தேசிய அரசுகள் என்பது, மிக நவீன கருத்தாக்கமாகும். அதற்கு முன்பு மன்னராட்சி தான் நடைமுறையில் இருந்தது. 400 ஆண்டுகளுக்கு முன்பு அய்ரோப்பாவில் தான் முதன் முறையாக மன்னராட்சியைப் பின்னுக்குத் தள்ளி தேசிய அரசுகள் முதன்மைப் பெற்றன. மன்னராட்சி என்பது ஒரு சர்வாதிகார ஆட்சிமுறை. அது, நிலப்பிரபுக்களை அடிப்படையாகவும், விவசாயத்தை முதன்மையாகவும் கொண்டிருந்தது. மரபான கைவினைத் தொழில்கள் மற்றும் அறிவியல் வளர்ச்சியின் விளைவாகத் தொடங்கப்பட்ட தொழில்கள் என இவை எல்லாம் ஒருங்கிணைக்கப்பட்டு, பெரும்தொழிற்சாலைகளாக நிலைப்பெற்றன. தேசிய அரசுகள் பெரும்பாலும் ஜனநாயகக் கட்டமைப்புகளாகத் திகழ்கின்றன. அவை சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை.

தங்கள் நிலப்பரப்பில் பெருந்தொழிற்சாலைகளை அமைத்துக் கொண்ட நாடுகள் பின்னர் ஆசியா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களில் உள்ள நாடுகளில் குடியேற, தங்கள் படைகளுடன் புறப்பட்டனர். இந்தியாவின் பெரும்பகுதி நிலப்பரப்பு, ஆங்கிலேயர்களின் ‘காலனி'யாக (ஆக்கிரமிப்பு) இருந்தது. நாட்டின் வேறு சிறு பகுதிகள் போர்த்துக்கீசியர்கள் மற்றும் பிரெஞ்சுக்காரர்களின் வசம் இருந்தன. இந்தியாவின் வளங்கள் அனைத்தையும் சுரண்டுவதுதான் ஆங்கிலேயர்களின் முதன்மைத் திட்டம். அந்த வளங்கள் அனைத்தையும் தங்கள் நாட்டில் உள்ள தொழிற்சாலைகளுக்கு அவர்கள் கச்சாப் பொருட்களாக எடுத்துச் சென்று, பின்னர் அவர்களின் உற்பத்திக்கான சந்தையாக இந்தியாவை மாற்றினர்.

இந்த நோக்கத்துடன் பல புதிய வியாபாரத் தளங்களை அவர்கள் இங்கு நிறுவினர். அவை கிராமங்கள், நகரங்கள், தொழிற் சார் பகுதிகள் எனப் பலவாறாக விரிந்தன. இந்தியர்களில் பலர் அவர்களுக்கு உறுதுணையாக இருந்தனர். நவீன தொழில்நுட்பங்களின் துணையுடன், புதிய வர்க்கம் ஒன்று இங்கு உருவானது.

புதிய வியாபாரிகள், வங்கிகள், நிலப்பிரபுக்கள், தொழில் அதிபர்கள், எஸ்டேட் முதலாளிகள், தரகர்கள் என அவ்வர்க்கம் சமூகமெங்கும் பரவியது. இதனைத் தொடர்ந்து 1835இல் ஆங்கில வழிக் கல்வி இங்கு அறிமுகப்படுத்தப்பட்டது. எழுத்தர்கள் மற்றும் நிர்வாகிகளை உருவாக்கும் பொறுப்பு, இந்த நவீன கல்வி முறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்திய சமூகத்தின் பல்வேறு அடுக்குகளில் ஏற்பட்ட இந்த மாற்றங்கள் தான் தேசியத்திற்கு வித்திட்டது. இது பல்வேறு தளங்களிலும் எதிரொலித்தது. மத சீர்திருத்த இயக்கங்களும் மேற்கத்தியத் தன்மையிலான சமூக -பொருளாதார -அரசியல் இயக்கங்களும் இந்திய சமூகத்திற்குப் புத்துணர்வூட்டின. நாளடைவில் இங்குள்ள அறிவுசார் வர்க்கம், தங்கள் இருப்பை நிலைப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டது. உரிமைகள், அதிகார நிர்வாகப் பதவிகளுக்கான தேர்வுகள், நிர்வாகத்தை இந்தியத் தன்மையுடையதாக மாற்றுவது எனப் பல அடுக்குகளில் மாற்றத்திற்கான குரல்கள் எழுந்தன. நவீன தொழில் அதிபர்கள் இந்த மாற்றங்களுக்கு ஆதரவு தெரிவித்ததோடு, தங்கள் கோரிக்கைகளையும் இத்துடன் இணைத்தனர். தங்களுக்கான கூடுதல் தொழிற்சாலைகள், தொழிலாளிகள் என இப்புதிய வர்க்கத்தின் வளரும் தேவைகள் தான் - இந்தியத் தேசியத்திற்கான புதிய குரலாக முதன் முதலில் ஒலித்தது.

