பொய் சொல்றது ஈஸி, உண்மைய சொல்றது தான் கஷ்டம்

இந்த உலகத்தில் இரண்டே ஜாதிதான் உண்டு. ஒன்னு பணக்கார ஜாதி இன்னொன்னு ஏழை ஜாதி

இங்க யாரு போலீஸ் யாரு திருடன்னே தெரியல

இதுபோன்ற வசனங்கள் எங்கும் எவரிடமும் எடுபடும். ஏனெனில் இவை இன்று நிலவும் சமூக யதார்த்தத்தைப் பிரதிபலிப்பவை.

இந்த சமூகத்தில் தன்னிடமுள்ள திறமைகளை வியாபாரப் பொருளாக்கத் தெரிந்தவன் தான் வாழத் தெரிந்தவன். அவன் தான் வாழ முடிந்தவனாகவும் இருப்பான். வியாபாரம் ஒரு விரும்பத்தகுந்த தொழிலல்ல. அதனைத் திறமையாகச் செய்ய நிறையப் பொய் பேசியாக வேண்டும்.உண்மையை மட்டுமே பேசவும் உண்மையாக வாழவும் விரும்புபவர் எவரும் வியாபாரி ஆக முடியாது. அவர் வியாபாரத்தில் தோற்றுப் போய்விடுவார்.

இன்றைய சமூக அமைப்பில் உபயோகப் பொருட்கள் மட்டுமல்ல ஒருவரது தோற்றப் பொலிவு, பேச்சாற்றல் போன்றவற்றில் தொடங்கி உடல் உறுப்புகள் வரை அனைத்தும் வியாபாரப் பொருட்களே.

வியாபார நுணுக்கம் என்னவென்றால் விற்பவருக்கு, தான் விற்கும் பொருள் அபூர்வமானது என்று காட்ட முடிய வேண்டும். எவ்வளவு தூரம் அவரால் அவ்வாறு காட்ட முடிகிறதோ அவ்வளவு தூரம் அதிக விலைக்கு அவர் அவற்றை விற்க முடியும்.

எந்த வியாபாரத்தையும் இடைத்தரகர் அமைப்பின்றிச் செய்வது மிகவும் கடினம். இடைத்தரகராக இருப்பதற்கும் பல தொடர்புகளும் குறிப்பிடத்தக்க அளவு முதலீடும் வேண்டும். திடுமென ஒருவர் இடைத்தரகர் ஆகிவிட முடியாது.

இடைத்தரகர் உதவியின்றி ஒரு விலைமாது தன் உடலை விற்பது கூடக் கடினம். தனது உடல் உறுப்புகளை விற்பவர்கள் கூட இடைத்தரகர்களையே சார்ந்திருக்க வேண்டும்.

காதல் ஒரு உன்னதமான உணர்வு அதற்குத் தேவை அதில் சம்பந்தப்பட்ட ஒருவர் குறித்த மற்றவரின் புரிதலே. ஆனால் அதுவும் கூடப் பெரும்பாலும் பணம், வசதி போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டே இங்கு உருவாகிறது.

நாம் விளக்கும் இச்சூழ்நிலைகளே - சமூகத்தில் தனது உழைப்பை ஒரு குறிப்பிட்ட ஊதியத்திற்கு நிலையாகவும் நிரந்தரமாகவும் விற்கும் வழியின்றி - எப்படியாகிலும் எதைச் செய்தாகிலும் வாழ்ந்தாக வேண்டும் என்ற அடிப்படையில் உள்ள கோடிக் கணக்கான மக்களின் நிலை.

ஆனால் நாம் மேலே விளக்கிய போக்குகள் ஒரு முறையான சமூக அமைப்பிற்கு அன்னியமானவை; அபத்தமானவையும் கூட.

ஆனால் இச்சூழ்நிலையில்தான் பலரும் பலகாலம் வாழ்கிறோம். அவ்வாறு வாழ்வது கட்டாயமாகி விடுவதால் இவை அபத்தமாகவும் வித்தியாசமாகவும் தெரிவதில்லை; இயல்பானவையாகி விடுகின்றன; நாமும் அதற்குப் பழகிப் போய்விடுகிறோம்.

உண்மை பேசுவது பொய் பேசுவதைக் காட்டிலும் ஏன் கஷ்டமானதாக இருக்கிறது என்ற கேள்வி நம்மில் விரல்விட்டு எண்ணக் கூடிய ஒரு சிலரைத் தவிர பெரும்பாலோருக்கு எழுவதே இல்லை.

மனிதன் உபயோகிக்கும் பொருட்களை வாங்குவதற்கும் விற்பதற்குமான ஒரு சாதனமாக உருவானதே பணம். ஆனால் அப்பணம் தான் சகலமும் என்றாகி விட்டது.

