முனைவர் க. நெடுஞ்செழியன் அவர்கள் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் இலக்கியத் துறைத் தலைவராகவும், பேராசிரியராகவும் பணியாற்றி வந்தவர். 20க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர். 500க்கும் மேற்பட்ட ஆய்வுச் சொற்பொழிவுகளையும், ஆய்வுக் கட்டுரைகளையும் வழங்கியவர்.

Nedunchezhiyan
அவர் நூல்களில் ‘இந்தியப் பண்பாட்டில் தமிழும் தமிழகமும்' எனும் நூல், இந்திய அளவில் வழங்கப்படும் மிக உயர்ந்த விருதுகளில் ஒன்றான ‘சரசுவதி சன்மான்' பரிசுக்காகவும், ‘தமிழ் இலக்கியத்தில் உலகாய்தம்' எனும் நூல், ஞானபீடத்தின் சிறந்த ஆய்வு நூல்களுக்குரிய விருதாகிய ‘மூர்த்திதேவி விருது'க்காகவும் பரிந்துரை செய்யப்பட்டிருந்தன. ஒரே ஆசிரியரின் இரண்டு நூல்கள் இந்தியாவின் மிக உயர்ந்த விருதுகளுக்குப் பரிந்துரை செய்யப்பட்டது, அவருடைய ஆய்வின் தன்மைக்குக் கிடைத்த மிகச் சிறந்த சான்று. ‘சமூக நீதி' எனும் நூல், சேலம் அறக்கட்டளைப் பரிசையும் ‘உலகத் தோற்றமும் தமிழர் கோட்பாடும்' எனும் நூல், தமிழக அரசின் முதல் பரிசையும் பெற்றவை.

4.7.2003 அன்று பொய் வழக்கு ஒன்றில் கருநாடக காவல் துறை அவரைக் கைது செய்தது. 1986 ஆம் ஆண்டு மே மாதத்தில் ஒரு நாள் பெங்களூரில் இருந்து ஆய்வாளர் குணா, தம்மோடு அவருடைய தோழர்கள் ஓரிருவரை அழைத்துக் கொண்டு நெடுஞ்செழியன் வீட்டிற்கு வந்ததாகவும், அவர்களுடன் நெடுஞ்செழியன் தனித் தமிழ் நாடு பற்றிப் பேசியதாகவும் வழக்குத் தொடரப்பட்டிருந்தது. 2002 நவம்பர் தொடக்கத்தில் நாட்டு வெடிகுண்டு தொடர்பான ஒரு வழக்கில் அவரைத் தொடர்புபடுத்திய கருநாடக காவல் துறை, நீதிமன்றத்திற்கு வழங்கிய குற்றப்பதிவேட்டில், பேரா. க. நெடுஞ்செழியன் தலைமறைவாக இருப்பதாகப் பொய் கூறிவிட்டு, அந்தப் பொய்யை நிலைநாட்டும் வகையில் கருநாடகக் காவல் துறை கைது செய்ய வந்தபோது, அவர் வீட்டிற்கு எதிரில் உள்ள பூங்காவில் பதுங்கி இருந்தபோது கைது செய்ததாகவும் மேலும் பொய்யாகக் கூறியது.

நாடறிந்த பேராசிரியர் ஒருவரை, அவரின் தகுதி பற்றியோ, சிறப்பு பற்றியோ கிஞ்சித்தும் கவலைப்படாமல், ஒரு குற்றவாளியைப் போல, குற்றப் பதிவெண்கள் எழுதிய எழுது பலகையைக் கையில் பிடிக்கச் செய்து, நிழற்படங்கள் எடுத்து, அவற்றை ஊடகங்களில் பெரிய அளவில் வெளியிட்டு கேவலப்படுத்தியது. ஏறத்தாழ இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக சிறைக் கொடுமையை அனுபவித்த பிறகு, அவர் அண்மையில் பிணையில் விடுதலை பெற்றுள்ளார்.

