periyar with kidஇப்போது இருந்து வரும் நூல் நூற்கும் ராட்டினமானது நூற்கும் விஷயத்தில் அதிக நேரமும் கொஞ்ச உற்பத்தியும் ஆவதின் மூலம் நூற்பவர்களுக்கு பிரயாசை அதிகமாகவும் கூலி குறைவாகவும் கிடைத்து வருவதை உத்தேசித்து புது மாதிரியான, அதாவது கொஞ்ச நேரத்தில் கொஞ்சப் பிரயாசையில் அதிக நூலும் அதிக கூலியும் கிடைக்கும்படியான அபிவிர்த்தியுள்ள ஒரு புது மாதிரியான ராட்டின எந்திரத்தைக் கண்டு பிடித்து குறிப்பிட்ட காலத்துக்குள் கொடுப்பவர்களுக்கு ஒரு லட்ச ரூபாய் (100000 ரூ) இனாம் கொடுப்பதாக உயர்திரு காந்தியவர்கள் கொஞ்ச நாளைக்கு முன்பு வெளிப்படுத்தியிருந்தார். இது வரையில் அம் மாதிரியான ஒரு அபிவிர்த்தி இயந்திரம் யாராலும் கண்டுபிடிக்கப்படாததால் அப் பரிசுக்கு இன்னமும் சிறிது காலம் வாய்தா அதிகமாகக் கொடுக்கப்பட்டிருப்பதாய் ஆமதாபாத் குஜ்ராத் வித்தியா பீடத்தார் தெரிவிக்கிறதாக தினசரிப் பத்திரிகைகளில் காணப்படுகின்றது. அதாவது,

“100000 ரூ. பரிசுக்காக புதிய ராட்டின யந்திரம் கண்டுபிடிப்பவர்கள் அதை அக்டோபர் மாதம் 31 தேதிக்குள் குஜராத் வித்தியா பீடத்திற்கு அனுப்பிக் கொடுக்கலாம்” என்பதாகும்.

ஆகவே திரு. காந்தியவர்கள் கொஞ்ச நேரத்தில் அதிகமான சாமான் உற்பத்தியும் பணவரும்படியும் கிடைக்கும்படியான கொள்கையை விரும்புகின்றாரா ? இல்லையா? என்பதும் அவர் விரும்புகின்றபடி ஏதாவது ஒரு சாதனம் கண்டுபிடிக்கப்பட்டு விட்டால் அது யந்திரமாகக் கருதப்படக் கூடியதாகாதா என்பதையும் அதனால் இயந்திர முற்போக்கை திரு காந்தி ஒப்புக் கொள்கின்றார் என்பது விளங்கவில்லையா? என்பதையும் அந்தப்படி ஏற்படும் இயந்திரத்தின் பயனாய் அதாவது அப்புதிய இயந்திரம் ஒரு நாளைக்கு கால் ராத்தல் நூல் நூற்பதற்கு பதிலாக ஒரு மணிக்கு கால் ராத்தல் நூல் நூற்கும்படியானதாக ஏற்பட்டிருந்தால் அதன் பயனாய் அவ்வியந்திரம் ஒரு நாளைக்கு 8 பேர் செய்கின்ற வேலையை ஒரே ஆள் செய்யும்படியானதாக ஆகி பாக்கி “ஏழுபேர்கள் கூலி வாயில் மண் விழுகாதா” என்பதையும் காந்தி பக்தர்களின் இயந்திர பகிஷ்கார கதர் பக்தர்கள் கவனித்துப் பார்த்து பிறகு இயந்திர முறையைக் கண்டிக்க வேண்டுகிறோம்.

(குடி அரசு - வேண்டுகோள் - 27.09.1931.)

Pin It