"தீண்டத்தகாதோர் யார்?' என்ற நூலை டாக்டர் அம்பேத்கர் குரு ரவிதாசுக்கு அர்ப்பணித்துள்ளார். : “தீண்டத்தகாதவர்களிடையே பிறந்து தங்களுடைய மேன்மைமிகு நடத்தையாலும், நற்பண்புகளாலும் அனைவரது நன்மதிப்பையும் பெற்ற துறவிகளான நந்தனார், ரவிதாஸ், சொக்கமேளா ஆகியோரின் நினைவிற்கு...''

குரு ரவிதாஸ், உத்தரப் பிரதேச மாநிலம் காசியில் உள்ள சீர்கோவர்தன்பூரில் 1433 ஆம் ஆண்டு பிறந்தார். அவருடைய தந்தையின் பெயர் சன்தோக் தாஸ். தாய் கல்சாதேவி. மாதா லூனா என்ற பெண்ணை அவர் மணந்தார். மாதா லூனா, குரு ரவிதாசின் வாழ்நாள் முழுவதும் அவருக்கு முழு ஆதரவாக நின்ற மிக எளிமையான பெண்.

ரவிதாஸ் காலத்தின் சமூகத்தில் கொடுமையாகவும் கடுமையாகவும் நடைமுறைப்படுத்தப்பட்ட சாதி அமைப்பின் காரணமாகவும், தீண்டாமை வழக்கங்களாலும் பெரும்பான்மை மக்கள் பெரிதும் வேதனைகளை அனுபவித்து வந்தனர். அதிலும் இதனால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் தீண்டத்தகாதவர்களே. சமூக அளவில் தனிமைப்படுத்தப்பட்டு, சாதி அடிப்படையிலான கடும் கட்டுப்பாடுகளால் அவர்கள் மிருகங்களை விட மோசமான வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர்.

இந்த சூழலில், செருப்பு தைக்கும் தீண்டத்தகாதவரான குரு ரவிதாஸ், பார்ப்பனிய ஆதிக்கத்திற்குப் பெரும் சவாலாக எழுந்து, ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்தார். பார்ப்பனிய நூல்களான வேதங்கள், புராணங்கள், ஸ்மிரிதிகள், உபநிடதங்கள் போன்றவை அனைத்தும் பார்ப்பன ஆதிக்கத்திற்கு துணை போவதாகவும், சமூக சமத்துவமின்மையை நியாயப்படுத்துவதாகவும், பெரும்பான்மை மக்களை சுரண்டுவதாகவும் இருப்பதால் அவை அனைத்தையும் எதிர்த்தார் : “ரவிதாஸ் ஆகிய நான், வேதங்கள் அனைத்தும் பயனற்றவை என்று பிரகடனப்படுத்துகிறேன்.''

வேதங்கள் மற்றும் பிற பார்ப்பனிய எழுத்தாக்கங்கள், குற்றமற்றவை என்றும், உண்மை மற்றும் அறிவின் ஊற்றுக்கண் என்றும் கூறுவதன் மூலம் பார்ப்பனர்கள் செலுத்தி வந்த ஆதிக்கத்தை, நேரடியாக எதிர்த்து தாக்குதல் நடத்தினார். பார்ப்பனியப் பிரச்சாரத்தின் உள்நோக்கங்களையும் குற்றங்களை யும் வெளிப்படுத்தியதோடு, உழைக்கும் பெரும்பான்மை மக்களுக்கும் அனைத்து மனிதர்களுக்குமிடையே சமத்துவத்தை நாடுவதாகவும், எவ்வித மத சடங்குகளும் இல்லாததுமாகிய ஒரு சமூக மதமாற்றினை அளிக்க பெரும் முயற்சிகளை குரு ரவிதாஸ் மேற்கொண்டார்.

குரு ரவிதாஸ்இந்த நாட்டின் சமூக மத சமத்துவமின்மையை எதிர்ப்பதோடு நில்லாமல் சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்திற்காகப் பரப்புரையை மேற்கொண்டார். அவர் மிகச் சிறந்த கவிஞராக இருந்தார். அவருடைய கவிதைகள் இன்றளவிலும் நாட்டின் உழைக்கும் மக்களிடையே பாடப்பட்டு வருகின்றன.

