விதி 44 : “குடிமக்கள் எல்லோருக்கும் ஒரே தன்மையிலான உரிமை இயல்சட்டம்: இந்தியாவில் வாழும் குடிமக்கள் எல்லோருக்கும் ஒரே தன்மையிலான உரிமை இயல் சட்டம் வந்து சேர அரசு முயற்சிக்கும்”.

Article 44: “Uniform Civil Code for the citizens: The State shall endeavour to secure for the citizens a uniform civil code throughout the territory of India”

மேலே காணப்படுவது, இந்திய அரசமைப்புச் சட்டத்தில் 26-11-1949 முதல், இதே வடிவத்தில் இருக்கிற 44ஆம் விதி.

இந்த விதி ஏன் இப்படி வடிவமைக்கப்பட்டுள்ளது?

இந்தியாவில் பல மதங்கள் இருக்கின்றன.

அவை, பௌத்தம், சமணம், இந்து, இஸ்லாம், கிறித்துவம், சீக்கியம் முதலானவை.

இவற்றுள் இந்துச்சட்டம், (Hindu Law) இந்துக்களுக்கான உரிமை இயல் சட்டம்.

முகம்மதியச் சட்டம் (Mohammedan Law) என்பது, முகம்மதியர்களுக்கான உரிமை இயல் சட்டம்.

rss

இவற்றை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டு, இந்துச் சட்டப்படி இந்துக் களுக்கான திருமணம், சொத்துரிமை, வாரிசு உரிமை இவை பற்றித் தீர்மானிக்கவும்;

இஸ்லாமியர்களுக்கான திருமணம், சொத்துரிமை, வாரிசு உரிமை இவை பற்றி, முகம்மதியச் சட்டப்படி தீர்மானிக்கவும்;

வாரன் ஹேஸ்டிங்ஸ் என்கிற கவர்னர்-ஜெனரல், 1772 இல் ஓர் ஏற்பாடு செய்தார்.

“இந்துச் சட்டம்” என்று ஒன்று அப்போது இல்லை.

எல்லா நீதிமன்றங்களிலும் வெள்ளைக்காரர்களே நீதிபதிகள். அவர்களுக்கு சமற்கிருதம் தெரியாது. எனவே இந்துக்களைப் பற்றிய வழக்கு வரும்போது, ஒரு வழக்கைப் பற்றி மனுஸ்மிருதி, பராசர ஸ்மிருதி இவற்றில் என்ன சொல்லப் பட்டிருக்கிறது என்பதைப் படித்துக் காட்டுவதற்காக, “பண்டிதர்கள்” (Pundits) என்கிற பேரால் பார்ப்பனர்கள் நீதிமன்றங்களில் அமர்த்தப்பட்டிருந்தார்கள்.

அதேபோல், இஸ்லாமியர்களுக்கான வழக்கு வரும் போது, குரான், ஷரியத் இவற்றைப் படித்துக் காட்டுவதற்காக “மௌல்விகள்” நீதிமன்றங்களில் அமர்த் தப்பட்டிருந்தார்கள்.

2016இல் நடப்பிலுள்ள “இந்துச்சட்டம்” என்பது, வட நாட்டுப் பார்ப்பனர்கள் தொகுத்துத் தந்த சமற்கிருத சாஸ் திரங்களை வைத்து, ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துக் கொண்டு, அதை வைத்து, 1860இல் இயற்றப்பட்டது.

அப்படி 1860இல் எழுதப்பட்ட இந்துச்சட்டத்தில், இந்துக்களைப் பற்றி என்ன எழுதப்பட்டிருக்கிறது.

“இந்துக்கள் பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என நான்கு பெரும்பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருக் கிறார்கள். அந்த ஒவ்வொரு பிரிவாரும் ஆயிரக்கணக்கான உள் சாதிகளாகப் பிரிக்கப்பட்டிருக் கிறார்கள்.” என்று எழுதப்பட்டுள்ளது.

இந்த நால்வருணங்களுக்கு வெளியே தீண்டப்படாதவர்கள் தனியாக இருக்கிறார்கள்.

இது 2016லும் அப்படியே இருக்கிறதா? ஆம்! அப்படியேதான் இருக்கிறது.

