எழுத்தாளர் பூமணி எழுதிய 'வெக்கை' என்னும் நாவலைத் தழுவி சமீபத்தில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கி தனுஷ், மஞ்சு வாரியர் நடிப்பில் வெளியாகியிருக்கும் 'அசுரன்' திரைப்படம் பலரின் பாராட்டுக்களைப் பெற்றுள்ளது.
திரைப்படங்கள் எல்லாமே வணிகம் சார்ந்தவைதான். வணிக, லாப நோக்கத்திற்காக எடுக்கப்படும் திரைப்படங்கள் சாதியை ஒழித்துவிடுமா என்ற கேள்வி இப்படத்தை நோக்கி எழுந்தாலும், நாம் நுணுகிப் பார்க்க வேண்டியது எதுவென்றால், இதுவரை வணிக நோக்கத்திற்காகவும் கூட ஜாதி தீண்டாமைக் கொடுமைகளுக்கு உள்ளான மக்களைப் பற்றிய கதைகளைப் படங்களாக எடுக்க வேண்டும் என்று திரைத்துறையில் தயாரிப்பாளர்களோ இயக்குனர்களோ சிந்தித்ததில்லை என்பதைத்தான். பஞ்சமி நிலம் பறிப்பு, தீண்டாமை போன்ற வரலாற்றுக் கொடுமைகளை நேர்மையுடன் பதிவு செய்துள்ளதற்காகவே பாராட்டலாம்.
சமீப காலங்களில்தான் வணிக நோக்கத்திற்காகவாவது இது போன்ற படங்கள் அரிதாக எடுக்கப்படுகின்றன. முன்னர் அரிதினும் அரிதாக வந்திருக்கலாம்.
தீண்டாமை இழிவை அனுபவித்த மக்களின் கதைகள் தீண்டாக் கதைகளாக இருப்பதில் ஆச்சரியமேதுமில்லையே!
ஜாதிய வடிவம்தான் சமூகம் என்று இயங்கிக் கொண்டிருக்கும் இச்சமூகத்தில் இது போன்ற படங்கள் குறிப்பிட்ட சமூகத்தினரால் புறக்கணிப்பட்டு வணிக ரீதியாகவும் மிகப்பெரிய சவாலை சந்திக்க வேண்டியிருக்கும்.
“ஆண்ட பரம்பரை வசனம் எங்களைப் புண்படுத்துகிறது. எனவே நீக்க வேண்டும்” என்று கருணாஸ் கோரிக்கை வேறு. பாமக கட்சியைச் சேர்ந்த, நாடார் சமூகத்தைச் சேர்ந்த சிலர் இப்படத்தைத் தன் சமூகத்தார் பார்க்கவேண்டாம் என்று முகநூலில் பதிவிட்டதை நாம் பார்த்தோம்.
ஜாதி இந்துக்கள் புறக்கணித்தாலும், சமூக முரண்பாட்டைக் கூர்மைப் படுத்துவதைத் தவிர்த்து, விவாதத்தன்மைகளை ஏற்படுத்தி, மனித மாண்புகளை மதிக்கும் ஜனநாயக உணர்வுகளை ஏற்படுத்துவதாக ஒரு படைப்பு அமைய வேண்டும். அவர்களுக்கான உரிமைகளையும் சேர்த்தே பேச வேண்டும்.
ஒரு படம் சமூகத்தில் பெரிய மாற்றங்களை நிகழ்த்திவிடாது. தொடர்ச்சியாக இது போன்ற படங்கள் வரவேண்டும். ஜாதியையே தம் பண்பாடாகப் பின்பற்றும் மக்களிடம் தொடர்ச்சியாக உரையாடலை நிகழ்த்தவேண்டும்.
அந்தக் கண்ணோட்டத்தில் பார்த்தால் இப்படம் அந்தப் பணியைக் கடுகளவேனும் சாதித்துள்ளது என்பதை அரங்கத்தின் கரவொலி நமக்கு உணர்த்துகின்றது. குறிப்பாகச் செருப்பு அணிந்த பெண் அவமானப்படுத்தப்பட்டு கொடுமைக்குள்ளாகும் போது நாயகன் தானும் செருப்பணிந்து ஜாதி இந்துக்களைத் திருப்பி அடித்து மீண்டும் பள்ளிக்குச் செருப்பணிந்து செல்லச் சொல்லும் போதும் பாதுகாப்பாகக் கூடவே நடந்து வரும்போதும் ''நீ போ.. எவன் வரான்னு நான் பாத்துக்கிறேன்..'' என்ற அந்தக் காட்சியும், ''காடு இருந்தா பறிச்சுக்குவாங்க.. காசு இருந்தா பறிச்சுக்குவாங்க.. படி அதை யாரும் பறிக்க முடியாது. அதிகாரத்திற்கு போ.. ஆனா அவங்க நமக்கு செய்றத நீ அவங்களுக்கு செய்யாத'' என்ற காட்சியும் ஜாதியைத் தாண்டிய கரவொலிகளை அள்ளியது. நம் முன்னோர்கள் இப்படி இருந்திருக்கிறார்கள் என்ற சின்னக் கீற்று எழாமல் எந்த ஜாதிஇந்துவும் இருக்கையை விட்டு எழுந்திருக்க முடியாது.