சிறையில் இருந்த காலத்திலும் சோர்வடையாது தனது ஆய்வினைத் தொடர்ந்து செய்து மூன்று ஆய்வு நூல்களை எழுதியுள்ளார். அவை விரைவில் வெளியிடப்பட இருக்கின்றன. மெய்யியல் துறையில் அவர் செய்திருக்கும் ஆய்வு, தமிழகத்தின் சிந்தனைத் துறையில் புதிய அணுகுமுறைக்கு வித்திட்டுள்ளது. அவருடன் ‘தலித் முரசு'க்காக உரையாடியதிலிருந்து...

தாங்கள் பிறந்து வளர்ந்த சூழல் பற்றி சொல்லுங்கள்.

அன்பில் படுகை கொள்ளிடக்கரை ஓரமாக 20 - 30 வீடுகள் கொண்ட ஒரு சிற்றூர். மற்ற சமூகமோ வேறு எந்தத் தாக்கமோ இல்லாத, உறவினர்கள் மட்டுமே உள்ள ஒரு சிற்றூர். எல்லோருக்குமே சொந்தமாக நிலம் இருந்ததால், பொருளாதாரத் தேவைக்கோ மற்ற எதற்குமோ பிறரை சார்ந்திராத சூழல் கொண்ட ஓர் அழகான சிற்றூர்.

1938 - 39 இல் என் தந்தை தமது திருமணத்திற்கு முன்பே வரவு செலவு கணக்குப் புத்தகத்தில் - ‘திராவிட நாடு திராவிடர்க்கே', ‘வாழ்க பெரியார்' என்று குறிப்பிட்டுள்ளார். அந்த ஏட்டை நாங்கள் வெகுகாலம் வைத்திருந்தோம். அதனால் நான் பிறப்பதற்கு முன்பே எங்கள் குடும்பம், திராவிட இயக்கத்துடனும் பெரியாருடனும் தொடர்புள்ள குடும்பம். அப்போது திராவிடர் கழகம் என்ற அமைப்பு கிடையாது. என் தந்தை, பெரியார் இயக்கத்தின் தாக்கமுடைய ஒரு விவசாயி. அப்போது என் சித்தப்பா பள்ளி மாணவர். அவர் லால்குடியில் உள்ள பள்ளிக்கு 7 கட்டை 7 கிலோ மீட்டர் நடந்து சென்று வருவார். அப்போது பேருந்து வசதி கிடையாது. அவருக்குப் பெரியார் கொள்கையின் மீது கொண்ட ஈடுபாட்டின் காரணமாக, சுயமரியாதை ஏடுகளைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்தப் பகுதியில் 1945 - 46 இல் முதன் முதலாக நடந்த சுயமரியாதைத் திருமணம் எங்கள் அத்தையுடைய திருமணம்.

1944 இல் திராவிடர் கழகம் உருவான ஆண்டுதான் நான் 1944 சூன் 15 இல் பிறந்தேன். அப்போது பெரியார் சுயமரியாதை இயக்கத்தில் மிகச்சிறந்த பேச்சாளராக இருந்த நாவலர் நெடுஞ்செழியனின் செல்வாக்கு மற்றும் புகழ் கருதி அந்தப் பெயரை எனக்கு வைத்தார்கள். 1940களில் எல்லாத் துறைகளிலும் திராவிடர் இயக்கத்தின் வீச்சு அதிகமாக இருந்த நேரம். அதனுடைய தாக்கம் முழுவதும் எனது குடும்பத்தில் இருந்தது. என் சித்தப்பா நன்றாகப் பாடுவார். அப்போது பாரதிதாசனின் ஆண் குழந்தைத் தாலாட்டைப் பாடி, என்னைத் தூங்கச் செய்வார். வீட்டில் நான் மூத்த குழந்தை. எனக்குப் பிறகு ஏழு ஆண்டுகள் கழித்துதான் என் தம்பி பிறந்தான். அதனால் 7 வயது வரை செல்லப் பிள்ளையாகவே இருந்தேன். என் சித்தப்பா தோள்மீது போட்டுக் கொண்டு ஆண் குழந்தை தாலாட்டு பாடிச் சொல்லியது நினைவு இருக்கிறது.

