Duttu
அக்டோபர் 15, 1984 காலை ஒன்பது மணி. நியுயார்க் நகரில் உள்ள ஜெனரல் இறையியல் கல்லூரியின் அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள டெஸ்மான்ட் டுட்டுவை நார்வேஜியின் தூதர் சந்தித்து, ‘நோபெல் அமைதிப் பரிசு உங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது' என்றார். கறுப்பின மக்களின் விடுதலைக்காகப் போராடிய ‘தென் ஆப்பிரிக்க ஆங்கிலிக்கன் திருச்சபை'ப் பேராயர் டெஸ்மான்ட் டுட்டு (75)வின் போராட்டங்களை அங்கீகரித்து, அவருக்கு நோபெல் பரிசு வழங்குவதாக அறிவிக்கப்பட்ட செய்தி வெளியானதும், ஜோகன்ஸ்பர்க் நகரமே கலைவிழாக் கோலம் பூண்டது. அமெரிக்காவில் இருந்த டுட்டு, தன் குடும்பத்தினருடன் உடனடியாக ஜோகன்ஸ்பர்க் வந்து சேர்ந்தார். தென் ஆப்பிரிக்க பூர்வகுடிகள் அந்த கறுப்புத் தலைவனுக்கு தங்களின் பேரன்பை வெளிப்படுத்த, பழம்பெரும் பண்பாட்டு அசைவுகளை பாரம்பரியக் கொண்டாட்டத்தில் அணியமாக்கினர்.

தூயவாதத்தையும், ஆங்கிலேயத் தனத்தையும் உலகம் முழுக்கத் தூக்கிப் பிடித்த ஆங்கிலிக்கன் திருச்சபைகளுக்கு, தொண்டைக்குள் சிக்கிய வாந்தியாக டுட்டு அசைவாடினார். ஜோகன்ஸ்பர்க் நகரத் தெருக்களில் குழுமிய ஒவ்வொருவர் முகத்திலும் பியானோ இசைக்கருவியின் கட்டைகளைப் புன்னகைக்கும் அகலமான பற்கள், உதட்டை கருஞ்சிவப்பாக்கி, கட்டை மீறிய சிரிப்பொலியை புழுதிக் காற்றில் இசைக்க, கூட்டத்தின் நடுவில் இரண்டு கைகளையும் உயர்த்தி-

"எம் மக்களை ஈன்றெடுத்த தாய்மார்களே! எப்படியாவது தப்பித்து இங்கிருந்து வெளியேறிவிட, ரயில் நிலையங்களில் மறைந்து கிடந்த எங்கள் தாயார்களே! சாவதற்குள் ஒரு முறையாவது தங்கள் கணவர்களைப் பார்த்துவிட மாட்டோமா எனக் குற்றவாளிகளாய் சிறைப்பிடிக்கப்பட்ட எம்மினப் பெண்களே! இந்த நோபெல் பரிசு உங்களுக்கானது;

- ஆண்டிற்கு பதினோரு மாதங்கள் தங்கள் குழந்தைகளைப் பிரிந்து வாழ்கிற எங்கள் தந்தையர்களே! பாலியல் விடுதிகளில் தனிமையில் காத்துக் கிடக்கிற எங்கள் அப்பாக்களே! இந்த நோபெல் பரிசு உங்களுக்கானது;

- எம் சொந்த மண்ணில் இருந்து முற்றிலும் வேரறுக்கப்பட்டு குப்பைக் கூளங்களாய் அள்ளி வீசப்பட்ட முப்பத்தைந்து லட்சத்து கறுப்புச் சொந்தங்களே! பள்ளிக் கூடங்களைக் காணாமல் மழையிலும், குளிரிலும் தெருக்களில் செத்து மடிகின்ற எங்கள் செல்வக் குழந்தைகளே!

