பார்ப்பன கும்பல் தங்களது மேலாண்மையை நிலைநிறுத்திக் கொள்ள கல்வியை காவி மயமாக்கி சமஸ்கிருதத்தைத் திணித்து, இந்துத்துவ போர்வையில் பிற்படுத்தப் பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக சதிகளைத் தொடர்ந்து செய்து வரு கின்றன. ஜாதி அமைப்பே இந்து மதத்தின் அடிப்படை தத்துவமாகும். தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் அனைவரும் இந்துக்கள் தான் என கூறும் பார்ப்பனர்கள் அவர்களை பல்வேறு ஜாதிகளாக கூறுபோட்டு அவர்களின் உரிமைகளை பறிக்கின்ற னர். இந்த நாட்டில் ஜாதியம் தான் பார்ப்பனியம் என சரியாக பிளந்து காட்டியவர் பெரியார்.

இந்த சமூகத்தில் ஜாதியமைப்பை நியாயப்படுத்தும் பாசிச தத்துவமான பார்ப்பனியத்தின் கோரமுகத்தை வெகு மக்களிடம் எடுத்துச் செல்வதற்காக திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் மக்களைப் பிளவுபடுத் தும் பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாடுகள் ஈரோடு, சேலம், சென்னை, சங்கராபுரம், மதுரை, கோபி செட்டி பாளையம் போன்ற நகரங்களில் நடத்தப்பட்டுள்ளன.

kolathoor mani dvk

ஈரோடு வடக்கு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில், ‘மக்களைப் பிளவுபடுத்தும் பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாடு’ பிப்ரவரி 28ஆம் தேதி மாலை 4 மணியளவில் கோபி செட்டிப்பாளையம் பெரியார் திடலில் ஈரோடு வடக்கு மாவட்ட தலைவர் நாத்திக ஜோதி தலைமையில் மிகுந்த எழுச்சியுடன் நடைபெற்றது.

அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, பொருளாளர் திருப்பூர் துரைசாமி, தமிழ்நாடு அறிவியல் மன்றம் காளியண்ணன், ஈரோடு வடக்கு மாவட்ட அமைப்பாளர் ம.நிவாசு, தலைமை கழகப் பேச்சாளர் கா.சு. வேலுச்சாமி ஆகியோர் முன்னிலை வகிக்க, மாநாட்டிற்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்று ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் வேணு கோபால் வரவேற்புரையாற்றினார்.

மாநாட்டின் முதலாம் நிகழ்வாக, ‘திராவிடர் இயக்க முன்னோடிகளின் படத்திறப்பு’ நிகழ்ச்சி நடைபெற்றது. சர். பிட்டி தியாகராயர் படத்தினை ம.தி.மு.க. மாவட்ட துணைச் செயலாளர் மா.கந்தசாமி திறந்து வைத்து உரையாற்றினார். அவர் தனது உரையில்,

“சென்னை மாகாணத்தில் பார்ப்பனர்கள் பார்ப்பன ரல்லாத மக்களின் வேலை வாய்ப்புகளை எப்படி நயவஞ்சகமாக தட்டி பறித்தனர் என்பது குறித்து முதலில் அறிக்கை வெளியிட்டவர் சர். பிட்டி தியாக ராயர். உழைக்கும் மக்களை கீழ்ஜாதி என ஆக்கியது பார்ப்பன இந்து மதம். பார்ப்பனர்கள் தங்களை எதிர்த்த அனைவரையும் தங்களது நயவஞ்சகத்தால் வீழ்த்தினர். ஆனால், பெரியார் ஒருவரை மட்டும் தான் பார்ப்பனி யத்தால் வீழ்த்த முடியவில்லை. அன்றைக்கு பார்ப்பனி யத்தை வேரறுத்த ஒரே தலைவர் தந்தை பெரியார் ஒருவர் மட்டும்தான். இன்றைக்கு பார்ப்பனியம் மீண்டும் தனது கோரமுகத்தை விளிம்பு நிலை மக்களுக்கு எதிராக காட்டத் தொடங்கியுள்ளது. அதனை முறியடிக்க பெரியார் இன்றைக்கு மட்டுமல்ல என்றைக்கும் தேவை” எனக் கூறினார்.

