தெருவில் யானை வருகிறது என்றால் அவ்வளவுதான் உற்சாகம் கரைபுரண்டு ஓடும். ஆண், பெண் அனைவரும் வீதிக்கு ஓடிவந்துவிடுவார்கள். யானை மணியோசையுடன் நடந்து செல்லும் அழகே அழகு. அந்த கம்பீரமான யானைகள் இப்போது வாழ்வுரிமைக்கு போராடுகிறதே சார் என்றார் நண்பர் ஒருவர்...

உண்மைதான், போர்க்களத்தில் நின்ற யானைகள் இப்போது வாழ்விடங்களை பறிகொடுத்து நிற்கின்றன. கூட்டம் கூட்டமாக சென்று இனப்பெருக்கம் செய்ய வேண்டிய யானைகள் ஏன் பாதைத் தடுமாறுகின்றன. அதற்கு மனிதர்களின் ஆக்கிரமிப்புகள் தான் காரணம்.

இந்தியா முழுவதும் 150 யானை வழிப்பாதைகள் இருப்பதாகவும், அதிகபட்சமாக மேற்கு வங்காளத்தில் 26 வழிப்பாதைகள் இருப்பதாகவும் கடந்த ஆண்டு ஒன்றிய அரசு அறிவித்தது. ஆனால் தமிழ்நாடு அரசின் வனத்துறை தமிழ்நாட்டில் மொத்தம் 42 வழிப்பாதைகள் இருப்பதைக் கண்டறிந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. பாதிக்கும் மேற்பட்ட யானை வழிப்பாதைகளை கண்டறியாமல் போய்விட்டதா? என்று தெரியவில்லை.elephant 656யானைகள் இயற்கையோடு இணைந்தே வாழ்கின்றன. இரத்த அழுத்தம், மன அழுத்தம், கொரோனா, டைபாய்டு, புற்றுநோய் போன்ற பிரச்சனைகள் எல்லாம் அதற்கு இல்லை. பாவம் யானை, அதற்கு மதம் தெரியாது, லவ் ஜிகாத் புரியாது, சனாதனம், பாகிஸ்தான், இஸ்லாமியர்கள் என்பதெல்லாம் அதன் மண்டைக்குள் நுழையவே இல்லை. பாகன் இந்துவாகவே இருந்தாலும் தன்னை சித்ரவதை செய்தால் காலால் என்கவுண்டரில் போட்டுத்தள்ளிவிடும்.

இப்போது எதற்கப்பா..! யானை புராணம் என்று கேட்க தோன்றுகிறதா? காரணம் இருக்கிறது. யானையின் வழிப்பாதை உரிமைகளை மனிதக் கூட்டம் ஆக்கிரமித்து விட்டதால் யானைகளுக்கும் மனிதர்களுக்கும் நடக்கும் மோதல் தொடர்கதையாகிவிட்டது. யானையின் வாழ்க்கையில் மனித குறுக்கீடுகள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

மதத்திற்குள் யானையை இழுத்து வந்தவன் மனிதன் தான். கோயிலில் கூட்டம் சேர்ப்பதற்காக அதைக் காட்சிப் பொருளாக்கினான். அதன் நெற்றியில் விபூதி, நாமம் போட்டான். நாமத்தில் வடகலையா? தென்கலையா? என்று நீதிமன்றம் வரை சென்று வழக்காடினான். பக்தர்களுக்கு தும்பிக்கையை தூக்கி ஆசி வழங்க பயிற்சி கொடுத்தான். விநாயகக் கடவுளின் தலையில் சின்னமாகவே பொருத்தினான். மோடியைக் கேட்டால் அந்தக் காலத்தில் நடந்த பிளாஸ்டிக் சர்ஜரி என்று கூறுவார். ஆமாம், மயக்க மருந்து, ஆண்டி பயோடிக், டாக்டர்கள், மருத்துவ உபகரணங்கள் எதுவும் இல்லாமலேயே இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்திருக்கிறது என்று அவர்கள் சொன்னால் நாம் நம்பித்தான் ஆகவேண்டும். அறிவுப்பூர்வமாக கேள்விக்கேட்டால் நாம் பாகிஸ்தான் ஏஜெண்டுகள் ஆகி விடுவோம்.

