சனாதனத்தை ஒழிக்க வேண்டும், அது மனிதர்களிடையே ஏற்றத்தாழ்வை விதைக்கிறது என்று அமைச்சர் உதயநிதி கூறியபோது, “இந்துக்களை ஒழிக்க வேண்டும்” என்று பேசுகிறார் என திரிபுவாதம் செய்து தேசிய அளவிலான விவாதப்பொருளாக இந்துத்துவா கும்பல் மாற்றியது. சனாதனத்தில் ஏற்றத்தாழ்வுக்கே இடமில்லை, அது ஒரு வாழ்வியல் நெறி என்றெல்லாம் அவரவருக்கு தோன்றியதை, வாய்க்கு வந்ததையெல்லாம் பேசினார்களே ஒழிய, எவரும் சனாதனம் என்றால் இதுதான் என தெளிவாக விளக்கவே இல்லை. பாஜகவை சேர்ந்த முதலமைச்சர் ஒருவரே, இப்போது தெள்ளத்தெளிவாக விளக்கியிருக்கிறார். அசாம் மாநில முதல்வரான ஹிமந்த பிஸ்வா சர்மா தனது X பக்கத்தில் (டிவிட்டர்) கீதையில் குறிப்பிடப்பட்டுள்ள சில வரிகளைப் பதிவிட்டிருந்தார். “பகவத் கீதையின்படி, பிராமணர்கள், சத்திரியர்கள் மற்றும் வைசியர்கள் ஆகிய மூன்று சாதியினருக்கும் சேவை செய்வது சூத்திரர்களின் இயற்கையான கடமை” என்று அந்தப் பதிவில் கூறப்பட்டிருந்தது.
பிற்படுத்தப்பட்டோரை பிரதமர் ஆக்கி விட்டோம், பழங்குடியினரை குடியரசுத் தலைவர் ஆக்கிவிட்டோம், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவரான எல்.முருகனை ஒன்றிய அமைச்சராக்கி விட்டோம், இதுதான் உண்மையான சமூகநீதி என்றெல்லாம் பேசிவந்த பாஜகவின் போலித்தனத்தை ஒற்றைப் பதிவில் தோலுரித்து விட்டார் ஹிமந்த பிஸ்வா சர்மா. ஏனெனில் மோடி, திரவுபதி முர்மு, எல்.முருகன் போன்றவர்கள் எல்லாம் பார்ப்பனிய இந்து தேசத்தின் நலன்களுக்குத்தான் பாடுபடுகிறார்களே தவிர, இந்த நாட்டின் பெரும்பான்மை மக்களாகிய சூத்திரர்களுக்கோ, பஞ்சமர்களுக்கோ அல்ல. அதுதான் கீதையிலும் சொல்லப்பட்டிருக்கிறது என்று பாஜக முதல்வரே ஒப்புக்கொண்டிருக்கிறார் என்பதைத்தான் அப்பதிவு காட்டுகிறது. கடுமையான எதிர்ப்புகள் கிளம்பிய பிறகு, அந்தப் பதிவை நீக்கிவிட்டு, மொழிபெயர்ப்பில் தவறு நடந்து விட்டது என மன்னிப்பு கேட்டிருக்கிறார். மறுபிறவியில் நமக்கு நம்பிக்கை இல்லை என்றாலும் பாஜகவிலும், இந்துத்துவா அமைப்புகளில் மட்டும் எப்படி இத்தனை சாவர்க்கர்கள் உருவாகிக் கொண்டே இருக்கிறார்கள் என்பது மட்டும் நமக்குப் புரியவில்லை.