இந்தக் கேடான ஏற்பாட்டை ஆதியில் எதிர்த்த வர் புத்தர். அடுத்து எதிர்த்தவர்கள் மகாத்மா ஜோதிராவ் கோவிந்தராவ் புலே, வடலூர் இராமலிங்க அடிகள், ஸ்ரீநாராயணகுரு, பெரியார் ஈ.வெ.இராமசாமி, டாக்டர் பீமராவ் அம்பேத்கர் ஆகியோர் ஆவர்.

இந்தத் தலைவர்களின் எதிர்ப்பைப் பார்ப்பனர்கள் கணக்கில் எடுத்துக் கொண்டார்களா? இல்லை.

இந்திய தேசிய காங்கிரசு கணக்கில் எடுத்துக் கொண்டதா? எதிர்வினை ஏதும் செய்ததா? இல்லை.

பழைய ஜனசங்கம்-இன்றைய பாரதிய சனதா-இவற்றின் தாயான இராஷ்டிரிய சுயம் சேவக் சங்கம் இவற்றை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டதா? இல்லை.

இந்தியப் பொதுவுடைமைக் கட்சி இது பற்றி ஒரு நிலைப்பாட்டை மேற்கொண்டதா? இல்லை.

நால்வருணங்களுக்கு இடையே அவரவர் வருணத் தை மாற்றிக் கொள்ளமுடியுமா? முடியாது. அவரவர் உள்சாதியை மாற்றிக் கொள்ளமுடியுமா? முடியாது.

ஏன்? ஏன்?

வருண சாதியும், உள்சாதியும் பிறவி அடிப்படை யில் வந்தவை.

அந்த வேறுபாட்டை மாற்றி மனித சமத்துவ உரிமையை-மனித சம உரிமையை வழங்குவதற்கான தாக, இந்து உரிமை இயல்சட்டம் 2016 வரையில் திருத்தப்பட்டதா? திருத்தப்படவில்லை.

இதை, ஒவ்வொரு குடிமகனும்-ஒவ்வொரு இந்துவும் நீங்காமல் நினைவில் கொள்ளவேண்டும்.

இப்போது, இதுபற்றி நாம் ஏன் ஆய்வுக்குள் நுழைய வேண்டும்?

இப்போதுதான், வெளிப்படையாக, இந்திய அர சாட்சியை நடத்துகிற பாரதிய ஜனதாக் கட்சி அரசு, “இந்தியக் குடிமக்களுக்கு ஒரே தன்மையிலான உரிமை இயல் சட்டத்தை உருவாக்கியே தீரவேண் டும்” என்று, சாதனையாக-பிடிவாதமாகக் கூறுகிறது.

எதை-யாரை-எந்தச் சட்டத்தைக் குறிவைத்து பாரதிய சனதா அரசு அதை முன்வைக்கிறது?

இஸ்லாமியர்களாக உள்ள 15 கோடி பேரின் உரிமை இயல் சட்டத்தைக் குறிவைத்து, அதை முன்வைக்கிறது.

எதை முன்வைக்கிறது?

1.            ஒரு இஸ்லாமியன் ஒரே நேரத்தில் நான்கு பெண் களை மனைவியராகப் பெற்றிருக்க உரிமை உண்டு.

2.            தன் மனைவியை மணவிலக்குச் செய்ய விரும்பு கிற ஒரு இஸ்லாமியன், அம்மனைவியிடம் நேரா கவோ, ஊர்க்கூட்டத்திலோ, தொலைப் பேசியிலோ ‘தலாக்’, ‘தலாக்’, ‘தலாக்’ என்று வாய் மொழியாக மூன்று தடவைகள் சொல்லிவிட்டால் போதும்! அந்தப் பெண் ‘மனைவி’ என்கிற உரிமையை இழந்து விடுகிறார்.

இஸ்லாமியச் சட்டம் இப்படிக்கூறுவது சரியா? கொஞ்சங்கூட சரி இல்லை. ஏன்?

வாழ்விலும் தாழ்விலும் ஈடுகொடுத்து பிள்ளை களைப் பெற்றெடுத்த ஒரு மனைவியை ஒரு பண்டம் போல்-உயிரற்ற பொருள்போல்-எந்த ஆய்வும், விசா ரணையும் இல்லாமல் மணவிலக்குச் செய்வது தவறு. ஒரே நேரத்தில் நான்கு பெண்களை ‘மனைவிகளாக’க் கொண்டிட உரிமை இருப்பது தவறு. இஸ்லாமியச் சட்டத்தை இப்படித் திருத்த வேண்டும் என்ற கோரிக் கையை முன்வைக்கிறது, மோடி அரசு. இது சரி!