யானையை அய்யப்பன் ஊர்வலங்களில் ரோடு ஷோவாக பயன்படுத்தினார்கள். ஒருமுறை யானைக்கு உணர்வுகள் அதிகமாகி பக்தர்களை தாக்கத் தொடங்கியது. பின்னர் காவல்துறை பக்தி ரோடு ஷோக்களில் யானைகளை பயன்படுத்துவதற்கு தடை விதித்தது. மனிதர்களின் மூளை முறையாக செயல்படாத போது அவர்களுக்கு இந்த சமூகம் பைத்தியம் என்று பெயர் சூட்டியது. ஆனால் யானை இதே பாதிப்புக்குள்ளானால் பைத்தியம் என்று அழைக்கக் கூடாது என்று நமது பழந்தமிழர்கள் அழகான தமிழ்ச்சொல்லை இந்த தமிழ் கூறும் நல் உலகிற்கு தந்துச் சென்றுள்ளனர். அவர்கள் தந்த பெயர் ‘மதம்’. அதற்காக அவர்களுக்கு நோபல் பரிசையே வழங்கலாம். யானையை மதத்திற்குள் கொண்டுவந்து மதம் பிடிக்கச் செய்த மனிதர்கள் தான் அதன் வழிப்பாதையை பட்டா போடத் தொடங்கியிருக்கிறார்கள்.

‘ஈஷா என்ற பன்னாட்டு ஆன்மீக டிரேடிங் சென்டர்’ ஒன்று, கோவைக்கு அருகே உள்ள ஒரு அடர்ந்த வனப்பகுதியை ஆக்கிரமித்து அங்கு சிவனின் பெயரால் கும்மாளம் அடிக்கிறது. இந்த ஆன்மீகத்திற்கு சிவனின் சக்தி தான் தெரியுமே தவிர யானையின் வலி தெரியாது என்று அடித்துக்கூறுகிறார் ஒரு சுற்றுச்சூழல் நல விரும்பி.

யானைகள் ஏன் இடம்பெயர்ந்து கொண்டே இருப்பதற்கு அறிவியல் காரணம் ஒன்று உள்ளது. ஒரே மரபு இனத்துக்குள் அவைகள் இனப்பெருக்கம் செய்வது இல்லை. அப்படி நடந்தால் யானை இனமே அழிந்து விடும். எனவே மாற்று மரபினங்களை தேடி அவை பயணித்து வருகின்றன என்று அறிவியல் கூறுகிறது.

வேறு ஜாதியினரை திருமணம் செய்தால் வெட்டி விடுவேன் என்று அரிவாளை தூக்கும் ஆறறிவு மனிதர்கள், இந்த யானைகளை பார்த்தாவது திருந்துவார்களா என்று கேட்கிறார் ஒரு பெரியாரிஸ்ட். கேள்வி நியாயமானது தான். யானைக்கும் மதம் பிடிக்கக் கூடாது. மதம் பிடிக்காமல் இருக்க வேண்டுமானால் அதன் வாழ்விடங்களை, வழிப்பாதைகளை ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது. மனிதர்களுக்கும் மதம் பிடித்துவிடக் கூடாது. அப்படி மதம் பிடித்துவிட்டால் அவ்வளவுதான் ராம பகவான், இஸ்லாமியர், பாகிஸ்தான், தாலி பறிப்பு, புல்டோசர்கள், எருமை மாடு, இளவரசர் என்றெல்லாம் கூச்சல் போடத் தொடங்கி விடுவார்கள்.

அதனாலே ‘மதம் எனும் பேய் பிடிக்காமல் இருக்கட்டும்’ என்றார் வள்ளலார். அது பிரதமர் உட்பட, அனைத்து உயிர்களுக்கும் தான்..

- கோடங்குடி மாரிமுத்து

Pin It