1946 இல் தூத்துக்குடியில் நடைபெற்ற திராவிட மாநாட்டிற்குச் சென்றுவிட்டுத் திரும்பி வருவதற்குப் பணம் இல்லாமல் கழுத்தில் கிடந்த சங்கிலியை அடகு வைத்துவிட்டுத் திரும்பியிருக்கிறார் என் சித்தப்பா. அந்தச் சங்கிலியை மீட்க முடியாமல் போய்விட்டது. அதனால் குடும்பத்தின் சிந்தனைப் போக்கு என்பதும் வளர்ச்சி என்பதும் பெரியாரை ஒட்டியே இருந்தது. அதற்குப் பிறகு அண்ணா, பெரியாரிடமிருந்து பிரிந்த பிறகு எங்கள் குடும்பம் அப்படியே அண்ணாவழியில் வந்தது.

உங்களுடையது சிற்றூர் என்று சொன்னீர்கள். அங்கு கல்விக்கான சூழல் எப்படி இருந்தது?

எங்கள் ஊர் பள்ளிக்கூடத்தில் அவ்வளவு வசதி இல்லாத நிலை. படிக்க வேண்டும் என்றால் லால்குடிக்குச் சென்று படிக்க வேண்டும். அப்பாவால் மேலே படிக்க முடியவில்லை. திண்ணைப் பள்ளியில் படித்ததோடு சரி. ஆனால், இயக்க ஏடுகளைப் படிப்பார். அந்தக் காலத்திலேயே எனது சித்தப்பா முதன்முதலில் கல்லூரியில் சென்று படித்தவர். நான் பி.ஏ. படித்துக் கொண்டிருந்த காலத்தில் வீட்டில் தமிழ் இலக்கிய வரலாறு படித்துக் கொண்டிருந்தேன். நான் வீட்டில் நிகண்டுகளை படித்துக் கொண்டிருந்தபோது, என் அப்பா, என்ன இப்போதுதான் நிகண்டுகளை படிக்கிறாய் என்று அவர் சூடாமணி நிகண்டு ஒன்றை ஒப்பித்தார். நாங்கள் திண்ணைப் பள்ளியில் படித்தபோதே நான்காவது படிக்கும்போதே நிகண்டுகள் படித்திருக்கிறோம் என்றார். அப்பாவுக்கு திண்ணைப் பள்ளிக்கு மேல் படிக்க வாய்ப்பில்லை. எங்களுக்கு அரைக் காணி நிலம்தான் இருந்தது. அதனால் எங்க அப்பா எங்க நிலத்தில் விவசாய வேலைகளைப் பார்த்ததோடு, மற்ற நிலங்களிலும் குத்தகையாக விவசாயம் பார்த்தார். குடும்பச் சூழல் காரணமாக அவரால் மேற்கொண்டு படிக்க முடியவில்லை.

Nedunchezhiyan and his wife
அந்தப் பகுதியில் எஸ்.எஸ். மணி என்பவர் இருந்தார். அவர் பெரியாரின் தளபதி போன்று இருந்தவர். அவர், படித்த மாணவர்களை வைத்துக்கொண்டு, ஊருக்கு இரண்டு மூன்று பேரை வைத்துக்கொண்டு கூட்டங்களைப் போடுவது, பிரச்சாரம் செய்வது என்று ஒரு களப்பணியாளராக செயல்பட்டார். அவர் இளம் வயதிலேயே இறந்துவிட்டார். ஆனால், அவருடைய படங்கள் அந்த ஊரில் ஒவ்வொரு திராவிடர் கழகத் தோழர் வீட்டிலும் இருக்கும். அவர் பெரிய படிப்பாளியோ, தலைவரோ கிடையாது. அவர் பெரியார் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்த்தவர். அந்தக் காலத்தில் கையில் காசு கிடைப்பது மிகவும் அரிது. ஆனால், அதில் பத்திரிகை வாங்கிப் படிப்போம் என்பார் சித்தப்பா. சனி, ஞாயிறு விடுமுறைகளில் கூலிக்கு ஏர் உழுது அதன் மூலம் கிடைக்கும் பணத்தில் ஏடுகளை, பத்திரிகைகளை வாங்கிப் படிப்போம் என்று சித்தப்பா சொல்லியிருக்கிறார்.

