பாட்டாளி மக்கள் கட்சியுடன், தேர்தல் கூட்டணி நோக்கத்துக்காக அக்கட்சி விதித்த நிபந்தனைகளை ஏற்று, கடந்த பிப்ரவரியில் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி அவசரம் அவசரமாக வன்னியர் தனி இட ஒதுக்கீடு மசோதாவை சட்டசபையில் கொண்டு வந்தது. தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவித்த பின், அரசு எந்த புதிய முடிவையும் வெளியிட முடியாது என்பதால், ஆணையத்தின் அறிவிப்பு வெளி வருவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பு அன்றைய முதலமைச்சர் இந்த மசோதாவை தாக்கல் செய்தார். இப்போது மதுரை உயர்நீதிமன்றத்தின் கிளை 10.5% இட ஒதுக்கீட்டை இரத்து செய்து விட்டது. நீதிமன்றம் ஏன் இரத்து செய்தது என்பது குறித்து ஆங்கில ‘இந்து’ நாளேடு(3.11.2021) எழுதியுள்ள தலையங்கத்தின் சில முக்கியமான கருத்துக்கள்.

1)        பிப்ரவரி 2021 இல் சட்டசபையில் 10.5% இட ஒதுக்கீடு வந்த போது அரசியல் சட்டத்தின் 102 ஆவது திருத்தம் அமலில் இருந்தது. இதன்படி பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டை நிர்ணயிக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு மட்டுமே இருந்தது. இந்த மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டப் பிறகு தான் மீண்டும் அரசியல் சட்டம் திருத்தப்பட்டு 105 ஆவது திருத்தமாக இந்த உரிமை மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டது. எனவே இந்த சட்டம் கொண்டு வரப்பட்டபோது மாநில அரசுக்கு இதற்கான உரிமை இல்லை.

2)        ஒரு குறிப்பிட்ட ஜாதிப் பிரிவினருக்கு தனியாக ஒதுக்கீடு வழங்கும் போது அந்தக் குழு, ஏனைய குழுக்களோடு ஒப்பீட்டளவில் பின்தங்கிய நிலையில் இருக்கிறதா என்பது குறித்து உரிய ஆய்வுகளும் தரவுகளும் திரட்டப்பட்டு அதன் அடிப்படையில் முடிவு எடுக்கப்பட வேண்டும். இந்தத் தனி ஒதுக்கீடில் அப்படித் தரவுகள் ஏதும் இல்லை.

3)        20% மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் 10.5% வன்னியருக்குப் போக மீதமுள்ள 9.5%யை சீர்மரபினர் 7%, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 2.5%க்குள் பகிர்ந்து கொள்ளக்கூடிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டு விட்டனர். இதனால் இந்தப் பிரிவினர்களுக்கு பாகுபாடு காட்டப்பட்டுள்ளது.

4)        இஸ்லாமியர், அருந்ததியினருக்கு உள் ஒதுக்கீடு செய்யப்பட்டபோது பின்பற்றப்பட்ட நடைமுறைகள் இப்போது புறக்கணிக்கப்பட்டுள்ளன. அந்த ஒதுக்கீடுகளுக்கு, புள்ளிவிவரங்கள் சேகரிக்கப்பட்டு, ஆணையங்கள் அமைத்து அந்த ஒதுக்கீடுகள் செய்யப்பட்டன. எனவே அந்த தனி ஒதுக்கீட்டோடு, வன்னியர் ஒதுக்கீட்டை ஒப்பிட்டு பேச முடியாது.

5)        தமிழ்நாட்டில் அமலில் உள்ள 69% இட ஒதுக்கீட்டுக்காக மாநில அரசு 1994ஆம் ஆண்டு இட ஒதுக்கீடு பாதுகாப்பு சட்டம் ஒன்றை கொண்டு வந்தது. அந்த சட்டம் குடியரசுத் தலைவரின் ஒப்புதலும் பெறப்பட்டு 9ஆவது அட்டைவணையிலும் சேர்க்கப்பட்டது. அதாவது நீதிமன்ற பரிசீலனைக்கே உட்படுத்த முடியாது என்பதே 9ஆவது அட்டவணை. இந்த 1994ஆம் ஆண்டு சட்டத்தை திருத்தாமல் உள் ஒதுக்கீடு எதையும் சட்டப்படி செய்ய முடியாது.

