குழந்தைகள் பிறப்பது ‘கடவுளின் அருள்’ என்று மதங்கள் மக்களிடம் நம்பிக்கைகளைத் திணித்தன. ஆனால் மத நம்பிக்கைகளுக்கு மாறாக அரசுகளே குடும்பக் கட்டுப்பாடு திட்டங்களைக் கொண்டு வந்து மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தின.

கத்தோலிக்க கிறிஸ்தவர்களை அதிகமாகக் கொண்ட அயர்லாந்து நாட்டில் செல்வாக்கு செலுத்தி வந்த கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் கருக்கலைப்புச் சட்டத்துக்கு எதிராக சட்டம் கொண்டு வராமல் அரசை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். 1861ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சி அயர்லாந்தில் கருக்கலைப்புகள் கூடாது என்ற தடையைத் திணித்தது. 1973ஆம் ஆண்டு அயர்லாந்து உச்சநீதிமன்றம் இந்தத் தடை சட்டவிரோதம் என்று அறிவித்து கருக்கலைப்புக்கு அனுமதித்தது. 1983இல் அயர்லாந்தில் செல்வாக்குள்ள கத்தோலிக்க பழமைவாதிகள், ‘கருக்கலைப்பு உயிர்க்கொலை - உயிரைக் காப்பாற்றுவோம்’ என்ற இயக்கத்தைத் தொடங்கினர். அப்போது நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் மதவாதிகளின் கருத்தே வெற்றி பெற்றது. அரசியல் சட்டம் கருக்கலைப்புக்கு எதிராக திருத்தப்பட்டது.

2012ஆம் ஆண்டு இந்திய மரபு வழியைச் சார்ந்த அயர்லாந்தில் குடியேறிய 31 வயதுள்ள சவீதா ஹலப்பன்வார் என்ற கருநாடக மாநிலத்தைச் சார்ந்த பெண் பல் மருத்துவர் வயிற்றில் வளர்ந்த குழந்தையால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழலில் கருக்கலைப்பு செய்யக் கோரினார். அயர்லாந்து சட்டம் அனுமதிக்காததால் கருக்கலைப்பு செய்ய முடியாத நிலையில் அவர் மரணமடைந்தார். மீண்டும் கருக்கலைப்புக்கு ஆதரவான இயக்கம் அயர்லாந்தில் சூடு பிடித்தது. பெண்கள் தொடர்ந்து போராடி வந்தனர். அயர்லாந்து ஆட்சி கடந்த வெள்ளிக்கிழமை (மே 25, 2018) நடத்திய வாக்கெடுப்பில் 66 சதவீதம் பேர் கருக்கலைப்புக்கு ஆதரவாக வாக்களித்தனர். அயர்லாந்து கருக்கலைப்பை சட்டமாக்கப் போவதாக அறிவித்துள்ளது. சவீதா என்ற கருநாடக மாநிலத்துப் பெண் அயர்லாந்து நாட்டில் ஒரு முற்போக்கு சட்டம் கொண்டு வருவதற்குக் காரணமாக இருந்துள்ளார். இந்தச் சட்டத்துக்கு சவீதா சட்டம் என்று பெயர் சூட்ட வேண்டும் என்ற கோரிக்கைகளும் வலுத்து வருகின்றன. அயர்லாந்து பிரதமர் வரத்கார், ‘ஓரினச் சேர்க்கை’ ஆதரவாளர். அயர்லாந்து ஜனநாயகம் மகத்தான சோதனையில் வெற்றி பெற்றுள்ளது. நவீன தேசத்துக்கு நவீன சட்டங்கள் வேண்டும் என்று மக்கள் தீர்ப்பளித்துள்ளனர் என்று கருத்து தெரிவித்துள்ளார்.

அய்ரோப்பிய நாடுகள் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தாலும் முக்கியப் பிரச்னைகளில் மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தும் சீரிய ஜனநாயக மரபுகளைப் பின்பற்றுகிறார்கள். இந்தியாவில் ‘மெஜாரிட்டி’ இடங்கள் வழியாக அதிகாரத்தைக் கைப்பற்றுகிறவர்கள் அதிகாரத்தை மக்களுக்குப் பயன்படுத்தாமல் பன்னாட்டுக் கம்பெனிகள் நலனுக்கும் மதவெறித் திட்டங்களைத் திணிப்பதற்கும் ஊழல் கொள்ளைக்ககும் பயன்படுத்துவதோடு பாதிக்கப்பட்ட மக்களின் போராட்டங்களை நசுக்குவதற்கு அதிகாரங்களைப் பயன்படுத்துகிறார்கள்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு கடும் எதிர்ப்புகள் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வருகிறது. ஆட்சியாளர்கள் தூத்துக்குடி மக்களிடம் ஒரு வாக்கெடுப்பை நடத்தியிருந்தால் எப்போதோ இத்திட்டம் மூடப்பட்டிருக்குமே! இத்தனை உயிர்களைப் பலியாக்க வேண்டிய அவசியமிருக்காதே; இந்திய ஜனநாயகம் பார்ப்பனிய மயமாகிவிட்டதால் அதிகாரம் மக்களுக்கு எதிராகவே ஏவப்படுகின்றன. அயர்லாந்து நாட்டில் ஜனநாயகம் மக்கள் குரலுக்கு மதிப்பளிக்கிறது. அதனால் மதங்களின் தடைகளையும் மக்களுக்காகத் தூக்கி எறிகிறது.

Pin It