சிறு வயது முதலே தீவிரமான திராவிடர் இயக்கத் தொடர்பு; பின்பு கவிதை, தமிழ் என்று இருந்திருக்கிறீர்கள். அந்தக் காலகட்டத்தில் இப்படியான சூழலில் இருந்த பெரும்பாலோர், நேரடியான அரசியலுக்குச் சென்றபோது, நீங்கள் ஏன் நேரடியான அரசியலில் ஈடுபடவில்லை?

தி.மு.க.வோடு எனக்கு தொடர்பு இருந்தாலும், பெரியாரின் தாக்கம் எனக்குள் அதிகமாக இருந்தது. அதோடு நான் அரசியலுக்குப் போயிருந்தேன் என்றால், இந்த இனத்துக்கு முழுமையாகப் பாடுபட முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. இந்த இனத்துக்கு, மொழிக்கு எதாவது செய்ய வேண்டும் என்ற தவிப்பு எனக்கு இருந்து கொண்டே இருந்தது. எனக்கு வாய்ப்புகூட கிடைத்தது; நண்பர்கள்கூட சொன்னார்கள். தேர்தலில் நிற்கவேண்டும் என்று எனக்கு ஆசை இல்லை. இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் இருந்த பலரும் அரசியலுக்கு வந்தார்கள். சில பேர் அரசியலுக்குப் போகாமல் வேறு அரசியல் சித்தாந்தங்களோடு இருந்தவர்களும் உண்டு. ஆனால், எனக்கு அரசியலில் போவதைவிட, இனத்தின் அடையாளத்தை மீட்கும் பணி ஒரு தலையாயப் பணி என்று நான் நினைத்தேன்.

உலக வரலாற்றில் அறிவியலின் தொடக்கம் நம்முடையது என்று சொல்கிறீர்கள். ஆனால், இன்றைய காலகட்டத்தில் ஏன் அறிவியலின் வளர்ச்சி மூலம் பல கண்டுபிடிப்புகள் நம்மிடமிருந்து வரவில்லை?

தீண்டாமை என்பதற்கான அடிப்படையே அறிவுக்கு விதிக்கப்பட்ட தடையிலிருந்துதான் தொடங்குகிறது. தீண்டாமை என்பது சாதிய ஏற்றத் தாழ்வுகளினால் உண்டானது அல்ல. பெண்களை அடிப்படையாக வைத்து வருவது தீட்டு. அது, தூய்மையற்ற தன்மையோடு தொடர்புடையது. குளித்துவிட்டு வந்தால் அது சரியாகிவிடும். ஆனால், தீண்டாமை என்பது அறிவுக்கான தடையிலிருந்து தொடங்குவது. ஏனென்றால், அறிவுள்ளவனைத்தான் இந்த உலகம் மதிக்கிறது. ஆரியப்படை கண்ட நெடுஞ்செழியனின் பாட்டில் அறிவுள்ளவனின் ஆட்சிதான் வேண்டும் என்றும், அவன் பார்ப்பனனாக இருந்தாலும் சூத்திரனாக இருந் தாலும் சரி, அறிவுள்ளவனாக இருந்தால் போதும் என்று சொல்லப்படுகிறது.