நவீன கல்வி முறை, தொலைத்தொடர்பு, ரயில்வே, தந்தி, சுதந்திரமான ஊடகம், ஆங்கிலேயர்களின் இனவெறிக்கு எதிர்ப்பு என பல மாற்றங்கள், அந்த அலையின் உட்கிடக்கையாக இருந்தன. பொருளாதார சுரண்டல், நீதித்துறை சீர்திருத்தங்கள் எனப் பல்துறை சார்ந்து அது இயங்கியது. ஆங்கிலேயர்கள் முன்வைத்த பல சீர்திருத்தங்கள் - சிக்கல்களும் குழப்பங்களும் நிறைந்தவை. சுதந்திரமான ஊடகங்களின் வழிதான்
இந்திய நாட்டின் குரல் மேலெழுந்தது.

உள்ளூர், வட்டார, நகர அளவில் பல புதிய அமைப்புகள் உருவாக்கப்பட்டன. அவை அனைத்தும் அந்தந்த பகுதிகளில் வசிக்கும் வசதியுள்ளவர்களின் கோரிக்கைகளையும், அவர்களின் தேசியம் சார்ந்த பார்வையையும் முன்வைத்தன. ‘மும்பை சங்கம்', ‘மெட்ராஸ் பூர்வீகர்கள் சங்கம்', ‘புனே சர்வ ஜைனிக் சங்கம்', ‘மெட்ராஸ் மகாஜன சபை' அந்த அமைப்புகளில் சில. இந்த அமைப்புகள் இந்தியா முழுவதும் பல கூட்டங்களை நடத்தின. அதில் 1883இல் கல்கத்தாவில் நடைபெற்ற ஒரு கூட்டம் தான் பின்னர் 1885இல் தொடங்கப்பட்ட ‘இந்திய தேசிய காங்கிரசு'க்கு அடிப்படையை அமைத்துத் தந்தது.

இந்த அமைப்புகளின் கோரிக்கைகளையும், வளர்ந்து வரும் புதிய வர்க்கத்தின் தேவைகளையும் முன்வைக்கும் அமைப்பாகவே இந்திய தேசிய காங்கிரஸ் திகழ்ந்தது. நிலச் சீர்திருத்தங்கள், வியாபாரம் -தொழில் சார்ந்த கூடுதல் வாய்ப்புகள் மற்றும் இந்திய நிர்வாகப் பணித் தேர்வுகளை இந்தியாவிலேயே நடத்துவது ஆகியவை தான் அவர்களின் முதன்மைக் கோரிக்கைகளாக இருந்தன. இனவெறியை ஒழிப்பது, வட்டார எதிர்சார்புகளைக் களைவது மற்றும் இந்தியர்களை அரசியலில் ஈடுபடச் செய்வது ஆகியவை தான் காங்கிரசின் முதன்மைக் குறிக்கோள்.

சமூக அதிகாரத்திற்கு வித்திட்டவர்

இத்தகைய செயல்பாடுகளுக்கு எதிராக, காசியில் சர் சையத் மற்றும் ராஜா ஷியோ பிரசாத் ஆகியோர், ‘அய்க்கிய இந்திய தேசபக்த சங்கத்தை ஆகஸ்ட் 1988 இல் தொடங்கினர். அந்த சங்கத்தின் அடிப்படை நோக்கங்களில் சில : 1) காங்கிரசுடன் இந்தியாவின் அனைத்து சமூக மக்களும் அணிதிரளவில்லை என்பதை ஆங்கிலேயர்களுக்கு தெரிவிப்பது 2) இந்து மற்றும் முஸ்லிம் அமைப்புகளின் நிலைப்பாடுகளை பிரிட்டிஷ் நாடாளுமன்றத்திற்குதெரிவிப்பது 3) இந்தியாவில் வெள்ளையரின் ஆட்சியை பலப்படுத்துவது; அதன் மூலம் காங்கிரசின் பின்னால் மக்கள் அணிதிரள்வதைத் தடுப்பது.

