கோயில்களை அரசு கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக, இந்து முன்னணியினர், சங் பரிவார அமைப்புகள், பாஜகவினர் வலியுறுத்திக் கொண்டே இருக்கிறார்கள்.

திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்த பிறகு 100 கோயில்களின் இடங்களை முதற்கட்டமாக மீட்டிருக்கிறது என்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கூறியிருக்கிறார். நேற்று முன்தினம் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான ஒரு இடம் மீட்கப்பட்டிருக்கிறது. இதற்கு மிகவும் முக்கியத்துவம் உண்டு. பென்னாத்தூர் சுப்ரமணிய மேல்நிலைப் பள்ளி என்ற ஒரு பள்ளி மயிலாப்பூரில் இயங்கி வருகிறது. இது ஆர்.எஸ்.எஸ் கூட்டங்கள், ஆர்.எஸ்.எஸ் சகாக்கள் நடத்துகிற ஒரு இடமாகும். இந்த பள்ளி கடந்த 28 ஆண்டுகளுக்கு மேலாக மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான 48 கிரவுண்ட் நிலத்தை ஆண்டுக்கு வெறும் 1750 ரூபாய் மட்டுமே செலுத்தி தன்னுடைய ஆதிக்கத்தில் வைத்துக் கொண்டிருந்தது. அந்த நிலத்தின் மதிப்பு 267 கோடி ரூபாய். அதை தற்போது மீட்டு கோவிலுக்குச் சேர்த்திருக்கிறார், அமைச்சர் சேகர்பாபு. 1979க்குப் பிறகு குத்தகை இல்லாமலே தன் வசமாக்கிக் கொண்டு வாடகைக்கு விட்டு வணிகம் செய்து வந்திருக்கிறது பள்ளி நிர்வாகம். ஆர்.எஸ்.எஸ். விழாக்கள் அடிக்கடி நடத்தப்படும் இடம் இந்த உயர்நிலைப் பள்ளி மைதானம்.

ஏற்கெனவே, கோயில் நிலங்களை தங்களுடைய சொந்த நிலங்களாகவே பாவிக்கின்ற அளவிற்கு பார்ப்பனர்கள் தலையிட்டு அபகரித்து வைத்திருக்கிறார்கள் என்ற செய்தியும் வந்து கொண்டுதான் இருக்கின்றன. 1925 ஆம் ஆண்டுதான் தமிழ்நாட்டில் முதன் முதலில் நீதிகட்சி ஆட்சியில் பனகல் அரசர் முதலமைச்சராக இருந்த போது, இந்து கோயில்களை அரசுக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரக்கூடிய அறநிலையத்துறை சட்டம் கொண்டு வரப்பட்டது. அப்போது இந்த சட்டத்திற்கு கடுமையான எதிர்ப்புகள் வந்தன. அதற்குப் பிறகு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இப்படிப்பட்ட சட்டங்களே இல்லை. இரண்டு நாட்களுக்கு முன்பு மத்திய பிரதேசத்திலிருந்து வந்த செய்தியை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள கோயில் சொத்துக்கள் அனைத்திற்கும் அந்த கோயில்களின் அர்ச்சகர்களே உரிமையாளர்களாக இருந்து வந்திருக்கிறார்கள். அவர்கள் கோயில் சொத்துக்களை தங்களது மனம் போன போக்கில் விற்பது, வாங்குவது என்று தங்களது சொந்த சொத்துக்களாகவே அதை நிர்வாகம் செய்து வந்து இருக்கிறார்கள். இப்போது, அங்கே இருக்கிற மாநில ஆட்சி, இந்த கோயில் சொத்துக்களை அர்ச்சகர்கள் தங்களுடைய சொந்த செலவிற்காக விற்கவோ, வாங்கவோ கூடாது கோயில் சொத்துக்கள் அனைத்தும் கடவுளுக்குத்தான் சொந்தம் எனவே பத்திரங்களை பூசாரிகளின் பெயர்களுக்கு எழுதக்கூடாது கடவுளின் பெயர்களுக்குத் தான் எழுத வேண்டும் என்று மாநில அரசு ஒரு உத்தரவை பிறப்பித்தது. அந்த உத்தரவை எதிர்த்து மத்திய பிரதேசத்தில் உள்ள அர்ச்சகர்கள் உயர் நீதிமன்றம் சென்றார்கள்.

மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றம், ‘அர்ச்சகர்களுக்குத் தான் கோயில் நிலங்கள் சொந்தம். எனவே அரசு கொண்டு வந்த சட்டம் செல்லாது’ என்று தீர்ப்பளித்து விட்டது. பிறகு மாநில அரசு உச்சநீதி மன்றம் போனது. உச்சநீதிமன்றம் இதில் திட்டவட்டமான ஒரு தீர்ப்பை வழங்கி, ‘கோயில் இடங்கள் என்பது கடவுளுக்குத் தான் சொந்தமே தவிர, அர்ச்சகர்களுக்கு அல்ல. அது அவர்களுடைய பூர்வீக சொத்தும் அல்ல. பக்தர்கள் கடவுளுக்குத் தான் நிலங்களை அளித்தார்களே தவிர அர்ச்சகர்களுக்கு கொடுக்கவில்லை. எனவே மத்திய பிரதேச மாநில அரசின் சட்டம் செல்லும்’ என்று தீர்ப்பளித்திருக்கிறது.

- விடுதலை இராசேந்திரன்

Pin It