வேண்டுமென்றே திருப்பி செலுத்தாத பெருமுதலாளிகள்

இந்திய வங்கிகளுக்கு வேண்டுமென்றே கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்கள், செலுத்த வேண்டிய தொகை (Wilful loan defaulters) கடந்த பத்தாண்டுகளில் பத்து மடங்கு உயர்ந்துள்ளது, மார்ச் 31, 2012இல் ரூ. 23 ஆயிரம் கோடி என்ற அளவில் இருந்த இந்தத் தொகை மே 31, 2022 அன்று ரூ. 2 லட்சத்து 40 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது. இந்த மாபெரும் கடன் மோசடிகளில் ஏபிஜி கப்பல் கட்டும் (ABG Shipyard) நிறுவனத்தின் புரொமோட்டர்கள் மற்றும் இரண்டு சகோதரர்கள் தான் மிகப் பெரிய தொகையை மோசடி செய்து முக்கியக் குற்றவாளிகளாகப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

தாங்கள் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தும் திறன் கொண்டவர்கள்; ஆனால் கடனை செலுத்த மறுப்பவர்களை, வேண்டு மென்றே கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்கள் என்று இந்திய ரிசர்வ் வங்கி வரையறுக்கிறது. இந்த வகையில், 25 லட்சம் ரூபாய் அல்லது அதற்கு மேற்பட்ட கடன் நிலுவையில் உள்ள கணக்குகள் குறித்துச் செய்யப்பட்ட ஆய்வில் மார்ச் 31, 2022 வரை 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடன் மோசடி வழக்குகள் பதிவாகியுள்ளன. இவர்களில் ரிஷி அகர்வால், அரவிந்தாம், மெஹூல் சோக்ஸி மற்றும் சண்டேசரா சகோதரர்கள் என கடனைப் திருப்பிச் செலுத்தாதவர்களில் முக்கியமானவர்களாக உள்ளனர். ஏபிஜி ஷிப்யார்ட் லிமிடெட் நிறுவனத்தின் புரொமோட்டரான ரிஷி அகர்வால் சுமார் ரூ. 6 ஆயிரத்து 382 கோடி மதிப்பிலான கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறியுள்ளார். இந்தியா வின் மிகப் பெரிய கடன் மோசடிகளில் இது முக்கியமானது. ஏபிஜி ஷிப்யார்ட் நிறுவனத்தைத் தொடர்ந்து ஆம்டெக் ஆட்டோ (Amtek Auto Limited) லிமிடெட் மற்றும் துணை நிறுவனங்கள் மூலம் அதன் உரிமையாளர் அரவிந்தாம் தலைமையில் இக் குழுமம் ரூ. 5 ஆயிரத்து 885 கோடி மதிப்பிலான கடனை திருப்பிச் செலுத்தவில்லை.

தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளிகளான சண்டேசரா சகோதரர்கள், நிதின் மற்றும் சேத்தன் ஆகியோர் இந்திய அரசின்படி இப்பட்டி யலில் தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளி களாக (FEO) மூன்றாவது இடத்தில் உள்ளனர். அவர்கள் தங்கள் நிறுவனமான ‘ஸ்டெர்லிங் குளோபல் ஆயில் ரிசோர்சஸ் பிரைவேட் லிமிடெட்’ மற்றும் அதன் துணை நிறுவனங்கள் வாங்கிய ரூ.3 ஆயிரத்து 757 கோடி மதிப்பிலான கடனைத் திருப்பிச் செலுத்தவில்லை. கபில் மற்றும் தீரஜ் வாத்வான் (திவான் ஹவுசிங் பைனான்ஸ் லிமிடெட் (DHFL) மற்றும் அதன் துணை நிறுவனங்கள் வேண்டுமென்றே ரூ.2 ஆயிரத்து 780 கோடியை திருப்பிச் செலுத்தவில்லை. அடுத்ததாக சஞ்சய் மற்றும் சந்தீப் ஜுன்ஜுன் வாலா என்ற மற்றொரு சகோதரர்களின் நிறுவனமான ‘ரெய் அக்ரோ’ ரூ. 2 ஆயிரத்து 602 கோடி வங்கிக் கடனைத் திருப்பிச் செலுத்தவில்லை.

