தமிழ் ஈழ ஆதரவு முன்னணியின் துண்டறிக்கை.
தன்மானமிக்க தமிழக மக்களே! மாணவர்களே! உழைக்கும் பெண்களே!
2008 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திலிருந்து 2009 ஆம் ஆண்டு மே 18 ஆம் நாள் வரை ஈழத்தில் நடந்த மாபெரும் தமிழ் இன அழிப்புப் போரை பல தலைமுறைகள் கடந்தாலும் தமிழர்களால் மறக்க முடியாது. கூப்பிடும் தூரத்திலிருக்கும் ஒரு தேசத்தில் தமிழர்கள் அடியோடு அழிக்கப்பட்டுக் கொண்டிருந்த கொடுமையை தடுக்க முடியாமல், இந்திய சிறைக் கூடத்தில் அடைக்கப்பட்டுக் கிடக்கும் தமிழகத் தமிழர்களாகிய நாம் கதறிக் கொண்டிருந்தோம்.
மிகப்பெரிய வியூகத்தை வகுத்துக் கொண்டு, இந்தியா, சீனா, இரஷ்யா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் நேரடியான நிதி, ஆயுத, தொழில்நுட்ப மற்றும் இரணுவப் பயிற்சி உதவிகளுடனும், பிற நாடுகளின் மறைமுக உதவியுடனும், சம்மதத்துடனும் இனவெறியன் ராஜபக்சே நான்காம் கட்ட ஈழப்போரை ஈழத்தமிழர்கள் மீது திணித்;தான். துரோகி கருணாவை பயன்படுத்தி கிழக்கு மாகாணத்தை பிடித்து, பிறகு கிளிநொச்சி, முல்லைத்தீவு என விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த எல்லா பகுதிகளையும் சிங்கள இராணுவம் கைப்பற்றியது. இப்போரின் நோக்கம் விடுதலைப் புலிகளை ஒழிப்பது என்பது மட்டுமல்ல, தமிழ் இனத்தை வேரோடு அழிப்பதே என்ற விசயத்தை படுகொலைகள் நடத்தப்பட்ட விதத்திலிருந்தே எளிமையாக புரிந்து கொள்ள முடிந்தது.
திட்டமிட்டு நடத்தப்பட்ட இனப்படுகொலை
தமிழர்களுடைய குடியிருப்புப் பகுதிகளைக் குறிவைத்து, தடைசெய்யப்பட்ட வெடிகுண்டுகளை சிங்கள இராணுவம் வான்வழியாக வீசியது. தரைவழியாக பீரங்கிகள், தளவாடங்கள் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. உடல் உறுப்புகளை இழந்து, காயம்பட்டு, சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தவர்களை கொல்லும் நோக்கிலும், காயம்படும் எவரும் உயிர் பிழைக்கக் கூடாது என்ற நோக்கிலும் ஈழப் பகுதிகளில் இருந்த மருத்துவமனைகள் தாக்கி அழிக்கப்பட்டன. முள்ளிவாய்க்கால் மருத்துவமனை மீண்டும் மீண்டும் பலமுறை தாக்கப்பட்டது. மிகப்பெரிய இனப்படுகொலை அல்லது முழுப் பேரழிவு (Holocaust) நடத்தும் நோக்கத்தோடு வன்னிப் பகுதியின் மக்கள் தொகையை புள்ளிவிவரங்களில் முன்கூட்டியே குறைத்துக் காட்டினர். 'தாக்குதல் இல்லாத பகுதிகள்” (No Fire Zones) என்று சில பகுதிகளை அறிவித்து அவ்விடத்திற்கு மக்களை வரவழைத்து, அவ்விடங்களில் குண்டுவீச்சு நடத்தியது சிங்கள இராணுவம். உணவு வாங்குவதற்காக வரிசையில் நின்று கொண்டிருந்த மக்கள் மீதும், ஐ.நா.சபையின் அலுவலகத்தின் மீதும், காயம்பட்டவர்களை ஏற்றிச் செல்ல வந்த செஞ்சிலுவைச் சங்கத்தின் கப்பலுக்கு அருகிலும் குண்டுகள் வீசப்பட்டன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு செல்லும் உணவு, காயம்பட்டவர்களுக்குத் தேவையான மருந்து மற்றும் அறுவை சிகிச்சைப் பொருட்களையும் செல்லவிடாமல் தடுத்து, அதன் மூலம் பலரைக் கொன்றது. கனரக ஆயுதங்கள் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டதாகப் பெயரளவிற்கு உலகிற்கு அறிவித்துவிட்ட பின்னரும் சற்றும் குறைவின்றி அவ்வாயுதங்களைப் பயன்படுத்தி பத்தாயிரக் கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