6)        உயர்நீதிமன்றம் எழுப்பியுள்ள இந்த சட்டப் பிரச்சனையால், இஸ்லாமியர், அருந்ததியர்களுக்கான உள் இட ஒதுக்கீடுகளுக்கும் இப்போது நெருக்கடிகள் உருவாகியுள்ளன.

7)        பாட்டாளி மக்கள் கட்சி நடத்திய போராட்டங்களினால் 69% இட ஒதுக்கீடு குறித்து ஆராய நியமிக்கப்பட்ட ஆணையத்தின் பரிந்துரைகள் கிடைப்பதற்கு முன்பே அ.இ.அ.தி.மு.க ஆட்சி அவசர அவசரமாக இந்த மசோதாவை கொண்டு வந்தது. அரசியல் செல்வாக்கிற்காக குறுக்கு வழியில் அரசு செயல்பட்டதன் காரணமாக இப்போது இந்த தனி ஒதுக்கீடு இரத்து செய்யப்பட்டு இருக்கிறது.

- என்று, ‘இந்து’ ஆங்கில நாளேட்டின் தலையங்கம் கூறுகிறது.

உயர்நீதி மன்றத்தின் இந்த உத்தரவு காரணமாக வன்னியர் இட ஒதுக்கீடு மட்டுமல்ல அருந்ததியர், இஸ்லாமியர் உள்ளிட்ட இட ஒதுக்கீடுகளுக்கும் சட்டரீதியான நெருக்கடிகள் உருவாக்கப்பட்டு உள்ளன.

மூட நம்பிக்கைகளுக்கு தடை விதிக்க கேரளாவில் புதிய சட்டம்

கேரள மாநிலத்தில் மூடநம்பிக்கைகளையும் தேவையற்ற ஆசார முறைகளையும் தடை செய்வதற்காக சட்ட உருவாக்கம் இறுதி நிலையில் உள்ளது. சட்ட மறு சீரமைப்பு ஆணையம் சமர்ப்பித்த நகல் சட்ட வடிவம் உள் துறையின் கீழ் பரிசீலனையில் உள்ளது. மிக விரைவாக சட்டப் பேரவையில் அதை சமர்ப்பித்து சட்டமாக்கும் நடவடிக்கையில் உள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. மூடநம்பிக்கையும் தேவையற்ற ஆசாரங்களையும் பிரச்சாரம் செய்வதும் அதை நடைமுறைப்படுத்துபவர்களுக்கு 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என்று உள்ளது.

மந்திரவாதம், நாசகர மந்திரவாதம், பேய் விரட்டுதல், நிதி தேடி நடத்தும் தொல்லை, சிகிச்சையைத் தடை செய்வது போன்ற செயல்கள் குற்றத்திற்கு உட்பட்டதாகும். மந்திரவாதத்தின் பெயரில் தொல்லைகள் மிரட்டல்களும் கடும் குற்றமாகக் கருதப்படும். ஒவ்வொரு குற்றத்திற்கும் உரிய தண்டனையை நகலில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. மூடநம்பிக்கையும் தேவையற்ற ஆசாரங்களையும் தடை செய்ய சட்டம் கொண்டு வரப்படும் என்று அரசு முன்னரே தெரிவித்திருந்தது. சட்ட நகலை தயார் செய்ய ஜஸ்டிஸ் கே. டி. தோமஸ் தலைமையிலான சட்ட மறுசீரமைப்பு ஆணையத்தை கேட்டுக் கொண்டிருந்தது. இச்செயல்கள் எல்லாம் கிரிமினல் சட்ட நடவடிக்கைகளாக கணக்கிடப்பட்டுள்ளது. எனவே உள்துறை அமைச்சகத்தின் தீவிர ஆய்வு தேவைப்படுகிறது. எனவே சட்டப் பேரவையில் சட்டம் ஆக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

Pin It