பார்ப்பனர்களின் ஒட்டுமொத்த ஆதிக்கத்தில் இருந்த சமஸ்கிருதத்திற்கு எதிராக "குருமுகி' என்ற மொழியை உருவாக்கியவராகவும் அவர் அறியப்படுகிறார். பிற சாதி இந்துக்களுக்கான கருவியாகவும் அந்த மொழியை அறிவித்தார். சீக்கிய அறிவுரை ஆக்கங்கள் அனைத்தும் "குருமுகி' மொழியிலேயே அமைந்திருந்தன என்ற உண்மையின் மூலம், இந்திய சமூகத்தில் குரு ரவிதாசின் தாக்கம் எந்த அளவிற்கு இருந்தது என்பது விளங்கும்.

கல்வியறிவு பெறுவதன் அவசியத்தை பாபாசாகேப் அம்பேத்கர் எந்த அளவுக்கு வலியுறுத்தினார் என்பதை நாம் அறிவோம். அவரைப் போலவே பல நூற்றாண்டுகளுக்கு முன்பே குரு ரவிதாஸ் கூறினார் : “அறியாமை, கல்வியறிவின்மை பெரும் சேதத்தை விளைவித்துள்ளது. நமது பகுத்தறிவினை அது தேய வைத்திருக்கிறது.''

ஒரு சமூகத்தை அழிக்க வேண்டும் என்றால், அதன் வரலாற்றை அழித்தால் போதுமானது. அந்த சமூகம் தானாகவே அழிந்துவிடும்'' என்றார்அம்பேத்கர்.

தலித் பெரும்பான்மை மக்களின் வரலாற்றை அழிப்பதன் மூலம், அவர்களை உளவியல் ரீதியாக இயலாதவர்களாகவே இருக்க வைக்க இந்து அடிப்படைவாதிகள் எப்போதுமே தனி அக்கறை செலுத்தி வந்துள்ளனர். வரலாற்றாய்வாளர்களும் வழக்கம் போல உண்மையோடு விளையாடி, பல நூற்றாண்டுகளாக மக்களை தவறாக வழி நடத்தி வந்தனர். புத்தரை விஷ்ணுவின் பத்தாவது அவதாரமாக முன்னிறுத்துவதைப் போலவே, குரு ரவிதாசையும் தங்களின் 33 கோடி போலி கடவுள்களுள் ஒருவராக முன்னிறுத்த, பார்ப்பனிய சக்திகள் தங்களால் இயன்ற அனைத்தையும் செய்தன. சுவாமி ராமாநந்த் என்பவர் தான் ரவிதாசின் குரு என காட்ட பல அறிஞர்கள் முயன்றனர். சுவாமி ராமாநந்த் குரு ரவிதாசை தனது சீடர்களில் ஒருவராக எப்படி ஏற்றுக் கொண்டிருக்க முடியும் என்பதை நாம் அனைவரும் அறிவுப்பூர்வமாக சிந்திக்க வேண்டும்.

சூத்திர முனிவரான சம்பூகன் தவம் அதாவது கடவுளை வணங்கியதற்காக அரசனான ராமனால் கொல்லப்பட்டார். துரோணாச்சாரியார் ஏகலைவனை வற்புறுத்தி, தனது வலது கை கட்டை விரலை வெட்டிக் (குருதட்சிணையாக) கொடுக்க வைத்தார். சாதியும், பாகுபாடுகளும் உச்சத்தில் இருந்த காலத்தில், தலித்துகள் கொல்லப்பட்ட காலத்தில், கடவுளைப் போற்றும் சொற்களை கேட்டாலோ அல்லது கடவுளை வணங்க முற்பட்டாலோ அவர்கள் காதுகள் வெட்டப்பட்ட காலத்தில் ஒரு தொடுதலோ, ஏன் ஒரு நிழலோகூட சாதி இந்துக்கள் என்று சொல்லிக் கொள்பவர்களின் புனிதத்தைக் கெடுத்துவிடும் என்று நம்பப்பட்ட காலத்தில், அரசனான ராமனின் வழியை பின்பற்றிய வரான சுவாமி ராமநந்த், குரு ரவிதாசை தனது சீடராக எவ்வாறு ஏற்றுக் கொண்டிருக்க முடியும்?

