ஈழத்தமிழர்களை அழித்தொழிக்கும் செயலில் கங்கணம் கட்டிக் கொண்டு செயல்பட்டு வரும் சிங்கள பேரினவாத அரசுக்கு தொடர்ந்து ஆயத உதவிகளை அள்ளி வழங்கி வரும் ஆரிய பார்ப்பனிய இந்திய அரசைக் கண்டித்து தூத்துக்குடி இளைஞர் முத்துக்குமரன் தன்னையே எரித்துக் கொண்டு வீரமரணம் அடைந்திருக்கிறார். ஒரு பானைக்கு ஒரு சோறு பதம் என்பது போல ஈழத்தமிழர்களுக்காக நம்மால் எதுவுமே செய்ய இயலவில்லையே என்கிற உள்ளக் குமுறலால் உந்தப்பட்ட கோடான கோடி தமிழ் இளைஞர்களின் பிரதிநிதியாகத் தான் முத்துக்குமார் செயல்பட்டிருக்கிறார் என்பதனை அவரது மரண சாசனம் நமக்கு உணர்த்தியிருக்கிறது.

தனது இறுதி நம்பிக்கை மாணவர்களும் வழக்கறிஞர்களுமே என்று குறிப்பிடும் அவரது வாக்குமூலம் தன்னெழுச்சியான மாணவர் போராட்டங்களை தோற்றுவித்துள்ளது. தமிழக கல்லூரிகள் அனைத்தும் காலவரையின்றி மூடப்படுகின்றன என்கிற தமிழக அரசின் உத்தரவு இந்த எழுச்சியால் முதல்வர் கருணாநிதிக்கு பேதி புடுங்கியுள்ளது என்பதனை பறைசாற்றுகிறது. தமிழர்கள் அரசியல் அநாதைகளாகிவிட்டனர் என்று குமுறும் அவரது மரண சாசனத்தைக் கண்டு ஆளும் தி.மு.க. மட்டுமல்ல ஓட்டுப் பொறுக்கும் எதிர்க்கட்சி, "சைடு"க் கட்சி உள்ளிட்ட அனைத்து வித தேர்தல் கட்சிகளையும் அதிர வைத்துள்ளது.

இந்நிகழ்வு நடந்த மறுதினம், திண்டுக்கல் பள்ளப்பட்டியை சேர்ந்த ரவி என்பவர் ஈழத்தமிழர்களைக் கொல்ல ஆயதங்கள் வழங்கி செயல்படும் இந்திய அரசைக் கண்டித்து தீக்குளித்து, மதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஈழத்தமிழர்களுக்காகவே இச்செயலை அவர் செய்திருக்கிறார் என அவரது குடும்பத்தினரே கூறியுள்ள நிலையிலும் குடும்ப பிரச்சினைக்காக தான் அவர் தீக்குளித்தார் என்று கலைஞர் கருணாநிதி அரசின் காவல்துறையும் அவருக்கு சொறிந்து விடும் ஊடகங்களும் ஊளையிடுகின்றன. அவரது மகனுக்கு பிரபாகரன் என்று அவர் பெயரிட்டுள்ளார். இந்நிலையில் 2-2-009 அன்று காலை அவரும் வீரமரணம் எய்தியுள்ளார். ஈழத்தமிழர்களின் நிலை கண்டு கொதித்து, மலேசியாவில் ஒரு தமிழர் லாரி ஒன்றின் முன் பாய்ந்து கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தேனி மாவட்டம் பெரியகுளத்தில் 3 பள்ளி மாணவர்கள் நஞ்சு அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.

செங்கல்பட்டு ஈழத்தமிழர்கள் அகதிகள் முகாமிலிருந்து ஒருவர் தற்கொலைக்கு முயன்றதாகக் கூறி அவரை அடித்து உதைத்து சித்தரவதைக்குள்ளாக்கியிருக்கிறது காவல்துறை. கடலூரில் செல்பேசி அலைக்கம்பி மீது ஏறி ஒருவர் கீழே குதித்துத் தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் காய்ஙகளுடன் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் பல மாவட்டங்களில் பல இடங்களிலும் அவ்வப்போது தற்கொலை முயற்சிகள் நடப்பதும் அதனை தடுக்கிறோம் என்ற பெயரில் காவல்துறை அட்டூழியங்களில் ஈடுபடுவதும் நடந்து வருகின்றன.