தொடர்ந்து டாக்டர் சி. நடேசனார் படத்தினை தந்தை பெரியார் திராவிடர் கழக மாவட்டத் தலைவர் குணசேகரன் திறந்து வைத்து உரையாற்றுகையில், “பார்ப்பனிய மதமான இந்து மதத்தில் உழைக்கின்ற மக்களை கீழ் ஜாதிகளாக்கி அவர்களின் அடிப்படை உரிமைகளை பறிப்பதற்கு பல்வேறு பாசிச திட்டங்களை நடைமுறைப்படுத்த முயல்கின்ற சூழ்நிலையில் நாம் அனைவரும் ஒன்றுபட்டு வலிமையான போராட்டங் களை முன்னெடுக்க வேண்டும்” எனக் கூறினார்.

டாக்டர் டி.எம். நாயர் படத்தினை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கோபி சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் கஸ்தூரி தேவி திறந்து வைத்து உரையாற்றுகையில், “மோடி தலைமையிலான அரசு பார்ப்பனியத்தின் நச்சுக் கருத்துகளுக்கு செயல் வடிவம் கொடுத்து, ஒடுக்கப்பட்ட விளிம்பு நிலை மக்களுக்கு எதிராக தனது கோரமுகத்தினை காட்ட தொடங்கிவிட்டது. மதவாத சக்திகளும், ஜாதிவெறி சக்திகளும் ஒன்றாக கைகோர்த்துக் கொண்டு பார்ப்பன மனுதர்ம சிந்தனையை தூக்கிப் பிடிக்கின்ற வேலையை செய்து வருகின்றன. உயர்கல்வி நிறுவனங்களில் ஒடுக்கப்பட்ட மாணவர்களின் உயிரை காவு வாங்கும் செயல்களை அரங்கேற்று கின்றனர். தந்தை பெரியாரையும், புரட்சியாளர் அம்பேத்கரையும் நாம் அனைவரும் உள்வாங்கி போராட வேண்டும்” எனக் கூறினார்.

மறைந்த பெரியார் பெருந்தொண்டர் பட்டுக் கோட்டை வளவன் என்கிற சதாசிவம் படத்தினை சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் மேட்டூர் கோவிந்தராஜ், நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் செயல்வீரர் கண்ணன் படத்தினை நாமக்கல் மாவட்ட தலைவர் சாமிநாதன், மாவட்ட செயலாளர் சரவணன், மாவட்ட அமைப்பாளர் வைரவேல் ஆகியோர் திறந்து வைத்தனர்.

தொடர்ந்து, மாநாட்டிற்கு முன்னிலை வகித்து உரையாற்றிய கழகப் பேச்சாளர் கா.அ.வேலுச்சாமி தனது உரையில், “இந்து மதம் என்பது தமிழர்களின் மதமல்ல; அது பார்ப்பன வேதமதம். அந்த பார்ப்பன மதம்தான் பெரும்பான்மை மக்களான உழைக்கும் மக்களை ஜாதிகளாகப் பிரித்து வைத்து, அவர்களின் வாழ்வுரிமையை நசுக்குகிறது. மனிதர்களின் உணவு, உடை போன்ற விசயங்களில்கூட தனது நச்சுப் பாசிச கருத்துக்களை பார்ப்பன இந்துமதம் வெகுமக்களின் மீது திணிக்கிறது. பார்ப்பன இந்து மதவெறியை பா.ஜ.க. அரசு திட்டமிட்டு திணித்து வருகின்றது. தந்தை பெரியார் பிறந்த தமிழகத்தில் அவர்களின் கனவு ஒரு போதும் பலிக்காது” எனக் குறிப்பிட்டார்.

மக்களைப் பிளவுபடுத்தும் பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாட்டின் நோக்கங்களை விளக்கி, வெளியீட்டு செயலாளர் கோபி இராம இளங்கோவன் தொடக்க உரையாற்றினார். அவர் தனது உரையில், “பார்ப்பனர்களையும் பார்ப்பன மதமான இந்துமதத்தையும் மக்களிடம் அம்பலப்படுத்த இந்த நாட்டில் அரசியல் கட்சிகளும், பெரும்பாலான அமைப்புகளும் முன் வராத சூழலில் பெரியார் இயக்கமான திராவிடர் விடுதலைக் கழகம், பல்வேறு எதிர்ப்புகளை மீறி இன்றைக்கு மக்களை பிளவுப்படுத்தும் பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாடுகளை வெற்றிகரமாக தமிழகம் முழுவதும் நடத்தி வருகின்றது. உழைக்கின்ற மக்களிடையே இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாகியும் அவர்களிடம், மூட நம்பிக்கையைப் புகுத்தி, தன்னம்பிக்கை இல்லாதவர்களாக வைத்து இருக்கின்ற கொடிய நச்சு அரவமான பார்ப்பன இந்து மதத்தை நாம் வேரறுக்க வேண்டிய காலக்கட்டத்தில் இருக்கின்றோம். பார்ப்பனர் வருகைக்கு முன்பு இந்த நாட்டில் ஜாதி இல்லை. பார்ப்பனர்கள் இந்த மண்ணிற்கு வந்த பிறகுதான் மக்களை நான்கு வர்ணங்களாக பிரித்து வைத்தனர்” என்றார்.