குரு ரவிதாஸ் சாதி அமைப்பிற்கு எதிராக நேரடியாக ஏற்படுத்திய சவாலால் அவமானத்தை சகிக்க முடியாமல் குரு ரவிதாசை ஒரு பார்ப்பனராகவோ, முற்பிறவியில் அவர் ஒரு பார்ப்பனர் என்றோ காட்ட வேறு சிலர் முனைந்தனர். சர்வக் போன்று யாரேனும் ஒரு பார்ப்பனர் சாதி அமைப்பிற்கு எதிராகக் குரல் எழுப்பி இருந்தாலோ, தங்களது மேலாதிக்கத்தை கேள்வி எழுப்பி இருந்தாலோ அவர்கள் சகித்துக் கொண்டிருப்பார்கள். அறிஞர்கள் என்று சொல்லிக் கொண்ட பலர் குரு ரவிதாஸ் முற்பிறவியில் ஒரு பார்ப்பனராக இருந்தார் என்றும், அவர் அப்போது இறைச்சி உண்டதால் அவரால் கடவுளை அடைய முடியவில்லை என்றும் அதனால்தான் மறு பிறவியில் கீழ் சாதியில் பிறந்தார் என்றும் கூறினர்.

பசுக்கள், குதிரைகள் மற்றும் ஆடுகள் கொல்லப்பட்டு, அவற்றைப் பார்ப்பனர் அல்லாதவர்கள் மட்டுமில்லாது பார்ப்பனர்களும் உண்டனர் என ரிக் வேதம் குறிப்பிடுகிறது.

“... வால்மீகியின் கூற்றுப்படி உணவில் அனைத்து விதமான சுவையான பதார்த்தங்களும் கலந்திருந்தன. இறைச்சி, பழங்கள் மற்றும் மதுவும் அதில் இருந்தன. ராமன் மது பழக்கம் அற்றவன் அல்ல. அவன் மதுவை விரும்பி உண்டான். தான் மது அருந்தும் நேரங்களில் சீதாவும் தன்னுடன் இணைந்து பருகுவதை ராமன் உறுதி செய்ததை வால்மீகி பதிவு செய்கிறார்...'' (உத்தர காண்ட சர்கம் 42 சுலோகம் 8) "இந்து மதத்தின் புதிர்கள்' டாக்டர் பி.ஆர். அம்பேத்கர்.

இந்து கடவுளர்களில் எத்தனை பேர் இறைச்சியை சாப்பிட்டு கடவுளை அடைய முடியாததால் கீழ் சாதியில் பிறந்தனர்

என்ற கேள்வியை நாம் எழுப்ப வேண்டும்! இந்துக்களின் எந்த மத நூலிலும் ஒரு மனிதன் இறைச்சி உண்டதால் கீழ் சாதியில் பிறந்ததாக எந்தவொரு நிகழ்வும் குறிப்பிடப்படவில்லை. பின் ஏன் குரு ரவிதாஸ் மட்டும்? (குரு ரவிதாஸ் ஒருபோதும் இறைச்சி உண்டதில்லை என்பதையும், சொல்லப்போனால், பக்ரீத் மற்றும் பிற இந்து மத விழாக்களில் ஆடு மாடுகள் கொல்லப்படுவதை அவர் எதிர்த்தார் என்பதையும் நாம் தெளிவுபடுத்தியாக வேண்டும்)

ஒவ்வொரு முறையும் மநுவாதிகள் மோசமாக தோல்வியடைந்தனர். ஏனெனில், குரு ரவிதாஸ் தனது கவிதைகள் மற்றும் பாடல்கள் பலவற்றிலும் தன்னை "சமார்' என்றே அழைத்துக் கொண்டார்.

ரவிதாஸ், ஒரு விடுதலை பெற்ற செருப்பு தைப்பவன், கூறுகிறான்'' என்றொரு பாடலிலும் மற்றொரு பாடலில் குரு ரவிதாஸ் எழுதுகிறார் :

என்னுடைய சாதி குத்பந்த்லா; தோல் வேலை செய்கிறேன்; காசிக்கு அருகே வாழ்கிறேன்.''

(குத்பந்த்லா உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஒரு உட்சாதிப் பிரிவு)

மற்றொரு பாடலில் ரவிதாஸ் எழுதுகிறார் :

எனது கூட்டாளிகள் தாழ்வானவர்கள் என்பது என்னை தவிப்பில் ஆழ்த்துகிறது/என்னுடைய நடவடிக்கைகள் தீதானவையாகக் கருதப்படுகின்றன/என்னுடைய பிறப்பு தாழ்வானது.''

