அண்மைக் காலமாக தமிழ் திரைப்படங்கள் ஜாதிய ஒடுக்குமுறைகளை ஆழமாகப் பேசத் தொடங்கியிருக்கின்றன. சமூக நீதியின் விளைச்சல் களாக அருமையான இளம் படைப்பாளிகளைத் தமிழ் நாடு உருவாக்கியிருக்கிறது. சமூகக் கவலையோடு அவர்கள் படைப்புகளை வெளிப்படுத்தி வருகிறார்கள். ஜாதி எதிர்ப்பை முன்வைத்து வந்துள்ள படங்கள் தீண்டப்படாத மக்களின் துயரங்கள், அவர்களின் மீதான ஒடுக்குமுறைகள், ஜாதித் திமிரின் ஆதிக்கம், அதை எதிர்த்துப் போராடுகிற இளம் போராளிகள், ஜாதி மறுப்புக் காதலர்கள் என்ற கண்ணோட்டத்திலேயே பல படங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இதில் இருந்து ஒரு மாறுபட்ட ஒரு பார்வையில் வந்திருக்கக் கூடிய ஒரு படம் தான் லப்பர் பந்து. ஜாதித் தடைகளைக் கடந்து செல்லும் வாழ்க்கைப் பாதைக்கு ஒளியைக் காட்டுகிறது இந்தத் திரைப்படம்.தலித் பெண்ணை மணந்த பிற்படுத்தப்பட்ட ஜாதி இளைஞன். அந்த இணையர்களுக்கு பிறந்த பெண்ணைக் காதலித்துத் திருமணம் புரிய விரும்பும் தலித் இளைஞர். “மாமனார் - மருமகன்” என இந்த தரப்புகளுக்குமான தன் முனைப்புகளில் இருந்து அவர்கள் எப்படித் தங்களை விடுவித்துக் கொண்டார்கள் என்பதை அற்புதமான திரை மொழியில் உருவாக்கி இருக்கிறார் அறிமுக இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து. எதார்த்தமான கிராமத்து இளைஞர்களையும், கிராமத்து குடும்ப உறவுகளையும் கண் முன் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறார்கள் ஒளிப்பதிவாளர் தினேஷ் மற்றும் கலை இயக்குனர் வீரமணி கணேசன் கூட்டணி. பட்டு கத்தரித்தது போல் நறுக்கான வார்த்தைகளோடு வெடிக்கும் கூர்மையான வசனங்கள். மாடு வெட்டும் இறைச்சிக் கூடம்; மாட்டுக்கறி உண்பவர்களே வளர்க்கும் மாடுகளின் மீது காட்டும் பாசம்; வாயில் நெருப்பான வார்த்தைகள் வெடிக்கும், ஆனால் உள்ளத்தில் ஆழமாகப் புதைந்து கிடக்கும் காதல் உறவுகள் என்று துல்லியமான உணர்வுகளைக் காட்சிகள் வெளிப்படுத்துகின்றன. “நான் அண்ணன் தம்பி மாதிரி தான் தலித் நண்பர்களோடு பழகி வருகிறேன் என்ற உரையாடலுக்கு அந்த மாதிரி என்பதில் தான் பிரச்சனையே இருக்கிறது” என்று கூறுகிற பதில். “பெண்களை கிரிக்கெட் போட்டியில் சேர்க்கலாமா? என்ற கேள்விக்கு ஜாதித் திமிரைப் போல இதுவும் ஆணாதிக்கத் திமிர் தான்” என்ற பதிலும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.
கிராம கிரிக்கெட் அணியின் விளையாட்டு மைதானங்களின் ஊடாக ஜாதிப் பிரச்சனை பேசப்படுகிறது. அந்த இரண்டு விளையாட்டு அணிகளிலும் தலித் – பிற்படுத்தப்பட்ட வீரர்கள் களத்தில் விளையாடுகிறார்கள். ஆனாலும் அணிகள் ஜாதிக் குறியீட்டைத்தான் தாங்கி நிற்கின்றன. இறுதிப் போட்டியில் தலித் குறியீட்டை தாங்கி நிற்கும் அணியின் தலைவர் வேறு ஜாதி அணியே வெற்றி பெறட்டும். அதன் வழியாக அந்த அணியில் தலித் இளைஞர்களின் திறமையை அங்கீகரிக்க வேண்டும் என்ற நிலை உருவாகும். வெற்றியை விட திறமையின் அங்கீகாரமே முக்கியம் என்ற கருத்தோடு படம் நிறைவடைகிறது. ஜாதி ஒழிப்புப் போராட்டத்தை முன்னெடுக்க சுயஜாதி மறுப்பாளர்களே இன்றைய வரலாற்றுத் தேவை என்பதை படம் மிகச்சிறப்பாக உணர்த்துகிறது.
படத்தில் அட்டக்கத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண், சஞ்சனா கிருஷ்ண மூர்த்தி, ஸ்வாசிகா விஜய், காளி வெங்கட், தேவதர்சினி, அகிலா, கீதா கைலாசம், TSK ஆகியோர் கச்சிதமான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள். வரவேற்கக்கூடிய ஒரு திரைப்படம் லப்பர் பந்து.
- கண்டு வந்தவன்