1.            ஓர் இந்து ஒரு மனைவியை மட்டுமே கொண்டி ருக்க வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை மணந்து கொள்ளுவது தண்டனைக்குரிய குற்றம்.

2.            கணவன்-மனைவி பிரிந்து கொள்ள உரிமை உண்டு.

3.            கணவன் சொத்தில் மனைவிக்குப் பங்கு உண்டு.

4.            கணவணை இழந்த பெண், விரும்பினால், மறு மணம் செய்து கொள்ளலாம்.

5.            ஆண்கள் தத்துப் பிள்ளையாகப் போவது போலவே, பெண்கள் தத்துப் பிள்ளையாகப் போகலாம்.

6.            18 வயது நிரம்பிய பிறகுதான் பெண்ணுக்குத் திருமணம் செய்யவேண்டும்.

இப்படிப்பட்ட மானிட சமத்துவ உரிமைகள் எல்லாம் ஏற்கெனவே இந்துப் பெண்களுக்கு இந்துச் சட்டத்தில் இருந்தனவா? இல்லை; இல்லை.

1955 வரையில், இப்படிப்பட்ட உரிமைகள் எந்த வருணசாதி, எந்த உள்சாதி இந்துப் பெண்ணுக்கும் இல்லை.

இந்த சம உரிமைகள்-மானிட உரிமைகள் எல்லாம் எல்லா வருண சாதி, எல்லா உள்சாதி இந்துப் பெண்களுக்கும் தரப்பட வேண்டும் என, இந்திய நாடாளு மன்றத்தில், அமைச்சர் என்கிற தகுதியுடன், இந்துச் சட்டத்திருத்த முன்வரைவை (HINDU CODE BILL, 1947), 1947இல் முன்மொழிந்தவர் டாக்டர் பீமராவ் அம்பேத்கர் ஆவார்.

இந்திய சமுதாய வரலாற்றில் இத்துணை பெண் ணுரிமைகளையும் ஒரு சேரக் கோரியவர் 1870இல், மகாத்மா புலே. அடுத்து, 18-2-1929 செங்கற்பட்டு முதலாவது மாகாண சுயமரியாதை மாநாட்டில் தீர் மானங்கள் வடிவில் இவ்வுரிமைகளைக் கோரியவர், தந்தை பெரியார் ஈ.வெ.ரா.

புலே, பெரியார், அம்பேத்கர் மூவரும்-தீண்டாமை, நால்வருணம், பழக்கச் சட்டம், வழக்கச் சட்டம், பெண் ணடிமை இவற்றை முழுமூச்சாக எதிர்த்தவர்கள்.

இவ்வளவையும் ஒருசேர ஒழிப்பதற்கான, ஒரு தனிப்பிரிவையும் 1947லேயே, இந்துச் சட்டத்திருத்த முன்வரைவிலேயே உள்ளடக்கித்தான், அம்பேத்கர் முன்மொழிந்தார். அந்தத் தீரம் அவருக்கே இருந்தது.

அதைப் படித்துப் பார்த்த அன்றைய அரசமைப்பு அவையின் தலைவர் டாக்டர் இராஜேந்திர பிரசாத் என்கிற மேல்சாதி சற்சூத்திரர், அம்பேத்கர் பேரில் சீற்றம் கொண்டு சொன்னார்:

“Dr. Ambedkar! Mind You! I won’t allow this section of the Bill to be passed -அம்பேத்கர் அவர்களே, ஜாக்கிரதை! உங்கள் மசோதாவின் இந்தப் பிரிவை மட்டும் நிறைவேற்ற நான் அனுமதிக்க மாட்டேன்” என்று, சட்டவரைவை அம்பேத்கர் முன் மொழிந்த அன்றே, அவையிலேயே கூறினார்.

இந்துச் சட்டத்திருத்த முன்வரைவை, 5-2-1951 இல் நேரு, அவையில், விவாதத்துக்கு முன் வைத்தார். அது 21-9-51 வரை விவாதிக்கப்பட்டது. அதன்பிறகு, பிரதமர் நேரு, அதுபற்றி அக்கறையோடு செயல்பட வில்லை.

அதனால் மனம் நொந்த அம்பேத்கர், 26-9-1951 வரையில் பொறுமை காத்தார்.

தாம் வகித்த அமைச்சர் பதவியை விட்டு 27-9-1951 அன்று விலகினார்.