ஆனால் இதற்காக அவர் மன்னிப்புக் கேட்டிருக்க வேண்டிய தேவையில்லை, கீதையில் அப்படித்தான் சொல்லப்பட்டிருக்கிறது என்று உறுதியோடு நின்றிருக்கலாம். ஏனெனில்
“சாதுர்வர்ண்யம் மயா சிருஷ்டம குண- கர்ம விபாகச:
தஸ்ய கர்த்தாரமபி மாம் வித்தயகர்த்தார- மவ்யயம்” (அத்.4- சுலோகம் 13)
“நான்கு வருணங்கள் என்னால் உண்டாக்கப்பட்டவை; அவரவர்களுக்குரிய கருமங்களை அவரவர் மீறாமல் செய்ய வேண்டும். அதனை மாற்றிச் செயல்பட வைக்க அந்த வர்ண தர்ம உற்பத்தியாளனாகிய என்னால்கூட முடியாது” என்கிறது பகவத் கீதை. (கிருஷ்ணர் சொல்வதாக)
இப்படி ஒவ்வொரு வர்ணத்தாருக்கும் என்னென்ன கடமைகள் இயற்கையாக வகுக்கப்பட்டுள்ளன என்பதையெல்லாம் கீதையின் 18-வது அத்தியாத்தில் விரிவாக எழுதி வைக்கப்பட்டிருக்கிறது.
“ப்ராஹ்மண-ஷத்ரிய சூத்ராணாஞ் ச பரந்தப
கர்மாணி ப்ரவிபக்தானி ஸ்வபாவ - ப்ரபவைர் - குணை:” (அத்.18- சுலோகம் 41)
அதாவது பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்களுக்கு சுபாவமாக உண்டான குணங்களைக் கொண்டே தர்மங்கள் வகுக்கப்பட்டது என்கிறது கீதை. மனத்தை அடக்குதல், வெளிப்புலன்களை வெல்லுதல், தவம், சுத்தம், பொறுமை, நேர்மை, ஞானம், அனுபவம், ஆஸ்திகத் தன்மை இவை பார்ப்பனர்களுக்கு இயற்கையாக உண்டான கர்மங்களாம். பாரக்கிரமம், பிரதாபம், தைரியம், திறமை, போரில் புறங்காட்டாமை, தானம், ஆளும் சக்தி இவை சத்திரியர்களின் இயற்கையாக குணங்களாம்.
“செளர்யந் தேஜோத்ருதிர்-தாக்ஷ்யம் யுத்தே சர்ப்ய பலாயனம்
தான-மீச்வரபாவச்ச ஷாத்ரம் கர்ம ஸ்வபாவஜம்” (அத்.18- சுலோகம் 43)
பயிர்த்தொழில், பசுக்களை காத்தல், வாணிபம் என்பவை வைசியனுக்கு இயற்கையாக உண்டான கர்மங்களாகும். சேவை புரிவது சூத்திரனுக்கு இயற்கையாக உண்டான கர்மமாகும் என்று பகவத் கீதை மிகத் தெளிவாகக் கூறுகிறது. பிராமணர், சத்திரியர், வைசியர் அவரவர் கடமையைச் செய்ய வேண்டும், சூத்திரர்கள் மற்ற மூவருக்கும் சேவை செய்ய படைக்கப்பட்டவர்கள் என்று கீதையில் என்ன சொல்லப்பட்டிருக்கிறதோ, அதைத்தான் அசாம் மாநில பாஜக முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மாவும் கூறியிருக்கிறார். ஆனால் இப்போது இந்த உண்மையெல்லாம் வெளியே தெரிந்து, மக்கள் விழிப்புணர்வு பெற்றால் கீதையையும் நம்ப மாட்டார்கள், இப்படிப்பட்ட ஏற்றத்தாழ்வான கட்டளைகளை விதிக்கிற கடவுள்களையும் நம்ப மாட்டார்கள். அதனால்தான் எதிர்ப்புக் கிளம்பியவுடன் பதிவை நீக்கிவிட்டு மொழிபெயர்ப்பில் தவறு என்று பூசி முழுகியிருக்கிறார்.
இந்த நாட்டின் பெரும்பான்மை மக்களாகிய பிற்படுத்தப்பட்டவர்களை மட்டுமல்ல, நால் வருண பெண்களையும், வைசியர்களையும் சேர்த்தே இழிவுபடுத்தியிருக்கிறது பகவத் கீதை.
“மாம் ஹி பார்த்த வ்யாபாஸ்ரீத்ய யேஸ்பி ஸ்யு: பாப-யோன்ய:
ஸத்ரியோ வைச்யாஸ்-ததா சூத்ராஸ்-தேஸ் பி யாந்தி பராங்கிதம்” (அத்.9- சுலோகம் 32)
அதாவது சூத்திரர்கள், வைசியர்கள், பெண்கள் இம்மூவரும் பாவ யோனியில் பிறந்தவர்கள் என்கிறது கீதை.
