மோடி ஆட்சி இஸ்ரேலை ஆதரிப்பது ஏன்? (2)

ஜியோனிசம் பேசிய யூதர்கள், இஸ்லாமியர்கள் ஆண்டு கொண்டிருந்த பாலஸ்தீன நாட்டில் உள்ள நிலங்களை உலகம் முழுவதிலும் உள்ள யூதர்கள் பெரும் தொகை கொடுத்து கொஞ்சம் கொஞ்சமாக வாங்கி பிறகு சட்ட விரோதமாக தங்களுக்கென்று “இஸ்ரேல்” என்ற நாட்டை உருவாக்கிக் கொண்டார்கள்.

ஹிட்லர், யூதர்களை வெறுக்கும் கொள்கையைக் கொண்டிருந்தார். எனவே இஸ்லாமியர்களை வெறுக்கும் ஜியோனிச கொள்கையைக் கொண்ட நாடாக மாறியது. இஸ்ரேல் பார்ப்பனியம் ஜியோனிசத்தோடும் கைகோர்த்து நட்புறவை வளர்த்துக் கொள்வதற்கு திட்டமிட்டு அதற்கான முயற்சிகளை பார்ப்பனியம் தொடங்கியது.

யூதர்கள் பேசிய இனப் பெருமையை ஹிட்லர் பேசிய இனப் பெருமையை முசோலினி போற்றிய இனவெறி இராணுவக் கட்டமைப்பை அப்படியே பார்ப்பனியமும் பேசுகிறது.

“மனித சமூகம் தழைக்க வேண்டும் என்பதற்காகவே வந்த ஆரியர்களாகிய நமக்கு, தொடக்கம் என்ற ஒன்றே கிடையாது. நமது இனம் எப்போது தோன்றியது என்பதை வரலாற்று ஆசிரியர்களாலேயே கண்டறிய முடியவில்லை. நம்மைத் தவிர மற்றவர்கள் இரண்டு கால் பிராணிகள்; அறிவற்றவர்கள்; மிலேச்சர்கள்; அவர்களிடமிருந்து நம்மைத் தனிமைப்படுத்தும் அடையாளமே ஆரியர்” என்று ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தை உருவாக்கிய கோல்வாக்கர் எழுதி வைத்துள்ளார். (நூல்: Bunch of thoughts)

சொல்லப்போனால் பாசிசம் உருவாவதற்கு முன்பே வேதகாலத்தில் இதைவிட கொடூரமான ‘பார்ப்பனியம்’ என்ற சித்தாந்தத்தை வேத கால பார்ப்பனர்கள் இந்த சமூகத்தில் உருவாக்கிக் கொண்டு விட்டார்கள்.

தங்களுக்கென்று ஒரு நாடு இல்லாவிட்டாலும் எந்த நாடாக இருந்தாலும் அந்த நாட்டினுடைய சமுதாய விதிகளை, சமுதாய கொள்கைகளை சமூக அமைப்பை நாங்கள் தான் நிர்வாகிப்போம், எங்களுக்கு அடிமைப்பட்டு நாங்கள் கூறுகிற வர்ணாஸ்ரம தர்மத்தின் கீழ் தான் ஒவ்வொரு பிரிவினரும் வாழ வேண்டும் என்று கூறி அதை மீறுகிறவர்களுக்கு சாஸ்திரப்படி என்ன தண்டனை என்று வரையறுத்து, இவை கடவுளால் படைக்கப்பட்ட கட்டளைகள் என்று மக்களை அச்சுறுத்தி இந்த கட்டளைகளை மீறுவதற்கு என்ன தண்டனை என்பதற்கு மனுசாஸ்திரங்களை உருவாக்கி நாட்டை ஆண்டு கொண்டிருந்த மன்னர்களை தங்கள் வசப்படுத்திக் கொண்டு தங்களுடைய பார்ப்பனிய சித்தாந்தத்தை அரசுகளின் வழியாக அதிகாரத்தின் வழியாக தாங்கள் பதவிக்கு போகாமலே அடக்கி ஒடுக்குகின்ற ஒரு மோசமான கொடூரமான அமைப்பை பாசிசத்திற்கு முன்பே இந்த நாட்டில் உருவாக்கியது பார்ப்பனியம். பார்ப்பனியம் என்பது பாசிசத்தின் தாய். (Mother of fascism is Brahmanism) இத்தாலிய ஆய்வாளரான மார்சிய கேசலோரி - டெல்லி தேசிய ஆவணக் காப்பகத்திலும், ரோம் நகரத்திலும் அவர் தேடி சேகரித்த தகவல்களை கட்டுரையாக வெளியிட்டார். In The Shadow Of Swastika என்ற பெயரில் வெளிவந்த கட்டுரையில் இருந்து சில பகுதிகள்

