லண்டனிலிருந்து வெளிவரும் டைம்ஸ் நியூஸ் நாளேடு சிங்கள இராணும் நடத்திய கொடுமையான இனஒழிப்பை ஆதாரத்துடன் அம்பலப்படுத்தியதைத் தொடர்ந்து, உலகம் முழுதும் இது பற்றிய விவாதங்கள் தொடங்கியுள்ளன. போரில்லாத பகுதியாக சிறிலங்கா இராணுவம் அறிவித்த பகுதியில், ஒரு லட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள் அகதிகளாக தஞ்சமைடந்திருந்தனர். ஆனாலும் அங்கே கனரக ஆயுதங்களைக் கொண்டு தாக்குவதை தொடர்ந்து சிறிலங்கா இராணும் பழியை விடுதலைப்புலிகள் மீது போட்டது. ஆனால் மக்களை படுகொலை செய்தது சிங்கள இராணுவம் தான் என்றும் ஏப்ரல் இறுதியில் தொடங்கிய இந்த படுகொலை மே 14ம் தேதி வரை நீடித்தது என்றும் அய்.நா.வின் ரகசிய ஆவணங்களை ஆதாரமாகக் காட்டி, அந்த நாளேடு வெளிச்சத்துக்குக் கொண்டுவந்துள்ளது.

இந்த மூன்று வார காலத்தில் ஒவ்வொரு நாளும் 1000 தமிழர்கள் படுகொலைக்கு உள்ளாக்கியதாக அதிர்ச்சியான செய்தியை அந்த ஏடு வெளியிட்டிருக்கிறது. இப்படி படுகொலை செய்யப்பட்ட அப்பாவி பொதுமக்கள் எண்ணிக்கை 20,000த்துக்கும் அதிகமாகும். இது இலங்கை அரசு கூறுவதைவிட மூன்று மடங்கு அதிகம். செயற்கைக்கோள் வழியாக எடுக்கப்பட்ட படங்கள், அய்.நா.வின் ஆவணங்கள், நேரில் பார்த்த சாட்சிகள், நிபுணர்களின் கருத்துகளை அந்த நாளேடு ஆதாரங்களாக முன்வைத்து செர்பியன் இனப்படுகொலை, டார்ஃபசுர் இனப்படுகொலைகளோடு இது ஒப்பிடக்கூடியது என்று எழுதியுள்ளது.

இந்தப் படுகொலைக்கு உதவிய நாடுகளில் ஒன்று சீனா, ஆனால் சீனாவே இத்தகைய இனப்படுகொலையை சந்தித்த வரலாறுகளை அந்த நாடு மறந்துவிட்டது போலும், அந்த வரலாற்று சம்பவத்தை நினைவுபடுத்த விரும்புகிறோம்.

சீனாவின் தலைநகரமாக இருந்த நான்கிங் நகரத்தின் மீது ஜப்பானிய இராணுவம், 1937ல் ஆக்கிரமித்தது. அந்நகரத்தில் பெண்களை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கி, உடைமைகளை சூறையாடி அதிகாரிகளையும், பொதுமக்களையும், ஆக்கிரமித்து ஜப்பானிய இராணுவம் கொன்று குவித்தது. 6 வாரங்களில் நடத்திய இந்தப் படையெடுப்புக்குப் பிறகு, 1937ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி நான்கிங்கை கைப்பற்றிவிட்டதாக ஜப்பான் அறிவித்தது. இப்போது சிங்களராணுவம் அறிவித்த போரில்லாப் பகுதி என்ற நாடகம் தான் அன்றும் ஜப்பான் இராணுவத்தால் அரங்கேற்றப்பட்டு அந்தப் பகுதியில் தஞ்சமடைந்த மக்கள் கொன்று புதைக்கப்பட்டனர். இதில் அழிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை சுமார் 3 லட்சம், வரலாற்று ஆசிரியர்கள் இந்த எண்ணிக்கை 3 லட்சத்து 40,000 என்று குறிப்பிடுகிறார்கள்.

1937ம் ஆண்டு டிசம்பர் 7ம் தேதி நான்கிங் நகரை ஆக்கிரமிக்க ஜப்பான் இராணும் வந்தபோது இராணுவ அதிகாரிகள் ஒரு அறிவிப்பை வெளியிட்டனர். அந்நிய நாட்டின் தலைநகரம் ஒன்றை ஆக்கிரமிப்பது இதுவே ஜப்பான் இராணுவத்துக்கு முதல் முறை. எனவே இராணுவத்தினர் சட்டவிரோத செயல்களில் ஈடுபடாமல் இராணுவத்தின் கவுரவத்தை காப்பாற்ற வேண்டும். மீறுவோர் தண்டிக்கப்படுவார்கள் என்று அந்த இராணுவ அறிவிப்பு கூறியது. இது ஒரு ஏமாற்று அறிவிப்பாக இருந்தாலும், அப்படி ஒரு அறிவிப்பைக் கூட சிங்கள இராணும் வெளியிடத் தயாராக இல்லை. மாறாக சிங்கள இராணுவத்திடம் ""பெண்கள் உங்களுக்கு ஆண்கள் கடலுக்கு” என்று வெளிப்படையாகவே சிங்கள உயர் அதிகாரிகள் கூறினார்கள்.