ஏன் அப்படி ஆகிவிட்டது என்று கருதுவோரைக் காண்பது அரிது. அவ்வாறு ஏன், எதற்கு என்று கேட்பதைக் காட்டிலும் அதை எப்படியாவது சம்பாதிக்க முயல்வதே புத்திசாலித்தனம் என்பதே பெரும்பாலான யதார்த்தவாதிகளின் அனுபவபூர்வ உணர்வு. இச்சமூகத்தில் இருப்போரில் மிகப் பெரும்பான்மையினர் இப்படிப்பட்ட யதார்த்தவாதிகளே’.

சமூக வாழ்க்கை பல அம்சங்கள் நிறைந்ததாக அதன் அனைத்து அம்சங்களுக்கும் அவையவைக்குக் கொடுக்கப்பட வேண்டிய முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாக இருந்தால் நமது சக மனிதர்களைப் பற்றி தப்பபிப்பிராயங்கள் ஏற்படாது.

அவ்வாறில்லாமல் ஒரு குறிப்பிட்ட ரகக் குற்றவாளிகளை மட்டும் கவனிப்பதற்காகவும் கண்காணிப்பதற்காகவும் என்று ஒரு துறை ஏற்படுத்தப்பட்டால் அதில் நிபுணத்துவம் காட்டுபவர்களுக்கு நிபுணத்துவத்தை மேலதிகாரிகளின் பார்வைக்குப் படும் வண்ணம் அடிக்கடி காட்டினால் அதற்கு உரிய மரியாதையும் பதவி உயர்வும் கிட்டும் என்ற எண்ணம் ஏற்படும்.

அதனால் அவர்கள் மனித உணர்வுகள் அற்ற எந்திர மனிதர்களைப் போல் சக மனிதர்களின் மத அடையாளங்களையும் அதுபோன்ற புறத் தோற்றங்களையும் வைத்துத் தவறான முடிவுகள் எடுத்து அப்பாவிகள் பலரைப் பாதிப்புகளுக்கு ஆளாக்கி விடுவர்.

அந்நிலையில் பல குற்றவாளிகள் தப்பி விட்டால் கூடப் பரவாயில்லை. ஒரு நிரபராதி தண்டிக்கப்பட்டு விடக்கூடாது என்ற ஜனநாயக யுகத்தின் பொற்கால நீதியியலின் கூற்று செல்லுபடியாகாததாகிவிடும்.

எத்தனை நிரபராதிகள் பாதிக்கப்பட்டாலும் பராவயில்லை. குற்றவாளிகளுக்கு எதிராகத் தான் தீவிரமாக செயல்பட்டவன் என்ற பெயரும் அதற்கான துறை ரீதியான சான்றிதழும் கிட்டினால் போதும் என்பதே இன்று நல்ல அரசுஅதிகாரிகளின் நிலையாக ஆகிவிட்டது.

இந்த அமைப்பில் அதிகாரம் எங்கு கூடுதலாக இருக்கிறதோ அங்கு ஊழலும் கொடுமைகளும் மிதமிஞ்சி மண்டிக் கிடக்கின்றன. காவல்துறை அதற்கு ஒரு உதாரணம்.

மாதந்தோறும் ஒரு நல்ல தொகை அதில் வேலை செய்பவர்களுக்குச் சம்பளமாக வழங்கப்படுகிறது. இருந்தாலும் அத்துடன் அத்துறையில் வேலை செய்பவர்களில் மிகப் பெரும்பாலோர் திருப்தி அடைவதில்லை. காக்கிச் சட்டை போட்டுவிட்டு காசு வாங்காவிட்டால் அவன் காவல்துறையைச் சேர்ந்தவனாகக் கருதப்பட மாட்டான்;

வீடுகளையும் நிறுவனங்களையும் காவல் காக்கும் வாட்ச்மேன் போலவே கருதப்படுவான் என்றே அத்துறையில் வேலை செய்யும் பலர் எண்ணுகின்றனர். அத்துறையினரால் கைப்பற்றப்படும் பொருட்கள், நகை, பணம் எதுவும் அது கைப்பற்றப்பட்ட அதே அளவுகளிலும் விதத்திலும் அவற்றை இழந்த அவற்றின் உரிமையாளர்களிடம் தரப்படுவதில்லை.

நான் இழந்த பொருள் காவல்துறையால் கைப்பற்றப்பட்டும் அது எனக்குக் கிடைக்கவில்லை என்றோ அல்லது குறைவாகக் கிடைத்தது என்றோ அது குறித்துக் கவலைப்படுவது கூட நம் மக்களிடம் இல்லாமல் போய்விட்டது.

