கடந்த அறுபது ஆண்டுகளாக, பன்னாட்டுச் சட்டங்களையெல்லாம் காலில் மிதித்து வரும் இஸ்ரேல் நாடு – பாலஸ்தீனத்தின் பகுதிகளையும், இன்னுமுள்ள அரபுநாட்டுப் பகுதிகளையும் அப கரித்துக் கொண்டு, தன் ஆதிக்கத்தின் கீழ் வைத்திருக்கிறது. பாலஸ்தீனத்தின் தலைநகரான காஸா – அங்கு வாழும் 15 லட்சம் மக்களின் திறந்த வெளிச் சிறையாக இருக்கிறது. இஸ்ரேலிடம் இழந்த மண்ணில் அம்மக்களுக்கான சுதந்திர நாட்டை கட்டமைக்க வேண்டும் என்பது, மனித நேயத்தில் அக்கறை கொண்ட அனைவரின் விழைவாகும். இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் பின்புலத்தோடு நடத்தப்படும் இக்கொடுங்கோன்மையால் – காஸாவில் இருக்கும் மக்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள் விநியோகம், மின்சாரம் தயாரிப்பதற்கான பெட்ரோல், மருந்து, குடிநீர் என மனித வாழ்கைக்கு இன்றியமையாத பொருட்கள் கிடைப்பதில்லை.

muthukrishnan_381இப்பிரச்சினையை உலகத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்து, பாலஸ்தீன மக்களின் உரிமைகளை நிலைநாட்டுவதற்காக, 17 ஆசிய நாடுகளில் உள்ள சமூக அமைப்பைச் சேர்ந்த 500 மனித உரிமை ஆர்வலர்கள், ஆசிய நாடுகளில் உள்ள 18 முக்கிய நகரங்களின் வழியே காஸாவை தரைவழியாக சென்றடைகின்றனர். டிசம்பர் 2, 2010 அன்று டில்லியிலிருந்து புறப்பட்ட இப்பயணத்தில், காஸா மக்களுக்குத் தேவையான நிவாரணப் பொருட்கள் சேகரிப்பு, ஒவ்வொரு நாட்டிலும் பத்திரிகையாளர் சந்திப்பு, பொதுக்கூட்டங்கள் என காஸா மக்களின் விடுதலையைப் பரப்பும் பணியினூடாக – டிசம்பர் 26 அன்று இப்பயணம் காஸாவை சென்றடைகிறது.

ஈழத் தமிழர்கள் சிங்கள ராணுவத்தால் கொத்துக் கொத்தாய் கொல்லப்பட்டபோது, இத்தகைய பயணத்தினை உலக சமூகம் நடத்தியிருக்க வேண்டும். முள்வேலி முகாமில் இருக்கும் லட்சக்கணக்கான ஈழத் தமிழர்களைக் காக்க, விடுவிக்க இப்படியொரு பயணத்தை நடத்தலாம்.

காஸாவிற்கு செல்லும் இம்மனித நேயப் பயணக் குழுவில், "தலித் முரசு' இதழில் தொடர்ந்து எழுதிவரும் தோழர் அ.முத்துக்கிருஷ்ணன் பங்கேற்கிறார் என்பது குறிப்பிடத்தகுந்தது.

– யாழன் ஆதி

Pin It