கட்டுமான காலத்தில் 4.67 லட்சம் பேருக்கு வேலை தர வாய்ப்புள்ளதாகத்தான் போஸ்கோவின் சொந்த இணைய தளத்திலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டுமானத்திற்குப் பிறகு 48 ஆயிரம் வேலைவாய்ப்புகள் மட்டுமே நிரந்தரமாக்கப்படவுள்ளன. போஸ்கோவின் திட்டத்தால் இந்த நாடு பெறப்போகும் பயனைவிட இழப்புகளே அதிகம்'' எனவும் இந்த அறிக்கை குறிப்பிடுகிறது. ஒரிசாவில் போஸ்கோ நிறுவனத்தின் கட்டமைப்புகள் குறித்து ஆய்வு செய்த முன்னாள் அரசுச் செயலர் மீனா குப்தா குழு, வனத்துறை மற்றும் சுற்றுச் சூழல் அமைச்சகத்திடம் தனது அறிக்கையைத் தந்துள்ளது. "பழங்குடியினர் நிலங்களுக்கான நிவாரணம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்வது ஆகியவற்றில், போஸ்கோ நிறுவனத்திற்குக் கால அவகாசம் தரவேண்டும்' என மீனா குப்தா முன் வைக்கும் ஆலோசனைகளை,இக்குழுவின் ஏனையோர் மறுத்துள்ளனர்.

“போஸ்கோ நிறுவனத்திற்கு அனுமதி அளிப்பது என்பது, அமைச்சகத்திற்கும் அந்நிறுவனத்திற்கும் இடையில் ஒப்புக் கொள்ளப்படும் புரிந்துணர்வு அல்ல. மாறாக, சட்ட விதிகளின் கீழ் பொதுமக்களின் கருத்தறிவதன் மூலமும் வன உரிமைகள் விதிகள் மற்றும் பழங்குடி மக்களின் கிராம சபைகளின் அதிகார வரம்பின் மூலமும் பெறப்பட வேண்டிய ஒன்று'' என மீனா குப்தாவின் பரிந்துரைகளை மறுத்து, இக்குழு வனத்துறை அமைச்சகத்திற்கு விரிவான கடிதம் எழுதியுள்ளது. “போஸ்கோ நிறுவனத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்ற பேரத்தின் அடிப்படையிலேயே, வேதாந்தாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகக் கூறுவது முற்றிலும் தவறானது'' என்று வனத்துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தடுமாறுவதிலிருந்து, பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவு பெற்ற வேதாந்தாவுக்கு மாற்றாக, போஸ்கோ நிறுவனத்திற்கு முட்டுக்கொடுக்கலாம் என்ற காங்கிரசின் திருட்டுத்தனம் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.

காங்கிரஸ் கட்சியின் இளவரசராக நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும், அக்கட்சியின் பொதுச் செயலாளர் ராகுல்காந்தி, உத்திரப்பிரதேசம், பீகார், மேற்கு வங்கம், ஒரிசா, ஆந்திரா என தான் செல்லும் இடங்களிலெல்லாம் தன்னை "தலித் மற்றும் பழங்குடியின மக்களின் போராளி' என்பது போல வேடமிட்டுக் கொள்கிறார். பிரிட்டிஷ் காலனி ஆதிக்கக் காலத்திலிருந்தே காங்கிரஸ் கட்சியின் கொள்கை "பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன்' என்பதுதான். ஆங்கிலேய துரைமார்களிடம் கற்றுத் தேர்ந்த இந்த இரட்டை வேடம், காங்கிரஸ் கட்சியை ஒருபுறம் அம்பலப்படுத்தினாலும், மறுபுறம் பாதுகாத்தும் வருகிறது.

வேதாந்தா – போஸ்கோ நடவடிக்கைகளின் மீது இலைமறைகாயாக ஒளிந்திருக்கும் இந்த இரட்டைவேட பூனை, ஆந்திராவில் பொலாவரம் என்ற இடத்தில் கோதாவரி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் திட்டத்தில் கூடையிலிருந்து வெளியே குதித்துள்ளது. “இத்திட்டத்திற்கு நிபந்தனைகளுடன் கூடிய உத்தரவாதத்தை ஆந்திர அரசு அளித்துள்ளது. இத்திட்டத்திற்கு ஒப்புதல் அளித்த காங்கிரஸ் கூட்டணி அரசு, அதே வன உரிமைகள் சட்டத்தின்படி, அதே உத்தரவாதத்தைக் கடந்த அய்க்கிய முன்னணி அரசாங்கத்தின் போதே வேதாந்தா அளித்திருந்தும், ஒரிசாவில் நியாம்கிரி திட்டத்திற்கு அனுமதி மறுக்கப்படுகிறது'' என்கிறார், பிஜு ஜனதா தள நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஜெ. பாண்டா.

