கீற்றில் தேட...

ஒருவர் அடிக்கடி கழிவறைக்குச் சென்று வருகிறார் என்றால், அவர் "சர்க்கரை நோய்' உள்ளவர் என்று பொருள். ஓர் அரசு அடிக்கடி நீதிமன்றத்திடம் குட்டு வாங்குகிறது என்றால் அது "நிர்வாகக் கோளாறுடைய அரசு' என்று பொருள். அதுவும் பதவியேற்று 9 மாதங்களிலேயே எத்தனை வழக்குகள் (சொந்த வழக்கைச் சேர்க்காமல்), எத்தனை தீர்ப்புகள்... வாக்களித்து வாய்ப்பளித்த மக்களின் நலனுக்கு விரோதமான முடிவுகள் எடுத்தல்... அதன் பின்னர் வழக்குகளைச் சந்தித்தல்... மேல்முறையீடு... நீதி மன்றத்தின் அறிவுரைக்கும், கண்டனத்திற்கும் உள்ளாதல்... வேறுவழியின்றி முடிவுகளைக் கைவிடுதல்... இந்தக் கூத்தைத் தான் அ.தி.மு.க. அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற நாளிலிருந்து தமிழ்நாடு பார்த்து வருகிறது.

"எங்கள் சூழ்ச்சியினால் கல்வியே மறுக்கப்பட்ட இனத்திற்கு, சமச்சீர்க்கல்வியா? விட்டோமா பார்" என்று வரிந்துகட்டிக்கொண்டு மல்லுக்கு நின்றவர்களுக்கு, ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும் ஒரு நிம்மதி. "அப்பாடா...இனி அவர் பார்த்துக் கொள்வார்" என்று. அவாள்களின் எதிர்பார்ப்பு வீண் போகவில்லை, இனி சமச்சீர்க்கல்வி கிடையாது, பழைய கல்வி முறையே தொடரும் என்று அறிவித்தது ஜெயா அரசு. அவர் எதிர்பார்த்திருக்க மாட்டார்... தமிழ்நாட்டைப் பொறுத்தளவில், கல்வியில் கைவைப்பது தேன் கூட்டில் கல் எறிவது போல என்று. கடுமையான போராட்டங்கள், வழக்குகள், தளராத வாதங்கள், மேல்முறையீடு... என்ன நடக்கிறது தமிழ்நாட்டில்...? என்ற உச்சநீதி மன்றத்தின் கேள்விக்கணை... சமச்சீர்க்கல்வியே தொடரவேண்டும் என்ற உயர்நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பு... கடைசியில் வேண்டா வெறுப்பாக தன் முடிவை மாற்றிக் கொண்டார் ஜெயா. கிழித்தல், அழித்தல், மறைத்தல் என்று பாடப் புத்தகங்கள் "சிதைக்கப்பட்ட நிலையில்' சமச்சீர்க் கல்வி தொடர்கிறது.

புத்தகங்களே...கவனம் !

எங்கள் பிள்ளைகளைக்

கிழித்துவிடாதீர்கள்!

என்ற கவிஞர் அப்துல் ரகுமானின் கவிதையில், தாயன்பு தெரிகிறது. புத்தகங்களையே கிழித்துக் கொடுத்த அம்மையாரின் "பண்பை' எந்தச் சொல்லால் சொல்வது?

மொழி, இனம், கலாச்சாரம், பண்பாடு, இலக்கணம் இலக்கியம், வாழ்வியல் நெறி என அனைத்திற்கும் சொந்த வரலாற்றினைக் கொண்டிருப்பவர்கள் நாம். இத்தனைப் பெருமைக்குரிய இனத்தின் அரசாட்சி இரவல் கட்டிடத்தில் நடக்கலாமா என்ற எண்ணத்தின் செயல் வடிவம் தான், ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலகம். புனித ஜார்ஜ் கோட்டை தமிழக அரசுக்குச் சொந்தமானது அன்று. மத்திய அரசின் இராணுவ நிர்வாகத்திற்கு உட்பட்டது.

