நீண்ட நெடுங்காலமாகவே சமூக, அரசியல் மற்றும் பொருளாதார உரிமை களுக்காக ஒடுக்கப்பட்ட மக்கள் தீவிரமாகப் போராடி வருகிறார்கள். சமூக இழிவிற்கு எதிராகவும், ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் அம்மக்கள் நடத்திவரும் போராட்டங்கள் மூலமும், புரட்சியாளர் அம்பேத்கரின் செயலாற்றலாலும் – இன்று ஓரளவிற்கேனும் அவர்கள் உரிமைகளைப் பெற்றுள்ளனர். அவற்றுள் இடஒதுக்கீடு, தனித்தொகுதி ஆகியவற்றை மிக முக்கியமானவைகளாகக் குறிப்பிடலாம். ஆனால், கடந்த 56 ஆண்டுகளாக அவை நடைமுறையில் இருந்தும்கூட, தலித் மக்கள் சமூக மேம்பாடு பெற முடியவில்லை.

ஆறாவது அய்ந்தாண்டுத் திட்டத்தில் (1977- 82) மத்திய அரசு, தலித் மக்களின் மேம்பாட்டிற்காக ஒரு புதிய அணுகுமுறையைப் பின்பற்றியது. அதற்கு "சிறப்புக் கூறு திட்டம்' என்று பெயர். அத்திட்டத்தின்படி, ஆண்டுதோறும் தலித் மக்கள் மேம்பாட்டுக்காக மத்திய அரசு தனிப்பட்ட முறையில் நிதியை ஒதுக்கி, மாநில அரசுகளிடம் ஒப்படைத்து வருகிறது. மத்திய அரசிடமிருந்து ஆண்டுதோறும் பெறும் திட்ட நிதியில், மாநில அரசுகள், தங்கள் மாநிலத்தில் உள்ள தலித் மக்களின் விகிதாச்சாரத்திற்கு ஏற்ப நிதியை, சிறப்புக் கூறு திட்டத்தின்படி ஒதுக்கி, அம்மக்களின் மேம்பாட்டிற்காக மட்டுமே அந்நிதியைப் பயன்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. சிறப்புக் கூறு திட்டத்தின்படி, தெளிவான இலக்குகள், குறிக்கோள்களைக் கொண்டு நடைமுறைக்குச் சாத்தியமான, தலித் மக்களின் மேம்பாட்டிற்கான திட்டங்களை வகுத்து, கண்காணித்து செயல்படுத்த வேண்டியது, மாநில அரசுகளின் கடமை.

சிறப்புக் கூறு திட்டத்தின் முக்கியக் கூறுகள்:

மத்திய அரசின் மொத்த திட்ட ஒதுக்கீட்டு நிதியிலிருந்து, ஒவ்வொரு மாநிலமும், அந்தந்த மாநிலத்தின் தலித் மக்கள் தொகையின் விகிதாச்சாரத்திற்கேற்ப நிதியை ஒதுக்கி, நிதிநிலை அறிக்கையில் அறிவிக்க வேண்டும். தமிழ்நாட்டில் அது 19 சதவிகிதம் ஆகும்.

மாநில அரசின் நிதி நிலை அறிக்கையில், சிறப்புக் கூறு திட்டத்தின் கீழ் மக்களின் மேம்பாட்டுக்காக துறை வாரியாகச் செலவழிக்கப்பட உள்ள தொகையை, திட்டம் வரவு செலவு இணைப்பு நூலில் (Link book) தனித் தனியே காட்ட வேண்டும்.

சிறப்புக் கூறு திட்டத்தின் கீழ் மாநில அரசுகள், தங்களின் அனைத்துத் துறைகளிலும், தலித் மக்களுக்கென பல்வேறு திட்டங்களை, அம்மக்கள் நேரடியாகப் பயன்பெறும் வகையில் செயல்படுத்த வேண்டும்.

ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள பட்டியல் சாதியினர் பழங்குடியினர் நலத் துறையை, சிறப்புக் கூறு திட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரம் உள்ள அமைப்பாக மாற்ற வேண்டும்.

விரிவான செயல்திட்ட நடைமுறைகளுடன் உருவாக்கப்பட்ட சிறப்புக் கூறு திட்டத்திற்கு, 1982 முதல் மத்திய அரசு நிதி ஒதுக்கி வருகிறது. கடந்த 25 ஆண்டுகளில் மட்டும், பல்லாயிரம் கோடி ரூபாய்களை மத்திய அரசு சிறப்புக் கூறு திட்டத்திற்கென ஒதுக்கியுள்ளது. ஆனால், மாநில அரசின் தலித் விரோதப் போக்குகளால் அத்தொகை பல்வேறு ஆடம்பர செலவீனங் களுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. எஞ்சியிருக்கும் தொகையை மாநில அரசுகள் மத்திய அரசுக்கே திருப்பி அனுப்பி வருகின்றன. இதனால் தலித் மக்களுக்குச் சேரவேண்டிய பலன்கள் மறுக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் கடந்த 25 ஆண்டுகாலமாக ஆட்சியிலிருந்து வரும் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் – தலித் மக்களுக்குச் செய்த இப்பெரும் துரோகத்தை, இந்திய தணிக்கைத் துறை தலைவரின் அறிக்கைகள், பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் ஆணைய அறிக்கைகள் அம்பலப்படுத்தியுள்ளன. வரலாற்று ரீதியிலான இப்பெரும் மோசடியில், மத்திய, மாநில அதிகாரிகளுக்கும் பங்கிருப்பதை அறிக்கைகள் வெளிப்படுத்தியிருக்கின்றன. அதுமட்டுமின்றி, சிறப்புக் கூறு திட்டத்தை உருவாக்கிய மத்திய அரசின் மொத்தமுள்ள 62 துறைகளில் நான்கு துறைகள் மட்டுமே சிறப்புக் கூறுதிட்டத்தை செயல்படுத்தி வருகின்றன. மத்திய அரசுத் துறைகளே சிறப்புக் கூறு திட்டத்தை அலட்சியப்படுத்துகின்றன. இது, இத்திட்டத்திற்கு நேர்ந்த மிகப்பெரும் பின்னடைவு ஆகும்.

