தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய ‘நீட் விலக்கு’ மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநரை கண்டித்தும், பொதுப்பட்டியலில் உள்ள கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றக் கோரியும், தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு எதிராக செயல்படும் ஆளுநரை திரும்ப பெறக்கோரியும், சென்னை ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம், 28.02.2022 அன்று காலை 11:30 மணியளவில் பனகல் மாளிகை அருகில் நடைபெற்றது.
முற்றுகைப் போராட்டம் திராவிடர் தமிழர்கட்சி சார்பில் நடைபெற்றது. திராவிடர் தமிழர் கட்சித் தலைவர் வெண்மனி முற்றுகைப் போராட்டத்திற்கு தலைமை வகித்தார்.
நிகழ்வில், கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் கலந்து கொண்டு கண்டனத்தை பதிவு செய்தார். விடுதலை இராசேந்திரன் “ஆளுநர் எவ்வளவு நாள் இந்த மசோதாவை கிடப்பில் போட்டு வைத்திருக்கிறாரோ அவ்வளவு நாள் வரை இந்தப் போராட்டம் தொடர்ச்சியாக நடத்தப்பட வேண்டும். இதற்கு முன் ஆளுநராக இருந்தவர், அதிமுக அனுப்பிய நீட்விலக்கு மசோதாவை நீண்ட நாட்கள் கிடப்பில் வைத்திருந்தார். பின், நீதிமன்றம் தலையிட்டது. அதற்குப் பிறகு, இந்த மசோதாவிற்கு முடிவெடுக்கும் உரிமை எனக்கில்லை என்று கூறி குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்து விட்டார். அதன் பின் தற்போது திமுக ஆட்சிக்கு வந்த போது நிறைவேற்றப்பட்ட தீர்மானம். அது வெறும் தீர்மானமாக வரவில்லை. ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைத்து. 80 ஆயிரம் பேரின் கருத்துக்களை கேட்டறிந்து, தமிழ்நாட்டில் நீட்டினால் என்ன பாதிப்புகள் ஏற்பட்டன என்பதை புள்ளி விவரத்தோடு குறிப்பிட்டு நிறைவேற்றப் பட்ட தீர்மானம். அந்த தீர்மானத்தை ஆளுநர் திருப்பி அனுப்பியிருக்கிறார். எங்களுக்கு சிறப்பு அதிகாரம் இருக்கிறது. எங்கள் மீது வழக்கு போட முடியாது போன்றவற்றைப் பயன்படுத்தி தமிழ்நாட்டு ஆளுநர் தனது அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்தி வருகிறார்” என்று குறிப்பிட்டுப் பேசினார்.
முற்றுகைப் போராட்டத்தில், தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், மாவட்ட தலைவர் வேழவேந்தன், மாவட்ட செயலாளர் உமாபதி, கோவை நேருதாஸ், அருண் குமார், கண்ணியப்பன், ராஜேஷ், மனோஜ் உள்ளிட்டத் தோழர்கள் பங்கேற்றனர்.