இச்சங்கத்துடன் தொடர்பு கொண்டிருந்த பலர் பிறகு முஸ்லிம் லீக்குடனும், இந்து மகா சபையுடனும் இணைந்து விட்டனர். இந்த கலவையான மாற்றங்களைத் தான் சுரேந்திரநாத் பானர்ஜியும் லோக்மான்ய திலக்கும் – ‘இந்தியா ஒரு தேசமாக உருவாகிக் கொண்டிருக்கிறது' என்று குறிப்பிட்டனர். இந்திய மக்கள் காலனிய ஆட்சியையே விரும்பினார்கள் என்பது போன்ற தோற்றத்தை முன்வைத்திட அவர்கள் முயன்றனர்.
இந்த காலகட்டத்தில் தான் உடன்கட்டை ஏறுதல் (சதி) போன்ற மூடத்தனங்களை தடை செய்ய வேண்டும் என குரல் எழுப்பினார் ராம் மோகன் ராய்.

நவீன கல்வி, பெண் கல்வி ஆகியவற்றைப் பரவலாக்குவது பற்றி ஜோதிராவ் புலே வலியுறுத்தினார். பெண் கல்வி எனும் கோரிக்கையை பண்டித ராமாபாயும் முன்வைத்தார். பார்ப்பன - ஜமீன்தார் கூட்டணிக்கு எதிராக, பார்ப்பனர் அல்லாதார் சமூக அதிகாரம் பெறும் இயக்கத்திற்கு அடிப்படைகளை உருவாக்கியவர் மகாத்மா புலே. பின்னர் தீண்டத்தகாதவர்களின் உரிமைக்கு பாபாசாகேப் அம்பேத்கர் குரல் கொடுத்தார் .
மதவாதத்தின் வளர்ச்சி என்பது பெரும் சிக்கலானது. காலனிய கொள்கைகளால் ஏற்பட்ட வளர்ச்சியை இங்குள்ள வசதி பெற்றோர் அபகரித்துக் கொண்டனர்.

அவர்களில் பெரும்பகுதியினர் இந்துக்களாகவே இருந்தனர். அவர்கள் தொழிற்துறையின் மீது அதிகளவில் பொருளாதார மேலாதிக்கத்தை செலுத்தினர். கல்வியின் முழு பயனையும் அதிகார வர்க்கத்தின் நலன்களையும் இந்துக்களே அனுபவித்தனர். 1857க்குப் பிறகு வெள்ளையர்களின் முஸ்லிம் எதிர்ப்பு நிலைப்பாடு, இந்துக்களுக்கு மேலும் சாதகமாக அமைந்தது. இந்த காலகட்டத்தில் பல்வேறு புதிய தொழில்களுக்குள் இந்துக்கள் நுழைந்தனர். ‘இந்து', ‘முஸ்லிம்', ‘பார்ப்பனர்' போன்ற சொற்களை, வெள்ளை இன வரலாற்றாசிரியர்கள் கையாண்டனர். இருப்பினும் அதற்குப் பிறகு வந்த இந்திய வரலாற்று ஆசிரியர்கள் -இந்து, முஸ்லிம் ஆகிய சொற்களை மட்டும் எடுத்துக் கொண்டனர்.

மக்களிடையே நவீன தேசிய கருத்தாக்கங்களை உருவாக்க, இந்தியத் தலைவர்கள் மதத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்தினர். இதற்கு ராம ராஜ்யம், கிலாபத் இயக்கம் ஆகியவை சில எடுத்துக்காட்டுகள். இந்த நிகழ்வுகள் இரு விளைவுகளை ஏற்படுத்தின : ‘தேசியம்' மற்றும் ‘மதவாதம்' ஆகிய உணர்வுகளை அது மேலெழும்பச் செய்தது. அடுத்து வரும் பக்கங்களில், இங்கு மதவாதம் எவ்வாறு தலை தூக்கியது என்பதை நாம் விரிவாகக் காணலாம். முஸ்லிம் நிலப்பிரபுக்கள், இந்து ஜமீன்தார்கள் ஆகிய இரு பிரிவினரின் அரசியல் மற்றும் வெள்ளையர்களின் பிரித்தாளும் சூழ்ச்சியே அதற்குக் காரணம்.