“பொலாவரம் – பல்நோக்குப் பயனுடைய ஒரு திட்டம். இத்திட்டத்தால் 4.36 லட்சம் ஹெக்÷டர் நிலங்கள் பாசன வசதி பெறும். அணைக்கட்டு நீர்வழித் தடங்களில் உள்ள நகரங்கள் மற்றும் கிராமங்களின் தண்ணீர் தேவை நிறைவு செய்யப்படும். 960 மெகாவாட் திறனுடைய மின் உற்பத்தி நிலையம் அமையப் பெறும். 2009 இல் நடுவண் திட்டக் குழுவின் ஒப்புதலோடு, இத்திட்டத்திற்கான நிதி முதலீடு செய்யப்பட்டிருப்பதால், இது ஒரு தேசிய திட்டம்'' என ஒரிசா அரசு உச்ச நீதிமன்றத்தில் எழுப்பியிருந்த சந்தேகங்களுக்கு, நடுவண் நீர்வள ஆணையம் தனது விளக்கத்தை இவ்வாறு அளித்தது. வெள்ள அபாய காலங்களில் உபரி நீர் வெளியேற்றப்படும் வகையில் அணையின் கட்டுமான வடிவமும் தரமும் உறுதி செய்யப்பட்டுள்ளதாக நடுவண் அரசு தெரிவித்தது.

ஆனால், “வெள்ள அபாயத்திற்கென கட்டப்படும் வடிகால்வாய்கள் நிரந்தரத் தீர்வாக இருக்க முடியாது. நடுவண் நீர்வள ஆணையம் இத்தகைய வெள்ள அபாய சூழல்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை'' என ஒரிசா அரசு குற்றம் சுமத்துகிறது. தங்கள் கட்சியோ, கூட்டணிக் கட்சிகளோ ஆட்சியிலிருக்கும் மாநிலங்களுக்கு "திட்டக் குழுவின் பரிந்துரைகள்' என்ற பெயரிலும், வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரிலும் தேவையான நிதி ஆதாரத்தை வழங்க முன்வரும் காங்கிரஸ் அரசு, கூட்டணியில் இடம்பெறாத அல்லது எதிர்க் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் ஆளும் மாநிலங்களைப் பழி தீர்த்து விடுகிறது.

கல்வி, சுகாதாரம், அடிப்படைக் கட்டுமானங்கள் போன்றவற்றில் கூட, இந்தியாவில் மாநிலங்களுக்கிடையில் நிலவும் ஏற்றத் தாழ்வுகளுக்கு, கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலான காங்கிரஸ் கட்சியின் தன்னல கயமைத்தனங்களே காரணம் எனலாம். ஒவ்வொரு தேசிய இனத்திலும் வாழும் அடித்தள மக்கள் மீதான இத்தகைய அக்கறையின்மையை, அந்தந்த தேசிய இன அல்லது மாநிலக் கட்சிகளும் கூட, காங்கிரஸ் கட்சியின் பிழைப்புவாதப் பண்பாட்டிலிருந்தே தழுவிக் கொண்டன என உறுதியாகக் கூறலாம்.