- உருளைக் கிழங்கையும், பன்றிக் கறியையும் விற்றுக் கொண்டிருக்கின்ற நடைபாதைத் தொழிலாளர்களே! இந்த நோபெல் பரிசு உங்களுக்கானது;

- வெறிபிடித்த, கொடுந்தீய சமூக அமைப்பை மிக அமைதியாக மாற்றி, தலைகீழாக்கியதற்காகக் கிடைத்த பரிசு. இன்று இந்த உலகம் சொல்கிறது நாம் அமைதியின் காதலர்கள் என்று. அன்பு, சமாதானம், நீதி, அரவணைப்பு, ஒப்புரவு எல்லாமே நம்முடைய ரணகளப் போராட்டங்களில் அர்த்தம் கொண்டதற்காக இந்தப் பரிசு. இது, டுட்டுவின் பரிசல்ல. உங்களின் பரிசு. எனதருமைச் சொந்தங்களே! அமைதிக்காக வழங்கிய இந்தப் பரிசை அமைதியாகத்தான் பெற்றோமா? இதற்காக யாருக்கு நன்றி சொல்வது? கடவுள் என்று பொதுவாகவும் நன்றி சொல்லிவிட முடியாது. நம்மோடு அழுது, புலம்பி, நமக்காகப் போராடிய நம் கடவுளுக்குதான் நாம் நன்றி சொல்ல வேண்டும்.''

இருபத்தி இரண்டு ஆண்டுகளுக்கு முன் கடும் சவால்களை சந்தித்துக் கொண்டிருந்த தென் ஆப்பிரிக்காவில், எங்கே கிறித்துவம் இந்த மண்ணையும் அபகரித்து விடுமோ என்கிற ஏக்கப் புலம்பலில் விம்மிய காலகட்டத்தில், சிலுவையை கூர் சீவி, நிறவெறியையும், இனப்பாகுபாட்டையும் பதம் பார்த்த ஒரு கிறித்துவப் பேராயரின் குரல் அது. நோபெல் பரிசு பெற்ற பின்னும் இந்தியத் திருச்சபைச் சூழலில், கறுப்பர் ஒப்பீடுகளில் அதிகம் அலைவரிசையாக்கப்படாதவர். அவரைத் தொட்டால் இங்கே தீண்டத்தகாதவனைத் தொட நேரிடும் என்கிற அச்சம் திருச்சபைகளுக்கு!

Masilamani
பொருளாதார வீழ்ச்சியை அபாரமாக சந்தித்த முதல் உலகப் போரின் இறுதியில், ஜோகன்ஸ்பர்க்கில் இருந்து எழுபது மைல் தொலைவு உள்ள மேற்கு ட்ரான்ஸ்வால் தகரச் சேரியில், 1931 அக்டோபர் 7 அன்று டுட்டு பிறந்தார். சுயமரியாதை கொண்ட, வீரஞ்செறிந்த, ஆற்றல் மிக்க பலர் இக்காலகட்டத்தில் கறுப்பு மண்ணுக்கு அறிமுகமானார்கள். தலித்துகள் கிறித்துவர்களாக மாறினாலும் அவர்கள் மீதான தீண்டாமை எப்படி மாறாமல் இருக்கிறதோ, அதுபோல கிறித்துவ மதத்தைத் தழுவினாலும் கறுப்பர்களின் அடிமைத்தனம் மாறவே மாறாது என 1706 இல் நியுயார்க் மாநிலம் பிறப்பித்த சட்டம், டுட்டுவினால் மறுபரிசீலனைக்கு ஆட்பட்டது.

அர்த்தமுள்ள கிறித்துவராக, போராளியாக டுட்டு பட்டை தீட்டப்படுவதற்கான புறச்சூழல் ஆப்பிரிக்க படைப்புலக வட்டாரங்களிலும், திருச்சபை ஆதரவுகளிலும் வளம் பெற்றன. தன் தந்தை ஒரு மெதடிஸ்ட் பள்ளியின் ஆசிரியராக இருந்ததால், சுவீடன் மிஷன் பள்ளியில் கல்வி கற்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இளமையிலேயே காசநோயினால் பாதிக்கப்பட்டார். பெரும்பான்மையான நாட்களை சோபியா நகர மருத்துவமனையில் செலவழிக்க நேர்ந்தது. அவரின் எதிர்கால லட்சியமே மருத்துவராக வேண்டும் என்பதுதான். மருத்துவம் படிப்பதற்குப் போதிய நிதி ஆதாரம் இல்லாததால், 1961 இல் கிறித்துவப் பாதிரியாரானார். 1970 இல் போட்ஸ்வானா பல்கலைக் கழகத்தின் பேராசிரியரானார். பிறகு அதிலிருந்து விடுபட்டு 1975 இல் ஜோகன்ஸ்பர்க் பதின்மராகப் (டீன்) பொறுப்பேற்றார். இதுவரை இப்பதவிகளில் சொகுசுப் பங்காளிகளாக கோலோச்சிய வெள்ளையர்களை வழியனுப்பி, பொறுப்பேற்ற முதல் கறுப்பர் இவர்.