அங்கே ஒரு செங்கல்லை மாற்றி வைப்பதாக இருந்தாலும், மத்திய அரசின் அனுமதியைப் பெறவேண்டும். எனவேதான், தமிழக அரசின் தலைமைச் செயலகத்திற்குச் சொந்தக் கட்டிடம் கட்டப்பட்டது. கோட்டையிலுள்ள தலைமைச் செயலகக் கட்டிடம், பாரதிதாசன் செம்மொழி ஆய்வு நூலகமாக மாற்றப்பட்டது. அந்நூலகத்தில் ஆயிரக்கணக்கான நூல்களும் வைக்கப்பட்டிருந்தன. அம்மையார் ஆட்சிக் கட்டிலில் ஏறியதும், புதிய தலைமைச் செயலகத் திற்குள் காலடி வைக்க மாட்டேன். பழைய கோட்டையில்தான் தர்பார் நடத்துவேன் என்று சொல்லிவிட்டார். (மாற்றான் மண்ணில் மணி ஆட்டிப் பழக்கப்பட்ட முன்னோரின் மரபணு செய்யும் சேட்டை)

அய்யோ, கோட்டையிலுள்ள நூலகம் என்ன ஆகும் என்று தமிழுணர்வாளர்கள் பதறினர். நூல்களை எல்லாம் மூட்டைகளில் போட்டுக்கட்டிப் பாதுகாப்பாக(கண்ணகி சிலையை பாதுகாத்தது போல) வைத்துவிட்டார், என்னதான் இருந்தாலும், அம்மையார் கான்வென்டில் படித்தவரல்லவா!

சரி. புதிய தலைமைச் செயலகத்தை என்ன செய்வது? திறமைமிகு நிர்வாகி ஜெயலலிதாவுக்கா தெரியாது...அந்தக் கட்டிடம் மருத்துவமனையாக மாற்றப்படும்...அறிவித்துவிட்டார். ஒரே மாவுதான் என்பதால், அவித்த இட்டலியை தோசையாக மாற்றமுடியுமா? எல்லாக் கட்டிடமும் சிமெண்டும், செங்கல்லும்தான். அதற்காக, தொடர்வண்டி நிலையத்தைக் கல்லூரியாகவோ, கல்லூரியை விமான நிலையமாகவோ மாற்றினால் பயன்படுமா? ஒவ்வொரு துறைக்கும் அதன் தொழில்நுட்பம் சார்ந்த கட்டிட அமைப்பு இருக்கிறது. அதன் படிதான் கட்டிடங்கள் கட்டப்படு கின்றன. ஆங்கிலப் படிப்பெல்லாம் படித்த அம்மையாருக்கு இந்த அடிப்படை கூடவா தெரியவில்லை? தெரியும். வீம்பு. வேறென்ன... வழக்கு, மேல் முறையீடு... இறுதியில் மேலே சொல்லி யிருக்கின்ற கட்டிட அமைப்பு விதியைச் சுட்டிக்காட்டி, புதிய தலைமைச் செயலகத்தை மருத்துவமனையாக மாற்றும் அ.தி.மு.க. அரசின் திட்டத்திற்கு, உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருக்கிறது.

ஒரு வார இதழில், நடிகை ராதிகாவைப் பற்றிய கட்டுரையில், அவரின் நடிப்பைப் பாராட்டும் விதத்தில், அவரை "பொம்பள சிவாஜி' என்று குறிப்பிட்டிருந்தார்கள். இன்றைய தமிழக முதல்வரின் செயல்பாடுகளைப் பார்க்கும்போது, வரலாறு அறிந்தவர்களுக்கு இப்படித்தான் சொல்லத் தோன்றும். அதாவது, ஜெயலலிதா ஒரு "பொம்பள ராசகோபால்'(ராஜாஜி) என்று. அப்படியே அந்த சூதறிஞரின் அடிச்சுவட்டில் அரசு நடத்துகிறார். தமிழர் நலனுக்கு, முன்னேற்றத்திற்குத் தடைகளை ஏற்படுத்துவதில் முனைந்து நிற்கிறார். தங்களுடைய முன்னோர்களின் "உழைப்பு' வீண்போய்விடுமோ என்ற அச்சத்தில் அவசர அவசரமாக, அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தை, தமிழர்களின் அறிவுக் களஞ்சியத்தை ஏதேதோ காரணங்களைச் சொல்லிக் கலைத்துவிட முயற்சித்தார்.

சமுத்திரத்தை ஒரு சிறு சங்கினுள் அடக்கி விடத் திட்டமிட்டார். இலட்சக்கணக்கான நூல்களைக் கொண்ட இந்நூலகம், நெருக்கடியான டி.பி.ஐ. வளாகத்திற்குள் கொண்டு வைக்கப்படும் என்று அறிவித்தார். ஜெயலலிதா அரசின் தவறான இந்த முடிவுக்கும் உயர் நீதி மன்றம் இடைக்காலத் தடை விதித்திருக்கிறது.

