உலக மக்கள் தொகையில் 33 சதவீதம் பேர் எந்த மதத்திலும் நம்பிக்கை இல்லாதவர்கள் என்று அண்மையில் சர்வதேச அடிப்படையில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. ‘கால் அப் இன்டர் நேஷனல்’ ‘பேவ் ரிசர்ச் சென்டர்’ என்ற அமைப்புகள் இணைந்து, இந்த ஆய்வை மேற்கொண்டன. ‘கடவுள்’ மத நம்பிக்கையற்றவர்களாக வாழ்வதற்கு, இந்த நாடுகளில் எதிர்ப்புகள் ஏதும் இல்லை. நம்பிக்கையாளர்கள் இந்த சிந்தனையை அங்கீகரிக்கின்றனர் என்றும் அந்த ஆய்வு கூறுகிறது.

இந்த ஆய்வு தெரிவித்துள்ள தகவல்கள்: சீனாவில் 90 சதவீதம் பேரும், ஹாங்காங்கில் 70 சதவீதம் பேரும் மதநம்பிக்கையோ கடவுள் நம்பிக்கையோ இல்லாதவர்கள்.

முன்னாள் சோவியத் ஒன்றியத்திலிருந்து பிரிந்த நாடான ‘செக்’ குடியரசில் மொத்த மக்கள் தொகையில் 45 சதவீதம் பேர் கடவுள் மதங்களில் நம்பிக்கை இல்லாதவர்கள். 30 சதவீதம் பேர் நாத்திகர்கள். அதாவது கடவுள் - மதத்தை மறுப்பவர்கள். அய்ரோப்பிய ஒன்றியத்திலேயே அதிக எண்ணிக்கையில் கடவுள் மத நம்பிக்கையில்லாதவர்களைக் கொண்ட நாடாக செக் குடியரசு விளங்குகிறது.

ஜப்பான் நாட்டில் மதத்தை நம்புகிறவர்கள் மக்கள் தொகையில் 25 சதவீதம் பேர் மட்டுமே. 31 சதவீதப் பேர் மனிதருக்கு மேல் கடவுள் சக்தி ஒன்று இருப்பதாக தாங்கள் நம்பவில்லை என்று கூறியுள்ளனர். ஜெர்மனியில் மக்கள் தொகையில் 60 சதவீதம் பேர் தங்களை நாத்திகர்கள் என்றே அறிவித்துள்ளனர். இஸ்ரேலில் 57 சதவீதம் பேர் மத நம்பிக்கையற்றவர்கள்; 8 சதவீதம் பேர் நாத்திகர்கள்; இஸ்ரேலில் வெளியாகும் ஹார்டீஸ் (Haaretz) பத்திரிகை, இஸ்ரேலிய சமூகத்தில் நாத்திக சிந்தனை ஆழமாக பதிந்து நிற்கிறது என்று எழுதியுள்ளது.

ஆஸ்திரேலியா, சுவீடன், சுவிட்சர்லாந்து, கனடா, அய்ஸ்லேந்து மற்றும் தென்கொரியா நாடுகளில் வாழும் மக்கள் மதங்களைப் பின்பற்றுவதில் தீவிர ஆர்வம் காட்டுவது இல்லை. நார்வே நாட்டில் மக்கள் தொகையில் பெரும்பான்மையினருக்கு கடவுள் நம்பிக்கையே கிடையாது. கடவுள், மத நம்பிக்கையுள்ளவர்கள் வெகு அபூர்வமாகவே உள்ளனர். நார்வே நாட்டில் இது குறித்து ஆண்டுதோறும் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. “கடவுளோ மதமோ எனக்கு கிடையாது” என்று இவ்வாண்டு 4000 பேர் தெரிவித்தனர். இந்த நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் கணக்கெடுப்பில் நம்பிக்கையாளர்கள் குறைந்து கொண்டே வரு கிறார்கள். சென்ற ஆண்டு, ‘இது பற்றி எதுவும் தெரியாது’ என்று கூறியவர்களும், ‘நம்பிக்கை உண்டு’ என்று கூறியவர்களும் இந்த ஆண்டு ‘நம்பிக்கை இல்லை’ என்று கூறியிருக்கிறார்கள்.

1985ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் இதே நாட்டில் 50 சதவீதம் பேர் ‘கடவுள் நம்பிக்கை உண்டு’ என்று கூறினார்கள். நார்வேயில் இந்த ஆய்வை நடத்திய ‘இப்சோஸ்’ அமைப்பைச் சார்ந்த ஜேன்-பால்-பிரெக்கி’ (Jan-Paul-Brekke) இது பற்றி கூறுகையில்,

“30 ஆண்டுகளுக்கு முன், ‘கடவுள் இருக்கிறாரா’ என்பது எங்களுக்கு உறுதியாகத் தெரியாது” என்று கூறியவர்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தங்களுக்கு கடவுள் மீது நம்பிக்கை இல்லை என்று கூறிவிட்டதாகத் தெரிவித்தார். நார்வே தலைநகரான ஓஸ்லோவில் 29 சதவீதம் பேர் மட்டும் தங்களுக்கு கடவுள் மத நம்பிக்கை இருப்பதாக தெரிவித்தனர். நார்வேயில் எந்த மதக் குழுவும் வலிமையாக செயல்படவில்லை” என்றும் அவர் கூறினார். ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேடு (மார்ச் 22) இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

Pin It