1931இல் லண்டனில் நடந்த வட்ட மேசை மாநாட்டுக்குப் பிறகு ஜெர்மனிக்கும், இத்தாலிக்கும் விஜயம் செய்த மூஞ்சே ஃபாசிசக் கருத்தியலால் ஈர்க்கப்பட்டார். மூஞ்சே இந்து மகா சபை தலைவர்களில் ஒருவர், ஆர்.எஸ்.எஸ் அமைப்பை தொடங்கியதிலும் முக்கியபங்காற்றியவர். அது குறித்து அவரது நாட்குறிப்பேட்டில் மூஞ்சே இப்படி எழுதுகிறார்.

“மக்களிடையே ஒற்றுமை என்கிற கருத்தை வெளிப்படுத்துகிறது ஃபாசிசம். இந்துக்களை இராணுவ ரீதியாக மீளுருவாக்கம் செய்வதற்கு இந்தியாவிற்கு, குறிப்பாக இந்து இந்தியாவிற்கு, அது போன்ற ஒரு நிறுவனம் தேவைப்படுகிறது. இதனால் இந்துக்களுக்கிடையே போர்த் திறமுள்ள இனங்கள், போர்த் திறமில்லா இனங்கள் என்று பிரிட்டிஷார் வலியுறுத்திக் கூறும் செயற்கையான பிரிவினைகள் மறைந்துவிடும். டாக்டர் ஹெட்கேவாரின் தலைமையில் நாக்பூரில் செயல்படும் ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங் தனியாகத் தொடங்கப்பட்டதென்றாலும் இந்த வகையை சேர்ந்ததுதான். ஹெட்கேவாரின் இந்த நிறுவனத்தை வளர்த்து மகாராஷ்டிராவிலும், பிற மாகாணங்களிலும் விரிவடையச் செய்யும் பணியில் மீதமிருக்கும் வாழ்நாளையும் கழிப்பேன்”

மூஞ்சேயைக் கவர்ந்தது ஃபாசிச தத்துவம் மட்டுமல்ல; அதன் அடிப்படையில் அமைந்த ராணுவ அமைப்பும் தான். அவர் மேலும் எழுதுகிறார்.

“பலில்லா நிறுவனங்கள் இன்னும் முழுமையாக கட்டுப்பாடுள்ளதாகவும், மிகச்சிறந்த ஃபாசிசத்தின் அமைப்புகளாகவும் உருவெடுக்கவில்லையெனில் அவற்றை உருவாக்குவதற்குப் பின்னிருந்த சிந்தனை என்னை வெகுவாக ஈர்த்தது. இத்தாலியை ராணுவரீதியில் மீளுருவாக்கம் செய்வது என்கிற முசோலினியின் சிந்தனையில் இருந்துதான் பலில்லா பிறந்தது. பொதுவாக இந்தியர்களைப் போலவே இத்தாலியர்களும் சிரமமில்லா வாழ்க்கையை நேசிப்பவர்களாகவும் போர்த்திறமில்லாதவர்களாகவும் இருந்தது போல் தெரிகிறது. இந்தியர்களைப் போலவே இத்தாலியர்களும் அமைதியான பணிகளைச் செய்யும் வழக்கத்தை வளர்த்துக் கொண்டு போர்க்கலையை பயில்வதில் கவனம் செலுத்துவதில்லை. தன் நாட்டின் இந்த அடிப்படையான பலவீனத்தை உணர்ந்த முசோலினி பலில்லா என்கிற அமைப்பை உருவாக்க முடிவு செய்தார்”

மூஞ்சே மார்ச் 19,1931 அன்று முசோலினியை சந்தித்தார். அப்போது அவர் முசோலினியிடம் கூறியது இதுதான்.