டுட்டு ஓர் ஆயராக உருவாகிக் கொண்டிருந்தபோது 1960 இல் நிகழ்ந்த ‘ஷார்ப்வில் படுகொலை'யை யாரும் எளிதாக மறந்துவிட முடியாது. உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம், தீவிரவாதச் சட்டம் இவைகளுக்கு எதிராகக் குரல் கொடுப்பதற்காக நடத்தப்பட்ட அமைதிப் பேரணியில், 69 பேர் கொல்லப்பட்டனர். ஆப்பிரிக்க தேசிய உணர்வு எரிமலையாய் பீறிட்டுக் கொண்டே இருந்தது. வெள்ளைச் சிறுபான்மை ஆதிக்கத்துக்கு எதிராகப் புற அழுத்தங்கள் கூடின. மொசாம்பியா, அங்கோலா, ஜிம்பாப்வே ஆகிய நாடுகளுடன் சேர்ந்து விடுதலைக் காற்றை சுவாசிக்க தென் ஆப்பிரிக்கா தயாரானது. ஷார்ப்வில் கலவரம் அப்படியே சொவேடோ கலவரம் வரை நீடித்தது (1976 சூன் 16).

கலை இலக்கியப் பிரச்சாரங்களின் மூலம் அண்டை நாடுகளின் ஆதரவைத் தேடி கறுப்பர் கலைக் குழுக்கள் ரயில்களில் பயணங்கள் மேற்கொண்டன. ஆயிரக்கணக்கான பள்ளி மாணவர்கள் அணிவகுப்பில் இறங்கினர். பதிமூன்று வயது சிறுவனை புட்டத்தில் குறிவைத்து சுட்டுத் தள்ளிய அமைதிப் பேரணி, அய்நூறுக்கும் மேற்பட்டவர்களைக் காவு கொண்டது. சொவேடோவில் பற்றி எரிந்து கொண்டிருந்த கலவரங்களையும், படுகொலைகளையும் நேரில் கண்ட இளைஞர்கள், தங்களுக்குள் எரிந்து கொண்டிருந்த உணர்வுகளை வித்தியாசமான மொழிநடைகளில் பதிவு செய்தனர். இன்னும் சிலர் சொவேடோவில் இருந்து வெளியேறி அரசுக்கு எதிராகப் போராட ‘கெரில்லா பயிற்சி' பெற்றுத் திரும்பினர். ஓர் இளைஞர் இயக்கம் உருவானது.

இதில் ஆர்வமுடன் அர்ப்பணித்துப் போராடிய ஸ்டீவ் பைக்கோவின் படுகொலை, டுட்டுவை மிகவும் பாதித்தது. பைக்கோ மிகச் சிறந்த சிந்தனையாளர். ‘ப்ராங் டாக்' என்கிற பெயரில் பல கட்டுரைகளை எழுதிய எழுத்தாளர். தென் ஆப்பிரிக்க மாணவர் இயக்கத்தை உருவாக்கிய தளபதி. இளைஞர்களை ஒருங்கிணைத்து, பண்பாட்டு ரீதியிலான விழிப்பு நிலையை எழுச்சி பெறச் செய்த 31 வயது இளைஞர். தன் பின்னால் அணி திரண்ட இளைஞர் பட்டாளத்தை வழி நடத்தியதற்காக, 1977 ஆகஸ்டு 18 இல் தென் ஆப்பிரிக்க பாதுகாப்பு காவல்துறை, பைக்கோவை தீவிரவாத சட்டத்தின் கீழ் கைது செய்தது. போர்ட் எலிசபெத்தில் கைது செய்யப்பட்ட பைக்கோ, பிரிட்டோரியா வரை 600 மைல் தொலைவும் துன்புறுத்தப்பட்ட நிலையில் நிர்வாணமாக்கி அழைத்துச் செல்லப்பட்டார். காவல் பிடியில் கொடூரமாகத் தாக்கப்பட்ட பைக்கோ இறந்து விட்டார் என செப்டம்பர் 12 இல் செய்தி வெளிவந்தது.