மதவாத முக்கோணம்

நாட்டுப் பிரிவினை என்பது பன்முகம் கொண்ட ஒரு பெரும் அவலம். இந்து -முஸ்லிம் மதவாத அரசியல் மற்றும் வெள்ளையர்களின் பிரித்தாளும் சூழ்ச்சிகள் தான் அதன் மய்யப் பகுதிகள். முஸ்லிம்களில் வசதி பெற்றவர்களின் அரசியலை ‘முஸ்லிம் லீக்' முன்வைத்தது. முஸ்லிம் மேட்டுக் குடிகளுக்கு அதிக சலுகைகளைப் பெற்றுத்தர அது முழு வீச்சில் செயல்பட்டது. நாட்டின் மக்கள் தொகையில் முஸ்லிம்கள் 25 சதவிகிதம் இருப்பதாக அது கூறியது. எந்த சட்டவரைவை நீங்கள் நிறைவேற்ற வேண்டுமானாலும், மூன்றில் இரு பங்கு பெரும்பான்மை அவசியம். அதனால் முஸ்லிம்களுக்கு மூன்றில் ஒரு பங்கு பிரதிநிதித்துவம் வேண்டும். அப்படி இருந்தால்தான் முஸ்லிம்களுக்கு எதிரான சட்டவரைவுகளை அவர்களால் தடுக்க இயலும் என அவர்கள் முன்வைத்தார்கள். இதை காங்கிரஸ் நிராகரித்தது.

முஸ்லிம் லீக்கின் ஒருமித்த தலைவராக ஜின்னா தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே வேளை ‘இரு தேச' கருத்தினை பல முஸ்லிம் மதவாதிகள் ஏற்றுக் கொண்டனர் (சவுத்ரி, ரகமத் அலி, முஸ்லிம் லீக்). இந்து மகாசபை, ஆர்.எஸ்.எஸ். போன்ற இந்து மதவாதிகளும் அதனை ஏற்றுக் கொண்டனர். காங்கிரசின் தோற்றத்துடன் அதே சமகாலத்தில் இந்த இரு எதிரெதிர் போக்குகளும் தங்கள் பணிகளைத் தொடங்கின. இவை எதிர் போக்குகளாகத் தோற்றம் அளித்தாலும், பல நேரங்களில் ஒரே திசையில் பயணிப்பவை. இவை இரண்டும் காங்கிரசின் மதசார்பற்ற அரசியலுக்கு எதிரானவை.

காங்கிரஸ் தொடங்கப்பட்டு அது வசதி பெற்றவர்களின் நலனையும், வெள்ளையர்களுக்கு எதிர்ப்புகள் தெரிவிக்கும் போராட்டங்களையும் தொடங்கிய நேரத்தில், இதனுடன் இணையாமல் இருந்த சர் சையத், மெல்ல முஸ்லிம் நிலப்பிரபுக்களை அணிதிரட்டத் தொடங்கினார். இந்துக்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட சாதியினரின் நலன்களுக்கான இயக்கமே காங்கிரஸ் என சையத் தனது பிரச்சாரத்தையும் தொடங்கினார். காங்கிரஸ் முன்வைத்த யோசனைகளுக்கு மாறாக, இவர் பிரதிநிதித்துவ முறையை ஆதரிக்க முன்வந்தார். இந்தியாவில் முஸ்லிம்களின் நலனை, வெள்ளையர்களால் மட்டுமே பாதுகாக்க இயலும் என்றார். இத்தகைய போக்குகள் தான் பின்னர் ஒருங்கிணைந்து முஸ்லிம் லீக்காக உருவாகி, அது முஸ்லிம் நிலப்பிரபுக்கள் மற்றும் நவாபுகளின் நலன்களைப் பேணத் தொடங்கியது.