“இது போன்ற நோக்கங்களைக் கொண்ட ஒரு அமைப்பை நான் ஏற்கனவே இந்தியாவில் தொடங்கிவிட்டேன். சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் இந்தியாவிலும், இங்கிலாந்திலும் பொது மேடைகளில் உங்களுடைய பலில்லா போன்ற ஃபாசிஸ்ட் அமைப்புகளைப் புகழ்ந்து பேச தயங்கமாட்டேன். அவற்றுக்கு அதிர்ஷ்டம் உண்டாகட்டும் என்றும், அவை எல்லா வெற்றிகளையும் பெற வேண்டும் என்றும் வாழ்த்துகிறேன்.”

இந்து தேசத்தின் தீவிரவாத கிளையாகத்தான் ஆர்.எஸ்.எஸ் அமைக்கப்பட்டது. மூஞ்சேயை பொருத்தவரையில், முசோலினி ஐரோப்பிய உலகத்தின் சிறந்த மனிதர்களுள் ஒருவர்.

மூஞ்சே இந்தியாவிற்குத் திரும்பியவுடன் ஆர்.எஸ்.எஸுடன் தொடர்புடைய ஒரு ராணுவ பயிற்சிப் பள்ளியைத் தொடங்கி சங் அமைப்பை வலுப்படுத்தினார். அவர்தான் ஆர்.எஸ்.எஸுக்கும் இந்து மகா சபைக்கும் இணைப்பாக இருந்தார். ஹெட்கேவார் அவருடைய சீடர்; ஆனால் ஆர்.எஸ்.எஸ் இந்த உண்மைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. 1927இல் இந்து மகா சபை தலைவரான மூஞ்சே அஹமதாபாத்தில் நடந்த அதன் மாநாட்டுக்கு ஆர்.எஸ்.எஸுக்கு அழைப்பு விடுத்தார். அங்கு ஹெட்கேவார் மகா சபையின் தலைவர்களை சந்திக்க முடிந்தது, அவர் 1926 முதல் 1931 வரை மகா சபையின் செயலாளராக இருந்தார். மார்ச் 31,1934 அன்று ஹெட்கேவரையும், மகாசபைத் தலைவர் லாலு கோகலேயையும் சந்தித்த மூஞ்சே இவ்வாறு சொன்னார்.

“இந்து மதத்தை இந்தியா முழுவதும் ஒரே தரப்படுத்தும் வகையில் இந்து தர்ம சாஸ்திரத்தின் அடிப்படையிலான ஒரு திட்டத்தை நான் வகுத்திருக்கிறென். ஆனால் பழைய சிவாஜி அல்லது தற்கால ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளின் தலைவர்களான ஹிட்லர், முசோலினியைப் போன்ற ஒரு சர்வாதிகாரியின் ஆட்சியின் கீழ் வரும் நமக்கான ஓர் இந்து சுயராஜ்ஜியம் இல்லையென்றால் இந்த திட்டத்தை செயல்படுத்த முடியாது, ஆனால் அது போன்ற ஒரு சர்வாதிகாரி இந்தியாவில் எழும் வரை நம் கைகளை கட்டிக் கொண்டு அமர்ந்திருக்க வேண்டும் என்று இதற்கு அர்த்தமல்ல. அந்த நோக்கத்தை அடைவதற்காக அறிவியல் பூர்வமான திட்டத்தை வகுத்து பிரச்சாரம் செய்ய வேண்டும்.”

1934இல் போன்சாலா ராணுவ பள்ளியும், மத்திய இந்து ராணுவ கல்வி சொசைட்டியும் தோற்றுவிக்கப்பட்டன. “இந்துக்களை ராணுவரீதியாக மீளுருவாக்கம் செய்து தாய் நாட்டைக் காக்கும் முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள தகுதியானவர்களாக இந்து இளைஞர்களை ஆயத்தம் செய்வதே” அதன் நோக்கங்கள். முஸ்லிம், சீக்கியர்கள், கிறிஸ்துவர்கள், பார்சிகள் போன்றோருக்கு இதில் இடமில்லை.

காஷ்மீர், இந்தூர், திருவிதாங்கூர், பிகானிர், உதய்பூர், ஜெய்பூர் போன்ற பிரதேசங்களை ஆண்ட மன்னர்களின் உதவியையும் மூஞ்சே பெற்றார். “இத்தாலிக்கு ஃபாசிஸ்டுகள் எப்படியோ, ஜெர்மனிக்கு நாசிக்கள் எப்படியோ, அப்படி இந்தியாவிற்கு ஆர்.எஸ்.எஸ் என்றாக வேண்டும் என்றுதான் ஆர்.எஸ்.எஸ் நம்புகிறது.” என்று 1933இல் உளவுத்துறையின் அறிக்கை எச்சரித்தது. சாவர்க்கரும் இந்த நிலைப்பாட்டில் இருந்தார். ஆதாரம் : ஏ.ஜி.நூரானி எழுதிய ஆர்.எஸ்.எஸ் நூல்.

