பெரியாரை இழிவாகப் பேசிய நடிகர் ரஜினிகாந்த் ‘மன்னிப்புக் கேட்க மாட்டேன்’ என்று ஆணவத்துடன் பேட்டி அளித்துள்ளார்.

ஆன்மிக அரசியல் கட்சியைத் தொடங்கப் போவதாக அறிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த் முகத்திரை கிழியத் தொடங்கி இருக்கிறது. பார்ப் பனர்கள் சொல்லிக் கொடுக்கும் பாடத்தை மேடைகளில் உளறிக் கொண்டிருக்கிறார்.

‘துக்ளக்’ பத்திரிகையை கையில் வைத்திருப்பவர்கள் அறிவாளிகள் என்றார். அது அக்கிரகாரத்துக்காரர்களுக்கான அடையாள அட்டையே தவிர, அறிவாளிகளுக்கான அடையாளம் அல்ல. ஆனாலும் அக்கிரகாரவாசிகள் சொல்லித் தருவதை அப்படியே வாந்தி எடுக்கிறார்.

‘துக்ளக்’ ஏட்டின் பெருமையைப் பறைசாற்ற சில சம்பவங்களைப் பட்டியலிட்டார் ரஜினி. 1971ஆம் ஆண்டு சேலத்தில் பெரியார் நடத்திய மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலத்தில், “ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி, சீதை சிலைகள் உடை இல்லாமல் செருப்பு மாலை போட்டு கொண்டு வரப் பட்டது; அந்தப் படத்தை சோ ‘துக்ளக்’ பத்திரிகையில் வெளியிட்டார். அதனால் முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதி அந்த பத்திரிகைக்குத் தடை போட்டார். இந்தியா முழுவதும் சோ பிரபலம் ஆனார்” என்று அவர் பேசினார்.

“இது உண்மையல்ல; ராமன், சீதை சிலை செருப்பு மாலை போட்டு நிர்வாணமாக எடுத்து வரப்படவில்லை. ‘ஜன சங்க’த்தைச் சார்ந்த (முன்னாள் பா.ஜ.க.) சிலர், அந்த ஊர்வலத்துக்கு எதிராக கருப்புக் கொடி காட்டினர். அப்போது பெரியாரை நோக்கி செருப்பை வீசினார்கள். செருப்பு பெரியார் மீது விழாமல் கூட்டத்தில் விழுந்தது. ஆத்திரமடைந்த திராவிடர் கழகத்தினர் ஊர்வலத்தில் ‘இராமன்’ பிறப்பைப் புராண ஆதாரங்களுடன் விளக்கி எடுத்து வரப்பட்ட படத்தில் அடித்தனர்” என்று நடந்த சம்பவத்தை பெரியார் இயக்கத் தோழர்கள் விளக்கினர்.

பெரியார் இயக்கத்தைக் கேவலப்படுத்த வேண்டும் என்ற தீய உள்நோக்கத்தோடு நடிகர் ரஜினிகாந்த் பேசிய பேச்சுக்கு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். சமூகத்தில் அமைதியைக் குலைக்கும் வகையில் பேசிய அவரது அவதூறு பேச்சுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி காவல் நிலையங்களில் புகார் மனு தருமாறு திராவிடர் விடுதலைக் கழக சார்பில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி வேண்டுகோள் விடுத்திருந்தார்.

தமிழகம் முழுதும் 50க்கும் மேற்பட்ட ஊர்களில் திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் காவல் நிலையங்களில் புகார் மனு அளித்தனர். காவல்துறை நடவடிக்கை எடுக்காவிடில் ரஜினிகாந்த் வீடு முற்றுகையிடப்படும் என்றும் திராவிடர் விடுதலைக் கழகம் அறிவித்தது. அதன்படி ஜன. 22, 2020 அன்று திராவிடர் விடுதலைக் கழகம் ரஜினியின் வீட்டை முற்றுகையிடும் போராட்டத்தை அறிவித்தது. இதற்கிடையே ரஜினிகாந்த், ஜன. 21 அன்று பத்திரிகையாளர்களை சந்தித்து, ‘பெரியார் குறித்து தான் பேசிய கருத்துகளுக்கு வருத்தமோ மன்னிப்போ கேட்கப் போவதில்லை” என்று ஆணவத்துடன் தெரிவித்தார்.