Mahatma Jothirao
சமகாலத்தில், காங்கிரசின் கொள்கைகளை மற்ற பிரிவினரும் எதிர்த்து வந்தனர். இவர்கள் இந்து நிலப்பிரபுக்கள், மரபான வியாபாரிகள் மற்றும் குறுநில மன்னர்களாக இருந்தனர். 1870கள் முதலே இந்து ஜமீன்தார்கள், நடுத்தர வர்க்கத்தினர், வசதிபெற்றவர்கள் என இவர்கள் அனைவரும் -முஸ்லிம் எதிர்ப்புக் கருத்துக்களை மக்கள் மனங்களில் விதைக்கத் தொடங்கினர். பல மத அடையாளங்களைக் கொண்ட ‘ஒற்றைத் தேசம்' என்கிற காங்கிரசின் கொள்கையை இவர்கள் எதிர்த்தனர். ‘முஸ்லிம் ஆட்சியாளர்களிடம் சிக்கித் தவித்த இந்தியாவை காப்பாற்றியவர்கள் வெள்ளையர்களே' என அவர்கள் பிரச்சாரம் செய்தனர். முஸ்லிம்களுக்கு முந்தைய பண்டைய இந்தியா, பொற்காலமாக இருந்ததாக அவர்கள் நம்பினார்கள்.

‘அனைத்துவித முஸ்லிம் நடைமுறைகளும் தடை செய்யப்பட வேண்டும். எல்லா முஸ்லிம்களையும் ஆரியர்களாக மாற்ற வேண்டும்' என ஆரிய சமாஜத்தின் தலைவர் பண்டிதர் லேக் ராம் கூறினார். அவர் பின்னர் தொடங்கிய ‘பஞ்சாப் இந்து சமாஜம்' காங்கிரசுடன் ஒத்திசைவாக செயல்பட்டது. இருப்பினும் காங்கிரசின் பன்முக மத ஒற்றுமையில் உருவாகும் தேசம் என்பதற்குப் பொருள், இந்துக்கள் தங்களின் முக்கியத்துவத்தை இழப்பது மற்றும் முஸ்லிம் ஆதரவு நடவடிக்கை என அவர்கள் கருதினர். அவர்களைப் பொறுத்தவரை, ஓர் இந்து முதலில் இந்துவாக இருக்க வேண்டும்; பின்னர் இந்தியராக இருக்கலாம். இந்தக் கருத்துத்தளம் தான் பின்னர் –‘இந்து மகாசபை'யாகவும் ‘ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக்'காகவும் உருமாறியது.

பிரித்தாளும் கொள்கை

வசதிபெற்ற இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் இடையிலான வேற்றுமைகளை உணர்ந்த வெள்ளையர்கள், பிரித்தாளும் கொள்கையைத் தேர்ந்தெடுத்தனர். இந்திய தேசிய காங்கிரசின் உருவாக்கம் மற்றும் அதன் கொள்கைகளை அவர்கள் இடையூறாகக் கருதினர். அதனால் சர் சையத் மற்றும் அவர்களது மேட்டுக்குடி ஆதரவாளர்களின் மதவாதக் கொள்கைகளுக்கு ஆங்கிலேயர்கள் ஆதரவு தெரிவித்தனர். இந்து -முஸ்லிம்களிடையே நிலவிய கருத்து மோதல்களை மூலதனமாகக் கொண்டு ஆங்கிலேயர்கள் தங்கள் காய்களை நகர்த்தினர். அதன் மூலம் காங்கிரசை பலவீனப்படுத்த தொடர்ந்து முயன்றனர். இந்து -முஸ்லிம்களின் பிரதிநிதிகளாக மதவாதிகளையே ஆங்கிலேயர்கள் அங்கீகரித்தனர். இந்த மதவாத இயக்கங்கள் எதுவும் ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராடியதும் இல்லை; இவர்களை ஆங்கிலேயர்கள் ஒடுக்கியதுமில்லை. ஆக இந்தியப் பிரிவினை நிகழ, இங்கு மூன்று காரணிகள் இயங்கின.