இந்நிகழ்வுகள் எல்லாம் இரண்டு விடயங்களை நமக்கு உணர்த்துகின்றன. ஒன்று உலகெங்கும் வாழும் தமிழர்கள் ஈழத்தமிழர்கள் படும் துயரங்களைக் கண்டு தம்மால் எதுவும் செய்ய இயலவில்லையே என்கிற விரக்தியில் உள்ளார்கள். இன்னொன்று உலகில் எங்குமே அரசியல் அதிகாரம் பெறாத அரசியல் அநாதைகளாகத்தான் தமிழர்கள் இன்றும் உள்ளனர் என்பதும் தெளிவாகிறது. தமிழர்களின் தாயகமான இந்தியாவில் அமைந்துள்ள தமிழ்நாட்டில், தமிழர்கள் முழு உரிமையுடனும், முழு அதிகார பலத்துடனும் வாழ்கிறார்கள் என்ற மாயை இந்நிகழ்வுகள் மறைமுகமாக உடைத்திருக்கின்றன.

மூவாயிரம் ஆண்டுகளாக ஒரே இனமாக இருந்தும் கூட ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு கரம் நீட்ட இயல முடியாமல் தமிழர்கள் தவிக்கிறார்கள். ஏனெனில் தமிழகத் தமிழர்கள், தமிழ்த் தேசிய இனமாக தம்மை அடையாளப்படுத்திக் கொண்டு வாழாமல் போலி அதிகாரங்களைக் கொண்ட "இந்தி"ய அடிமைகளாக வாழ்வது தான். மூவாயிரம் ஆண்டு உறவுகளை விட வெறும் 200 ஆண்டு "இந்தி"ய மாயையில் தமிழகத் தமிழர்களை தள்ளியது பதவி அரசியல் வெறி கொண்ட ஓட்டுப் பொறுக்கிகளின் அரசியல் தந்திரமே எனலாம்.

தமிழகத்தில் தற்பொழுது அமைந்துள்ள முதல்வர் உள்ளிட்ட போலி அதிகாரப் பதவிகளை ஆக்கிரமித்துள்ள உள்ள பதவி வெறி அரசியல் ஓட்டுப் பொறுக்கிகளால் நாம் ஏமாற்றப்பட்டிருக்கிறோம் என்பதனை தமிழக மக்கள் மெல்ல உணர்ந்தும் வருகின்றனர். உயிர் தற்கொலைகள் கூடாது என்று அறிக்கை விடுகின்ற இந்த ஓட்டுப் பொறுக்கிகள் தான், தமது சொந்த பதவி வெறி அரசியலுக்காக பல்லாண்டு காலமாக தமிழினத்தின் உரிமைக் கொள்கைகளைக் கைவிட்டுவிட்டு "கொள்கை தற்கொலை" செய்து கொண்டு தில்லி அரசின் கைக்கூலிகளாக செயல்பட்டவர்கள் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

தமிழக மக்களாகிய நாம் இன்றைக்கு நிறைய பக்குவப்பட்டிருக்கின்றோம். ஓட்டுப் பொறுக்கிகள் இன்றைக்கு அவர்களாகவே அம்பலப்பட்டு நிற்கின்றனர். "இந்தி"ய மயமும் உலகமயமும் தமிழினத்தின் தாயகத்தை கூறு போடுகின்றது. காவிரி, முல்லை பெரியாறு, பாலாறு என்று நமது நியாயமான உரிமைகளை கூட தட்டிக் கேட்க முடியாத நாதியற்ற அரசாங்கமாக நாம் மாற்றப்பட்டிருக்கிறோம். மேலும் தமது தொப்புள் கொடி உறவுகளைக் கொன்று குவிக்க "நமது நாடு" என்று நாம் மட்டுமே எண்ணிக் கொண்டிருக்கிற "இந்தி"யா தான் ஆயுத உதவிகளையும் அரசியல் உதவிகளையும் செய்து ஈழத்தமிழர்களின் இன அழிப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தி வருகின்றது. ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளைக் கொண்டு நமது இனத்தையே கூறு போட்டு அழிக்கிற நாட்டிற்கு "நம் நாடு" என்று சொல்லப்படும் இந்தியா செய்யும் உதவிகளை நம்மால் ஏன் தடுக்க இயலவில்லை? தடுப்பதற்கான அதிகாரம் நமக்கில்லை என்பது தானே உண்மை.