1971இல் நடந்த சேலம் ஊர்வலத்தில் ராமன் சிலை நிர்வாணமாக செருப்பு மாலை போட்டு எடுத்து வரப்பட்டது என்று தான் பேசியதற்கு ஆதாரமாக 2017ஆம் ஆண்டு வெளி வந்த ‘அவுட் லுக்’ பத்திரிகையின் பக்கங்கள் சிலவற்றை நகல் எடுத்து வந்திருந்தார். கார்ட்டூனிஸ்ட் பாலா வரைந்த ஒரு கார்ட்டூனுக்காக கைது செய்யப்பட்டதை யொட்டி ‘அவுட் லுக்’கில் எழுதப்பட்ட கட்டுரை. அந்தக் கட்டுரையில் கீழ்க்கண்ட வரிகள் இடம் பெற்றிருந்தன:

“1971ஆம் ஆண்டு ‘துக்ளக்’ ஏட்டின் ஆசிரியர் சோ மீது தி.மு.க.வும், அதன் தலைவர் கருணாநிதியும் முதல் தாக்குதலை நடத்தினர். திராவிடர் கழகம் நடத்திய ஊர்வலத்தில், இந்து கடவுள்கள் ராமன், சீதையை நிர்வாணமாக சித்தரித்து செருப்பு மாலை போடும் புகைப் படங்கள் எடுத்து வரப்பட்டதை ‘துக்ளக்’ பத்திரிகை வெளியிட்டது” என்று ‘அவுட் லுக்’ பத்திரிகை அந்தக் கட்டுரையில் உண்மைக்கு மாறாக குறிப்பிட்டுள்ளது. இதுதான் ரஜினி காந்த் தனது பேச்சு சரியானது என்பதற்குக் காட்டிய ஆதாரம். அந்த நகலைக்கூட செய்தியாளர்களிடம் அவர் வழங்கவில்லை. அந்தப் பகுதியை படித்துக் காட்டவும் இல்லை. ‘மந்திரமா தந்திரமா’ நிகழ்ச்சி நடத்திக் காட்டுவது போல் கையில் இரண்டு காகிதங்களை வைத்துக் கொண்டு அப்படியே உயர்த்திக் காட்டி பேட்டியை முடித்துக் கொண்டு விட்டார்.

தனது ஆதாரம் வலிமையானது என்றால் அதை நகல் எடுத்து ஊடகவியலாளர்களுக்கு வழங்கியிருக்கலாம் அல்லவா? அது வலுவற்ற ஆதாரம் என்பது அவருக்கு ‘பாடம்’ நடத்தி ‘படி’ எடுத்துத் தந்த ‘அவாள்’களுக்கு நன்றாகவே தெரியும். எனவே அவர்கள் சொல்லித் தந்தபடி பேட்டியை முடித்துக் கொண்டார்.

இப்போது நடிகர் ரஜினிகாந்திடம் சில கேள்விகளைக் கேட்கிறோம்:

  • ‘துக்ளக்’ ஏடு நிர்வாண ராமன் மற்றும் சீதை சிலைகளுடன் செருப்பு மாலை போட்ட படத்தை வெளியிட்டது என்று தான் ரஜினி பேசினார். அது உண்மை என்றால், அந்த ‘துக்ளக்’ ஏட்டை ஏன் ஆதாரமாகக் காட்டவில்லை? குருமூர்த்தி தானே இப்போது ‘துக்ளக்’ ஆசிரியர்? அவர் ‘துக்ளக்’ கருவூலத்திலிருந்து அதை எடுத்துத் தந்திருக்க மாட்டாரா? ஆனால் அவர்களால் அதை ஆதாரமாகக் காட்ட முடியாது. காரணம் அப்படி ராமன் சிலையை நிர்வாணமாக செருப்பு மாலை போட்டு வந்த படம் ஏதும் ஊர்வலத்தில் எடுத்து வரப்படவில்லை. எனவே ‘துக்ளக்’ வெளியிட்ட படங்களிலும் அப்படி ஒரு காட்சி இல்லை. ரஜினி ஆதாரமாகக் காட்டிய ‘அவுட்லுக்’ ஏட்டிலும் அப்படி ஒரு படம் இல்லை.
  • ‘அவுட் லுக்’ நம்பத் தகுந்த பத்திரிகை என்பதற்காக மற்றொரு பொய்யையும் தனது ‘பார்ப்பன வாத்தியார்கள்’ கூறியபடி திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார். ‘இந்து குழும’த்திலிருந்து வெளி வரும் பத்திரிகை ‘அவுட் லுக்’ என்கிறார். ‘அவுட் லுக்’ பத்திரிகைக்கும் ‘இந்து குழும’த்துக்கும் ஒரு தொடர்பும் இல்லை.
  • இவையெல்லாம் மறக்க வேண்டிய நிகழ் வுகள் என்று பேட்டியில் ரஜினி கூறினார். மறக்க வேண்டிய நிகழ்வை, ஏன் துக்ளக் விழாவில் நினைவுபடுத்திப் பேசினார்?
  • ஒரு பொய்யை பொறுப்பில்லாமல் பேசுவது; பிறகு உண்மை அம்பலமானவுடன் வேறு ஒரு பொய்யான ஆதாரத்தை முன் வைப்பது - இதுதான் ரஜினியின் ஆன்மிக அரசியலா?

‘ராமன்’ அரசியலை நோக்கி பார்ப்பனர்கள் ரஜினியை இழுத்துக் கொண்டு வந்து விட்டார்கள்.

பெரியார் எதிர்ப்பை - ரஜினியின் அடையாளமாக்கிட பார்ப்பனர்கள் காய் நகர்த்துகிறார்கள்.

மன்னிப்புக் கேட்க வேண்டாம் என்று எச். ராஜா கூறியதைக் கேட்டுக் கொண்டு தமிழர்களின் உணர்வுகளுக்கு எதிராக ரஜினி ஆணவத்தோடு பேசுகிறார்.

குருமூர்த்திகளும் எச்.ராஜாக்களும் ரஜினியை இப்படியே வழி நடத்திக் கொண்டிருக்கட்டும். அப்போதுதான் ரஜினியின் உண்மை பார்ப்பனிய முகம் தமிழர்களுக்கு நன்றாகப் புரியும்!

ரஜினிகாந்த் மீது நடவடிக்கைக் கோரி காவல் நிலையங்களில் கழகம் புகார்

கழகத் தலைவர் கொளத்தூர் மணி 17.01.2020 அன்று வெளியிட்ட அறிக்கையின்படி தமிழகத்தில் பல்வேறு காவல் நிலையத்தில் கழகத்தின் சார்பாக வழக்கு பதிய வேண்டும் என்று மனு அளிக்கப்பட்டது. அவை பின்வருமாறு:

சேலம் மாவட்டத்தில், ஏற்காடு, ஆத்தூர், சேலம் டவுன் (அன்னதானப்பட்டி), சேலம் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம், காக்காபாளையம், சங்ககிரி, எடப்பாடி, ஜலகண்டாபுரம், தாரமங்கலம், ஓமலூர் மேச்சேரி, நங்கவள்ளி, கருமலைக்கூடல், மேட்டூர், கொளத்தூர் உட்பட 15 காவல் நிலையங்களிலும், நாமக்கல் மாவட்டத்தில், குமாரபாளையம், பள்ளிபாளையம், திருச்செங்கோடு, இராசிபுரம் ஆகிய காவல் நிலையங்களிலும், கோவையில் காட்டூர், திருப்பூர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், பொள்ளாச்சி, ஈரோடு, அம்மாபேட்டை, பவானி, திருச்சி, கும்பகோணம், உடுமலை துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், பழனி, திண்டுக்கல், தருமபுரி, விழுப்புரம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், காஞ்சிபுரம், சென்னை காவல் ஆணையர் அலுவலகம், மயிலாடுதுறை, வேலூர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், தென்காசி பாவூர் சத்திரம் ஆகிய 50க்கும் மேற்பட்ட காவல் நிலையங்களில் மனு அளிக்கப்பட் டுள்ளது.

Pin It