இந்திய வரலாற்றினை உற்று நோக்கினால், அது ஒரு போராட்ட வரலாறு. அறிவுக்கான தடை ஒரு புறம்; தடையினை உடைப்பவர் அணி ஒரு புறம். பெரியார் காலத்தில் பெரும் எழுச்சி பெற்றது, இன்று கொஞ்சம் வீழ்ச்சி அடைந்திருக்கிறது. இந்திய சிந்தனை மரபே ஒரு போராட்ட மரபு. வள்ளுவர், தடையை உடைப்பவர் அணியை சேர்ந்தவர். அவர் குறளில் வாழ்க்கை என்பது வாழ்வதில்தான் இருக்கிறதே ஒழிய, நீ செத்துப் போன பிறகு அடைவது வாழ்க்கையாகாது என்கிறார். நம் தமிழ் மரபில் இவ்வுலக வாழ்வை சிறப்பாக வாழ்வதற்கு எது தேவையோ அதையெல்லாம் சொன்னார்கள். வைகுந்தத்தை மறுக்கக் கூடிய வகையில், மாலிய கோட்பாடுகளை மறுப்பதால்தான் - கடவுள் கோட்பாடுகளை மறுப்பதால்தான் ஆண்டாள், திருக்குறளைப் படிக்க வேண்டாம் என்று மறுக்கிறார். இந்த அறிவுக்கான தடை மனு தர்ம காலத்திற்கு முன்பிருந்தே இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால், வைதீகத்தை நிலைநாட்டுவதற்கான கருவியாக அவர்கள் பயன்படுத்தியதே அறிவுக்கான தடையைத்தான்.

மனுதர்மத்துக்கு முன்காலத்தில் யாஞ்யவல்கியன் என்று ஒரு பார்ப்பனிய சிந்தனையாளன். இன்று இருக்கக் கூடிய இந்து முன்னணி, பஜ்ரங்தள் போன்ற பார்ப்பனிய வன்முறை இயக்கங்களுக்கும் வழிகாட்டியான மூல ஊற்று என்று இந்த யாஞ்யவல்கியனைச் சொல்லலாம். கேள்வி கேட்டால் உன் தலையே இருக்காது என்று தன் மனைவியையே மிரட்டியவன். கேள்வியே கேட்கக் கூடாது. அதனால்தான் அவர்கள் அறிவுக்குத் தடைவிதிக்கிறார்கள். நம் மேலாண்மையை ஒப்புக் கொள்ள வேண்டும், ஏற்றுக் கொள்ள வேண்டும். அதைக் கேள்வி கேட்டால் உன் தலை இருக்காது என்று சொன்ன அந்தக் கருத்தியலுக்கு எதிராக,

எப் பொருள் எத்தன்மையத்தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பதறிவு

எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு

என்று அறிவுக்கான இலக்கணத்தை வகுத்தவர்கள் இவர்கள். அதனால்தான் இவர்கள் மீது அந்தத் தடை விதிக்கப்பட்டது. 1940களில் தந்தை பெரியார் திருக்குறள் மாநாடு நடத்துவது வரையிலும் ஆதிக்க சாதிக்காரர்களிடையே, தமிழர்களிடையே பிறந்த ஆதிக்க சாதிக்காரர்களின் நடுவேகூட, திருக்குறள் படிப்பதற்குத் தடை இருந்ததாம்! எனது நண்பர் பெரியவர் ஒருவர் காளத்தி என்று பெயர். அவர்கள் எல்லாம் திருக்குறளை வீட்டுக்குத் தெரியாமல் படித்தார்களாம். படிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது.

தடை என்றால் என்ன மாதிரியான தடை? படிக்கக் கூடாது என்பதற்கு அவர்கள் கூறிய காரணம் என்ன?

அதைப் படித்தால் நீ கேள்வி கேட்பாய்; அதனால் படிக்கக் கூடாது என்று வெளிப்படையாகச் சொல்லியே தடை விதிக்கப்பட்டது. மனுசாத்திரத்தில் அளவை நூல்களைக் கொண்டு வேதங்களையும் வேதங்களோடு தொடர்புடைய நூல்களையும் எவனும் கேள்வி கேட்கக் கூடாது என்பது ஒரு விதி. அந்த விதிகள் கடுமையாகப் பின்பற்றப்பட்டன. தடை செய்யப்பட்ட நூல்களைப் படிப்பவர்கள் பார்ப்பனர்களாக இருந்தாலும்கூட, அவர்களையும் சாதியிலிருந்து நீக்கம் செய்திருக்கிறார்கள். அப்படி சாதி நீக்கம் செய்யப்பட்டவர்கள் எல்லாம் அக்ரகாரத்திலிருந்து தனியாக வாழ்ந்திருக்கிறார்கள். அப்படி வாழ்ந்த இடம்தான் மதுரையில் கோவலன் கண்ணகி காலத்தில் புறஞ்சேரி என்பதாகும். மறை நூல் ஒழுக்கத்து வழுவியர்கள் வாழ்ந்த பகுதி அது.