இவ்வளவு அநியாய அக்கிரமங்களை கிருஷ்ணரின் பெயரால் பார்ப்பனர்கள் கீதையின் வாயிலாக நம்மீது திணித்து வைத்திருக்கிறார் என்று எடுத்துச் சொல்லவும் கூடாதாம்.
“ந புத்திபேதம் ஜனயே - தஜ்ஞானம் கர்மஸங்கினாம்
ஜோஷயேத் ஸர்வகர்மாணி வித்வான் யுக்த: ஸமாரசன்”
“நால் வர்ண கடமைகளைப் பற்றி அறியாதவர்களிடத்தில் குழப்பங்களையும் சந்தேகங்களையும் உண்டாக்கி விடக்கூடாது. சூத்திரர்களை தூண்டிவிட்டால் நீ அழிவாய்” என்று எச்சரிக்கையும் விடுக்கிறது கீதை. பிற்படுத்தப்பட்டவர்கள் விழித்துக்கொண்டு பார்ப்பனிய சுரண்டலை அறிந்துகொண்டால், பார்ப்பனர்களும் உடல் உழைப்புக்கு ஆளாக வேண்டுமே என்ற பகவத் கீதையின் அச்சம்தான், இப்போது ஹிமந்த பிஸ்வா சர்மாவை பதிவையும் நீக்க வைத்திருக்கிறது. புரட்சியாளர் அம்பேத்கர் கூறியதுபோல முட்டாள்களின் உளறலான கீதையை தோலுரித்து, மக்கள் மத்தியில் அம்பலப்படுத்த இத்தகைய வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்வோம்.
மயிலாப்பூரில் மார்கழியில் மக்களிசை
வகுப்புவாரி பிரதிநிதித்துவத்திற்கான தீர்மானத்தை காங்கிரஸ் கட்சி ஏற்காதபோது பெரியார் விவாதத்தில் ஈடுபட்டார். அப்போது கீழே இருந்த பார்ப்பனர்கள் கூச்சலிட, அவர்களைப் பார்த்து, “நீங்கள் கூச்சலிட்டு நான் அமைதியாக வேண்டுமா? நாங்கள் திரும்பி கூச்சலிட்டால் நீங்கள் என்ன ஆவீர்கள் என யோசித்துப் பாருங்கள்” என்றாராம் பெரியார். அப்படித்தான் மார்கழி மாதம் வந்துவிட்டாலே போதும்... பார்ப்பனர்கள் சில நூறு பேர் சபாக்களை நடத்துவதும், பார்ப்பனர்களால் பார்ப்பனர்களுக்காக நடத்தப்பட்ட இந்த சபாக்கள் இல்லாவிட்டால் சென்னைக்கு இசையே இல்லை என்பதுபோல, பார்ப்பன ஏடுகள் பக்கம், பக்கமாக சிலாகித்து எழுதுவதும் காலங்காலமாக தொடர்ந்து கொண்டிருந்தது.
இப்போதும் அது தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது என்றாலும், இப்போதெல்லாம் மார்கழி மாதம் வந்துவிட்டாலே “மார்கழியில் மக்களிசை” எங்கே நடக்கிறது என்று மக்கள் தேட ஆரம்பித்து விடுகிறார்கள். இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் சார்பில், 4-வது ஆண்டாக மயிலாப்பூரில் உள்ள சாந்தோம் பகுதியில் டிசம்பர் 30, 31 ஆகிய 2 நாட்கள் “மார்கழியில் மக்களிசை” நிகழ்ச்சி நடைபெற்றது.
சென்னையின் இசை சபாக்களில் இல்லை, கானாக்களில்தான் இருக்கிறது என ஒவ்வொரு ஆண்டும் மார்கழியில் மக்களிசைக்கு கூடிக்கொண்டே செல்லும் மக்கள் கூட்டம் நிரூபித்து வருகிறது. பண்பாட்டுத் தளத்தில் பார்ப்பனிய எதிர்ப்பை, நவீன முறையில் மேற்கொள்ளும் நீலம் பண்பாட்டு மையத்தின் இம்முயற்சி பாராட்டப்பட வேண்டிய ஒன்று.
- விடுதலை இராசேந்திரன்