நான்காம் ஈழப் போரின்போது மொத்தமாக ஒரு இலட்சத்து 40 ஆயிரம் ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டனர். இதில் பெரும் பகுதியினர் கடைசி சில மாதங்களில் கொல்லப்பட்டவர்கள் ஆவர். இறுதியாக முள்ளிவாய்க்காலில் 2009, மே 15 முதல் மே 17 வரையிலான மூன்று நாட்களில் மட்டும் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 40,000 பேர் ஆகும். பல மாதங்களாக நடந்து கொண்டிருந்த இனப்படுகொலையை வெளி உலகிற்குத் தெரியாமல் மறைப்பதற்காக, போர் பகுதிகளிலிருந்து எல்லா ஊடகங்களும், சர்வதேச நிறுவனங்களும், அமைப்புகளும் வெளியேற்றப்பட்டன. உண்மையை வெளியே கொண்டு வரும் பத்திரிகையாளர்கள் வர்ளை 'வேன்”களில் கடத்தப்பட்டு, காணாப்பிணமாக்கப்பட்டனர். போர் நடந்து கொண்டிருந்தபோது எத்தனை தமிழ் பெண்கள் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டிருப்பார்கள் என்பதை கணக்கிடுவது சாத்தியமே இல்லை. இது எந்தளவிற்கு நடந்திருக்கும் என்பதைப் புரிந்து கொள்வதற்கு, இறந்த பெண் புலிகளின் சடலங்களை சிங்கள இராணுவத்தினர் புணர்ந்த காணொளி (வீடியோ) காட்சியே போதுமானது.
விடுதலைப் புலிகள் நடத்திவந்த ஊடகத்தில் 'தொகுப்பாளினியாக” பணியாற்றி வந்த இளம்பெண் இசைப்பிரியா வன்புணர்ச்சிக்குள்ளாக்கப்பட்டு, சுட்டுக் கொல்லப்பட்ட காணொளிக் காட்சி இணையத்தில் வெளிவந்தது. போருக்குப் பின்னர், மூன்றரை இலட்சம் மக்கள் முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டனர். அதில் பல இளைஞர்கள் விடுதலைப் புலிகளாக இருக்கலாம் என்று சந்தேகம் உள்ளதாகக் கூறி அழைத்துச் செல்லப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டனர் கொல்லப்பட்டனர். தமிழ் பெண்களுக்குக் கட்டாயக் கருத்தடை செய்யப்பட்டது. தமிழர் தாயகத்தை அழிக்கும் நோக்குடன் தமிழர் பகுதிகளில் சிங்களர்கள் குடியேற்றப்பட்டு வருகின்றனர்.
முதலாளி வர்க்கம் நடத்திய போர்
இராஜபக்சே, மன்மோகன் சிங், சோனியா, கருணாநிதி என அரசியல்வாதிகள் மட்டுமே நம் கண்முன்னே எதிரிகளாகத் தெரிந்துகொண்டிருக்க, இந்தப் போரின் மூலம் அதிக இலாபமடைந்தவர்களும், இப்போரினை உண்மையில் நடத்தியவர்களுமான சிங்களத் தரகு முதலாளிகளும், இந்திய விரிவாதிக்க முதலாளிகளும், சீனா, இரஷ்யாவைச் சேர்ந்த ஏகாதிபத்திய முதலாளிகளும் காட்சிக்கு வருவதே இல்லை. அரசியல்வாதிகளும் நாட்டினுடைய அதிபர்களும், அதிகாரிகளும் உண்மையில் முதலாளிகளின் கூலியாட்கள்தான். இந்நாட்டு முதலாளிகள் ஈழப்பகுதியில் தங்களுடைய சந்தையை தக்க வைத்துக் கொள்வதற்காகவே இப்போரை நிதியளித்து நடத்தினர். சிங்கள ஆளும் வர்க்கமானது சிங்களத்து உழைக்கும் மக்களையும் பிற பிரிவினரையும் இனவெறிக்குள் ஆழ்த்தி, இப்போரை சிங்கள வெகுமக்கள் சம்மதத்துடன் நடத்தியது.