மேலும், பொலாவரம் அணைக்கட்டுத் திட்டத்தால் வெள்ளநீரில் மூழ்கும் அபாயத்தில் சுமார் 3,000 ஹெக்÷டர் நிலங்களை உள்ளடக்கிய, நக்சலைட்டுகளின் பிடியில் உள்ள மால்காங்கிரி மாவட்ட பழங்குடியினரின் பகுதி இருக்கும் என ஒரிசா அரசு மதிப்பிடுகிறது. ஆக, ஆந்திர மக்களின் பயன்பாட்டுக்கென கட்டப்படும் பொலாவரம் இந்திரா சாகர் திட்டத்தின் பின்னும் – தங்கள் இருப்பிடமும் வாழ்வும் சிதைந்து போக – பாதிக்கப்பட இருப்பவர்கள் பழங்குடியின மக்களே. வனத்துறை மற்றும் சுற்றுச் சூழல் அமைச்சகத்தின் அனுமதி, உச்ச நீதிமன்றத்தின் தடை நீக்கம், நடுவண் நீர்வள ஆணையம் வழங்கிய நற்சான்று என இத்திட்டத்திற்கான அனைத்து இடர்களும் நீங்கிய பிறகு, இத்திட்டத்தால் நீரில் மூழ்கவிருக்கும் நிலப்பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கான நிவாரணம், மறுவாழ்வுத் திட்டங்கள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆந்திர அரசிடம் நடுவண் அரசு விளக்கம் கேட்டுள்ளது.

இவையெல்லாமே ஒரு கண் துடைப்புதான். நாளையே ஒரிசாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்துவிடும் எனில், வேதாந்தா மற்றும் போஸ்கோ நிறுவனங்கள் சுற்றுச் சூழல் விதிகளை மீறவில்லை எனவும், பழங்குடியினர் நலன் பாதுகாக்கப்படும் எனவும் அராஜகமாக உத்தரவாதமளிக்கும். ஒரிசாவின் வளர்ச்சி – பொருளாதார மேம்பாடு என்ற பெயரில் இந்நிறுவனங்கள் உற்பத்தியைத் தொடங்க அனுமதிக்கும். ஆயிரக்கணக்கான கோடிகள் செலவழித்திருக்கும் இந்நிறுவனங்கள், ஒரிசாவிலிருந்து திரும்பி விடும் என்றோ, இத்திட்டங்களின் மீதான தடைகள் முற்ற முடிவானவை என்றோ நாம் கருதிக் கொண்டிருந்தால் அது பொருளற்றதே.

முதலாளித்துவ சமூக வாழ்வில் தம் இருப்பைக் கொண்டிருக்கும் இந்திய மணிசங்கர் முதல் அய்ரோப்பிய பியான்கா ஜாக்கர் வரை, பழங்குடியினரின் வாழ்வு மீதான இந்திய அரசின் வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் கொள்கைகள் குறித்து நீதியான கருத்துகளை முன்வைக்கும் போது, சுரண்டல் வாழ்நிலைக்கு கையளிக்கப்பட்டிருக்கும் நாம் பேச மறுக்கலாமா?

இச்சூழலில், “நாகரிகமடையாத மக்களுக்காகப் பரிந்து பேசும் பெருந்தன்மையாளர்கள் என இடதுசாரி அறிவுஜீவிகளையும், மனித உரிமை செயல்பாட்டாளர்களையும் ப.சிதம்பரம் கருதுகிறார் போலும். ஆனால் அந்த எண்ணம் மிகத் தவறானது'' எனச் சாடும் மூத்த பத்திரிகையாளர் பிரேம் சங்கர் ஷா, “ஒன்றுமறியா மக்கள் மீதான இரக்கமாகவோ, நாகரிகமடையாதவர்களிடம் காட்ட வேண்டிய பெருந்தன்மையாகவோ பழங்குடி மக்களின் பிரச்சனைகளை எவரும் அணுக முடியாது. அவர்களில் மிகச்சிறு குழுவினர் மட்டுமே இன்று தங்கள் ஏழ்மை குறித்தோ, தாம் சுரண்டப்படுவது குறித்தோ அறியாமல் இருக்கிறார்கள். அரசாங்கத்தின் கொள்கை முடிவெடுக்கும் இடங்களில் அவர்களுக்கான பிரதிநிதித்துவத்தை உருவாக்கி, அதிகாரமற்றவர்களாக வைக்கப்பட்டிருக்கும் அவர்களின் நிலையை முடிவுக்குக் கொண்டுவரும்போதுதான், அரசாங்கம் உருவாக்கும் வளர்ச்சித் திட்டங்கள் அவர்களுக்கானதாக அமைய இயலும்.'' என பழங்குடியின மக்களின் அரசியல் பிரதிநிதித்துவத்துடன் இணைத்துப் பேசுகிறார்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில், பழங்குடியினருக்கென ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கும் வாய்ப்புகளின் (கல்வி, வேலைவாய்ப்பு, மானியம், இடஒதுக்கீடு போன்ற) பயனாளிகள் கூட, பழங்குடியல்லாத "போலி பிறப்புச் சான்றிதழ்' பெற்றிருக்கும் சாதி இந்துக்களே என்ற உண்மையும் மூடி மறைக்கப்பட்டிருக்கிறது. "உயர்சாதி'யினர் மற்றும் சாதி இந்துக்கள் என அறியப்படும் பல சாதியினர், தம் சாதிப் பெயர்களுடனோ, வட்டார மொழிப் பரிச்சயத்துடனோ நெருங்கிவரக் கூடிய – பழங்குடி அட்டவணைச் சாதிகளில் ஏதேனுமொன்றின் பெயரில் சாதிச் சான்றிதழ் பெற்று விடுகின்றனர். அதன் அடிப்படையில் தம் பிறப்பை தாமே கேள்விக் கிடமாக்கும் கவலையின்றி, பள்ளிச் சான்றிதழையும் பெற்றுவிடுகின்றனர். பிறப்புச் சான்றிதழோ, சாதிச் சான்றிதழோ பெற முடியாமல், உண்மையான பழங்குடி மக்கள் பரிதவித்துக் கொண்டிருக்கையில் இப்போலிச்சான்றிதழ் திருடர்கள், அரசாங்கத்தின் அனைத்து சலுகைகளையும் பெற்று, பழங்குடியினரின் வாய்ப்புகளை பிடுங்கிக் கொள்கின்றனர்.