ஒரு திருடன் வாழ வழியின்றி திருடுகிறான். ஆனால் காவல் நிலையங்களிலும் திருட்டுக்கள் நடக்கின்றன. அதனை நடத்துபவர்கள் வாழவழியின்றி அத்திருட்டை நடத்துவதில்லை. திருட வாய்ப்பிருக் கிறது என்பதால் திருடுகிறார்கள்.

அதனைக் கொண்டு சம்பளத்தை மட்டும் வைத்து வாழ்ந்தால் நடத்த முடிந்த வாழ்க்கையை விடக் கூடுதல் வாழ்க்கையினை, ஆடம்பரமான வாழ்க்கையினை நடத்த முடியும் என்பதற்காகத் திருடுகிறார்கள்.

எப்படிச் சம்பாதித்தாவது பணத்தைச் சேர்த்துவிட்டால் அதை வைத்துச் சமூக மரியாதையை விலைக்கு வாங்கி விடலாம் என்ற எண்ணப்போக்கு முறைகேடாகச் சம்பாதிப்பவர்களிடம் மலிந்து நிறைந்துவிடுகிறது.

தங்களுக்கு அப்பணம் எந்த வழியில் வந்தது என்பதை எண்ணிப்பார்த்து அதனை மனதிற்கொண்டு தன்னடக்கத்துடன் இருப்பவரையோ அல்லது தன்னிடமிருக்கும் முறைகேடான வழியில் சம்பாதித்த பணத்தை வைத்து தனக்கு மற்றவரால் தரப்படும் போலி மரியாதையைக் கண்டு கூசுபவரையோ எங்கும் காண முடிவதில்லை.

கல்லில் அரிசியாகிவிட்ட மனித மதிப்புகள்

இவ்வாறு ஒரு சமூகத்தை கட்டுக் கோப்பாக வைத்திருப்பதற்குத் தேவையான தார்மீக, சட்ட நெறிகள் சமூகத்தில் நிலவாமல் அதை நிலைநாட்டும் போக்கும் இல்லாமல் நமது சமூகம் அபத்தங்களின் மேலான அபத்தங்கள் நிறைந்ததாக உள்ளது.

அதாவது கல்லும் அரிசியும் கலந்த ஒரு கலவையில் அரிசி கூடுதலாக இருந்தால் கல்லை நாம் பொறுக்குவோம். கல் கூடுதலாக இருந்தால் அரிசியை நாம் பொறுக்குவோம்.

ஆனால் இன்றைய நிலை அரிசியில் கல் போல் சமூகக் கேடுகள் நிலவிய ஒரு காலகட்டத்தைத் தாண்டி கல்லில் அரிசி கிடப்பது போன்ற ஒரு காலகட்டத்தை அதாவது உண்மை, நேர்மை, மனித மதிப்புகள் ஆகியவை உள்ளோரைப் பொறுக்கி எடுத்தே பார்க்க முடியும் என்பது போன்ற காலகட்டமாக மாறிவிட்டது.

ஊறிப்போன விரக்தி

மக்கள் அனைவரிடமும் ஒரு வகையான இச்சூழ்நிலை குறித்த விரக்தி மனநிலையே மண்டிக் கிடக்கிறது. அதாவது கோபத்துடன் சமூக அவலம் ஒன்றைக் கண்டு பொங்கி எழுவதற்குப் பதிலாக அதனை மெளனமாக சிரித்துக் கொண்டே சகஜமாக விவரிக்கும் - மனம் முழுவதும் உள்ளார்ந்து வியாபித்துப் பரவியிருக்கும் - ஒரு ஊறிப்போன விரக்தி மனநிலை மக்களில் பெரும்பாலோருக்கு வந்துவிட்டது.

ஒரு சமூகத்தில் நிரம்பித் ததும்புவதாக இத்தகைய மனநிலை இருந்தால் அது நிச்சயமாக ஏதாவது ஒரு வடிவத்தில் அச்சமூகத்தின் கலை, இலக்கியப் படைப்புகளில் வரவே செய்யும். ஏனெனில் சட்டியில் இருப்பதுதானே அகப்பையில் வரமுடியும்.

அந்த அடிப்படையில் தற்போது தமிழில் வெளிவந்துள்ள ஒரு திரைப்படமே கிரிஷ்´ன் இயக்கத்தில் வானம்என்ற பெயரில் வந்துள்ளது. 5 வேறுபட்ட கதைகளை அவை பிரநிதித்துவப் படுத்தும் சமூகத்தின் வெவ்வேறுபட்ட காட்சிகளை இல்லை இல்லை சமூகத்தின் அபத்தங்களை விறுவிறுப்புக் குன்றாமல் சித்திரப்படுத்தி மிகவும் யதார்த்தமாக இப்படம் மக்கள் முன் நிறுத்துகிறது.