‘அமணர்' என்னும் தமிழ்ச் சொல் ‘சமணர்' ஆக மாறியது. ‘அமயம்' ‘சமயம்' ஆகும். பிராகிருத மொழியில் ‘சிரமணர்' என்றாகும். ‘அமணர்' ‘சமணர்' ‘சிரமணர்' வைதீக மறுப்பினை அடிப்படையாகக் கொண்டு உருவான சொற்கள். வைதீக மறுப்பினை அடிப்படையாகக் கொண்டவர்கள் அமைத்த சங்கத்தைதான் ‘சமணச் சங்கம்' அல்லது ‘அமணச் சங்கம்' அல்லது ‘சிரமணச் சங்கம்' என்று அழைத்தார்கள். அந்த வகையில் புத்தர் ஒரு சிரமணர்தான். மகாவீரர் ஒரு சிரமணர்தான். பற்குடுக்கை நற்கினியார் என்று புறநானூற்றில் ஒரே பாட்டைப் பாடியவர் ஒரு புலவர். அவரும் அவருடைய காலத்தில் இந்தியாவின் மிகப் பெரிய சங்கத்தின் தலைவர் என்று சொல்வார்கள். அவரும் ஒரு சிரமணர்தான்.

ஆக, அமணர், சமணர், சிரமணர் என்ற சொல்லுக்கு வைதீக எதிர்ப்பைச் சேர்ந்தவர்கள் என்று பொருள். ஆனால், இப்போது நாம் ஜைனர்களை குறிப்பிடுவதற்காகப் பயன்படுத்துகிறோம். ஜைனர்களை ஜைனர்கள் என்றுதான் சொல்ல வேண்டுமே தவிர, அவர்களை சமணர்கள் என்றோ அமணர்கள் என்றோ சொல்லக் கூடாது. வைதீகத்திற்கு எதிரான கொள்கைகள், கோட்பாடுகள் பரவலாக இருந்ததால், வைதீகம் மிகப்பெரிய சறுக்கல்களுக்கு உள்ளாகியது. தென்னகத்தைப் பொறுத்தவரையில், ‘ஆசீவகம்' அரச சமயமாக இருந்தது. வடக்கே அசோகருடைய காலத்தில் பவுத்த சமயம் அரச சமயமாக இருந்தது. அதனால் வைதீகக் கோட்பாடுகளுக்குப் பெரிய பின்னடைவு தாக்கம் ஏற்பட்டது.

அயோத்திதாசரைப் பற்றிச் சொல்லுங்கள்.

தமிழினத்தை அடையாளங்காண முயன்ற மூத்த அறிஞர்களில் அயோத்திதாசப் பண்டிதரும் ஒருவர். தமிழ் உலகமே அயோத்திதாசப் பண்டிதருக்கும் அவருடைய குடும்பத்திற்கும் நன்றிக்கடன் பட்டிருக்கிறது. எல்லீஸ் துரை என்ற ஆங்கிலேய ஆட்சியாளர், திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பதற்குக் காரணமாக இருந்தவர், அயோத்திதாசரின் தந்தை கந்தசாமி பட்லர் என்பவர்தான். இவர்தான் அந்த துரைக்கு திருக்குறளை அறிமுகப்படுத்தி, விளங்க வைத்து, அவரிடம் திருக்குறள் பற்றி ஒரு ஈடுபாட்டை உருவாக்கச் செய்தவர். அதன் விளைவுதான் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்தது; திருவள்ளுவருடைய நாணயத்தை வெளியிட்டது. திருக்குறளை உலகம் போற்றுவதற்கும், புரிந்து கொள்வதற்கும் காரணமாக இருந்த கந்தசாமி பட்லரின் திருமகன்தான் பண்டித அயோத்திதாசர். எனவே, அப்படிப்பட்டவர் தமிழர்களால் நினைக்கத்தக்க பெருமைக்குரியவர் அல்லவா?