ஜார்க்கண்ட் மாநில அரசு, பொறியியல் படிப்பில் நுழையும் அனைத்து சாதி மாணவர்களுக்கும் அவர்களின் முழு கல்விச் செலவையும் ஏற்பதாக அறிவித்துள்ளது. எண்ணிப் பாருங்கள், ஜார்க்கண்டில் பழங்குடி மக்கள் அனைவரும் போர்ச்சூழலுக்குள் முடமாக்கப்பட்டுள்ளனர். பட்டியலின மாணவர்களோ தொடக்கப் பள்ளிக் கல்வி நிலையிலேயே வைக்கப்பட்டுள்ளனர். சாதி இந்துக்களும், எண்ணிக்கையில் குறைவான பார்ப்பன மாணவர்களும் பள்ளிக் கல்வியை தாண்டி வருகின்றனர். பொறியியல் பாடப்பிரிவுகளில் அதுவும் கல்லூரிகள் நிறைந்த வெளி மாநிலங்களில் பயிலும் வாய்ப்பு, வசதியுள்ள சாதி இந்து மாணவர்களுக்கும், பார்ப்பனர்களுக்குமே கட்டாயம் இருக்கும். இக்கல்விச் செலவும் அரசால் முழுமையாக வழங்கப்பட்டுவிடும். அதிகார வர்க்கத்தின் "மெக்காலே' பணியிடங்களுக்குத் தேவையான வல்லுநர்களை, அரசுகள் இந்திய சமூக அமைப்பில் எளிதாக உருவாக்கிக் கொள்கின்றன. ஆனால், பாரம்பரிய வில்லும் அம்பும் குடிசைகளில் வைத்திருந்த குற்றத்திற்காக, பழங்குடியின சிறுவர்களை, "நக்சலைட்டுகள்' என்ற அடைமொழியுடன் சிறைகளில் பூட்டி வைத்திருக்கின்றனர்.

தொழிலகங்கள் முதல் பல்வேறு நுகர்பொருட்கள் வரை, இன்றைய உலக வளர்ச்சியின் முக்கிய மூலாதார வளங்களாக இருப்பவை கனிமங்களே. போக்குவரத்து, உள் கட்டுமானங்கள், எரிசக்தி, தகவல் தொழில்நுட்பம் முதல் ராணுவ தளவாடங்கள் மற்றும் ஆயுதங்கள் உற்பத்தி வரை, இக்கனிமங்களின் தேவை அளப்பரியதாக இருக்கிறது. இதைக் கருத்தில் கொண்டே சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (ஒழுங்கு மற்றும் வளர்ச்சி) விதி – 1957, புதிய பொருளாதாரக் கொள்கைகளின் கீழ் 1994 இல் திருத்தப்பட்டது. அணு மூலக்கூறு கனிமங்கள் தவிர, ஏனைய கனிம வளங்களின் சுரங்கங்களுக்கான ஒப்பந்த அனுமதிகள் மற்றும் குத்தகை முறைகளுக்கான விதிகள் இத்திருத்தத்தின் மூலம் தளர்த்தப்பட்டன. பொதுத் துறை நிறுவனங்களின் தேவைக்கென ஒதுக்கப்பட்ட இக்கனிம வளங்கள், பின்னர் தனியார் துறைகளுக்கு திறந்து விடப்பட்டுள்ளன.