அந்த 5 கதைகளில் ஒன்று சரளமாக ஆங்கிலம் பேசக்கூடிய அளவிற்கு கல்வி கற்ற - படித்த வேலை இல்லாத இளைஞன் ஒருவனின் கதை. அவன் எனக்கு வேலை கிடைக்கவில்லை என்று யாரிடமும் கதறியும் பதறியும் கூறி அங்கலாய்க்கவில்லை. தன்னிடமுள்ள ஆங்கில அறிவைச் சரக்காக்கி அதனை அது விலை போகுமிடத்தில் விற்க முனைகிறான்.

தன் முன்னோர் சம்பாதித்துக் கொடுத்த பணத்தைக் கொண்டு பொழுது போக்குவது கேளிக்கை விருந்துகளில் கலந்து கொள்வதுமே வாழ்க்கை என்று எவ்வகை முயற்சியும் போராட்டமும் இன்றி வாழக் கூடிய பெண் ஒருத்தியிடம் உள்ள காதல் என்ற சரக்கிற்கு அது விலை போகிறது.

அதன் மூலமாக ஏழை ஜாதியிலிருந்து பணக்கார ஜாதிக்கு அவன் மாற நினைக்கிறான். ஏழையாகப் பிறப்பது ஒருவனின் தவறல்ல. ஏழையாக ஒருவன் செத்தால் அதுதான் அவனுடைய தவறு என்பதே அவனது வாழ்க்கையின் தத்துவம்.

தன்னைக் காதலிக்கும் பெண்ணிடம் தான் படித்ததனால் கிட்டிய ஆங்கில அறிவைக் கொண்டு தான் பணக்காரனும் கூட என்று காட்டித் தன் தோற்றப் பொலிவினால் தன்மீது அவளுக்கு இருக்கும் ஈர்ப்பைப் பயன்படுத்தி ஒரு நல்ல பேரத்தை நடத்தி முடித்து பணக்காரனாக வாழலாம் என்பது அவனது எண்ணம்.

சரியான வியாபாரிகளாக ஆக முடியாத ஏழைகள்

ஆனால் எந்தவொரு பேரத்தையும் இரக்கம், மனிதாபிமானம் ஆகிவற்றின் தலையீடுகளின்றி அதனை ஒரு தொழிலாகச் செய்ய முடிய வேண்டும். அதற்கு ஒரு இறுக்கம் வேண்டும்.

அது ஏழ்மைச் சூழ்நிலையில் வளர்வோரிடம் இயல்பாகவே இருப்பதில்லை. அதனால் அவர்கள் சரியான வியாபாரிகளாக ஆக முடிவதில்லை.

பணக்கார இளம் பெண்களின் மேலோட்டமான பார்வையில் பட்டுவிடாதவாறு தன்னைப் பற்றி அவனால் பராமரிக்க முடிந்த பணக்காரன் என்ற பொய்ச் சித்திரம் - அவனை அவனது காதலி தாய்க்கு அறிமுகம் செய்து அதன்மூலம் தங்களின் நேசத்தையும் அவளிடம் வெளிப்படுத்துவதற்காகத் தேர்ந்தெடுக்கும் பணக்காரர்கள் மட்டுமே கலந்து கொள்ளும் பிரிமியர் விருந்துக்கு பாஸ் எடுப்பதற்குப் போதுமான பணம் இல்லாத நிலையில் - சிக்கலுக்கு ஆளாகிறது.

தன்னைப் பணக்காரனாகக் காட்டுவதற்காகக் கேபிள் டி.வி-க்கு வசூல் செய்த பணத்தைச் செலவிடுவது, பிறரது வாகனங்களைத் தனது வாகனமாகக் காட்டுவது. எத்தகைய மலிவான பிளாட்ஃபார்ம் துணிகளை பணக்கார நாகரீக யுவதிகள் அதிநவீனமானவை என்று எண்ணி ஏமாறுவர் என்பதை அறிந்து அவற்றை வாங்கி அணிந்து அவர்களை ஏமாற்றுவது போன்ற அவனது சனாதன யுக்திகள் பார்டிக்கு பாஸ் வாங்கும் வி­யத்தில் பலிக்காமல் போய்விடுகின்றன.