பைக்கோவை கொன்றதன் மூலம் தென் ஆப்பிரிக்க மாணவர் இயக்கத்தின் எழுச்சியைத் தடுக்க முடியாத நிலையில் மிகத் திரளான கூட்டம் இறுதிச் சடங்கில் பங்கேற்றது. கிங் வில்லியம்ஸ் டவுனில் நடைபெற்ற இறுதி அஞ்சலியில் கடவுளைப் பற்றியும், கடவுளுக்கும் மக்களுக்கும் உள்ள உறவைப் பற்றியும் டுட்டு பேசினார்: "கடவுளே நீ எங்கே இருக்கிறாய்? உண்மையிலேயே நீ எங்கள் பாதுகாவலன்தானா? உரிமை மறுக்கப்பட்ட இச்சமூகத்துக்கு நீதி கிடைக்க இன்னும் எவ்வளவு காலம் நாங்கள் காத்துக் கிடக்க வேண்டும். எங்கள் போராட்டம் இனி ஓயாது. நண்பர்களே! மிகவும் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியாவிட்டால், அது தனி மணியாகவே இருக்கும். அது மடிந்தாலோ மிகுந்த பலனைக் கொடுக்கும். தன் உயிரை நேசிப்பவன் அதை இழந்து விடுவான். இந்த உலகத்தில் இருக்கும்போது தன் உயிரை வெறுப்பவனோ, அதை என்றுமுள்ள மெய்வாழ்வுக்கென்று காத்துக் கொள்ளுவான் (யோவான் 12:2425). பைக்கோ மண்ணில் புதைக்கப்படுவது, இன்னும் ஆயிரமாயிரம் பைக்கோ உருவாக வேண்டும் என்பதற்காக.''

வெள்ளைச் சிறுபான்மை அரசு தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளில் இறங்கியது. நூறாண்டுகளுக்கு முன்பே தடை செய்யக் கோரி போராடிய கடவுச் சட்டம் (Pass Law) திரும்பத் திரும்ப நடைமுறையில் உயிரூட்டப்பட்டு வந்தது. கறுப்பர் இயக்கங்களை ஒடுக்குவதற்கும், குடும்பங்களை சிதறடிப்பதற்கும், ஒருங்கிணைய விடாமல் தடுப்பதற்கும் இச்சட்டம் பயன்படுத்தப்பட்டது. தங்கள் சொந்த மண்ணிலேயே இரண்டாம் நிலைக் குடிமக்களாக கறுப்பர்கள் நடத்தப்பட்டார்கள். 1978 இல் நான்கில் ஒரு பகுதி கறுப்பர்கள் (மூன்று லட்சம் பேர்) கடவுச் சட்ட குற்றவாளிகளாக சிறைப்பிடிக்கப்பட்டார்கள்.

இதற்கெதிரான போராட்டங்களையும், எதிர்கொள்ள வேண்டிய சவால்களையும் திருச்சபைக்குள் விவாதமாக்கினார் டுட்டு. இப்படிப்பட்ட சூழலில் திருச்சபைகளின் பொறுப்பு என்ன என்று கேள்வி எழுப்பினார். ஷார்ப்வில் படுகொலை, கடவுச் சட்டம் ஆகியவற்றுக்கு எதிராக 1960களின் இறுதியில் உப்சலா மற்றும் நாட்டிங்கில் நடைபெற்ற உலக கிறித்துவ மாமன்றத்தில் விவாதங்கள் எழுப்பப்பட்டன. மாமன்றத்தில் தென் ஆப்பிரிக்க விடுதலை இயக்கங்களுக்கு உதவிகள் வழங்கத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதன் விளைவாக ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ், அனைத்து ஆப்பிரிக்க காங்கிரஸ் இயக்கங்கள் ஆயுதப் பயிற்சி பெறும் வாய்ப்பையும் பெற்றன.