பின்னொரு நாள் தம் பதவி விலகலுக்கான காரணங்களை அந்த அவையிலேயே கூறினார். என்ன காரணங்கள்?

1.            தம் படிப்புத் தகுதிக்கு ஏற்ற அமைச்சுப் பதவி அளிக்கவில்லை;

2.            தாம் 1947இல் முன்மொழிந்த இந்துச் சட்டத்திருத்த வரைவுச் சட்டத்தை நிறைவேற்றவில்லை.

3.            அரசமைப்புச் சட்ட விதி 340 (1) இன் கீழ், அதில் கண்டபடி, பிற்படுத்தப்பட்டோருக்கான ஆய்வுக் குழுவை அமைக்கவில்லை.

இவ்வாறு, டாக்டர் அம்பேத்கர் உள்ளும் புறமும் ஒன்றாகவே-தூய்மையாகவே இருந்தார்.

அவர் 1947இல் முன்மொழிந்த வரைவுச் சட்டத்தில், இந்துப் பெண்களுக்கான எல்லா உரிமைகளையும் அளிக்கிற பிரிவுகளை மட்டும், பிரதமர் நேரு 1955 ஆம் ஆண்டுதான் நிறைவேற்றினார்.

இவையெல்லாம் இன்றையப் பிரதமர் நரேந்திர தேவேந்திர மோடி என்கிற பச்சைச் சூத்திரருக்குத் தெரியவேண்டும்.

பிரதமரும், பாரதிய சனதாவும், ஆர்.எஸ்.எஸ்.சும் தூக்கிப் பிடிக்கிற வேதங்கள், பகவத் கீதை, இராமாயணம், பாரதம் இவற்றின்படி -(1) இந்துப் பெண்கள் பிள்ளை பெறும் தோல் பைகள் மட்டுமே. (2) ஒரு இந்து, ஆண் குழந்தை பெறவேண்டும். அவனே வாரிசு. அதனால் எத்தனை பெண்களை வேண்டுமானாலும் ஓர் இந்து ஆண் மணக்கலாம்.

இந்துப் பெண்ணுக்கு எந்தச் சுதந்தரமும் இல்லை.

இவைதானே, 1954 வரையில் - 2500 ஆண்டு களாக இந்துப் பெண்களுக்கு இருந்த கேடுகெட்ட நிலைமை!

இதை மறைத்துவிட்டு, இஸ்லாமியப் பெண்களுக்குச் சமஉரிமை வேண்டும் என்கிற பேரில், அதற் காகவே, “ஒரே தன்மையிலான உரிமை இயல் சட்டம் வேண்டும்” என்று பேசும் பிரதமர் மோடி அவர்கள், 130 கோடி மக்கள் வாழும் இந்திய நாட்டின் தலைமை அமைச்சராக இருந்தாலும்-இந்துச் சட்டப்படியும், அரசமைப்புச் சட்டப்படியும் அவர் நான்காவதான சூத்திர சாதிக்காரர்தான். இந்தப் பிறவி இழிவை நீக்கிட, ஏன் அவருடைய அரசு ஏதும் செய்யவில்லை?

இதை மறந்துவிட்டோ, மறைத்துவிட்டோ-“ஒரே தன்மையிலான உரிமை இயல் சட்டம்” பற்றிப் பேசா தீர்கள், மோடி!

இஸ்லாமியப் பெண்களே, ‘தலாக்’ சொல்லி மண விலக்குச் செய்வதை எதிர்க்கிறார்கள்; நான்கு ‘மனைவி’கள் கூடாது என்று இஸ்லாமியப் பெண்களே கூறுகிறார் கள். அவர்களின் கோரிக்கையை மார்க்சிய-பெரியாரிய-அம்பேத்கரிய இயக்கத்தினர் எல்லோரும் ஆதரிக் கின்றனர்.

இந்துவாகப் பிறந்த எல்லோரும்-மதத்தில்-சாதியில் பிறவி காரணமாக மேல், கீழ் என்று இல்லாமல் ஒரே தன்மையான சமத்துவ-சமூக உரிமைகளை-அந்தஸ்தைப் பெற்றவர்கள்தான் என்கிற தன்மையில் இந்துச் சட்டத் தையும், இந்திய அரசமைப்பச் சட்டத்தின் சம்பந் தப்பட்ட விதிகளையும் உடனே திருத்துங்கள் மோடி, என அறைகூவி அழைக்கிறோம்!

- வே.ஆனைமுத்து

Pin It