இப்போரின் வெற்றிக்காக காத்திருந்த இந்திய விரிவாதிக்க முதலாளிகள் தங்களது வியாபாரத்தை உடனடியாக ஈழத்தில் விரிவுபடுத்தி வருகின்றனர். ஈழத்திலுள்ள விவசாயம், தொழில் மற்றும் சேவைத் துறைகளில் இந்திய, இரஷ்ய, சீன முதலாளிகள் பெருமளவில் ஊடுருவி வருகின்ளனர். இந்திய தரகு முதலாளித்துவ நிறுவனங்களான ஏர்டெல், எல் அண்டு டி, அசோக் லேலாண்டு, இந்தியன் ஆயில் கார்ப்பரேசன், டி.வி.எஸ்., டாடா டீ, அப்போலோ மருத்துவமனை, ராம்கோ சிமெண்ட், ஏர்செல் உள்ளிட்ட பல நிறுவனங்கள் தங்கள் சந்தையை ஈழப் பகுதியில் விரிவுபடுத்தியுள்ளன. சிதைக்கப்பட்ட ஈழத்தை மறுகட்டுமானம் செய்தல் என்ற பெயரில் ஏராளமான கட்டுமான நிறுவனங்கள் இலாப வேட்டையைத் நடத்தி வருகின்றன.
இந்தியத் தரகு முதலாளித்துவ நிறுவனங்களின் அடிவருடிகளாக உள்ள இந்திய, தமிழக தேர்தல் கட்சிகள் எல்லாமே ஈழப் போரின் போது மிகப் பெரிய துரோக வேலையைச் செய்தன. காங்கிரஸ் கட்சி போரை நடத்துவதற்கு இலங்கை அரசுக்கு நேரடியாகவே உதவி செய்தது. தனது ஆட்சியின் போது பா.ஜ.க.வும் இதே வேலையைத்தான் செய்தது. ஆட்சியில் இருந்த தி.மு.க. போராடுவதைப் போல பல கேலிக் கூத்துகளை நடத்தி மாபெரும் துரோகம் இழைத்தது. தனது ஆட்சிக் காலத்தில் ஈழ ஆதரவுக் குரல்களை கொடூரமாக நசுக்கிய அ.தி.மு.க. நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்காக கடைசி நேரத்தில் ஆதரவு தெரிவிப்பதாக நடித்தது. பா.ம.க., ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள், சி.பி.ஐ. போன்ற கட்சிகள் தேர்தல் கூட்டணிகளைப் பாதிக்காத வண்ணம் சந்தர்ப்பவாதமான போராட்டங்களை மட்டும் நடத்தின.
இனப்படுகொலையாளன் இராஜபக்சேவை தூக்கிலேற்று! - உலகத் தமிழர்கள் எழுச்சி
இனப்படுகொலைக் குற்றவாளிகளான மகிந்தா இராஜபக்சே, கோத்தபயா இராஜபச்சே, பசில் இராஜபக்சே, சரத் பொன்சேகா உள்ளிட்டோர் தண்டிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நான்காம் ஈழப் போரின் முடிவிலிருந்து ஈழத் தமிழர்கள், புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்கள் மற்றும் தமிழக மக்களின் கோரிக்கையாக வெடித்துள்ளது. உலக முழுவதும் இதற்கான போராட்டங்கள் பெருகி வருகின்றன. லண்டன் சென்ற இராஜபக்சேவை இங்கிலாந்து வாழ் ஈழத் தமிழர்கள் மிகப்பெரிய போராட்டத்தின் வாயிலாக அங்கிருந்து விரட்டியடித்தனர். ஈழத் தமிழர்களுக்கு துரோகம் செய்த தமிழக அரசியல் கட்சிகள் கூட இக்கோரிக்கையை பேச வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. மேலும், உலகெங்குமுள்ள சனநாயக சக்திகள், மனித உரிமையாளர்கள் மற்றும் அறிவுஜீவிகள் இக்கோரிக்கையை வலியுறுத்தும் அளவிற்கு நடந்த கொடுமைகளை ஆதாரப்பூர்வமாக உலகெங்கும் பரப்பியதில் புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களின் பங்கு அளப்பரியது. இவர்கள் ஏற்படுத்திய தாக்கத்தின் வாயிலாக நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் என்ற சர்வதேச அமைப்பு இலங்கையில் நடந்த குற்றங்களை விசாரிக்க 2009 ஆம் ஆண்டு டப்ளின் நகரில் 'இலங்கை மீதான மக்கள் தீர்ப்பாயம்” அமைத்து, போர்க்குற்றங்கள் உள்ளிட்ட குற்றங்களை உறுதிப்படுத்தியது.