கொலைக்குக் கொலையோ, பழிக்குப் பழியோ தீர்வாகாது என்பதைத் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களில் இருந்து உணர்கிறான் நாயகன். அதனால் தான் வேட்டைக்காரர்களை அடிக்கும் போது கூட கத்தியை மழுங்கிய பக்கமாக வைத்து அடித்து அவர்களைக் கொல்லும் நோக்கம் இல்லையென்பதாகக் காட்சிகள் இருக்கும். அதே நாயகன் தன் மகனைக் காப்பாற்றும் காட்சியில் தற்காத்துக்கொள்ளவும் தன் மகனை மீட்கவும் எதிரிகளை வெட்டுகிறான்.
நம் சந்ததிக்குப் பிறகு இன்னொரு சந்ததி இருக்க வேண்டும் என்று சிந்திக்கும் நாயகன் சராசரி அப்பாவாகத் தோன்றலாம். ஆனால் அவன் சராசரி அப்பா அல்ல. கோபத்தில் நாம் செய்யும் எதிர்வினைகளால் நம் சந்ததிக்குப் பிறகு இன்னொரு சந்ததி பாதிப்புக்குள்ளாகக் கூடாது என்று சிந்திக்கும் தலைவன். அதையே நாம் அரசியல் இயக்கங்களுக்கும் கட்சிகளுக்கும் அவற்றை வழி நடத்தும் தலைமைக்கும் பொருத்திப் பார்க்கலாம்.
தருமபுரியில், மரக்காணத்தில் தலித் மக்களின் வீடுகளை ஜாதி இந்துக்கள் சூறையாடியதற்குப் பதிலாக மீண்டும் தலித் மக்களை அவர்களின் வீட்டைச் சூறையாடுங்கள் என்று ஏவி விட்டிருந்தால் என்ன நிகழ்ந்திருக்கும்? (மக்களை ஏவி விட ஒரு தலைவன் தேவையில்லை. ஒரு ரவுடி போதும். நான் ரவுடியாக இருக்க விரும்பவில்லை. மக்களை அரசியல் படுத்தும் சரியான தலைவனாக இருக்க விரும்புகிறேன் என்று விசிக தலைவர் திருமாவளனன் அப்போதைய பதட்டமான சூழலில் சொன்னது இங்கு நினைவு கூறத்தக்கது)
ஜாதியவாதிகளே அரசு அதிகாரிகளாக வீற்றிருக்கும் அரசுத்துறைகள் என்ன செய்திருக்கும்? இப்படத்தில் வடக்கத்தான் கொலை செய்தான் என்று தெரிந்தும் அவனுக்குப் பாதுகாப்பு அளித்து, தெற்கத்தான் வீட்டாரை மிரட்டும் அதிகாரிகள் போல, தலித் மக்களின் மீதுதான் கைது, சிறைவாசம் என்று தன் அதிகாரத்தை ஏவி, தலித் மக்களைக் கொடுமைபடுத்தும் காவல்துறை. கண்கண்ட உதாரணம் ஏராளம். தமிழ்நாடே ஒன்று கூடிய ஜல்லிக்கட்டு போராட்டத்தின் இறுதிக் காட்சியில் யார் பலியானார்கள் காவல்துறைக்கு? சென்னை மீனவ குப்பங்களும், தலித் மக்கள் குடியிருப்புகளும்தான்.
எம்ஜிஆர் இறந்த போது தன் சிலையை உடைக்கும் தொண்டனைப் பார்த்துக் கலைஞர், சிலை உடைத்தவனின் கைகளையும் அவர்களின் தலைவர் சிலைகளையும் உடையுங்கள் என்று தவறான கட்டளை இட்டிருந்தால் அன்று என்ன நடந்திருக்கும்?
தன் மீது செருப்பு போட்ட பார்ப்பனர்களின் கைகளை முறியுங்கள் என்று பெரியார் சொல்லி இருந்தால் என்ன நேர்ந்திருக்கும்?
இட ஒதுக்கீடு தொடர்பாக காந்தி சாகும் வரை உண்ணாவிரதம் அறிவித்த போது காந்தி இறந்தாலும் பரவாயில்லை என்று டாக்டர் அம்பேத்கர் பிடிவாதம் பிடித்திருந்தால் என்ன நேர்ந்திருக்கும்? வரலாற்றுப் பழி மட்டுமல்ல. ஏற்கனவே அரசியல், சமூக அதிகார மட்டத்தில் புறக்கணிக்கப்பட்டிருக்கும் தலித் மக்களை இந்த நாட்டின் வரலாற்றுப் பகைவர்களாக அது மாற்றியிருக்கும். ஜாதி இந்துக்கள் நீதியாளர்கள் என்ற முகமூடி அணிய, மாறாக தலித் மக்கள் அநீதியாளர்களாக வரலாற்றில் கட்டமைக்கப்பட்டிருப்பார்கள்.
ஒரு தலைமை என்பது மக்களையும் தொண்டர்களையும் அரசியல்படுத்த வேண்டும். போராட்டங்கள் அரசியலை உள்ளடக்கி இருக்க வேண்டும். அப்போதுதான் அது அடுத்த தலைமுறைக்கும் ஜனநாயகத்துக்குமான சரியான பாதையைக் காட்ட முடியும். இல்லையேல், மாமேதை லெனின் சொன்னது போல இளம்பருவ கோளாறாகத்தான் முடியும் அல்லது தனிநபர் காழ்ப்புணர்வை கக்கும் பாசிச அரசியலில் முடியும்.
திரைக்கதைக் கோர்வையில் கவனம் செலுத்தி ஒரு முழுமையான படமாகக் கொடுத்துள்ளார் வெற்றிமாறன்.