mine_labours_370சுரங்கத் துறையில் வெளிநாட்டு முதலீடுகளுக்கான உச்சவரம்பு 50 சதவிகிதமாகவும், சுரங்கங்களுக்கான குத்தகைக் காலம் அதிகபட்சமாக 30 ஆண்டுகள் வரையும் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், 20 ஆண்டுகள் வரை இக்காலத்தை நீட்டித்துக் கொள்ளவும் சட்டத்தில் வழி செய்யப்பட்டுள்ளது. வரலாற்று ரீதியாக, இந்திய அரசின் தொழில் கொள்கையில் தனியார் துறைகளின் பாத்திரம் வரம்பிடப்பட்டிருந்தது. ஆனால், பாதுகாப்புத் துறை உள்பட அனைத்துத் துறைகளிலும் புதிய பொருளாதாரக் கொள்கைகளின் நடைமுறைக்குப் பிறகு, தனியார் நிறுவனங்களின் செல்வாக்கு வளர்ந்து கொண்டே வருகிறது. திறந்து விடப்பட்ட சந்தை மற்றும் சுதந்திர வணிகம் என்பதே புதிய பொருளாதாரக் கொள்கைகளின் மய்ய முழக்கங்களாக மாறிப் போயிருக்கின்றன.

2003 நவம்பர் 1 முதல் 5 வரை, புது தில்லியில் நடைபெற்ற 19 ஆவது உலக சுரங்கத்துறை பேராயம் (World mining congress) மற்றும் கண்காட்சியில் "சிறப்புமிக்க வர்த்தகம்' என்ற இலக்கை இந்திய அரசு நிர்ணயித்திருந்தது. இக்கண்காட்சியில் "சுரங்கத்துறையில் மிக முன்னேறிய தொழில் நுட்பங்கள்' என்ற தலைப்பின் கீழ் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்கள் கடைகளை விரித்திருந்தனர். ஏறத்தாழ 60 நாடுகளிலிருந்து சர்வதேச அளவில் சுரண்டிப் புகழ்பெற்ற பல சுரங்க நிறுவனங்கள் குறிப்பாக, கனடா அலுமினியம் கம்பெனி (ALCAN), அமெரிக்க அலுமினியம் கம்பெனி (ALCOA), ரியோ டின்டோ (இங்கிலாந்து), பெல்ப்ஸ் டோட்ஜ், ஆங்லோ – அமெரிக்கன் ஆய்வு நிறுவனம், BHP பில்லிடான் (ஆஸ்திரேலியா) போன்றவை இக்கண்காட்சியில் பங்கேற்றன.

இப்பேராயத்தில் வெளிநாட்டு முதலீட்டாளர்களிடையே பேசிய அன்றைய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், “இதற்கு முன் 200 ஆண்டுகள் நீங்கள் (வெள்ளையர்கள்) இங்கு தங்கியிருந்தீர்கள். இன்னொரு 200 ஆண்டுகள் உங்கள் முதலீடுகளுடன் நீங்கள் தங்குவீர்கள் எனில், நீங்கள் நினைத்துப் பார்க்கவியலாத வெகுமதிகளைப் பெற முடியும்'' என வெளிப்படையாகவே, அந்நிய மேலாதிக்கத்திற்கு அழைப்பு விடுத்து, தனது ஏகாதிபத்திய விசுவாசத்தை – நாட்டுப்பற்றை விலைபேசும் துரோகத்தனத்தை தானே அம்பலப்படுத்தினார்.