பிரிவினையின் துயரம்

1929 இல் ஜின்னா தனது 14 அம்ச திட்டத்தை முன்வைத்தார். அதில் முஸ்லிம்களுக்கான பிரதிநிதித்துவம், பம்பாய் மாகாணத்திலிருந்து சிந்துவை பிரிப்பது, தனி வாக்காளர் பட்டியலைத் தொடர்வது போன்ற பல மதசார்பற்ற கோரிக்கைகள் அதில் அடங்கியிருந்தன. 25 சதவிகித முஸ்லிம்களுக்கு மூன்றில் ஒரு பகுதி பிரதிநிதித்துவத்தை அளிப்பது குறித்தும் அது பேசியது. ஆனால் நேரு கமிட்டி, இந்த மூன்றில் ஒரு பங்கு பிரதிநிதித்துவத்தை ஏற்க மறுத்தது.

தனி வாக்காளர் பட்டியல் கோரிக்கையை கைவிட முஸ்லிம் லீக் ஒப்புக் கொண்டது. ஆனால் வேறு சில கோரிக்கைகள் அதற்கு ஈடாக ஏற்கப்பட வேண்டும் என்பதில் அது உறுதியாக இருந்தது : 1) சிந்து பகுதியை தனித்த மாகாணமாக்குவது 2) வடமேற்கு மாகாணத்தில் சீர்திருத்தங்கள் செய்வது 3) சட்ட அவைகளில் மூன்றில் ஒரு பங்கு பிரதிநிதித்துவம் வழங்குவது. 1930 வாக்கில் லாலா லஜ்பத் ராய், பிரிவினையை கோருகிற கடிதம் ஒன்றை காந்திக்கு எழுதினார். 1937 தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றது. பல மாகாணங்களில் ஆட்சியும் அமைத்தது. ஜின்னாவின் கோரிக்கைகளை காங்கிரஸ் அரசுகள் நிராகரித்தன.

ஜின்னாவின் பிரிவினை கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது. இதே ஆண்டு இந்து மகாசபை மாநாட்டில் பாய் பரமானந்த் உரையாற்றினார் : “இந்த நாட்டில் இரு தேசங்கள் (இந்து -முஸ்லிம்) இருப்பதாக ஜின்னா வாதிடுகிறார். ஆம், அவர் கூறுவது உண்மையே'' இந்நிலையில், பொதுவான தேசம் ஒன்றை உருவாக்கும் காங்கிரசின் முயற்சி முடங்கியது. இரு வழிகள் தான் இருந்தன : 1) நாட்டைப் பிரிப்பது 2) முஸ்லிம் மாகாணங்களை தற்பொழுது உள்ளது போலவே வளர அனுமதிப்பது.

நாட்டின் மக்கள் தொகையில் 25 சதவிகித முஸ்லிம்கள் இருந்தனர். ஆனால் அதில் கல்வி பெற்றவர்கள், சொத்துக்கள் வைத்திருப்பவர்கள் மிகக் குறைவாகவே இருந்தனர். முஸ்லிம்களில் 10 சதவிகிதத்தினர் மட்டுமே வாக்குரிமை பெற்றிருந்தனர். அவர்களில் 60 சதவிகிதத்தினர் முஸ்லிம் லீக்குக்கு வாக்களித்தனர். பாகிஸ்தானை உருவாக்க வேண்டும் என முஸ்லிம் லீக் தனது லாகூர் மாநாட்டில் தீர்மானத்தை நிறைவேற்றிய போது, இதனை எதிர்த்து முஸ்லிம்களில் வசதியற்ற பலர் பெரும் கண்டன ஊர்வலங்களை நடத்தினார்கள்.

மதவாதத்தின் வளர்ச்சி

இந்நிலையில், மதசார்பின்மை எனும் கருத்தாக்கம் நடைமுறையில் தேக்கம் கண்டது. அதாவது மதத்தையும் அரசியலையும் தனித்தனியாகப் பார்ப்பது, சில காரணங்களால் நடந்தது. 1) மிதமான பொருளாதார வளர்ச்சி 2) இந்து, முஸ்லிம்களில் இருந்த மேட்டுக் குடிகள், நிலப்பிரபுக்களிடையில் நிலவிய போட்டி 3) நிலப்பிரபுக்கள், நிலப்பண்ணை அளவுக்கு வலுவாக இல்லாத வியாபார முதலாளிகள் 4) ஆங்கிலேயர்களின் பிரித்தாளும் கொள்கை.