இருபது ஆண்டுகளுக்கும் மேலாகப் பராமரிக்கப்பட்டு விட்ட கூட்டொற்றுமை, டுட்டு பொதுச் செயலரானதும் உதவும் கரங்களாகத் தொடர்ந்தன. அவருடைய நோக்கம் ‘சமாதானம் ஒப்புரவு' என்பதில் கவனமாக இறுகியது. இதற்காகவே ஆணையம் ஒன்றை உருவாக்கினார். மிகப் பெரிய எதிர்க்கட்சியாக இருக்கின்ற ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ், போர்க்குணத்துடன் போராடும் இயக்கமாக உருவெடுத்தாலும் அதன் போராட்டங்கள் அறவழியில் இருக்க வேண்டும் என விரும்பினார். சிறையில் அடைக்கப்பட்ட கைதிகளை அமைதிப் பேச்சுவார்த்தையின் மூலம் 3000க்கும் மேற்பட்ட கைதிகளை (ஆண், பெண், குழந்தைகள் உட்பட) வெளியே கொண்டு வந்தார்.

டுட்டு, ஓர் விடுதலை இறையியலாளராக திருச்சபை மக்களுக்கு அறிமுகமானார். விவிலியத்தையும், திருச்சபையையும் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைப் பார்வையில் விளக்கினார். விடுதலை இறையியலும், கறுப்பு இறையியலும் அவரின் விளக்கவுரைகளால் அழகு பெற்றன. டுட்டு நேரடியாக இயக்கங்களுக்கு உதவுவதையும், மக்களை கிளர்ச்சியுறச் செய்வதையும் வெள்ளை அரசு உற்றுக் கவனித்தது. டுட்டுவின் பணிகளையும், மன்றத்தின் செயல்பாடுகளையும் முடக்கி, சீர்குலைக்க முயற்சி மேற்கொண்டது. டுட்டுவும் இதனை எதிர்க்கத் தயாரானார். 1981 நவம்பர் 20 இல் ட்ரான்ஸ்வால் மாகாண உச்ச நீதிமன்ற நீதிபதி சி.இ. எலோப் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு, தென் ஆப்பிரிக்க திருச்சபை மாமன்றத்தின் பணிகளையும், டுட்டுவின் நடவடிக்கைகளையும் ஆய்வு செய்ய உத்தரவிட்டது. அவருடைய கடவுச் சீட்டு பறிக்கப்பட்டது. வெளிநாட்டுப் பயணங்களுக்குத் தடை ஏற்பட்டன. மாமன்ற வரவு செலவு கணக்குகள் கையகப்படுத்தப்பட்டன. வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன. திருச்சபைக்குள் வதந்திகள் பரப்பப்பட்டன.

மூன்றாண்டு கால ஆய்வுக்குப் பிறகு 1984 பிப்ரவரியில் 82 தொகுதிகள் அடங்கிய 450 பக்க அறிக்கை வெளியிடப்பட்டது. உலக அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட மதச் சுதந்திரம் மற்றும் மனித உரிமை தொடர்பான வரையறைகள் கேள்விக்குட்படுத்தப்பட்டன. மதத் தலைவர்களின் நிறுவனங்களின் செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டன. இக்குழு பல மாதங்கள் டுட்டுவை தூங்க விடாமல் செய்தது. டுட்டுவும் சளைக்காமல் ஈடு கொடுத்து, கடுமையான விமர்சனங்களை குழுவுக்கு எதிராக முன்வைத்தார்.

1984 இல் டுட்டுவுக்கு நோபெல் அமைதிப் பரிசு கிட்டியது. இதுவரை 46 சர்வதேச விருதுகளையும் 25க்கும் மேற்பட்ட கவுரவ டாக்டர் பட்டங்களையும் சர்வதேசப் புகழாரங்களையும் பெற்றுவிட்ட டுட்டுவை அசைப்பதும், எதிர்ப்பதும் வெள்ளைச் சிறுபான்மை அரசுக்கு சவாலாகவே பட்டது. முக்கால் நூற்றாண்டை எட்டிவிட்ட டுட்டுவின் வாழ்க்கை, தென் ஆப்பிரிக்காவில் கிறித்துவத்தின் நீதியைக் காப்பாற்றியது. 80 சதவிகித கறுப்பர்கள், 13 சதவிகித நிலங்களை மட்டுமே வைத்திருக்கிறார்கள். கிறித்துவ நிறுவனங்கள் எங்கே தங்கள் நிலங்களையும் கொள்ளையிட்டு விடுமோ என்கிற அச்சத்தை டுட்டு போக்கினார். கறுப்பு, வெள்ளை, பழுப்பு ஆகிய மூன்று குழுக்களிடமும் ஒப்புரவை உருவாக்குவதில், ஒருவருக்கொருவர் மனிதநேயத்துடன் அன்பு பாராட்டுவதில் தன்முனைப்பு காட்டினார்.