இவர்கள் தவிர மெஹுல் சோக்ஸியின் (கீதாஞ்சலி ஜெம்ஸ்), சஞ்சய் குமார் சுரேகாவின் (கான்காஸ்ட் ஸ்டீல் அண்ட் பவர்), அதுல் பஞ்ஜின் (பஞ்ச் லாயிட்) மற்றும் ஜதின் மேத்தாவின் (வின்சம் டயமண்ட்ஸ் மற்றும் அதன் துணை நிறுவனங்கள்) ரூ. 2,000 கோடிக்கு மேல் வங்கிக் கடனைத் திருப்பிச் செலுத்தாத பிற நிறுவனங்கள் ஆகும். இவர்களில் சோக்சியும் மேத்தாவும் கரீபியன் தீவுகளுக்கு தப்பி ஓடிவிட்டனர்.

இவ்வாறு இந்தியாவில் வேண்டுமென்றே கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்கள் வைத்துள்ள நிலுவை தொகை மட்டும் சுமார் 2 லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கானதாக உள்ளது. இந்த மாபெரும் தொகையானது, சுகாதார அமைச்சகத்துக்கு 2022 பட்ஜெட்டில் ஒதுக்கப் பட்ட ரூ.86 ஆயிரத்து 200 கோடியைவிட 2.7 மடங்கு அதிகம். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைகள் திட்டத்தின் (MGNREGA) கீழ் ஊரக வளர்ச்சி அமைச்சகத்துக்கு ஒதுக்கப்பட்ட ரூ. 1 லட்சத்து 40 ஆயிரம் கோடியை விட இரண்டு மடங்கு அதிகம்.

மேலும், இந்த ரூ. 2 லட்சத்து 40 ஆயிரம் கோடியானது (29.7 பில்லியன் டாலர்கள்) 87 நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பை (GDP) விட அதிகமாகும். இவ்வளவுக்கும் கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்களின் இந்த பட்டியலில் விஜய் மல்லையா, நீரவ் மோடி ஆகியோரின் பெயர்கள் இடம்பெறவில்லை.

மேலும், 25 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட நிலுவைத் தொகைகளுடன் வேண்டுமென்றே கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்களின் பட்டியல் மற்றும் தொகை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. வங்கிகள் பொதுவாக இத்தகைய காரணங்களுக்கு அல்லது இந்தத் திட்டத்திற்கு என்றே கடன்களை வழங்கக்கூடிய நிலையில், அப்படி வாங்கப்பட்ட கடன்களை வேறு நோக்கங்களுக்காகப் பயன்படுத்திய நிறுவனங்கள் தான் அதிகளவில் வேண்டுமென்றே கடனைத் திருப்பிச் செலுத்தவில்லை என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

ரூ. 2 லட்சத்து 40 கோடி கடன் மோசடி யில் 95 சதவிகிதம் பொதுத்துறை வங்கிகளில் (PSBS) வாங்கப்பட்ட கடன்களாக உள்ளன. அதிலும், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) மற்றும் அதன் கூட்டாளி நிறுவனங்கள் வழங்கிய கடன்கள் 30 சதவிகிதத்திற்கும் அதிகமாக உள்ளன. எஸ்பிஐ-க்குப் பிறகு, பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB), யூனியன் பேங்க் ஆப் இந்தியா (UBI) மற்றும் பேங்க் ஆப் பரோடா (BOB) ஆகியவை ஒவ்வொன்றும் நிலுவைத் தொகையில் 10 சதவிகிதத்திற்கும் அதிகமான பங்கைக் கொண்டுள்ளன.

நாட்டின் அனைத்து கடன் திருப்பிச் செலுத்தாத தொகைகளில் 34 சதவிகி தம் பங்கு வகிக்கும் மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. அதற்கு அடுத்த இடத்தில், மொத்த கடன் தொகையில் 17.5 சதவிகிதம் பங்குடன் தில்லி இரண் டாமிடத்திலும், 8.8 சதவிகிதம் திருப்பிச் செலுத்தாத கடன் தொகையுடன் மேற்கு வங்கம் மூன்றாவது இடத்தில் உள்ளது.

- விடுதலை இராசேந்திரன்

Pin It