மதசார்பற்ற தேசியம் என்பதற்கு, அப்துல் கபார் கான், ஹக்கீம் அஜ்பல் கான், அன்சாரி, மவுலானா அபுல் கலாம் ஆசாத் ஆகியோர் ஆதரவாக நின்றனர். இந்து -முஸ்லிம் ஒற்றுமை, பிரிட்டிஷ் எதிர்ப்பு என்பதிலும் அவர்களுக்கு கருத்து வேறுபாடுகள் இல்லை. “இந்த காலத்தில் தேசங்கள் மத அடிப்படையில் அல்ல; பூகோள ரீதியாகவே அமைகின்றன'' என மவுலானா உசைன் அகமத் மதானி கூறினார். மதசார்பற்ற குரல்கள் ஒலிக்கத் தொடங்கிய வேளையில், அதனை சிதைக்க முஸ்லிம் லீக் எல்லா வழிகளையும் மேற்கொண்டது. ஜின்னாவின் கட்சிக்கு 3 சதவிகித வாக்குகள் கூட கிட்டவில்லை.

அவரது இரு தேச கொள்கைக்கு, இந்து மதவாதிகளின் ஆதரவு மற்றும் வெள்ளையர்களின் சூழ்ச்சி காரணமாக நாட்டுப் பிரிவினை நிகழ்ந்தது. பிரிவினையின் போது, வளமான முஸ்லிம்களில் பலர் பாகிஸ்தான் நோக்கிச் சென்றனர். ஆனால் பெரும்பாலான முஸ்லிம்கள் இந்தியாவிலேயே இருக்க முடிவு செய்தனர். மதத்தின் அடிப்படையில் மட்டுமே பிரிக்கப்பட்ட அந்த தேசம், பின்னர் 1971இல் பாகிஸ்தான் -பங்களாதேஷ் என இரு நாடுகளாகப் பிரிந்தது. மத அடிப்படையில் தேசங்கள் அமைவதில்லை என்பதனை இப்பிரிவினை நிரூபித்தது. முஸ்லிம் அடிப்படைவாதிகளின் சில செயல்கள், பெரும்பான்மை அடிப்படைவாதிகளுக்கு சினமூட்டியது. இங்கிருந்த ஆட்சியாளர்களும் முஸ்லிம் அடிப்படைவாதிகளை தூண்டிவிட்டபடி இருந்தனர்.

எந்த ஒரு நவீன தேசமும் மதத்தின் அடிப்படையில் இயங்க இயலாது. பல முஸ்லிம் நாடுகள் தங்களுக்குள் சண்டையிட்டு வருகின்றன. ஈரான் -ஈராக் அதற்கு நல்லதொரு எடுத்துக்காட்டு. பாகிஸ்தான் பிரிவினையும் அதைத் தான் வலியுறுத்துகிறது. ஜனநாயக அடிப்படையிலான குடியுரிமையில் மட்டுமே நாம் மக்களை இணைக்க முடியும்.

மதவாதம் என்றால் என்ன?

ஒரு மதத்தினை சார்ந்த அனைவரும் பொதுவான சமூக, பொருளாதார, அரசியல் நலன்களைக் கொண்டிருப்பதும், அந்த நலன்கள் வேற்று மதத்தினரின் நலன்களுக்கு நேர் எதிராக இருப்பதுமே மதவாதமாகும். அரசியல் அணிதிரட்டலுக்கு மத அடையாளத்தைப் பயன்படுத்துவதும் மதவாதம் ஆகும். மத அடையாளத்தை அணிந்து கொண்டுள்ள ஓர் அரசியலே மதவாதம்.

மதவாதத்தின் வளர்ச்சியை மூன்று கட்டங்களாகப் பிரிக்கலாம் : அ) கனிவானது : ஒரே மதத்தை வழிபடுபவர்கள், பொதுவான நலன்களைக் கொண்டிருப்பது. ஆ) மிதமானது: வெவ்வேறு மதங்களைப் பின்பற்றுபவர்களிடையே மாற்றுக் கருத்துக்கள் நிலவுவது. இ) தீவிரம் : வெவ்வேறு மதங்களை சார்ந்தவர்கள் மத்தியில் அச்சம் மற்றும் பகைமைஎதிர்ப்புணர்வு நிலவுவது.

மதவாதத்தின் அடிப்படை

அ) நிலவுடைமை கட்டுமானத்தில் -அரசர் / நிலப்பிரபு / கருணை / தயவு / சன்மானம் / தொடர்ச்சி.
ஆ) காலனிய / நவீன சமூகம் -அணிதிரள்வது / போட்டியிடுவது.