தென் ஆப்பிரிக்காவில் ரோமன் கத்தோலிக்க, மெதடிஸ்ட், டட்ச், பிரஸ்பெட்டேரியன் போன்ற பல பிரிவுகள் இருந்தாலும் டுட்டு சார்ந்திருக்கும் ஆங்கிலிக்கன் அடையாளமானது, வெள்ளை ஆதிக்கத்தைப் பிரதிபலிக்கும் அடையாளம் என்பது உலகம் தெரிந்தது. இந்தியாவில்கூட ஆங்கிலிக்கன் திருச்சபை என்றால், அதில் தலித்துகள் உறுப்பினர்களாக இருக்க மாட்டார்கள். தலித்துகளுக்கு எதிராக தமிழ் நாட்டில் உருவான சாதி திருச்சபைகளை ஆங்கிலிக்கன் பிரிவுகள்தான் வளர்த்தன. ஆனால், தென் ஆப்பிரிக்காவில் அது தலைகீழாக மாறி இருக்கின்றது.

Steve
1985 நவம்பரில் டுட்டு கேப் டவுன் மறை மாநிலப் பேராயரானபோது, வெள்ளையரிடம் சலசலப்பு உருவானது. இங்கிலாந்தின் பாரம்பரியத்தைப் பாதுகாத்துவரும் ஆங்கிலிக்கன் திருச்சபையில், ஒரு கறுப்பன் எப்படி மறை மாநிலப் பேராயராக இருக்க முடியும்? அவனுக்கு கீழ் நாங்கள் எப்படி வேலை செய்ய முடியும்? என கேள்வி எழுப்பிய வெள்ளை அடிப்படைவாதிகள், தங்கள் பதவியைத் துறந்து வெளியேறினர். ஆனாலும் அங்கு ஓர் மாற்றத்தை ஏற்படுத்த முடிந்தது. தமிழ் நாட்டில் 80 சதவிகிதத்திற்கும் மேலாக இருக்கிற தலித் திருச்சபைகளில் தலித்துகளே ஆயராக முடிவதில்லை. அப்புறம் எப்படிப் பேராயர்களாக தலித்துகள் வர முடியும்?

டுட்டு முன்னெடுத்த அறவழிப் போராட்டத்தை மார்டின் லூதர் கிங்குடன் ஒப்பிடுவதை ஏற்கலாம். ஆனால், காந்தியுடன் ஒப்பிடுவதை எப்படி ஏற்க முடியும்? டுட்டுவின் ஆளுமையை சிதைக்கும் முயற்சிகளை, காந்தியின் ஆதரவாளர்கள் அவ்வப்போது செய்யத் தவறியதில்லை. ஒருவேளை வெள்ளையர்கள் இந்துக்களாக இருந்திருந்தால், காந்தியின் நிலைப்பாடு என்னவாக இருந்திருக்கும்?

தென்னாப்பிரிக்காவில் இந்தியத் தூதராகப் பணியாற்றிய எல்.சி. ஜெயின் போன்றோர், டுட்டுவை இந்தியாவுக்கு அழைத்து, கறுப்பர்களின் ஆதரவாளர்களாக இங்கே இருக்கின்ற பார்ப்பனர்கள் தங்களைக் காட்டிக் கொள்வதால், அவர் காந்தியோடு ஒப்பிடப்படுகிறார். ஆனால், இந்தியாவில் நுழைகிற ஒவ்வொரு கறுப்பரும் இங்குள்ள தலித் பிரச்சினைகளோடு தொடர்புடையவர்கள் என்கிற உண்மையை, சென்னைப் பேராயராக இருந்த மாசிலாமணி அசாரியா, பல சர்வதேச மாமன்ற அரங்குகளில் விவாதமாக்கியுள்ளார். தலித் பிரச்சினைகளை உலகமயமாக்கியதிலும் அசாரியாவுக்கு அளப்பரிய பங்குண்டு.

