ஒன்றிய அரசு வாரணாசியில் காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி நடத்தி, தமிழை வளர்க்கப் போவதாக ஒரு பரப்புரையினை கடந்த சில நாட்களாகவே செய்து வருகிறது. ஆனால் இவர்களுக்குத் தமிழை வளர்ப்பது எல்லாம் ஒரு பொருட்டே இல்லை என்பதைத் தமிழர் ஒவ்வொருவரும் அறிவர். இது தமிழர்களை ஏமாற்றும் ஒரு தந்திரம், அவ்வளவுதான்.ministry of education websiteகாசி தமிழ்ச் சங்கத்திற்காக ஒரு வலைதளம் தொடங்கப்பட்டுள்ளது. அந்தத் தளத்திற்குப் போனாலே ஒன்றிய அரசின் வேடம் வெளிப்பட்டு விடும். தமிழை  வளர்க்கப் போவதாகச் சொல்லிக் கொள்ளும் இவர்கள் அந்த வலைதளப் பக்கத்தைக் கூட தமிழில் வடிவமைக்கவில்லை (பார்க்க - படம்). இந்தி, சமஸ்கிருத வார்த்தைகள்தான் அந்தப் பக்கத்தில் கூடுதலாக முக்கியத்துவம் பெற்றுள்ளன.

 இதைவிட மிக மோசமான சம்பவம் என்னவென்றால் வாரணாசியில் தமிழை வளர்ப்பதாகச் சொல்லும் மோடியின் ஒன்றிய அரசு, அதன் கீழ் இயங்கும் தில்லிப் பல்கலைக்கழகத்தில் இந்தியைக் கட்டாயம் ஆக்கியுள்ளது. தில்லிப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இந்தி மொழித் தேர்வு கட்டாயம் என்கிறது அப்பல்கலைக் கழகத்தின் 11.11.2022ஆம் நாளிட்ட அறிவிப்பு.

திருக்குறளைத் தப்புத் தப்பாக ஒப்பித்தோ, தமிழ்ச் சங்கமம் நடத்தி அதில் தமிழர் சிலரைத் தூண்டில் புழுக்களைப் போல் பயன்படுத்தியோ பாஜகவை வளர்த்து விடலாம் என்று கனவு காண்கிறார்கள். அது வெறும் பகற்கனவு மட்டுமே என்பதைக் காலம் இவர்களுக்கு உணர்த்தும்.

- வெற்றிச்செல்வன்

Pin It