மூஞ்சே, முசோலினியை சந்தித்தது போலவே மற்றொரு வரலாற்று நிகழ்வும் நடந்தது. இஸ்ரேல் நாடு உருவானதை உலகத்தில் எந்த நாடும் அங்கீகரிக்க வில்லை. அது சட்ட விரோதமாக உருவாக்கப்பட்ட நாடு. அய்க்கிய நாடுகள் சபையும் அங்கீகரிக்கவே இல்லை. இந்தியாவும் நீண்ட நெடுங்காலமாக அங்கீகரிக்கவில்லை; தூதரக உறவும் இல்லை. இந்தப் பின்னணியில் 1977ஆம் ஆண்டு இந்தியாவில் மொராஜி தேசாய் ஆட்சியில் ஜனதா கட்சியின் ஆட்சி அமைந்தது.

அப்போது அந்த அமைச்சரவையில் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தவர் வாஜ்பாய். வாஜ்பாயும் மொரார்ஜிதேசாயும் சேர்ந்து கொண்டு இந்தியா அங்கீகரிக்காத, இந்தியாவில் தூதரகம் துவங்குவதற்கு அனுமதி மறுக்கப்பட்ட அந்த இஸ்ரேல் நாட்டினுடைய வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த ‘மோஷி தயான்’ என்பவரை சந்திப்பதற்கு இரகசியமாக திட்டமிட்டார்கள்.

இந்தியா அங்கீகரிக்காத நாடு ; ஆனால் அந்த நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் இந்தியாவிற்கு வருகிறார். அவர் வருவது என்பதே சட்டவிரோதம். அவர் வேறு ஒரு பெயரில் போலியான ‘கடவுச் சீட்டை’ (பாஸ்போர்ட்) எடுத்துக்கொண்டு இந்தியாவிற்கு, ஒரு பயணிகள் விமானத்தில் மும்பையில் வந்து இறங்கினார்.

அப்போது இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த வாஜ்பாய், போலி பாஸ்போர்ட், போலிப் பெயருடன் இந்தியா அங்கீகரிக்காத நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சரை மும்பையில் அரசாங்கத்தின் விமானப் படையை அனுப்பி வரவேற்றார்கள். அவரை வாஜ்பாயும் மொரார்ஜி தேசாயும் மூன்று முறை சந்தித்துப் பேசி ‘நீங்கள் இஸ்லாமிய வெறுப்பில் தீவிரமாக இருக்கும் காரணத்தினால், இஸ்ரேலுக்கு எதிர்காலத்தில் நாங்கள் ஆதரவைக் கொடுப்போம்’ என்ற உறுதியை அந்த சந்திப்பில் வெளிப்படுத்தினார்கள். பாசிசம், நாசிசம், ஜியோனிசம் ஆகியவற்றுடன் மிக நெருக்கமான தொடர்பை இந்துத்துவா பேசுகிற பார்ப்பனியம் வைத்துக் கொண்டே இருந்திருக்கிறது.

இன்றைக்கு நடந்து கொண்டிருக்கின்ற மோடியுடைய ஆட்சி, பாசிசம் நாசிசம் கூறிய கொள்கைகளை நாடாளுமன்றம் வழியாக எப்படி செயல்படுத்தலாம் என்பதற்கான திட்டங்களை செயல்படுத்திக் கொண்டே இருக்கிறது.

நாடாளுமன்றம் என்ற அமைப்பைப் பயன்படுத்தி அதில் மெஜாரிட்டி பலம் கிடைத்தவுடன், தங்களுடைய பெரும்பான்மை எண்ணிக்கையை பயன்படுத்தி அவசர சட்டங்களைக் கொண்டு வந்து மாநிலங்களுடைய அடையாளங்களை முற்றாக அழித்து விடுவது, மாநிலங்கள் என்ற ஒன்றே இந்த நாட்டில் இருக்கக் கூடாது பெயரளவில் வேண்டுமானால் மாநிலங்கள் இருக்கலாம்.

(தொடரும்)

- விடுதலை இராசேந்திரன்

Pin It