திட்ட ஒதுக்கீடுகளிலிருந்து தலித் மக்கள் விகிதாச்சாரத்திற்கு ஏற்ப ஒதுக்கப்பட்ட தொகையை, பொது செலவீனங்களுக்குப் பயன்படுத்தக் கூடாது என்று மத்திய அரசு தீவிரமாக வலியுறுத்திய போதும், அரசு சிறப்புக் கூறு திட்டத்தின் பெரும் பகுதியை பொது செலவினங்களுக்குப் பயன்படுத்தியுள்ளது. எடுத்துக்காட்டாக, 1997 முதல் 2005 வரை, சிறப்புக் கூறு திட்டத்தில் தலித் மக்களின் மேம்பாட்டுக்கென மத்திய அரசிடமிருந்து பெற்ற 7,143 கோடி ரூபாயை, தமிழக அரசு வேறு செலவீனங்களுக்கு முறைகேடாகப் பயன்படுத்தியுள்ளது.

உண்மை நிலை இவ்வாறிருக்க, மாநில அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, சிறப்புக் கூறு திட்டத்திற்கு மத்திய அரசிடமிருந்து பெறும் தொகை, நூறு சதவிகிதம் தலித் மக்களுக்காக செலவிடப்பட்டுள்ளது என தனது 2006 - 07 ஆண்டறிக்கையில் குறிப்பிடுகிறது. இத்தகைய அவலம், அரசுத் துறைகளில் கடந்த 25 ஆண்டுகளாகத் தொடர்ந்து நீடித்து வருகிறது. தனித் தொகுதிகள், இடஒதுக்கீடுகள் ஆகியவற்றைப் போலவே சிறப்புக் கூறு திட்டமும் ஆட்சியாளர்களால், அரசு அதிகாரிகளால் நிர்மூலமாக்கப்பட்டு வருகிறது. தமிழ் நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் வளர்ச்சிக் கழகம் ("தாட்கோ') கூட, அரசின் தலித் விரோத நடவடிக்கைகளுக்கு ஆதரவாக அறிக்கை தரும் அமைப்பாகவே இயங்குகிறது.

எடுத்துக்காட்டாக, கடந்த பத்து ஆண்டு களில் மட்டும் 12,000 கோடி ரூபாய் தலித் மக்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதி ஆண்டில்கூட, மத்திய அரசிடமிருந்து பெற்ற 14,000 கோடி ரூபாயில், சிறப்புக் கூறு திட்டத்தின்படி, தலித் மக்களுக்காக மட்டும் ஒதுக்க வேண்டிய தொகை ரூ. 3,000 கோடி ஆகும். ஆனால், தமிழக அரசு, 2007 08 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் சிறப்புக் கூறு திட்டத்தில் தலித் மக்களின் நலன்களுக்காக ரூ. 829 கோடியை மட்டுமே ஒதுக்கியுள்ளது. மீதமுள்ள 2,094 கோடி ரூபாயை முறைகேடாக வேறு திட்டங்களுக்கு மாநில அரசு திருப்பி விட்டுள்ளது. ஆண்டுதோறும் தலித் மக்களுக்கு ஒதுக்கப்படும் பல ஆயிரம் கோடி ரூபாயை அம்மக்களுக்குச் செலவிட, தமிழக அரசு மறுத்தே வருகிறது. ஆனால், பல்லாயிரம் கோடி ரூபாயை தலித் மக்களுக்கென ஒதுக்கியும், அம்மக்கள் அதைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்று மத்திய, மாநில அரசு அதிகாரிகள் வெளிப்படையாகவே பேசிவருவது வேதனை அளிக்கும் செய்தியாகும்.

எனவே, சிறப்புக் கூறு திட்டத்தின் மூலம், தலித் மக்களுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய பல ஆயிரம் கோடி ரூபாயை முழுமையாகக் கிடைக்கச் செய்ய தமிழக அரசை வலியுறுத்தி, 18.4.2007 அன்று காலை சென்னை – மெமோரியல் அரங்கு அருகில், "தலித் உரிமைக் கூட்டமைப்பு' சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப் பாட்டம் ஒருநாள் முழுவதும் நடந்தது. இதில், எஸ். நடராசன், அ. வினோத், பெ. தமிழினியன், யாக்கன், ஆர்.எல். ரொசாரியோ, எம். தமிம் அன்சாரி, ஏபி. வள்ளிநாயகம், இன்குலாப், பழ. நீலவேந்தன், பி. ரவிச்சந்திரன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். அய்நூறுக்கும் மேற்பட்டோர் இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். தலித் மக்களின் சமூக, பொருளா தார முன்னேற்றத்திற்காகக் குரல் எழுப்பி வரும் அனைத்துத் தரப்பினரும் இப்பிரச்சினையில் இணைந்து போராட வேண்டியது அவசியமும், அவசரத் தேவையுமாகும்.
Pin It