உலக அமைதிக்கான தூதுவராக இன்று டுட்டு முன்னிறுத்தப்படுகிறார். யாசர் அராபத் மறைவுக்குப் பிறகு, இஸ்ரேல் பாலஸ்தீன அமைதி ஒப்புரவு செயல்பாடுகளின் கதாநாயகராக டுட்டு அடையாளம் காணப்படுகிறார். கடந்த சூலை 2006 இல் ஜியோனிச வெறியை கட்டவிழ்த்து விட்டதில் குழந்தைகள், பெண்கள் உட்படப் பலர் கொல்லப்பட்டனர். இதற்கு தீர்வு காண்பதற்கும், அமைதி உடன்பாடு ஏற்படுத்துவதற்கும் 3.12.2006 அன்று டுட்டுவை மய்யமாகக் கொண்டு, அய்க்கிய நாடுகள் அவை ஒரு குழுவை அமைத்துள்ளது.

இஸ்ரேலை ஆட்டிப்படைக்கும் அய்ரோப்பிய யூதர் இனமும் - அமெரிக்க யூதர் இனமும் இஸ்ரேல் யூதர்களோடு கைகோர்த்து, ஒரு கறுப்பரின் கீழ் அமைதி உடன்பாடு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக, டுட்டுவின் குழுவை தங்கள் நாட்டிற்குள் நுழைய அனுமதி மறுத்துவிட்டது. இன்றைய உலக மயமாக்கல் சாதி - தீண்டாமையை, நவீன மறு கட்டமைப்பு செய்வது போல, அமெரிக்கா இஸ்ரேல் போன்ற நாடுகள் நிற, இனப்பாகுபாடுகளை வெளிப்படையாகக் கடைப்பிடித்து, அதை மறைப்பதற்கு உலக பயங்கரவாதத்தை எதிர்ப்பவர்களாகத் தங்களை முன்னிறுத்திக் கொள்கின்றனர். ஆனால், இத்தகைய கொடூரங்களைக் கண்டிக்க இந்தியாவில் எந்தத் திருச்சபையும் தயாராக இல்லை. உலக அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் டுட்டுவின் பிரச்சனைக்காக, இந்தியத் திருச்சபைகள் வெட்கமின்றிப் போராட வேண்டும்.

கறுப்பர்களின் விடுதலைப் போராட்டம் வெவ்வேறு பின்னணியைக் கொண்டதாக இருப்பதால், கறுப்பு தலித் ஒப்பீடு என்பதை மகாராட்டிராவில் கங்காதர் பாந்தவனே போன்றோர் ஏற்பதில்லை, ‘அடிமை' ‘தீண்டாமை' இரண்டுக்குமான வேறுபாட்டை அம்பேத்கர் மிக ஆழமாக விவாதித்து விட்டார் என்கிற விமர்சனங்கள் ஒருபுறம் இருந்தாலும், உலக அளவில் விடுதலைக்காக குரல் கொடுக்கும் இயக்கங்களோடு நம்மை அடையாளப்படுத்தி, ஆதரவு கோருவது அவசியமானது.

தலித் விடுதலைக்கான மாதிரிகளை, உத்திகளை போராட்டக் களத்தில் இடைவிடாமல் செயல்படுத்துவதில் தென் ஆப்பிரிக்க டுட்டுவின் போர்க்குணச் செயல்பாடுகளை, திருச்சபைக்குள் அடையாளப்படுத்துவதும் அவசியமாகின்றது. குறைந்த பட்ச அளவில் கிறித்துவத் திருச்சபைகளில் தலித்துகளை பிரதிநிதித்துவப்படுத்துவதும், முன்னுரிமை அளிப்பதும், தலித் உரிமை ஏற்பதும் முதன்மையானது என்பதை டுட்டுவின் ஒப்படைப்புள்ள வாழ்க்கை உணர்த்துகின்றது.
Pin It