சரங்கத் துறையின் இப்பேராயத்திற்குப் பிறகு, இந்திய சுரங்கக் கழகத்தின் விதிகள் குறிப்பாக, நில ஆக்கிரமிப்புச் சட்டம், சுற்றுச்சூழல் சட்டம் மற்றும் வனத்துறை சட்ட விதிகளில் தனியார் முதலீட்டாளர்கள் விரும்புகிற வகையில் மாற்றங்கள் செய்யப் பட்டன. இம்மாற்றங்களின்படி, இழப்புகள் என கணக்குக்காட்டி வரிச்சலுகைகள் பெறுவது, அரசாங்கத்திற்குத் தரவேண்டிய பங்குப் பண விகிதங்களைக் குறைத்துக் கொள்வது, மூலதனம் மற்றும் லாபக் கணக்குகளை வெளியிடாமல் இருப்பது, அரசாங்கத்தின் தலையீடுகளைக் குறைத்து, சுதந்திரமாக செயல்படுவது, முக்கியமாக தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களின் ஊதியங்களை நிர்ணயம் செய்து கொள்வது என, சட்ட விதிகள் இச்சுரண்டல் பேர்வழிகளுக்கு கரும்பு தின்னக் கூலிபோலத் திருத்தப்பட்டிருக்கின்றன.

இக்கட்டுரை எழுதப்பட்டுக் கொண்டிருக்கும் 2010 ஆம் ஆண்டின் இறுதிவரை, இன்னும் பல்வேறு ஒப்பந்தங்கள் கையொப்ப மிடப்பட்டிருக்கின்றன. மிகச் சிறிய மாநிலமான கோவாவில் 75 சுரங்கங்களுக்கான குத்தகை ஒப்பந்தங்களை கோவா மாநில அரசு செய்துள்ளது. இவற்றில் பல சுரங்கங்கள் கோவாவின் புகழ்பெற்ற நேத்ரவாலி வனவிலங்குகள் சரணாலயத்தை அழிக்கும் வகையிலும் நிறுவப்படவிருக்கின்றன. இவை தவிர, சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் ஒப்புதல் பெறாத 2000–க்கும் மேற்பட்ட சட்டவிரோத சுரங்கங்கள், இந்தியாவின் நடுப்பகுதி மாநிலங்களில் இயங்கி வருகின்றன.

ஒரிசாவில் கணக்கிடப்பட்டிருக்கும் பாக்சைட் கனிம இருப்பின் மதிப்பு சுமார் 2 லட்சம் கோடிகள். ஆனால், இந்திய அரசுக்கு இதில் கிடைக்கவிருக்கும் வெகுமானமோ 7 சதவிகிதம் மட்டுமே. கர்நாடகாவில் 60 லட்சம் டன் இரும்பு உற்பத்தி தொழிற்சாலைக்கான கட்டுமானங்கள் நடைபெற்று வருகின்றன. 30 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் உலக அளவில் இரும்பு உற்பத்தியின் பெருமுதலையான மிட்டல் நிறுவும் இத்தொழிற்சாலைகளுக்குத் தேவையான நிலங்களை, கர்நாடக அரசு கையகப்படுத்தி தந்துள்ளது ("அவுட்லுக்', 9.11.09). போஸ்கோ நிறுவனம் ஏற்கனவே ஓர் இரும்பு உருக்காலையை கர்நாடகாவில் நிறுவி உள்ளது. கர்நாடகாவின் இரும்புத் தாது வளங்களில் 80 சதவிகிதத்திற்கும் மேற்பட்டவை, இந்நிறுவனங்களால் எதிர்காலத்தில் கொள்ளையிடப்பட இருக்கின்றன. போஸ்கோ, ஜார்கண்ட் மாநில அரசுடன் செய்து கொண்டிருக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மதிப்பு 25 ஆயிரம் கோடிகள். இவ்வொப்பந்தம் இந்திய அரசு நிறுவனமான SAIL (Steel Authority of India Limited) வுடன் செய்யப்பட்டுள்ளது.