ஏதோ கலைஞர் அரசு பெரும்பான்மையின்றி தவிப்பதால் காங்கிரசின் பிடியில் சிக்கிக் கொண்டுவிட்டதாகவும், இல்லையெனில் கலைஞர் உடனே நடவடிக்கை எடுத்து விடுவார் எனவும் நம்மில் பலர் நினைக்கின்றனர். உண்மை அதுவல்ல. கலைஞர் மட்டுமல்ல எந்த ஓட்டுப் பொறுக்கிக் கட்சியானாலும் சரி தமிழகத்தில் பெரும்பான்மை பலம் பெற்றிருந்தாலும் சரி நம்மால் மத்திய அரசுக்கு எச்சரிக்கையோ அல்லது எதிர்ப்போ காட்ட வேண்டும் என்றால் சட்டமன்றத்தில் முடிந்தால் ஒரு தீர்மானம் போட்டு தம்பட்டம் அடித்துக் கொள்ளலாம் அல்லது ஏதாவது முழுஅடைப்பு போன்ற போராட்டங்கள் நடத்தி மத்திய அரசை மிரட்டுகிறோம் என்று அறிக்கை வெளியிட்டுக் கொள்ளலாம் அல்லது மத்திய அரசைக் கவிழ்க்க முயற்சித்து பிற சக்திகள் துணையுடன் அவர்கள் திரும்ப அதிகாரத்தை பெறுவதை கண்டு கொதித்துப் போகலாம். அவ்வளவு தான். ஏனெனில் தமிழக சட்டமன்றம் என்பது வெறும் மசோதாக்கள் தாக்கல் செய்யும் மன்றமே தவிர தமிழினத்தின் இறையாண்மையை பிரதிபலிக்கும் ஆட்சி அதிகாரங்களை கொண்ட மன்றம் அல்ல. இதற்கு சரியான ஆதாரம் இங்குள்ள ஆளுநர் பதவியே. ஒருவேளை, இந்தியாவின் ஒரே ஆட்சி மொழியென "இந்தி" அறிவிக்கப்பட்டால் கூட நம்மால் இதைத்தான் செய்ய முடியும். இதற்கு மேல் எதுவும் செய்ய முடியாது. அதே போல தமிழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாற்பது பேருமே ஒரே கட்சியை சேர்ந்தவர்களாக இருந்து ஒருவேளை மத்திய அரசை தாங்கி நிற்கும் சக்திகளாக நாம் இருந்தால் கூட நமது 40 பேர் கோரிக்கைகளைப் புறக்கணித்து விட்டு சட்டமியற்றும் அதிகாரபலம் "இந்தி"ய அதிகார வர்க்கத்திற்கு உண்டு.

ஒவ்வொரு முறையும் நமது சட்டமன்றங்கள் இயற்றும் தீர்மானங்கள் மத்திய அரசின் குப்பைக் கூடைக்குள் செல்கிற பொழுது அத்தீர்மானத்தை இயற்றிய உறுப்பினர்களையும், அவ்வுறுப்பினர்களை தேர்ந்தெடுத்த தமிழக மக்களாகிய நம்மையும் அவர்கள் அவமானப்படுத்துகிறார்கள் என்பதை நாம் ஏன் இன்னும் உணரவில்லை?

இந்நிகழ்வுகள், தமிழினத்தின் தாயகமான தமிழ்நாடு தனது இறையாண்மையை என்றோ இழந்து விட்டதை உணர்த்துகின்றது. தேர்தல், பாராளுமன்றம், சட்டமன்றம் என்ற போலி சனநாயக விலங்குகளால் கைகள் கட்டப்பட்ட நிலையில் "இந்தி"யச் சிறைக்குள் தமிழ் அன்னை அடைக்கப்பட்டு எத்தனையோ ஆண்டுகளாகிவிட்டன. தோ்தல், சட்டமன்றம், பாராளுமன்றம் என்ற போலித்தனமான பதவி வெறி அரசியலில் தானும் வீழ்ந்ததோடில்லாமல் மக்களையும் அந்த மாயப் புதைக்குழியில் தள்ளிய ஓட்டுப் பொறுக்கிகள் பேசும் வாய்ச் சவடால் வெட்டிப் பேச்சுகளின் ஒலியில், தமிழ் அன்னையின் கதறல் நமது செவிகளுக்கு எட்டாமல் போய் விட்டது. இனியாவது செவி கொடுப்போம். அதிகாரத்தை நோக்கிய தமிழர்களின் பயணம் தொடங்கட்டும். நம்மை நாமே ஆண்டு கொள்ளும் சுய நிர்ணய உரிமைக்கான அதிகாரம் ஈழத்தமிழ்த் தேசிய இன மக்களுக்கு மட்டுமல்ல உலகெங்கும் வாழும் அனைத்து தேசிய இன மக்களுக்கும் உண்டு. தமிழகத் தமிழர்களுக்கும் உண்டு.

முத்துக்குமார், ரவி உள்ளிட்டோர் தமிழினத்தின் விடியலுக்காக தன்னுடலில் மூட்டிய தமிழ்த் தேசிய எழுச்சித் தீயை நாம் உள்ளங்களில் ஏந்தியாக வேண்டியதை காலம் நமக்கு உணர்த்துகின்றது. அதனை செயல்படுத்த வேண்டியது நமது கடமை. அந்தத் தீ எரிமலையாக வெடித்து எதிரிகளை சுட்டெரிக்கும் வரை அதனை அணையாது பாதுகாத்திடவும் நெருப்பின் வெளிச்சத்தி்ல் தெரியும் விடியலுக்கு மக்களை அழைத்துச் செல்ல வேண்டியதும் நமது உடனடி பணி. மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் நிறைய வேலை இருக்கிறது.

- க.அருணபாரதி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It