1937 டிசம்பர் 9ம் தேதி இராணுவத்திடம் சரணடைந்து விடுமாறு, விமானத்திலிருந்து துண்டுப் பிரசுரங்களை வீசியது. அப்போது இந்த ஆக்கிரமிப்பு நடந்த பகுதியில் சர்வதேச பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டிருந்தனர். ஆனால், இப்போது சர்வதேச ஊடகங்களையோ, தொண்டு நிறுவனங்களையோ அனுமதிக்காமல் சாட்சிகளே இல்லாத இனப்படுகொலையை சிறிலங்கா செய்து முடித்திருக்கிறது. அப்போது சர்வதேசப் பார்வையாளர் குழு ஜப்பானோடு அவசரமாக தொடர்பு கொண்டு மூன்று நாள் போரை நிறுத்துமாறு கோரியது. போர் நிறுத்தம் செய்யப்பட்டால் இன அழிப்பை நிறுத்தலாம். சீன இராணுவத்தினர் நான்கிங்கை விட்டு வெளியேறுவார்கள், ஜப்பான் அந்தப்பகுதியை ஆக்கிரமித்துக்கொள்ளட்டும் என்ற யோசனையை முன் வைத்தது. ஜப்பான் அதை ஏற்றுக்கொள்ள முன்வந்தது. ஆனால் சீனாவின் சர்வாதிகாரி சியாங்கே ஷேத்தான் ஏற்கவில்லை. ஆனால் இப்போது போரை நிறுத்தக்கோரி எத்தனையோ வேண்டுகோள் இலங்கை அரசின் முன் வைக்கப்பட்டது. விடுதலைப்புலிகளலும் போர்நிறுத்தத்திற்கு முன்வந்தனர். ஆனால் பேரினவெறி பிடித்த இலங்கை ஏற்க மறுத்துவிட்டது.

இராணுவத்தின் படுகொலையிலிருந்து உயிர்பிழைக்க ஏராளமான அகதிகள் யாங்க்ஸ்டி ஆற்றில் நீந்தி உயிர்தப்ப கருதி கரை வந்து சேர்ந்துபோது ஆற்றின் கரையிலேயே இராணும் சுற்றிவளைத்து சுட்டுக்கொன்றது. ஆண்களும், பெண்களும், குழந்தைகளுமாக 50,000 உடல்கள் ஆற்றின் கரையில் கிடந்ததாக ஜப்பானிய இராணுவத்தினர் தங்கள் தலைமை அதிகாரியிடம் தெரிவித்தனர்.

நான்கிங் இனப்படுகொலையை வரலாறு மன்னித்துவிடவில்லை.

இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்தபோது யுத்த குற்றங்களை விசாரிக்கும் சர்வதேச நீதிமன்றத்தின் முன் இந்தப் படுகொலை விசாரணைக்கு வந்தது. சர்வதேச இராணுவ நடுவர் மன்றம் இந்த இன அழிப்பில் உயிரிழந்தோர் 2,60,000 பேர் என்று அறிவித்தது. இரண்டாம் உலகப்போரில் தோல்வியைத் தழுவிய ஜப்பான் தனது குற்றத்தை நீதி மன்றத்தின் முன் ஒப்புக்கொண்டது. டோக்கியோவில் ஜப்பான் இராணுவ தலைமையத்தில் நடந்த விசாரணையில் இந்த இன அழிப்புக்கு தலைமையேற்று நடத்திய இராணுவ தளபதிகள் யுத்தக் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டனர்.

மூத்த இராணுவ அதிகாரியான மட்சூயி இனப்படுகொலைகளைத் தடுக்கவேண்டிய கடமையிலிருந்து தவறிய முதற்குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். அப்போது ஜப்பான் வெளிநாட்டுத்துறை அமைச்சராக இருந்த ஹிரோட்டா கோக்கி சர்வதேச யுத்த நெறிமுறைகளை மீறியதாக இரண்டாவது குற்றவாளியாக்கப்பட்டார். 1948 நவம்பர் 12ம் தேதி மேற்குறிப்பிட்ட இருவரும் தூக்கிலிடப்பட்டனர். இதற்குப் பின்னர், சீனாவுக்கு உருவாக்கிய இழப்புகளுக்காக ஜப்பான் இழப்பீட்டுத் தொகை தரவேண்டும் என்று சீனா வலியுறுத்தியது. ஜப்பான் இழப்பீடு எதையும் வழங்க முடியாது என்று அறிவித்தது. அண்மைக் காலங்களில் பதவிக்கு வந்த ஜப்பான் பிரதமர்கள் நடந்த சம்பவத்துக்காக வருத்தம், மன்னிப்பு கேட்டுக்கொண்டாலும் அவை அதிகாரபூர்வமற்றவை என்று கூறி சீனா ஏற்கவில்லை. இறுதியாக 1995 ஆகஸ்ட் 15ம் தேதி அன்று (இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் சரண் அடைந்த நாள்) ஜப்பான் பிரதமர் தோமிச்சி முறாயமா, ஜப்பான் செய்த தவறுக்காக தேசத்தின் சார்ப்பில் மன்னிப்புக் கோரினார்.

வரலாறு உணர்த்தும் பாடம் இது, பல்லாயிரக்கணக்கான தமிழர்களை இனப்படுகொலை செய்த இராபக்சே, கோத்த பயராஜபக்சே, சரத் பொன்சேகா உள்ளிட்ட இனப்படுகொலையாளர்கள் யுத்தக் கைதிகளாக அறிவிக்கப்பட்டு தண்டனை பெரும் காலம் வந்தே தீரும்.

Pin It