மற்றொரு அரசு நிறுவனமான தேசிய அலுமினியம் கம்பெனி (NALCO) பிரான்சு அலுமினிய கம்பெனி ஒன்றுடன் கூட்டு ஒப்பந்தம் செய்துள்ளது. வெளிநாட்டு நிறுவனங்கள் மட்டுமல்ல, உலோகக் கனிமங்கள் உற்பத்தித் துறையில் இந்தியப் பெருநிறுவனங்களான மிட்டல், ஜிண்டால், டாடா, எஸ்ஸார், எல்.அண்ட்.டி, உத்கல் அலு மினா மற்றும் ஹிந்தால்கோ போன்றவையும் நாட்டை சூறையாடக் களத்தில் இறங்கியுள்ளன. கனிம வளங்கள் மிகுந்துள்ள ஒரிசா, ஜார்கண்ட் மற்றும் சட்டீஸ்கர் மட்டுமல்லாமல், கர்நாடகா, ஆந்திரா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்திரப்பிரதேசம் என இந்தியாவின் இதயப் பகுதிகள் அனைத்தும் பன்னாட்டுக் கொள்ளையர்களால் தோண்டப்படவிருக்கின்றன. இப்படித் தோண்டியெடுத்த பின்னர் ஏற்படும் பெரும் பள்ளங்கள் அநேகமாக, இந்திய உழைக்கும் வர்க்கத்தினருக்கான சவக் குழிகளாகத்தான் இருக்க முடியும் என்பதில் சிறிதளவும் அய்யமில்லை.

மாற்றத்திற்குள்ளாகாத ஆட்சிமுறை, சட்டத்தின் பலவீனமான நடைமுறை, ஊதிப் பெருத்திருக்கும் ஊழல், நீர்த்துப் போன தொழிலாளர் நலச் சட்டங்கள், தரமேன்மை செய்யப்படாத சுற்றுச்சூழல் விதிகள், மனித உரிமை மீறல்களின் மீதான அக்கறையின்மை இவை போன்ற இந்திய ஆளும் வர்க்கத்தின் மக்கள் விரோத ஆட்சியின் நடைமுறைகள்தான், கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களுக்கு ஏற்ற வகையில் பேரம் பேசுவதற்கு வழிகோலுகின்றன. "கார்ப்பரேட் காலனியாதிக்கம்' என்ற சொற்றொடருக்குப் பொருத்தமான நிலமாக, இன்று இந்திய நாடு உருமாற்றப்பட்டுள்ளது. இந்தியாவில் நுழைந்திருக்கும் இந்நிறுவனங்கள், இதற்கு முன்னர் இயற்கை வளங்களைக் கொள்ளையடித்த நாடுகளிலெல்லாம் (பன்னெடுங்கால) நதிகளை ரசாயன மாசுபடுத்தியும், பகுதிவாழ் மக்களின் அடிப்படை உரிமைகளை குழிதோண்டிப் புதைத்தும் விட்டுத்தான் – குருதி படிந்த கால்களோடும், நச்சு தோய்ந்த கரங்களோடும் நம் நெடிய பாரம்பரியங்களை அழிக்க வந்து கொண்டிருக்கின்றன.

இக்கொடிய உயிர்க் கொல்லி குற்றங்களை, இந்நிறுவனங்கள் அந்தந்த நாடுகளின் பாதுகாப்புப் படைகள் மற்றும் அதிகார வர்க்க உபகரணங்களைப் பயன்படுத்தியே செய்திருக்கின்றன எனும்போது, நமக்குள் நடுக்கம் ஏற்பட வேண்டாமா?

பூமிப் பந்தின் நடுவில் வரைபட மதிப்பீட்டிற்காக, கிழிக்கப்பட்டிருக்கும் கோடு, உலகை புவியியல் ரீதியாக மட்டுமல்ல, சமூக – வரலாற்று – அரசியல் ரீதியாகவும் பிரித்துச் செல்கிறது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். வட துருவத்தை நோக்கிய நிலங்கள் அல்லது நாடுகள்தான் மேற்கத்திய நாடுகள் எனவும், தென் துருவத்தை நோக்கிய நாடுகள் அல்லது நிலங்கள் கீழை நாடுகள் எனவும் பொதுவாகக் கருத்தில் கொள்ளப்படுகின்றன. வரலாற்று ரீதியாக அணுகினால், மேற்கத்திய நாடுகளின் மேலாதிக்கம்தான் உலகை நம் நினைவுக்கெட்டிய காலம் முதல் ஆக்கிரமித்திருப்பதை அறிய முடியும். இந்த ஆக்கிரமிப்பின் சுரண்டலின் கீழ்தான் கீழை நாடுகள் வரலாற்றுக் காலம் தொட்டு, அடிமைப்பட்டுக் கிடக்கின்றன எனலாம். இந்த வரலாற்று விதிதான், அரசியல் பாரம்பரியமாக இன்றளவும் நடைமுறையில் இருந்து வருகிறது. இதன் தொடர்ச்சியாகத்தான் மேற்கத்திய நாடுகளின் பன்னாட்டு நிறுவனங்கள் சமகாலத்திய சந்தை மதிப்பை உயர்த்தியிருக்கும் கனிம வளங்களைத் தேடி, தெற்கே படையெடுத்து வருகின்றன. இக்கனிமங்களின் அளப்பரிய தேவைக்கு, அறிவியல் வளர்ச்சியின் உச்சத்தை நோக்கிச் செல்லும் மேற்கத்திய சமூகங்கள், வாய்ப்பிழந்து நிற்கின்றன.