அப்பணத்தைப் பெறுவதற்காக அவன் மேற்கொள்ளும் யுக்திகளும், அவனைக் காவல் நிலையம் வரை கொண்டு சென்று நிறுத்துகிறது. பாஸ் பெறுவதற்காக அவன் செய்யும் நகைப் பறிப்பும் கூட நகைச்சுவை ததும்பும் நிகழ்வாகவே காட்டப்படுகிறது. இருந்தாலும் அவற்றினூடே ஒரு வகையான வேதனை இழையோடுவதும் பராமரிக்கப் படுகிறது.

பல விஷ‌யங்களில் அவனது முதலாளி, அவனது காதலி, பணம் பெறுவோர் ஆகியவரிடம் கூசாமல் பல பொய்களை அள்ளிவிட முடிந்த அவனால் காவல்துறைத் துணை ஆய்வாளரை மயக்க மருந்து கொடுத்து அவனிடமிருந்துத் தப்பித்து வந்த குற்றத்திற்காக காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருக்கும் விலைமாது, ‘நீ செய்த திருட்டு உண்மையிலேயே காதலுக்காகவாஎன்று கேட்கும் போது ஆம் என்றோ இல்லை என்றோ கூற முடியவில்லை; தடுமாறுகிறான்.

அது அடிமனதில் ஏழைகள் உண்மையானவர்களே என்பதையும் வெறும் பணத்திற்காகக் காதலே இன்றி காதல் உள்ளதாகக் கூறி ஏமாற்றுவது அவர்களது கைவந்த கலையாக ஆகிவிடாது என்பதையும் கவிதை நயத்துடன் வெளிப்படுத்துகிறது.

பருவக் கவர்ச்சி மிகவும் வலுவானது. பலரை ஏமாற்றியதால் யாரிடம் இருந்தும் பணமும் பெற முடியாமல், நகைப் பறிப்பையும் தொழில்நுட்பத் திறனுடன் செய்ய முடியாமல் ஒரு கட்டத்தில் உண்மையை ஒப்புக் கொள்ள வேண்டும் என்ற மனநிலை வரை வந்த அவன், காதலியின் முத்தத்தால் பித்துப் பிடித்தவனாகி விடுகிறான்.

கொத்தடிமையாக ஆக்கப்பட்டு விட்ட தனது மகனை மீண்டும் படிக்க வைப்பதற்காக தனது சிறுநீரகத்தை விற்று ஒரு தாய் வைத்திருக்கும் பணத்தை திருடுவது வரை செல்கிறான். ஆனால் இறுதியில் அந்த ஏழைத் தாயின் புலம்பல் அவன் மனதைவிட்டு அகலாது நிறைந்திருந்து அவனிடமிருக்கும் மனிதத் தன்மையை உயிர்ப்பிக்கிறது. ஏழையாய் பிறந்து லும்பனாக மாறும் போக்கிலிருந்த ஒருவனின் சுய உணர்வின் அடிப்படையில் நிகழும் மீட்சியாக அது இருக்கிறது.

சமூகம் புறந்தள்ளினாலும் அவர்களால் புறந்தள்ளப்படாத மனித மதிப்புகள்

இன்னொரு கதையில் தன் அழகை விற்கும் விலை மாதுவாக வரும் ஒருத்தி சுதந்திரமாகத் தன் உடல் வியாபாரத்தைச் செய்து அத்தனை தொந்தரவின்றிப் பிழைக்கலாம் என்று நினைக்கிறாள். அது நிறைவேறுவதில் தான் எத்தனை முட்டுக் கட்டைகள் உள்ளன என்பது நேர்த்தியாகச் சித்தரிக்கப் பட்டுள்ளது.

விலை பொருளாக்கும் உடல் அவளுடையதாக இருந்தும் இந்த அமைப்பில் அவள் அதை விரும்பும் விதத்தில் விலை பொருளாக்கி தனது வாழ்க்கையை ஓட்ட அவனால் முடியவில்லை. சட்டம் மற்றும் சமூக ஒழுங்கைப் பாதுகாப்பதற்கென்று நாகரீக சமூகம் உருவாக்கியிருக்கும் காவல்துறைக்கு பண ரீதியாகவும், தான் வைத்துத் தொழில் செய்யும் பெண்களின் உடல் ரீதியாகவும் மாமூல் கொடுத்தே அத்தொழிலையும் நடத்த முடிகிறது.

இதற்கும் ஒரு நெட்வொர்க் உள்ளது. காவல்துறை, இடைத்தரகர், தாதாக்களின் பங்கு இத்தொழிலில் எவ்வளவு உள்ளது என்பதும் யதார்த்தமாக வெளிப்படுத்தப் படுகிறது.