இவை எல்லாம் குரு ரவிதாசின் சிந்தனைகளிலிருந்து தலித் பெரும்பான்மை மக்களை விலக்கி வைக்க முயன்ற பார்ப்பனர்களின் மற்றொரு சதித் திட்டமே. தலித் பெரும்பான்மை மக்கள் சாதி எனும் தடையை உடைத்து விடுதலை பெற குரு ரவிதாசின் சிந்தனைகள் வழிநடத்தும். ஏனெனில் சமத்துவம், சுயாட்சி, "பேகம்புரா' எனப்படும் துயரற்ற நகரம் ஆகியவற்றைப் பற்றி பேசியவர்களில் குரு ரவிதாஸ் முதன்மையானவர் (டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் பேகம்புராவை மனதில் வைத்தே இந்தியாவின் அரசியல் சட்டத்தை எழுதினார் என தோன்றுகிறது).

குரு ரவிதாசின் குரு யாரெனக் கேட்டால், குரு ரவிதாஸ் ஒருபோதும் 33 கோடி போலி கடவுள்கள் எதையும் வணங்கியதில்லை. அவர் தியானம் செய்ததும் வணங்கியதும் ஒரே கடவுளை நோக்கியே. அவர் சொல்கிறார் : “(கடவுளாகிய) உனக்கும் எனக்கும் எந்த வேறுபாடும் இல்லை. தங்கத்திற்கும் நகைகளுக்கும் இடையிலும், நீருக்கும் அதன் அலைகளுக்கும் இடையிலும் எந்த வேறுபாடும் இல்லாதது போல.''

கடந்த ஆண்டு குரு ரவிதாசின் பிறந்த நாளின்போது "ரோசனா ஸ்போக்ஸ்மேன்' செய்தித்தாள், குரு ரவிதாஸ் (அந்நாளிதழ் "பகத்' என்றே குறிப்பிட்டது) சீக்கிய குருக்களின் அறிவுரைகளை அறியாதவராக இருந்தார் என்று கூறிய ஒரு கட்டுரையை வெளியிட்டது. குரு ரவிதாசை பற்றிய கதைகள் தவறான வகையில் கட்டுரையாசிரியரால் எடுத்தாளப்பட்டிருந்தன. குரு ரவிதாசின் வாழ்க்கை குறித்த எந்த வரலாறும் இல்லையென்று அக்கட்டுரை தவறாகக் குறிப்பிட்டிருந்தது. இவ்வாறு குறிப்பிடுவது மடத்தனமானது மட்டுமல்ல, சூழ்ச்சியானதும்கூட. ஏனெனில் குரு ரவிதாசின் பாடல்கள், சீக்கியர்களின் புனித நூலான குரு கிராந்த்தில் இருக்கிறது. சீக்கியர்களின் பத்தாவது குருவான குரு கோவிந்த் சிங் தனக்குப் பிறகு குரு கிராந்த் சாகேபையே குருவாகக் கருதி பின்பற்றுமாறு கூறியிருந்தார்.

ஆகவே, குரு கிராந்த் சாகேபில் உள்ள அனைத்து குருக்களின் (குரு ரவிதாஸ் உட்பட) "பானி'க்களும் சமமாகவே கருதப்பட வேண்டும். ஏன் சிலரை "பகத்' என்றும் வேறு சிலரை "குரு' என்றும் குறிப்பிட வேண்டும்? இந்த முறை இத்தகைய வேலையை செய்தவர்கள் பார்ப்பனிய சக்திகளின் பிடியில் உள்ள சீக்கிய அறிஞர்களே. இவர்கள், இந்து மதத்தின் சாதியத்திற்கு எதிராக சமத்துவத்திற்காக உருவான தனித்த மதமே சீக்கிய மதம் என்பதை மறந்து விட்டனர்.

யார் பகத்? யார் குரு? ஒருவர் வாழ்வின் உண்மையை அறிய தியானம், வணங்குதல் போன்ற வழிகளின் மூலம் நிறைவான நிலையை அடைய முயலும் வரையில், அந்த மனிதர் ஞானத்தை அடையாத நிலை வரையில் அவரை "பகத்' என்று அழைக்கலாம். ஆனால் அந்த மனிதன் வாழ்வின் உண்மையை அடைந்துவிட்டால், ஞானத்தைப் பெற்றுவிட்டால், கற்றுக் கொடுக்கத் தொடங்கிவிட்டால் அவர் குரு ஆகிறார். அந்த நிலையில் அவர் "பகத்'தாகவே இருப்பதில்லை.

