arrest svsekar

பெண் பத்திரிக்கையாளர்களை தரக்குறைவாக பேசிய எஸ்.வி.சேகரை கைது செய்யக்கோரி..... சென்னை காவல் ஆணையாளர் அலுவலகத்தைத் தோழர்கள் முற்றுகையிடும் பேராட்டத்தை நடத்தி கைதானார்கள். கழகத் தென்சென்னை மாவட்டச் செயலாளர் இரா.உமாபதி தலைமையில் சென்னை எழும்பூரில் 16.05.2018 அன்று மாலை 4 மணிக்கு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எஸ்.வி.சேகரின் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத காவல்துறையை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. எஸ்.வி.சேகரை போல் வேடமணிந்து, கை விலங்கு பூணூலுடன் தோழர்கள் வந்தனர். எஸ்.வி.சேகரின் உருவப்படம் எரிக்கப்பட்டது.

தபசி குமரன்(தலைமை நிலையச் செயலாளர்), ந.அய்யனார் (தலைமைக் குழு உறுப்பினர்), வேழவேந்தன் (தென்சென்னை மாவட்டத் தலைவர்), இரா.செந்தில்குமார் (வடசென்னை மாவட்டச் செயலாளர்), ஏசுகுமார்(வடசென்னை மாவட்டத் தலைவர்) மற்றும் கழகத் தோழர்கள் 50 பேர் முற்றுகைப் போராட்டத்தில் பங்கேற்றனர். தோழர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு புதுப்பேட்டை சமூகநலக் கூடத்தில் அடைக்கப்பட்டு இரவு விடுதலை செய்யப்பட்டனர்.

போராட்டம் நடக்க இருப்பதை அறிந்த காவல்துறை ஆர்ப்பாட்டத்துக்கு முதல் நாள் நள்ளிரவில் தோழர்களை முன்னெச்சரிக்கையாகக் கைது செய்தது. இராயப்பேட்டை பகுதி முழுதும் தோழர்கள் வீடு புகுந்து நள்ளிரவில் கதவுகளைத் தட்டி விசாரித்தனர். மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள் உமாபதி, செந்தில்குமார், தமிழ்நாடு மாணவர் கழக அமைப்பாளர் பாரி சிவா, காவை கனி, ராஜா உள்ளிட்ட தோழர்களைக் கைது செய்து நள்ளிரவு வரை இராயப்பேட்டை காவல் நிலையத்தில் வைக்கப்பட்டனர். சேகரைக் கைது செய்யாமல் எங்களை ஏன் கைது செய்கிறீர்கள்? இதுதான் காவல்துறையின் ஒழுங்கா என்று தோழர்கள் காவல்துறை அதிகாரிகளிடம் வாதிட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதிக்காமல் இப்படி நியாயம் கேட்கும் எங்களை கைது செய்வது காவல்துறையை மேலும் மக்கள் மன்றத்தில் அவமானப்படுத்தவே செய்யும் என்று தோழர்கள் கூறியதைத் தொடர்ந்து விடியற்காலை விடுதலை செய்யப்பட்டனர். அடுத்த நாள் திட்டமிட்டபடி முற்றுகைப் போராட்டமும் நடந்தது. போராட்டத்தை நிறுத்த காவல்துறை மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்தன.

Pin It