பழவூர் என்பது ஓர் அழகிய சிற்றூர் ஆகும்.  அங்கு கண்ணன் என்பவர் வாழ்ந்து வந்தார்.  அவருக்கு ஒரு மகன் இருந்தான்.  அவனுடைய பெயர் தமிழ்ச்செல்வன்.  என்ன கதை போல் இருக்கிறது என்று பார்க்கிறீர்களா?  சரி செய்திக்கு வருவோம்.  இப்போது உங்களிடம் ஒரு கேள்வி!  தமிழ்ச்செல்வனுடைய பெயரைத் தமிழில் தன்னுடைய தலையெழுத்துடன் இணைத்து எழுதும்போது எப்படி எழுத வேண்டும்?

அவனுடைய பெயரை K. தமிழ்ச்செல்வன் என்று எழுதலாமா? இல்லை கே. தமிழ்ச்செல்வன் என்று எழுதலாமா?  இல்லை க. தமிழ்ச்செல்வன் என்று எழுதலாமா?  கொஞ்சம் சிந்தித்துப் பார்ப்போமே!

முதல் வினா: K. தமிழ்ச்செல்வன் என்று எழுதலாமா?

இக்கேள்விக்கு விடையளிக்கும் முன் இன்னொன்றைப் பார்ப்போம்!  நீங்கள் இப்போது தமிழ்ச்செல்வனுடைய பெயரை ஆங்கிலத்தில் எழுதினால் எப்படி எழுதுவீர்கள்?  ‘K. THAMIZHSELVAN’ என்றா? இல்லை ‘. THAMIZHSELVAN’ என்றா?  ‘க. THAMIZHSELVAN’ என்று எழுத மாட்டீர்கள் அல்லவா?  ஏன்?  உங்களுக்குத் தெரிகிறது – ஒரு மொழியில் பெயரை எழுதும்போது இன்னொரு மொழியில் தலையெழுத்தை எழுதக்கூடாதென்று!  இதே தான் தமிழுக்கும் பொருந்தும்!  எனவே ‘K. தமிழ்ச்செல்வன்’ என்று எழுதவே கூடாது.

இரண்டாவது வினா:  கே. தமிழ்ச்செல்வன் என்று எழுதலாமா?

‘K’ என்னும் எழுத்தைத் தமிழில் அப்படியே ‘கே’ என்று எழுதலாமா? என்று கேட்கிறீர்கள்.  நாம் ‘கே’ என்று தமிழில் எழுதினால் தமிழ்ச்செல்வனுடைய தந்தையின் பெயர் ‘கே’ என்னும் தமிழ் எழுத்தில் தொடங்குவதாகத் (கேசவன் என்பது போலத்) தவறான பொருள் மயக்கத்தைக் கொடுத்துவிடும்.  ஆகவே எந்த மொழியில் எழுதுகிறோமோ அந்த மொழியிலேயே முதல் எழுத்தை (ஆங்கிலத்தில் எழுதும்போது ‘K’, தமிழில் எழுதும்போது ‘க’ ) எழுத வேண்டும்.

மூன்றாவது வினா: ‘க. தமிழ்ச்செல்வன்’ என்று எழுதலாமா?

ஆம்! கட்டாயம் அப்படித்தான் எழுத வேண்டும்.  முதல் இரண்டு விடைகளிலேயே அச்செய்தி உங்களுக்குத் தெளிவாகியிருக்குமே!

“நான்கு தடவை உலகத்தைச் சுற்றியிருக்கிறேன் – தமிழ்நாட்டில் உள்ளதைப் போல் K.S. கண்ணன், P.V. முத்து என்று இரண்டு மொழிகளில் கையெழுத்துப் போடுகிறவன் உலகில் எந்த நாட்டிலும் இல்லை"

-       தமிழர் தலைவர் ஆதித்தனார்

Pin It