ஏராளமான அரசர்களும் அரசிகளும் குரு ரவிதாசின் சீடர்களாக ஆகியுள்ளனர். அவரை குருவாக ஏற்றுக்கொண்டுள்ளனர். குருவாக மட்டுமல்ல, ராஜகுருவாகவே ஏற்றுக் கொண்டுள்ளனர். அவர்களில் முக்கியமானவர்கள் ராஜா பிபா, ராஜா நாகர் மால், ரேவா நரேஷ், ராணி ஜலன் பாய் மற்றும் மீரா பாய். மீரா பாய் அரசன் கிருஷ்ணனின் ரசிகையாக முன்னிறுத்தப்படுகிறார். உண்மையில் அவர் குரு ரவிதாசை பின்பற்றுகின்றவராகவே இருந்தார்.

மீரா நே கோபிந்த் மில்யா ஜிகுரு மல்யா ரவிதாஸ்

(மீரா பாடாவளி 4)

குரு ரவிதாசிற்கு அர்ப்பணித்து பல கோயில்களை அவருடைய சீடர்களான மன்னர்கள் கட்டினர். ஆனால் பிற்காலத்தில் அவை இடிக்கப்பட்டன அல்லது இந்து கோயில்களாக மாற்றப்பட்டன.

"சிறீ குரு ரவிதாஸ் வாழ்வும் எழுத்துகளும்' என்ற நூலின் 116117 பக்கங்களில் அதன் ஆசிரியர் டாக்டர் லேக் ராஜ் பர்வானா பதிவு செய்துள்ளதன்படி, குரு ரவிதாஸ் வட இந்தியாவிற்கு இரண்டு முறை சென்றுள்ளார். முதல் முறை செல்லும் போது அவருடன் கபீர் ஜி, தர்லோசன் ஜி, சாயின் ஜி மற்றும் தன்னா ஜி ஆகியோர் சென்றுள்ளனர். இவர்கள் அனைவரும் தற்பொழுது "நான்கானா சாகேப்' என்று அழைக்கப்படும் "சுர்கானா'வில் குரு நானக் தேவை சந்தித்துள்ளனர். அங்கு குரு நானக் தேவ் அவர்களுக்கு உணவளித்ததோடு, அவரது மதிப்பிற்குரிய தந்தை மேத்தா காலு ஒரு லாபகரமான வியாபாரத்தை நடத்த தனக்கு அளித்த 20 ரூபாயை இவர்களிடம் அளித்துள்ளார்.

இரண்டாவது முறை பஞ்சாபிற்கு சென்ற போது, சுல்தான்பூர் லோதியில் உள்ள காலி பெயினின் சந்த் கந்தில் குரு நானக் தேவை அவர் சந்தித்தார். மூன்றாவது முறை அவர் குரு நானக் தேவை காசியில் உள்ள "குரு காபாக்' எனும் இடத்தில் சந்தித்தார். அவர்கள் மதம், சமூக அமைப்பு, மனிதர்களின் விடுதலை ஆகியவை குறித்து பல்வேறு கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர். குரு நானக் தேவின் விருப்பத்திற்கு இணங்க, குரு ரவிதாஸ் 40 பாடல்களும் ஒரு குறளும் கொண்ட ஒரு பானியை அவருக்கு பரிசளித்தார். குரு நானக் தேவுடன் வசித்து வந்த மர்தானா, பல நேரங்களில் குரு நானக் தேவின் விருப்பத்திற்கிணங்க அவர் முன் குரு ரவிதாசின் பாடல்களைப் பாடுவார். குரு நானக் தேவின் வாழ்க்கைக்கும் அவருடைய அறிவுரைகளுக்கும் ஒரு சரியான திசையை அமைத்தவர் குரு ரவிதாசே. அதனால் இன்றைய சீக்கிய அறிஞர்கள் யார் உண்மையான குருவாக இருந்தார்கள், யாரை அவர்கள் குரு அல்லது பகத் என்று அழைக்க விரும்புகிறார்கள் என்பதை குறித்து கேள்வி எழுப்ப அவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை.