அவருடைய ஆய்வில், இந்து மதத்திற்கு மாற்றாக ஒரு வழியைத் தேடுகின்ற முயற்சியில் அவர் ஈடுபட்டிருந்தார் என்பது தெளிவாகத் தெரிகிறது. அந்த மாற்றுவழி பவுத்தம்தான் என்று அவர் உறுதிப்படுத்தினார். இதில் ஒரு பெரிய வேதனை என்னவென்றால், அயோத்திதாசப் பண்டிதர் காலத்தில் கிடைத்த நூல்கள் பல இன்றைக்கு உருமாறிக் கிடக்கின்றன. மணிமேகலையிலிருந்து அவர் எடுத்துக்காட்டியிருக்கக் கூடிய பகுதிகள் இன்றைக்கு இல்லை. ‘அருங்கலச்செப்பு' என்ற ஒரு நூலில் இருந்து, அவர் ஏறத்தாழ அறுபத்தைந்து எழுபது நூற்பாக்களை எடுத்துக் காட்டுகிறார். அந்த நூலில் மொத்தமே நூற்றி எண்பத்தேழு நூற்பாக்கள்தான் இப்போது கிடைக்கின்றன. அந்த நூற்றி எண்பத்தேழு நூற்பாக்களில் அவர் எடுத்துக்காட்டக் கூடிய அறுபத்தி அய்ந்து நூற்பாக்கள் இன்றைக்கு இடம்பெறவில்லை. ஒரே ஒரு நூற்பாவைத் தவிர, மற்ற அவ்வளவு நூற்பாக்களும் இடம் பெறவில்லை. அதில் பெரிய கொடுமை என்னவென்றால், ஆசீவகம் பற்றியும் ஆசீவகத்தின் தோற்றம் பற்றியும், இயல்பு கோட்பாடு பற்றியும், இயல்பு கோட்பாட்டின் தோற்றங்கள் பற்றியும், தற்செயல் கோட்பாடு பற்றியும், தற்செயல் கோட்பாட்டின் தோற்றங்கள் பற்றியெல்லாம் பாலி மொழியில் ‘சாமண்ட பாலசுத்தம்' என்ற நூலில் ஒரே ஒரு பகுதியில்தான் அவர்களைப் பற்றிய தகவல்கள் கிடைக்கின்றன.

பாலி மொழியில் கிடைக்கக் கூடிய செய்திகளைவிட தெளிவாகவும், நடுவு நிலைமையோடும் விளக்கமாகவும், விரிவாகவும் அந்த ஆறு அறிஞர்களைப் பற்றி ‘அருங்கலச் செப்பு' என்ற நூலில் சொல்லப்பட்டிருக்கின்றன. இதைப் பண்டிதர் அயோத்திதாசர் தன்னுடைய நூலில் எடுத்துக்காட்டுகிறார். ஆனால், அந்தப் பகுதிகள் யாவும் தற்பொழுது பதிப்பிக்கப்பட்ட ‘அருங்கலச்செப்'பில் இடம் பெறவில்லை. இதற்குக் காரணம் என்ன என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். ‘பல நூல்கள் தவறாக அச்சிடப்பட்டிருக்கின்றன. அவற்றின் சரியான மூலப்படிகள் என்னிடம் இருக்கின்றன. அவற்றைக் கொண்டு சரியான, முறையான பதிப்புகளை நான் வெளியிடுவேன்' என்று பண்டித அயோத்திதாசர் அப்பொழுதே குறிப்பிடுகிறார். அவர் பவுத்த மதத்தைத் தழுவினாலும் தமிழ் இலக்கியங்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற அவரது முயற்சி, வேறு யாரைக் காட்டிலும் அவரிடத்தில் கூடுதலாக இருந்தது. அதனால் இந்த வகையில் அவருடைய பங்களிப்பு என்பது வரலாற்றுச் சிறப்புமிக்கப் பங்களிப்பாகும்.

- பேட்டி அடுத்த இதழிலும்
Pin It