காலனியத்தால் இங்கு நடைபெற்ற சமூக மாற்றங்கள் மிதமான வேகத்தில் நிகழ்ந்ததால், அதன் விளைவாக இங்கு சாதி -மத அடையாளங்களுடன் மக்கள் அணிதிரளத் தொடங்கினர். வேலை வாய்ப்புகள் மிகவும் அளவாக இருந்ததால், மத -சாதி அடிப்படையில் கடும் போட்டி உருவானது.
அது, அ) பொருளாதார சமத்துவமற்ற நிலையை மூடி மறைக்க உதவியது. ஆ) உண்மை துன்பங்களின் காரணம் என முன்வைக்கப்பட்டது. இ) உழைப்பவர் -சுரண்டுபவர் இடையிலான உறவை மூடி மறைத்தது. சில நேரங்களில் மத / சாதிய தனித்தன்மைகள் பொருளாதாரத் தனித்தன்மைகளுடன் இணையப் பெற்றன. எடுத்துக்காட்டாக, நிலப்பிரபுக்கள், வசதிபெற்றோர், வியாபாரிகள் ஆகியோர் ‘உயர் சாதி'யினராகவே இருந்தனர். இவர்கள் நிலமற்ற கூலிகள், ஏழை விவசாயிகளை சுரண்டினார்கள். அவர்கள் தாழ்த்தப்பட்டவர்களாகவும், முஸ்லிம்களாகவுமே இருந்தனர்.

மத நம்பிக்கைக்கும் அரசியல் கருத்தாக்கத்திற்கும் இடையிலான நம் உறவுகள் பலவகைப்பட்டதாக இருக்கலாம். சாவர்க்கரும் ஜின்னாவும் மத நம்பிக்கையற்றவர்களாக இருந்தாலும் அவர்கள் மதவாதிகளாகவே இருந்தனர். மறுபுறம் காந்தியும் அபுல் கலாம் ஆசாத்தும் கடுமையான மத நம்பிக்கை உடையோராக இருந்தாலும் -அவர்கள் மதவாதிகள் அல்லர். நேருவும் பகத்சிங்கும் நாத்திகர்கள்; ஆனால் மதவாதிகள் அல்லர். முஸ்லிம் மதவாதத்தை முஸ்லிம் லீக் முன்வைத்தது. இந்து மதவாதத்தை இந்து மகாசபா, ஆர்.எஸ்.எஸ். மற்றும் இந்திய தேசிய காங்கிரசும் கூட முன்வைத்தது; முகம் கொடுத்தது.

மதசார்பின்மை : காந்தியும் நேருவும்

காந்தி ஒரு முறை இவ்வாறு கூறினார் : “மதமும் அரசும் தனித் தனியாகவே இருக்கும். அதற்காக என் உயிரையும் விடத் தயாராக இருக்கிறேன். அரசுக்கு மதத்துடன் எந்தத் தொடர்பும் இல்லை. அரசாங்கம் உங்களது நல்வாழ்வை, தொலைத் தொடர்பை, வெளியுறவுக் கொள்கையை எனப் பல்வேறு மதசார்பற்ற தேவைகளையும் நிறைவு செய்யும். ஆனால் அது என்னுடைய, உங்களுடைய மதத் தேவைகளை நிறைவு செய்யாது. அது அவரவர்களுடைய சொந்தப் பிரச்சனை''

நேரு இவ்வாறு கூறினார் : “அனைத்துக்கும் மேலாக இந்தியா ஒரு மதம் சார்ந்த நாடாகவே கருதப்படுகிறது... நான் இதனை தொடர்ந்து கண்டித்துள்ளேன். அதனை அப்புறப்படுத்தாமல் ஓய மாட்டேன். மதம் என்பது ஆதாரமற்ற நம்பிக்கை, மூடநம்பிக்கை, சுரண்டல், மதவெறி, மதக் கொள்கை ஆகியவற்றை சார்ந்தது. இதனைத் தவிர்த்து மதத்தில் எதுவும் கிடையாது. மதம் மனித மனதில் பெரும் ஏக்கத்தை ஏற்படுத்துகிறது.''
Pin It