இதுதான் வாழ்க்கை என்று ஆனபின்பு அதைப்பற்றிப் புலம்பாத சுயஇரக்கப் படாத யதார்த்தமான மதிக்கத்தகுந்த விபச்சாரியாக அவள் படம் முழுவதும் வலம் வருகிறாள்.

பெற்றோர், சுற்றம் அனைத்துமே தானும் தனக்கு உதவியாக இருக்கும் அந்த அரவாணியும் தான் என்று ஏற்பட்டுவிட்ட நிலை; ஒருவருக்காக மற்றவர் எந்த நெருக்கடிச் சூழ்நிலையிலும் எதையும் செய்யத் தயாராக இருக்கும் அவர்களுக்கிடை யிலிருக்கும் ஒரு உயர்ந்த உறவு; விபச்சாரத் தொழிலில் குண்டர்களாக வும் அடியாட்களாகவும் வரும் தாதாக்கள் பிடியில் சிக்குண்டு கத்திக் குத்துக்கு ஆட்பட்டு விட்ட தான் சகோதரியாக பாவிக்கும் அந்த அரவாணியே தனக்குள்ள ஒரே உறவு என்று அந்த விலைமாது கருதி அவளைக் காப்பற்றத் துடிப்பது; தான் இறந்து விட்டால் அவளுக்கு யார் உள்ளனர் என்று நினைத்து அந்த அரவாணி கலங்குவது அனைத்தும் சேர்ந்து நாகரீகமாக வாழ்க்கை நடத்துபவரிடம் கூட அரிதாகக் காணப்படும் நேசமும் மனிதப் பண்பும் சமூகத்தால் புறந்தள்ளப் பட்டவர்களிடம் குறைவின்றி இருப்பதைக் கோடிட்டுக் காட்டுகிறது.

ஒளிவு மறைவற்ற வாழ்க்கை வழங்கும் துணிச்சல்

தனது அழகிற்காக தன்னை மணந்து கொள்ள முன்வருவதாகக் கூறும் ஒரு சமூக வேஷ‌தாரியிடம் வேஷ‌தாரித் தனங்கள் எதுவுமில்லாது இனிமேல் ஒருவனோடு மட்டும் நடத்தும் வாழ்க்கையா என்று அவள் கூறும் இயல்பும், வழக்குப் போடுவேன் என்று மிரட்டி அவளிடம் ஓர் இரவு முழுவதையும் கழிக்க வரும் ஒரு காவல்துறைத் துணை ஆய்வாளரை துச்சமென எள்ளி நகையாடும் அவளது போக்கும், நான் முந்தானையை அவிழ்த்துத் தான் பிழைப்பு நடத்துகிறேன்; ஏனென்றால் எனக்கு படிப்பில்லை;  வேலையில்லை. ஆனால் படிப்பு, உடுப்பு, வேலை அனைத்தும் இருந்தும் நீயும் உன் கெளரவத்தை விற்று லஞ்சம் வாங்கித்தான் பிழைக்கிறாய் என்று கூறும் வாழ்க்கையை வெறும் கருப்பு, வெள்ளையாக மட்டும் பார்க்க முடிந்தவர்களுக்கே ஏற்படவல்ல துணிச்சலும் அவளது பாத்திரத்தைப் பளிச்சிடச் செய்கின்றன.

சவுக்கடிக்கு ஆளாகும் சமூக அவலம்

தனது அழகை உரிய விலைக்கு வணிகப் பொருளாக்கி ஓரளவு சுதந்திரத்துடன் தனது வாழ்க்கையை இச்சமூகத்தில் நடத்த முயலும் அவளது முயற்சியும் இவ்வாறு தோற்றுப் போவது இச்சமூக அவலத்தை சவுக்கால் அடித்துச் சொல்வது போல் அமைகிறது.

இறுதியாக இந்த ரயில் எங்கு செல்கிறதோ அங்கு செல்ல டிக்கெட் கொடுங்கள் என்று கேட்டு அங்கு சென்று எதையாவது செய்து பிழைக்கலாம் என்று அவள் கூறுவது அப்பாத்திரத்தின் மதிப்பை இன்னும் நம் மனதில் உயர்த்துகிறது. இந்தப் போக்குகள் அனைத்து முதலாளித்துவ சமூக அமைப்புகளிலும் அளவு ஓரிடத்தில் கூடுதலாகவும் மற்றோரிடத்தில் குறைவாகவும் காண முடிந்தவையே.

இவற்றோடு இந்திய சமூகத்தில் மட்டும் காண முடிந்ததாக உள்ள மதம் சார்ந்த நிகழ்வுகளும் முன்வைக்கப்பட்டு இச்சமூகம் தோலுரிக்கப்படுகிறது.