1920 வரை சீக்கியர்களின் புனித தலமான தங்கக் கோயிலில்தீண்டத்தகாதவர்களின் நைவேத்தியங்கள் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. அதோடு அவர்கள் பெயரில் அர்ச்சனை செய்யப்படுவதும் இல்லை ("அமிர்தசரசின் பழம்பெருமை' எஸ் எஸ். ஜோகர்). இவை எல்லாம் சீக்கிய அறிஞர்கள் எந்த அளவு சீக்கிய மத கோட்பாடுகளைப் பின்பற்றுகிறார்கள் என்பதையே காட்டுகிறது. டாக்டர் அம்பேத்கரால் மதமாற்றத்திற்கு கவனத்தில் கொள்ளப்பட்ட ஒரு மதம் சீக்கிய மதம். ஆனால் சீக்கிய தலைவர்கள், தலித்துகளுக்கு எதிரான சிந்தனை கொண்டவர்களாகவும் அவர்கள் மீது வெறுப்பு கொண்டவர்களாகவும் இருக்கின்றனர்.

"ஜதேதார்'கள் என்று அழைக்கப்படும் சீக்கியத் தலைவர்கள் மற்றும் அறிஞர்கள் மநுவாதி மக்களின் கைப்பாவைகளாக மாறிக் கொண்டிருக்கிறார்கள். இது, சீக்கிய மதத்தின் முடிவுக்குதான் இட்டுச் செல்லும். இது தொடர்ந்தால், இந்து மதக் கடவுள்களின் சிலைகள் "தர்பார் சாகேப்' என்று அழைக்கப்படும் தங்கக் கோயிலில் காணும் நாள் அதிக தொலைவில் இல்லை. ஆர்.எஸ்.எஸ். தன்னுடைய சொந்தப் பெயரில் சீக்கிய தலைவர்களை சந்திப்பதும் அவர்களை தவறாக வழி நடத்துவதும் கடினம் என்பதால் "பிரேரனா', ராஷ்டிரிய சீக்கிய சங்கத்', "குரு கிரந்த் சாகேப் விசார் சன்ஸ்தா' என்ற பெயர்களில் துணை அமைப்புகளை உருவாக்கி உள்ளது. தற்பொழுது சீக்கிய அறிஞர்கள் இந்த அமைப்புகளின் நடவடிக்கைகளில் பங்கெடுப்பதும் முழுமையாக ஆதரிப்பதும் நாம் அனைவரும் காணக்கூடியதாக இருக்கிறது.

ஜதேதார்களும் மற்றும் பலரும் மறந்தது என்னவெனில் :

1. சீக்கிய குருக்கள் ஒற்றைக் கடவுளை மட்டுமே நம்பினர். மாறாக, இந்துக்கள் பல ஆண், பெண் கடவுளர்களை வணங்குகின்றனர்.

2. இந்து முப்பெரும் கடவுளர்களான பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவனை சீக்கிய குருக்கள் ஒட்டுமொத்தமாக நிராகரித்தனர்.

3. வடிக்கப்பட்ட சிலைகளையோ, உருவங்களையோ வணங்குவது சீக்கிய மதத்தில் முற்றிலுமாக தடை செய்யப்

பட்டுள்ளது. மாறாக, இந்து மதத்தில் அவை ஏற்கப்பட்டுள்ளன.

4. சீக்கியர்களால் பசு ஒரு புனித மிருகமாகக் கருதப்படுவதில்லை. அதனால் அது வணங்கப்படுவதுமில்லை.

5. வேதங்கள், கீதை மற்றும் பிற இந்து எழுத்தாக்கங்களின் மேலாதிக்கத்தை சீக்கிய மதம் அங்கீகரிக்கவோ, ஏற்றுக்கொள்ளவோ இல்லை.

6. சீக்கிய குருக்களும் குரு ரவிதாசும் சாதி அமைப்பை முற்றிலுமாக நிராகரித்தனர். அனைத்து ஆண்களும் பெண்களும் அவர்களின் சாதி, நிறம், இனத்திற்கு அப்பாற்பட்டு சமமாக நடத்தப்பட வேண்டும் என்றே கூறினர். இந்து மதம் இவற்றை எல்லாம் செய்கிறதா?

7. மரணம் மற்றும் திருமணத்தை ஒட்டிய சீக்கிய மத சடங்குகளும் மரபுகளும் இந்து மதத்திலிருந்து முற்றிலும் வேறுபடுகின்றன.