ஐ.நா.சபை வெளியிட்டுள்ள போர்குற்ற அறிக்கை
2010 ஆம் ஆண்டு ஜூன் 22 ஆம் நாள் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கி மூன், போரின் கடைசிக் கட்டத்தில் நடந்த குற்றங்களைப் பற்றி ஆய்வு செய்ய மனித உரிமையாளர்களான மார்சுகி தருஸ்மன் (இந்தோனேசியா), ஸ்டீபன் ஆர். ரத்னர் (அமெரிக்கா) மற்றும் யாஸ்மின் சூகா (தென் அமெரிக்கா) ஆகியோர் கொண்ட குழுவை நியமித்தார். 16 செப்டம்பர் 2010 இலிருந்து தனது பணியைத் தொடங்கிய அக்குழு 31 மார்ச் 2011 அன்று தனது 122 பக்க அறிக்கையை சமர்ப்பித்தது. இவ்வறிக்கை இலங்கை அரசும், விடுதலைப் புலிகளும் போர்க் குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளது. நாம் முன்னர் கண்ட கொடுமைகள் பலவற்றை இவ்வறிக்கை பட்டியலிட்டு, அவை 'நம்பத்தகுந்த குற்றச்சாட்டுகள்” என்றும் இவை நிரூபிக்கப்பட்டால், இதற்குக் காரணமானவர்கள் - இலங்கை இராணுவக் கமாண்டர்கள் மற்றும் மூத்த அரசு அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் - தண்டனை பெற வேண்டும் என கூறுகிறது.
இலங்கை அரசு மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை வாசிக்கும் எல்லோருக்கும் எளிமையாகவே இது ஒரு இனப்படுகொலை என்று புரியும் வண்ணம் இருந்தாலும், இவ்வறிக்கையில் எந்த இடத்திலும் ஈழத்தில் இனப்படுகொலை நடத்தப்பட்டதாகக் குற்றம் சாட்டப்படவில்லை. இலங்கை அரசு ஐந்து வகையான 'நடந்திருக்க சாத்தியமுள்ள தீவிரமான குற்றங்களை” செய்துள்ளதாகக் கூறும் இவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் அவ்வாறான ஆறு வகையான தீவிரமான குற்றங்களைப் புரிந்துள்ளதாகக் குற்றம் சாட்டுகிறது. இதற்காக விடுதலைப் புலிகளின் இராணுவ மற்றும் அரசியல் தலைவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் எனக் கூறுகிறது. விடுதலைப் புலிகள் தங்களின் கட்டுப்பாட்டில் இருந்த தமிழர்கள் தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் போது அவர்களை பிடித்து, மிக அருகிலிருந்து சுட்டுக் (Point Blank Shooting) கொன்றதாகவும், மக்களை மனிதக் கேடயங்களாக பயன்படுத்தியதாகவும், குழந்தைகளை இராணுவத்தில் சேர்த்ததாகவும் என ஆதாரமற்ற பல வன்மமான குற்றச்சாட்டுகளைச் சுமத்துகின்றனர். சிங்களர்களுடைய இனவெறிக்கு தமிழர்களின் தேசிய உணர்வும், புலம்பெயர்ந்த தமிழர்களின் செயல்பாடுகளும் காரணம் என்று இவ்வறிக்கையில் கூறப்படுகிறது. இலங்கையானது சிங்களர்கள் மற்றும் தமிழர்கள் ஆகியோருக்கு பொதுவான தாயகம் என்று கூறி, தனித் தமிழ் ஈழத்தை எதிர்க்கிறது. விடுதலைப் புலிகளை தீவிரவாதிகள் என்கிறது.
