கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

திராவிடர் விடுதலைக் கழகத்துக்காக சென்னையில் அமைந்துள்ள தலைமையகத்தை நாம் காப்பாற்றிக் கொள்ள வேண்டிய அவசியத்தை கழகத் தோழர்கள் நன்றாக உணர்வார்கள். கடும் முயற்சி எடுத்து குத்தகைக்கு எடுத்து அந்தத் தலைமை அலுவலகத்தில் கடந்த எட்டு ஆண்டுகளாக இயங்கி வருகிறோம். திராவிடர் விடுதலைக் கழகத்துக்கு மட்டுமல்ல; எத்தனையோ சிறிய அமைப்புகள், இயக்கங்கள் தங்களுக்கான கலந்துரையாடல், சந்திப்புக் கூட்டங்கள் நடத்துவதற்கு ‘தாய் வீடாக’ நமது தலைமைக் கழகம் பயன்பட்டு வருகிறது.

நகரின் மய்யப் பகுதியில் உள்ள அந்த அலுவலகத்தை அதன் உரிமையாளர்கள் விற்பனை செய்ய முடிவெடுத்தபோது தலைமைக் கழகம் இல்லாமல் போய் விடுமே என்ற கவலையும் வருத்தமும் நமக்கு உருவானது. இதைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற முடிவுக்கு வந்தோம். அதற்காக ஆதரவாளர்கள் நண்பர்களிடம் கட்டமைப்பு நிதி திரட்டும் முயற்சிகளில் இறங்கினோம். பலரும் ஆர்வத்துடன் உதவினார்கள். நட்புக்கரம் நீட்டினார்கள். ஆனாலும் அலுவலக கட்டிடத்தை வாங்குவதற்கான தொகையில் பாதியளவைக்கூட நம்மால் எட்ட முடியவில்லை.

வீட்டின் உரிமையாளர்கள் சீக்கிரம் பணத்தைக் கொடுத்து முடித்துக் கொள்ளுங்கள் என்று தொடர்ந்து அழுத்தம் தருகிறார்கள். தலைமைக் கழகச் செயலாளர் தபசி குமரன், இதில் மிகவும் கவலையும் பொறுப்பையும் ஏற்று இதே பணியாய் தோழர்களிடம் தொடர்ந்து வேண்டுகோள் வைத்து வருவதை நாம் ஒவ்வொருவரும் அறிவோம்.

இப்போது தலைமைக் கழகத்தை நாம் தக்க வைத்துக் கொள்வதா? அல்லது விட்டு விடலாமா என்ற இறுதிக் கட்டத்தில் வந்து நிற்கிறோம்.

கழகத் தலைவர், கழகப் பொதுச் செயலாளர், கழக அமைப்புச் செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட கழகப் பொறுப்பாளர்கள் பலரும் தங்களால் முடிந்த அளவுக்கு நன்கொடை திரட்ட தீவிரமான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும் இனியும் இந்தத் திட்டத்தை தாமதப்படுத்த முடியாத நிலைக்கு வந்து சேர்ந்து விட்டோம்.

கடந்த மார்ச் 20, 2018இல் திருப்பூரில் கூடிய தலைமைக் குழுவில் இது குறித்து நீண்ட நேரம் விவாதித்தோம். இறுதியாக இந்த ‘தலைமைக் கழக’த்தை நாம் தக்க வைத்துக் கொள்வதில் கழகப் பொறுப்பாளர்கள் தோழர்கள் ஒவ்வொருவரின் பங்களிப்பையும் உறுதி செய்ய வேண்டும் என்ற தவிர்க்கவியலாத முடிவுக்கு வந்தோம்.

அந்த நோக்கத்தோடு கழகத்தின் பொறுப்பாளர்கள், தோழர்கள் மற்றும் ஆதரவாளர்களின் பெயர்ப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

பட்டியலில் தேர்வு செய்யப்பட்டுள்ள ஒவ்வொரு தோழரும் ரூ.20,000 குறைந்த அளவு நன்கொடையைத் தாமாகவோ அல்லது திரட்டியோ தர வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட இந்தத் தொகை மிக மிகக் கட்டாயமானது என்றும் கழக தலைமைக் குழு முடிவெடுத்தது. அதற்கு கூடுதலாக நன்கொடை திரட்டித் தந்தால் மிகவும் மகிழ்வுடன் வரவேற்போம்.

பெரியார் இலட்சியத்துக்காக திராவிடர் விடுதலைக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டு செயல்படும் நமது தோழர்கள் ஒவ்வொருவருமே பொது வாழ்க்கையில் நேர்மையோடும் அர்ப்பணிப்போடும் கொள்கை சமரசமின்றி செயல்பட்டு வருவதை அந்தந்தப் பகுதி மக்களும் நண்பர்களும் தோழமை சக்திகளும் மிக நன்றாகவே அறிவார்கள். கழகத்தின் மீதும் கழகத் தோழர்கள் மீதும் உள்ள மரியாதையையும் நம்பிக்கையையும் நமது தோழர்கள் நல்ல வகையில் இந்தக் கட்டமைப்பு நிதி திரட்டலுக்குப் பயன்படுத்த முன் வருவார்கள் என்று நம்புகிறோம்.

மிகக் குறைந்தபட்ச அளவாக நிர்ணயிக்கப்பட்டுள்ள இந்த ரூ.20,000/-க்கான இலக்கை நிச்சயமாக ஒவ்வொரு தோழர்களாலும் செய்து முடிக்க முடியும் என்று நாம் உறுதியாக நம்புகிறோம். இந்த இலக்கை எட்ட முடியாமைக்குக் காரணங்களை அடுக்கிக் காட்ட வேண்டாம் என்றும் தோழர்களைக் கேட்டுக் கொள்கிறோம். தோழர்கள் கழகத்துக்காக செலுத்தும் உண்மையான பங்களிப்பை மதிப்பிடும் ஒரு அளவுகோலாகவே இதனைத் தலைமைக் கழகம் கருத்தில் கொள்ளும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

‘கழகக் கட்டமைப்பின் அடிக்கற்கள்’ என்ற பெருமையில் ஒவ்வொரு கழகத் தோழரும் பங்கேற்க முன் வரவேண்டும். முன் வருவீர்கள் என்ற நம்பிக்கையும் எங்களுக்கு உண்டு!

இந்த நிதி திரட்டலுக்கான கெடு மே 15, 2019 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் மேலும் எக்காரணம் கொண்டும் கால நீட்டிப்புத் தர இயலாத நெருக்கடிக்கு நாம் உள்ளாகியுள்ளோம்.

கட்டமைப்பு திரட்டல் பணி முடிந்த அடுத்த வாரமே கழகத்தின் செயலவைக் கூடி நிதி திரட்டிய அனைத்துத் தோழர்களையும் பாராட்டிச் சிறப்பிக்கவும் முடிவு செய்துள்ளோம்.

தலைமைக் கழகத்தைத் தக்க வைக்கும் இந்த அடிப்படைக் கடமையை நிறைவேற்றி முடிப்பீர்கள் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறோம்.

தோழமையுடன்,

தலைவர் : கொளத்தூர் மணி 

பொதுச் செயலாளர் : விடுதலை இராசேந்திரன்

குறிப்பு : பட்டியலில் இடம் பெற்றுள்ள தோழர்கள் ஒவ்வொருவருக்கும் தனித் தனியாக கடிதங்கள் விரைவில் வந்து சேரும்.