பாமக தன் கட்சியிலுள்ள முஸ்லிம்களுக்கு எவ்வித பிரதிநிதித்துவத்தையும் தருவதில்லை, அக்கட்சி முஸ்லிம்களுக்கு துரோகம் செய்து வருகிறது. எனவே முஸ்லிம்கள் பாமகவை புறக்கணிக்க வேண்டும் என நாம் தொடர்ந்து எழுதி வருகிறோம்.

கடந்த ஏப்ரல் 01-07,2011 தேதியிட்ட இதழில் கூட "பாமகவை முஸ்லிம்கள் புறக்கணிக்க வேண்டும்' என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டு டாக்டர் ராமதாஸின் முகத்திரையை கிழித்திருந்தோம். இந்நிலையில், பாமகவின் தொழிற்சங்க மாநில பொதுச் செயலாளர் ஞானசேகரனும், மாநிலத் துணைத் தலைவர் அப்துல் அஜீசும் கடந்த 09-05-2011 அன்று செய்தியாளர்களைச் சந்தித்து கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், பாமகவில் முஸ்லிம்களுக்கும், தலித்துகளுக்கும் உரிய மரியாதை கிடைப்பதில்லை. சமூக நீதியோ, சம நீதியோ இல்லை.

நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் 30 இடங்களில் பாமக போட்டியிட்டது. ஆனால் முஸ்லிம் சமுதாயத்திற்கு ஒரு இடம் கூட வழங்கப்படவில்லை. பாமக சார்பில் தேர்தலில் போட்டியிட முஸ்லிம்களுக்கும், தலித்களுக்கும் வாய்ப்புகள் மறுக்கப்படுகிறது.

பாமக ஜாதிக் கட்சி என்ற தோற்றத்திலிருந்து வெளிவரவில்லை... என்றெல்லாம் கூறப்பட்டுள்ளது. இதுபோன்ற காரணங்களுக்காக பாமகவிலிருந்து அவர்கள் விலகுவதாக குறிப்பிட்டுள்ளனர்.

அவர்களோடு கட்சியில் உள்ள சில முஸ்லிம்களும், தலித்களும் வெளியேறியுள்ளனர்.