மேலும், தமிழ் இனப்படுகொலையை சிங்கள அரசுடன் இணைந்து நடத்திய இந்திய அரசைப் பற்றி ஐ.நா.அறிக்கை எந்த இடத்திலும் பேசவில்லை. இந்தப் போருக்கு உதவி செய்த சீனா, இரஷ்யா, பாகிஸ்தான் பற்றி எந்த விமர்சனமும் இல்லை. உண்மையில், இனப்படுகொலை குற்றச்சாட்டில் இந்த நாடுகள் அனைத்தின் ஆளும் வர்க்கத்தினரும் சேர்க்கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டியவர்களே!
ஐ.நா.சபை இராஜபக்சேவைத் தண்டிக்குமா?
அமெரிக்கா மற்றும் நேட்டோ (NATO) நாடுகளின் ஏவல் நாயாகிய ஐ.நா.சபை என்றுமே அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இலாப நோக்கத்திற்காகவே செயல்படும். ஆப்கானிஸ்தான், ஈராக் நாடுகளில் அமெரிக்கா நடத்திய கொடூரமான போர்களையும், ஈழத்தில் நடந்த இனப்படுகொலையையும் தடுக்காத ஐ.நா.சபை இராஜபக்சேவைத் தண்டிப்பதற்கு மட்டும் நடவடிக்கை எடுக்கும் என்று நினைப்பது வரலாற்றை மறந்து தவறிழைப்பது ஆகும். தங்களுக்குப் பணிந்து போகாத, தங்களுடைய சந்தை நலன்களுக்கு எதிராக நிற்கும் அரசுகளையும், தங்களது அடிவருடிகளாக மாற மறுக்கும் விடுதலை இயக்கங்களையும் அழித்தொழிப்பதற்காகவே அமெரிக்காவானது, ஐ.நா.வின் சட்டங்களையும், நிறுவனங்களையும் பயன்படுத்தும்.
ஒரு நாட்டின் ஆட்சியாளர்களைப் பணியவைக்க அல்லது அழித்தொழிக்க அமெரிக்க ஏகாதிபத்தியம், 'போர்க் குற்றம், மனித உரிமை மீறல்” போன்ற சொல்லாடல்களை பயன்படுத்தும். அதே போல் ஒரு நாட்டின் விடுதலை இயக்கத்தை பணியவைக்க அல்லது அழித்தொழிக்க 'பயங்கரவாதத்திற்கு எதிரான போர்” என்ற சொல்லாடலை பயன்படுத்தும். தனக்கு அடிபணியாமல் எதிராக இருந்த யூகோஸ்லேவிய கூட்டரசை வீழ்த்துவதற்காகவே, போஸ்னியா, மாசிடோனியா, குரோசியா, ஸ்லோவேனியா, கொசோவோ உள்ளிட்ட நாடுகளை தனி நாடுகளாக அமெரிக்கா பிரித்தது. மேலும், அவ்வாறு பிரித்த நாடுகளை தனது நவ காலனி நாடுகளாக மாற்றிக் கொண்டது. ஐ.நா.சபை பொதுவாக்கெடுப்பு நடத்தி தனிநாடாக்கிய தேசங்கள் எல்லாமே இப்போது அமெரிக்காவின் அடிமை தேசங்கள்தான். தனது அடிவருடிகளை ஒரு தேசத்தின் ஆட்சியாளர்களாக மாற்ற முடிகிற போது மட்டுமே அமெரிக்கா அந்த தேசத்தைத் தனிநாடாக்கும்.