ஒரு ஆணும் பெண்ணும் பழகினால் ஒன்று அவர்கள் சகோதர பாவத்துடன் பழக வேண்டும் அல்லது கணவன் மனைவி என்ற ரீதியில் மட்டும் பழக வேண்டும் என்று கருதும் சங்பரிவாரின் கண்ணோட்டமும் அவர்கள் நடத்தும் கலாச்சாரக் காவல்துறை கபடப் போக்கும் அம்பலப்படுத்தப் பட்டுள்ளன.

ஒரு ஜனநாயக அமைப்பில் பராமரிக்கப்பட வேண்டிய மதச்சார்பற்ற தன்மை காவல்துறை போன்ற அரசு நிர்வாக அமைப்புகளில் பராமரிக்கப் படாமல் போவதும் அதிகாரிகளும் அவரவர் சார்ந்துள்ள மதக் கருத்துக்களால் செல்வாக்கு செலுத்தப்பட்டு நடுநிலைத் தன்மையை இழப்பதும் நறுக்கென்று கூறப்பட்டுள்ளது.

நல்ல அதிகாரிகள் கூட வேற்று மதத்தைச் சேர்ந்தவர்களைச் சந்தேகக் கண்கொண்டு பார்த்துப் பார்த்தே அவர்களில் பலரைப் பயங்கர வாதிகளாக்கும் போக்கும் படத்தில் நன்கு சித்தரிக்கப் பட்டுள்ளது.

அந்த நிலையை உருவாக்கும் அதிகாரிகளும் கூட தீவிரவாதிகளே என்று அரசு பயங்கரவாதத்தை கோடிட்டுக் காட்டுவதும் படத்தில் உரிய விதத்தில் இடம் பெற்றுள்ளது.

இதில் வரும் மற்ற நான்கு கதைகளையும் போலன்றி அவற்றில் வரும் பாத்திரங்களுக்கு நேர்மாறாக சுய இரக்கப்படும் பாத்திரங்களாக கடன் தொல்லையால் சிக்குண்டு வட்டிக்காகக் கொத்தடிமை ஆக்கப்படும் தனது பிள்ளையைக் காப்பாற்றத் துடிக்கும் தாயாகவும் அவளது மாமாவாகவும் வரும் பாத்திரங்கள் அமைகின்றன.

இத்தகைய கொடுமை இன்று நிலவுகிறதா என்று ஐயப்பட வைக்கும் விதத்தில் அத்தனை யதார்த்தமின்றி பிள்ளையைக் கொத்தடிமையாகப் பிடித்துச் செல்லும் உப்பள முதலாளியின் கதை அமைகிறது.

இது இப்படத்தில் வரும் ஒரு நெருடல். சமூக யதார்த்தத்தை அதற்குரிய உள்ளார்ந்த விமர்சனத்தை பிரதிபலிக்கும் காட்சி அமைப்பு மற்றும் வசனங்களோடு இடைஇடையே இந்தக் கதையும் கொண்டு செல்லப்படுவதால் அது அத்தனை வித்தியாசமாகத் தெரியவில்லை.

இந்தக் கொத்தடிமைக் கதையை இயக்குனர் படமாக்கிக் கூறும் போது சார்லஸ் டிக்கன்ஸ் லேசாக தலை தூக்குகிறார். படித்து வேலையில்லாத பணக்கார இளம் பெண்ணை காதலிப்பவன் பணத்திற்காக அலையும் போதும் அவன் இறுதியில் பணத்தை பறிக்கும் போதும் ஜான்பால் சார்தரேயின் The Age of Reason-ல் வரும் மேத்யூ பாத்திரத்தின் நிழல் தெரிகிறது.

யுலிஸ்ஸிஸ் புதினத்தில் வருவது போல் ஒருநாள் நிகழ்வே ஒட்டுமொத்தம் படமாக எடுக்கப் பட்டுள்ளதால் ஐந்து கதைகளின் காட்சிகளும் இடையிடையே கலந்து உரிய விதத்தில் செருகப் பட்டுள்ளன.

நடிப்பைப் பொறுத்தவரையில் சிம்புவும், சந்தானமும் படம் முழுவதுமே தங்களது பாத்திரத்தை நன்கு செய்துள்ளார்கள். குறிப்பாகச் சிறுநீரகம் விற்ற பணத்தைத் திருடியதில் தொடங்கி தனது காதலியிடம் தான் ஏழை என்ற உண்மையை ஒப்புக் கொள்வது வரை சிம்புவின் நடிப்பு மின்னுகிறது.