தமிழ்நாடு அறிவியல் மன்ற அமைப்பாளர் திருப்பூர் சிவகாமி உரையாற்றுகை யில், “பிறப்பின் பெயரால் மனிதனை ஜாதிகளாகப் பிரித்து இழிவுபடுத்தாமல் பார்ப்பன மதம், சூத்திரனுக்கு எதை கொடுத்தாலும் கல்வியை கொடுக்க கூடாது என சொல்லிய பார்ப்பன மதம், முதல் தலைமுறையாக உயர்கல்வி நிறுவனங்களில் படிக்கச் செல்லும் நம் குழந்தைகளை மன உளைச்சலுக்கு உள்ளாக்கி அவர்களை தற்கொலைக்கு தூண்டுகிறது, இவற்றை முறியடிக்க நாம் வரிக்கு வரி பெரியார் கருத்துகளை உள்வாங்கி நமக்கான போர்க்களத்தை அமைத்து நம் உரிமையை மீட்டெடுக்க வேண்டும்” எனக் கூறினார்.

இறுதியாக, விளிம்பு நிலை மக்களுக்கு எதிராக பார்ப்பனிய இந்து மதத்தில் பல் வேறு சூழ்ச்சிகளை விளக்கி மனித நேய மக்கள் கட்சிப் பொதுச்செயலாளர் அப்துல் சமது, திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் சிறப்புரையாற்றினர். முடிவில் கோபி ஒன்றிய செயலாளர் அருளானந்தம் நன்றி கூறினார்.

காவல்துறை தடையை எதிர்த்து வழக்கறிஞர் திருமூர்த்தி சென்னை உயர்நீதி மன்றத்தில் மனுதாக்கல் செய்து, அனுமதி பெற்றுத் தந்தார்.

***

மதுரை நகரில் கழக மாநாட்டின் எழுச்சி

மதுரையில், ‘திராவிடர் விடுதலைக் கழகம்’ மக்களைப் பிளவுபடுத்தும் பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாட்டை 27.2.2016 அன்று ஒபுளா படித் துறையில் சிறப்புடன் நடத்தியது. மாவட்ட செயலாளர் மா.ப. மணிகண்டன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் செந்தில் வரவேற்புரையாற்ற, மாவட்ட அமைப்பாளர் மாப்பிள்ளை சாமி முன்னிலை வகித்தார். வழக்கறிஞர் பகத்சிங், கழகப் பிரச்சார செயலாளர் பால். பிரபாகரன், ஆதித் தமிழர் பேரவை மாவட்டச் செயலாளர் இரா. செல்வம், கம்யூனிஸ்ட் மா.லெ. மாவட்டச் செயலாளர் மேரி ஆகியோரைத் தொடர்ந்து எஸ்.டி.பி.அய். மாநில செயலாளர் நெல்லை முபாரக், கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரை யாற்றினர். சகாயராஜ் நன்றி கூறினார்.

அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, பொருளாளர் துரைசாமி, விருதுநகர் கணேசமூர்த்தி, விஜயகுமார், சூலூர் பன்னீர்செல்வம், காளையார் கோயில் முத்துகுமார், தனபால், சங்கீதா, வழக்கறிஞர் பொற்கொடி ஆகியோர் மாநாட்டின் வெற்றிக்கு சிறப்பான பங்களிப்பை வழங்கினர். காவல்துறை விதித்த தடையை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்து அனுமதி பெறப்பட்டது. வழக்கறிஞர்கள் கான்சியஸ் இளங்கோ, துரை அருண் வாதாடினர்.

- செய்தி மன்னை காளிதாசு