இராஜபக்சே தலைமையிலான இலங்கை அரசைப் பொறுத்தவரை அது சீனா, இரஷ்யா, இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு தனது சந்தையைத் திறந்துவிட்டுள்ளது. அமெரிக்காவானது, தனது நாட்டு முதலாளிகளுக்கு அந்நாட்டில் சந்தையை விரிவுபடுத்துவதற்கும், தனது இராணுவ நலன்களுக்கு இலங்கையை பயன்படுத்துவதற்காகவும் ஐ.நா.வின் இவ்வறிக்கையைக் கொண்டு மிரட்டுகிறது. மற்றபடி, இராஜபக்சேவை தண்டிக்கும் நோக்கம் அமெரிக்காவிற்கோ, ஐ.நா.விற்கோ இல்லை. இதனால்தான் மிக தீவிரமான குற்றச்சாட்டான இனப்படுகொலை குற்றச்சாட்டை இராஜபக்சே மீது சுமத்தாமல் தவிர்த்திருக்கிறது. லிபியாவில் சில நூறு பேர் கொல்லப்பட்டதற்கே கடாஃபி மீது போர் தொடுத்திருக்கும் நேட்டோ படைகள் ஈழத்தில் இலட்சம் பேர் கொல்லப்பட்டபோது வேடிக்கை பார்த்ததன் பின்னணி இதுதான். இன்று சில கட்சிகள் மற்றும் இயக்கங்கள் ஐ.நா.சபை இராஜபக்சேவைத் தண்டிக்கும் என்று நம்புகிறார்கள். உண்மையில் ஐ.நா.சபை அவ்வாறு தண்டிக்காது. அப்படி தண்டிக்க முயன்றாலும் சீனா, ரஷ்யா போன்ற வீட்டோ அதிகாரம் கொண்ட நாடுகள் அவ்வாறு நடக்க விடாது. சமீபத்தில், ஜெனீவாவில் நடந்த ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஐ.நா. அறிக்கையின் படி போர்க்குற்றங்களை விசாரிக்க விடாமல் சீனாவும், ரஷ்யாவும் தடுத்துவிட்டன.
ஆகவே, ஈழத் தமிழர்கள், புலம்பெயர்ந்த தமிழர்கள் மற்றும் தமிழக மக்களின் ஒன்றுதிரண்ட மிகப் பெரிய மக்கள் போராட்டங்களின் மூலம் மட்டுமே இராஜபக்சேவை தூக்கிலிட நிர்பந்திக்க முடியும்.
தனி ஈழம் மலர விடுதலைப் போராட்டமே தீர்வு
இன்று விடுதலைப் புலிகள் அடைந்துள்ள மிகப் பெரிய பின்னடைவு என்பது ஆயுதந்தாங்கி நடந்த ஈழ விடுதலைப் போராட்டம் தோல்வி அடைந்துவிட்டது என்பதன்று. மாறாக, தங்களுடைய தவறுகளிலிருந்து படிப்பினைகளை எடுத்துக் கொண்டு ஈழ விடுதலைப் போராட்டம் மிகப்பெரிய அளவில் மீண்டும் உருவெடுக்கும். இது ஒரு வரலாற்று நியதியாகும்.
இவ்வாறிருக்க, இந்தப் பின்னடைவு ஏற்படுத்திய சோர்விலிருந்தும், எதிரிகள் பற்றிய மிகை மதிப்பீட்டிலிருந்தும் சில இயக்கங்களும், அரசியல் கட்சிகளும், ஈழத்தில் ஐ.நா.சபை பொது வாக்கெடுப்பு நடத்தி தனி ஈழத்தை பெற்றுத் தரும் என்றும், அதற்காக போராட வேண்டுமென்றும் கூறி வருகின்றன. உண்மையில், அவ்வாறு நடக்கப் போவது இல்லை. ஐ.நா. அறிக்கையில் இனப்படுகொலை எனக் குறிப்பிடப்படாததற்கு முக்கிய காரணமே, அவ்வாறு குறிப்பிட்டால், தவிர்க்க முடியாமல் அவர்கள் தனித் தமிழ் ஈழத்தை ஆதரிக்க வேண்டி வரும். ஏனெனில், இனப்படுகொலையை அனுபவிக்கும் ஒரு தேசிய இனத்தை யாரும் ஒடுக்கும் இனத்துடன் இணைந்து வாழ நிர்பந்திக்க முடியாது. சுயமான அரசியல், சுயமான அரசியல், சுயமான பொருளாதாரம், சுயமான பண்பாடு கொண்ட சுதந்திரமான தனி ஈழம் என்பது அமெரிக்கா உள்ளிட்ட எல்லா ஏகாதிபத்திய நாடுகளின் நலன்களுக்கும் எதிரானதுதான். ஏனெனில் ஏகாதிபத்திய நாடுகளின் பொருளாதாரமே மூன்றாம் உலக நாடுகளை சுரண்டுவதில் தான் உள்ளது.