ஆட்டுக்கிடைக்கு "நரி'யைக் காவல்வைத்தால் என்ன நடக்கும்? நரி ஆட்டையும் கடித்து, அந்த கிடைக்குச் சொந்தக்காரனையும் கடித்துவிடும். ஜெயலலிதாவும் அப்படித்தான். தமிழர்களின் சொத்துக்களின் மீது, உரிமைகளின் மீது கை வைத்ததோடு நிற்காமல், தமிழர்களின் தலைமீதே கைவைத்து விட்டார். 2011, நவம்பர் 8ஆம் தேதி இரவோடு இரவாக, 13,500 மக்கள் நலப்பணியாளர்களைப் பணிநீக்கம் செய்து, ஏறத்தாழ 50,000க்கும் மேற்பட்ட தமிழர்களின் வாழ்க்கையைத் திக்குத் தெரியாமல் ஆக்கிவிட்டார். பாதிக்கப்பட்டவர்களின் கூக்குரலும், அழுகையும், அதிகார மோகம் கொண்ட ஜெயலலிதாவின் ஆணவப்போக்கைக் கொஞ்சம்கூட அசைக்க முடியவில்லை. இறுதியில் நீதிமன்றத்தின் படியேறி, சட்டத்தின் கதவைத் தட்டினர். திறந்தது.

சனவரி 23ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுகுணா, "இவர்களைப் பணி நீக்கம் செய்வதற்கு அரசு கூறும் காரணம் ஏற்புடையதாக இல்லை. தமிழக அரசு இதில் எந்திரத்தனமாக நடந்துள்ளது என்றும் தெரிகிறது. இப்படிப் பல ஆயிரம் மக்கள் நலப் பணியாளர்கள் ஒரே இரவில் பணியில் இருந்து தூக்கி எறியப்பட்டது சட்ட விரோதமானது. பணி நீக்கம் செய்து அரசு பிறப்பித்த உத்தரவு செல்லாது. அதை ரத்து செய்கிறேன். அவர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும். அவர்களுக்குச் சேர வேண்டிய அனைத்துப் பணி பலன்களை அரசு வழங்க வேண்டும்" என்று தன்னுடைய தீர்ப்பை வழங்கினார். இத்தீர்ப்பையும் எதிர்த்துத் தமிழக அரசு இப்போது உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

ஓட்டுப் போட்டு இவர்களைக் கோட்டைக்கு அனுப்பிவிட்டு, ஒவ்வொன்றுக்கும் நீதிமன்றத்திற்கு ஓட வேண்டிய அவலநிலை வேறெங்கும் நடக்கிறதா என்று தெரியவில்லை. ஏற்கனவே நீதிமன்றங்களில் வழக்குகள் வந்து குவிந்துகொண்டிருக்கின்றன. நிலுவையில் இருக்கின்ற வழக்குகளே ஏராளம். இவற்றை விரைந்து முடிக்கச் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த அழகில், அரசுக்கும் மக்களுக்குமான வழக்குகளைத் தீர்த்து வைக்கவே தனி நீதிமன்றங்களை அமைக்க வேண்டும் போலிருக்கிறது.

ஜெயலலிதாவைப் பிரதமராக்கியே தீருவேன் என்று தரகர் சோ ராமசாமி வேறு கங்கணம் கட்டிக் கொண்டு அலைகிறார். ஒரு வேளை அந்த விபத்து நடந்து விட்டால், உச்ச நீதிமன்றம் உள்ளிட்ட நாட்டின் அத்தனை நீதிமன்றங்களும் ஓவர்டைம் வேலை செய்ய வேண்டியதுதான். (வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம்னு தேர்தல் நேரத்துல சொன்னாங்களே, ஒரு வேளை, அது இதானோ?)

அறிகொன்று அறியான் எனினும் உறுதி

உழையிருந்தான் கூறல் கடன்

அறிவுடையோரின் அறிவுரைகளை ஏற்கா மலும், தானும் எதையும் தெளிவாக அறிந்துகொள்ள முடியாதவானாகவும் ஒரு அரசன் இருந்தால், அவனுக்கு உறுதி பயக்கக்கூடிய நன்மைகளை எடுத்துக்கூறுதல் என்பது, பக்கத்திலிருக்கும் அமைச்சனின் நீங்காக் கடமையாம்.

அது சரி. இங்கே தான் பேசாமல் இருக்கும் போதே அமைச்சர் பதவி ஊஞ்சலாடுகிறதே! இந்த லட்சணத்தில், "என்னத்த அமைச்சர்... என்னத்த கடமை... வள்ளுவருக்கென்ன சொல்லிட்டுப் போயிட்டாரு. வாய்க்கரிசியக் கையில வச்சிக்கிட்டே அலையிற கொடுமை எங்களுக்குத் தானே தெரியும்' என்று நம்முடைய மாண்புமிகுக்கள் புலம்புவது கேட்கிறது.