குரு கிராந்த் சாகேபில் "பகதா தி பானி' பகத்தின் பாடல் என்றே குறிப்பிடப்பட்டுள்ளதாக பல சீக்கிய அறிஞர்கள் கோருகின்றனர். அப்படியெனில், குரு நானக் தேவ் தொடங்கி குரு கோவிந்த் சிங் வரை எங்கும் குரு என்ற சொல் அவர்களை குறிக்கப் பயன்படுத்தப்படவில்லை. மகளா1, மகளா2 போன்றவற்றில் "குரு நானக் தேவின் பானி', "குரு கோபிந்த் சிங்கின் பானி' என்று போடவில்லை. (மகளா என்றால் பொது மனிதன்) குரு நானக் தேவை, ஒரு பொது மனிதராக சீக்கிய அறிஞர்கள் ஏற்றுக் கொள்வார்களா? குரு நானக் தேவின் பிறப்பு கதைகளில் பல இடங்களில் அவரைக் குறிப்பிடும்போது பாபா, தபா, பிர் என்று பல பெயர்களில் குறிப்பிடுகின்றனர். குரு நானக் தேவ் தானே பல இடங்களில் தம்மை பொது மனிதன், ஷாயார், நீய்ச் என்று குறிப்பிடுகிறார். சீக்கிய அறிஞர்கள் குரு நானக் தேவை ஷாயார், நீய்ச் அல்லது பாபா என்று ஏற்றுக் கொள்கிறார்களா?

குரு ரவிதாசை குரு என்று ஏற்றுக் கொள்ள விரும்பாதவர்கள் அவர் பெயருக்கு முன் "குரு' என்று எழுத விரும்பாதவர்கள்; குரு ரவிதாசின் அறிவுரைகளிலிருந்து எதையும் கற்க விரும்பாதவர்களே ஆவர். அவர்கள் வெறுப்பு நிரம்பியவர்களாக இருக்கிறார்கள். சமத்துவத்திற்கு ஆதரவு தெரிவிக்காதவர்கள். பாகுபாட்டைப் பின்பற்றுபவர்கள்.

தலித் பெரும்பான்மை மக்கள் மீதான வன்கொடுமைகள் புதியவை அல்ல. மநுவாதிகள் எப்போதுமே தலித் பெரும்பான்மை மக்களை அடக்கி, ஒடுக்கி, கொடுமைக்குள்ளாக்கி, கொல்ல முயன்று, கொலையும் செய்து, கொள்ளை அடித்து என அனைத்துவித வன்கொடுமைகள் செய்யவும் தொடர்ந்து முயன்று வருகின்றனர். இந்த கொடுமைகளை எதிர்த்து குரல் கொடுக்க யார் முனைந்தாலும் அவர்கள் இந்து மதத்தால் கொல்லப்படுகின்றனர் அல்லது உயிருடன் எரிக்கப்பட்டுள்ளனர். குரு நாம்தேவ் கொடுமைப்படுத்தப்பட்டு மகாராட்டிரத்தை விட்டு வெளியேற்றப்படுகிறார். குரு (சந்த்) துகாராம், சந்த் சோக்கா மால் கொல்லப்பட்டனர். சந்த் நாத் நார் உயிருடன் எரிக்கப்பட்டார். அதைப் போலவே குரு ரவிதாஸ், அவரை எப்போதும் எதிர்த்த மக்களால் சிட்டார்காரில் கொல்லப்பட்டார்.

தனது வாழ்க்கை முழுவதும் குரு ரவிதாஸ், சமத்துவத்திற்காகவும்சமூக, அரசியல், பொருளாதார ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் தொடர்ந்து போராடி வந்தார். பல பாடல்களையும் "ஷலோ'க்களையும் இயற்றினார். அவை இந்து மக்களால் அன்றைய காலத்தில் எரித்து அழிக்கப்பட்டன. குரு கிராந்த் சாகேபில் குரு ரவிதாஸ் இயற்றிய 40 பாடல்களும் 1 குறளும் இணைக்கப்பட்டுள்ளன. "ஒருவனே தேவன்' என்ற சொற்றொடரை முதன் முதலில் பயன்படுத்தியவர்களில் ஒருவர் குரு ரவிதாஸ். 15 ஆம் நூற்றாண்டில் எந்த அளவுக்குப் பொருந்தியதோ அதே அளவுக்கு இன்றைக்கும் அவருடைய அறிவுரைகள் பொருந்துகின்றன. அனைவரும் அவருடைய அறிவுரைகளிலிருந்து ஒளி பெற்று, அறியாமை இருளிலிருந்து வெளிவரட்டும்.

தமிழில் : பூங்குழலி

Pin It