இந்த உண்மை ஒருபுறமிருக்க, ஒருவேளை, ஈழச் சிக்கலில் பொதுவாக்கெடுப்பு நடத்தவோ அல்லது பிற வடிவங்களிலோ அமெரிக்காவோ, ஐ.நா.சபையோ தலையிடுமானால் அது ஈழ மக்களுக்கு எதிராகவே போய் முடியும். அவ்வாறு இவர்களால் ஒரு தனி ஈழம் அமைக்கப்படுமானால் அது அமெரிக்காவின் அடிவருடிகளால் ஆளப்படும் ஒரு ஈழமாகவே அமைக்கப்படும். அதன் ஆட்சியாளர்களாக கருணா, டக்ளஸ் தேவானந்தா போன்ற துரோகிகளே இருப்பர். ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களினுடைய வாழ்நிலையில் எந்த மாற்றமும் நேர்ந்திருக்காது.
தனி ஈழத்திற்கான ஆயுதந்தாங்கிய விடுதலைப் போராட்டம் இனிமேல் சாத்தியமே இல்லை என்ற கருத்து தோல்வி மனப்பான்மையிலிருந்து பிறக்கும் கருத்தாகும். ஒடுக்குமுறைகள் ஈழ மண்ணில் நீடிக்கும் போது போராட்டம் முடிந்துவிட்டது என்று கூறுவது சமூக அறிவியலுக்கே முரணானது. மீண்டும் கிளர்ந்தெழப் போகும் ஒரு விடுதலைப் போராட்டத்தின் மூலம் உருவாகப்போகும் ஒரு தனி ஈழமே உண்மையான சுதந்திரத் தமிழ் ஈழமாக இருக்கும்! மக்கள் போராட்டங்களின் மூலமே இராஜபக்சே கும்பலைத் தண்டிக்க முடியும்!
தமிழக மக்களே! சனநாயக சக்திகளே!
- தமிழ் ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை!
- இனப்படுகொலை குற்றவாளிகளான ராஜபக்சே சகோதரர்களையும், சரத் பொன்சேகா உள்ளிட்டவர்களை தூக்கிலேற்ற ஒன்றிணைந்து போராடுவோம்!
- ஐ.நா. சபை தண்டிக்காது... மக்கள் போராட்டங்களே நிர்பந்திக்கும்!
- தமிழகத்திலுள்ள சிங்களத் தூதரகத்தை இழுத்து மூடுவோம்!
- ஈழத் தமிழர்களுக்கு ஒரே தீர்வு - தனித் தமிழ் ஈழமே!
- தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு தமிழகத்தைப் பின்புலமாக்குவோம்!
- தமிழக மீனவர் படுகொலைகளுக்கு நீதி கேட்போம்!
- ஈழத் தமிழர்களைக் கொன்றொழித்த இந்திய விரிவாதிக்க அரசை முறியடிப்போம்! இனப்படுகொலைக்கு உதவிய சீன, இரஷ்ய ஏகாதிபத்தியங்களை வீழ்த்துவோம்!
- தமிழினத்தின் எதிரி காங்கிரஸ் கட்சியை தமிழகத்திலிருந்து விரட்டியடிப்போம்!
- தமிழின துரோகக் கட்சி - தி.மு.க.வையும், மோசடிக் கட்சி - அ.தி.மு.க.வையும், மற்ற சந்தர்ப்பவாத தேர்தல் கட்சிகளையும் தனிமைப்படுத்துவோம்!
- தமிழ் ஈழ ஆதரவு முன்னணி - FSTE
தொடர்புக்கு: 93809 28340, 93457 17179, 96298 68871