மருத்துவமனையில் தன்னைப் பார்த்துச் சிரித்துக் கையினை ஆட்டும் குழந்தையை ரசிக்க முடியாத கொடூர மனநிலையில் இருக்கும் அவன் பணத்தை மீண்டும் அந்த ஏழைகளிடம் ஒப்படைத்த பின் மன இறுக்கம் குறைந்து அந்தக் குழந்தை கையாட்டும் போது அக்குழந்தையைப் போலவே தனது முகபாவத்தைக் காட்டுகிறான்.

அப்போது அவரது நடிப்பு குழந்தை நட்சத்திரமாக சினிமாவிற்கு வந்த ஒருவரால் மட்டுமே அவ்வாறு செய்ய முடியும் என்று உணர்த்துவது போல் அமைகிறது.

அவரது பாத்திரத்தின் மேன்மையை உணர்த்துவதற்காக மனித வெடிகுண்டு ஒருவனுடன் இணைந்து மருத்துவமனையின் மாடியிலிருந்து குதிப்பதையயல்லாம் காட்டியிருக்கத் தேவையில்லை. சொல்லப் போனால் அவரது மாற்றத்தை உணர்த்துவதற்கு குழந்தையைப் பார்த்து அதன் முகபாவத்தைப் பிரதிபலித்து கண்சிமிட்டும் காட்சி மட்டுமே போதும்.

சாபக்கேடு

தமிழப் படங்களைப் பொறுத்தவரையில் அதைப் பிடித்த அதைவிட்டு அகல முடியாத சாபக்கேடு ஒன்று உள்ளது. அதுதான் அதை எப்படியாவது அனைவரும் ஏற்றுக் கொள்ளும் விதத்தில் தமிழ் சினிமாத் தனத்துடன் முடிக்க வேண்டும் என்பது.

அதற்காக இயக்குனரும் கதாசிரியரும் படம் முழுவதும் பராமரித்து வந்த அற்புதமான சமூக விமர்சனப் போக்கைக் கைவிட்டு விட்டு அந்த மருத்துவமனைக் காட்சியை அப்பட்டமான செயற்கைத் தன்மையுடன் சேர்த்துள்ளனர்.

பருத்தி வீரனில் அதன் இறுதி காட்சி பார்க்க முடியாததாக இருக்கும். ஆனால் அது பருத்தியூரான் என்பவரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டதால் அதன் இறுதிக் காட்சி மாற்ற முடியாதது. எனவே அது குறித்து இயக்குனரைக் குறைகூறி பயனில்லை.

இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் காட்சிக்காக இயக்குனரைக் குறை கூறுவதைக் காட்டிலும் சராசரித் தமிழ் ரசிகத் தன்மையைச் சுட்டிக் காட்டுவது பொருத்தமுடையதாக இருக்கும்.

எனது மலையாளத் திரையுலகத்தோடு தொடர்புடைய ஒரு மூத்த தோழரிடம் தமிழ்ப்பட இயக்குனர் பாரதிராஜா அவர்கள் உரையாடுகையில் ஒருமுறை கூறினாராம்: மலையாளத் திரைப்படங்களைப் பொறுத்தவரையில் உங்களது நிலை அத்தனை மோசமில்லை; ஏனெனில் நீங்கள் பல விதங்களில் படம் எடுத்து உங்கள் மக்களைப் பார்க்கப் பழக்கிவிட்டீர்கள். ஆனால் தமிழ்த் திரையுலகின் நிலை அப்படிப்பட்டதாய் இல்லை. அது வீட்டிற்கு ஒருவரை அழைத்து அசைவ விருந்தளித்தால் கூட அந்த விருந்திலும் அப்பளம், வடை, பாயசத்தை எதிர்பார்க்கும் மனநிலையைக் கொண்டவராக அவர் இருந்தால் எப்படியிருக்கும் என்ற நிலையிலேயே இருக்கிறது. அவரைப் போன்றவர்களைத் திருப்திப்படுத்த அதையும் நாங்கள் செய்ய வேண்டியுள்ளது என்று. அதைத்தான் இப்படத்தின் முடிவு குறித்தும் கூறத் தோன்றுகிறது.

மற்றபடி தமிழ்த் திரையுலகில், சமூக அவலங்களை இது ஒரு கதை எனப் பார்க்க முடியாத விதத்தில் அத்தனை யதார்த்தத்துடன் கூறும் ஒரு சிறந்த, விறுவிறுப்பான கடுமையான சமூக விமர்சனத் திரைப்படமாக இத்திரைப்படம் உள்ளது. இதுவே இத்திரைப்படம் குறித்த ஒற்றை வரியிலான சாலப் பொருத்தமான விமர்சனமாக இருக்கும்.

(மாற்றுக்கருத்து ஜூலை 2011 இதழில் வெளியானது)

Pin It