மனித உரிமைகள், தனிநபர் சுதந்திரம், உலகம் வெப்பமாவதைத் தடுத்தல், காற்றில் நச்சுத்தன்மை பரவாமல் காத்தல், ரசனைக்குரிய இயற்கையை அனுபவித்தல், கடும் உடல் உழைப்பைத் தவிர்த்தல் என்பன போன்ற மென்மையான வாழ்க்கை முறைக்குப் பழகி வரும் மேற்கத்திய சமூகங்கள், தங்கள் நிலங்களிலும் செறிந்திருக்கும் கனிம வளங்களைத் தோண்டியெடுக்க ஒருவருக்கொருவர் அனுமதிப்பதில்லை. அதனாலென்ன? இருக்கவே இருக்கிறது, அடிமை மோகமும், துரோகங்களும், முட்டாள்தனமும் நிரம்பிய கீழைத்தேய சமூகங்கள் என எண்ணித் துணிகின்றன வளர்ந்த நாடுகளின் சமூகங்கள்.

அதனால்தான், நம் மரபார்ந்த ஆள், அம்பு, சேனைகளின் எதிர்ப்பின்றியும், துரோகிகள் – வந்தேறிகள் – ஊடுருவி அழிப்பவர்களின் கூட்டு ஒத்துழைப்புடனும் படையெடுப்புகள் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அதிலும் தெற்கு உலகத்தின் அகிம்சை போதிக்கும் காலனிய நாடான இந்தியாவோ, வடதுருவ உலகத்தின் லகுவான வேட்டைக்காடாக வனப்புடன் குழைந்து கிடக்கிறது. ஒரு முன்னுதாரண அடையாளமாக இந்த அடிமை தேசத்தின் தந்தை மோகன்தாஸ் கரம் சந்த் காந்தி, அமெரிக்க அதிபரும் கருப்பின வரலாற்றுவழி வந்தவருமான பாரக் ஒபாமாவிற்காக, வெள்ளை மாளிகையில் சட்டமிடப்பட்டிருப்பதை இந்நேரத்தில் நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.

தன்னை எட்டி உதைத்த வெள்ளைத் துரையொருவனின் கால்களைத் தாங்கிப் பிடித்த முன்வரலாற்றை, வெள்ளை ஏகாதிபத்தியம் உச்சி முகர்கிறது. நம் அடிமை மோக விசுவாசத்தின் சமூக உளவியலின் மீது மேற்கத்திய உலகம் கொண்டிருக்கும் நம்பிக்கையை நாம் கட்டிக் காத்து வருகிறோம். இதை நமக்கு நாமே செய்து கொள்ளும் நம்பிக்கைத் துரோகம் என்றோ, அனுமானங்களுக்கு இடமற்ற அவமானம் என்றோ, நாயும் பிழைக்குமோ இப்பிழைப்பு என்றோ நம் அரசியல் தலைவர்கள், தொண்டூழியம் செய்யும் ஏகாதிபத்திய முகவர்கள், அதிகார வர்க்கப் புல்லுருவிகள் ஆகியோர் பொருட்படுத்தாமல் இருக்கலாம். ஆனால் ஆயுள் முடிந்து போன அணுஉலைகளை இறக்குமதி செய்யும் உயர் ஆபத்துமிக்க குப்பை மேடாகவும், எதிர்காலத் தலைமுறையினரின் இருண்ட கண்டமாக மாற்றப்படவுமிருக்கும் இந்தியத் துணைக் கண்டத்தின் ஒவ்வெரு சாமானிய மனிதனும் – சமகால சூழல் குறித்து அதிர்ச்சியும் அறச்சினமும் கொள்ள வேண்டாமா? 

– அடுத்த இதழில்

Pin It