உத்தரப் பிரதேச இளைஞர்களை சில விதிகளைத் தளர்த்தி இஸ்ரேலுக்கு வேலைக்கு அனுப்பியிருப்பதாக கடந்த மாதம் செய்திகள் வெளியாகின. பாலஸ்தீன படைகளுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே சண்டை நடக்கும் சூழலில் இது தேவைதானா என அப்போதே விமர்சனங்கள் எழுந்தன. இப்போது, நூற்றுக்கணக்கான இந்தியர்கள் கடந்த ஓராண்டில் ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கிறது. இருதரப்பிலும் இழப்புகளும் தாக்குதல்களும் தொடரும் வேளையில் இந்தியா, பாகிஸ்தான், வங்க தேசம், உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான் உள்ளிட்ட நாட்டவரையும் தங்கள் நாட்டு ராணுவத்தில் ஒப்பந்த அடிப்படையில் சேர்த்துக் கொண்டிருக்கிறது ரஷ்யா. உக்ரைன் மீதான போர் காரணமாக ரஷ்ய படையில் சேர அந்நாட்டு இளைஞர்கள் தயக்கம் காட்டுவதாக கடந்த ஆண்டில் செய்திகள் வெளியாகியிருந்தன. அதனைத் தொடர்ந்து கடந்த 6 மாதங்களாகவே இதுபோல வெளிநாட்டு இளைஞர்களுக்கு பயிற்சி கொடுத்து தங்கள் நாட்டு ராணுவத்தில் சேர்த்துக் கொண்டிருக்கிறது ரஷ்யா.

விடுமுறை இல்லை, வெளியேற வேண்டுமானால் 6 மாதங்களுக்கு முன்பே தெரிவிக்க வேண்டுமென்ற கெடுபிடிகளும் விதிக்கப்பட்டிருக்கிறது. சிலரது கடவுச் சீட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இப்படி சேர்க்கப்படும் வெளிநாட்டு இளைஞர்களுக்கு பயிற்சி கொடுத்து, அவர்களை உக்ரைனுக்கு அனுப்ப ரஷ்யா திட்டமிட்டிருக்கிறது என குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. ரஷ்ய தரப்பில் இதனை மறுத்திருந்தனர். ஆனால் குஜராத்தைச் சேர்ந்த 23 வயது இளைஞர் ஒருவர் உக்ரைனின் டொனெட்ஸ்க் பகுதியில், போர்த் தாக்குதலில் கொல்லப்பட்டிருக்கிறார். சூரத் நகரைச் சேர்ந்த ஹெமில் அஷ்வினிபாய் என்ற இளைஞர், கடந்த ஆண்டு டிசம்பரில் பணியில் அமர்த்தப்பட்டிருக்கிறார். போர்க் களத்தில் இருந்து தனது மகனை மீட்டுத் தர வேண்டுமென ஹெமிலின் தந்தை சில வாரங்களுக்கு முன் கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால் ஒன்றிய அரசோ அதனை பொருட்படுத்தவில்லை.

அவர் மட்டுமல்ல, ஜம்மு காஷ்மீரில் இருந்து சென்ற ஒருவர், “பயிற்சியின்போது தனக்கு அடிபட்டு ஓய்வில் இருக்கிறேன். எங்களை போர் நடக்கும் பகுதிக்கு அனுப்ப திட்டமிட்டிருக்கிறார்கள். எவ்வளவு முயன்றும் இந்தியத் தூதகரத்தை தொடர்பு கொள்ள முடியவில்லை” என வீடியோ வெளியிட்டிருந்தார். அதற்கும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தற்போது கொல்லப்பட்ட ஹெமில் அஷ்வினிபாய் இருந்த பகுதியில் மேலும் சில இந்தியர்கள் பாதுகாப்பு உதவியாளர்களாக பணியில் இருக்கின்றனர் என கர்நாடகாவை சேர்ந்த சமீர் அகமது என்பவர் உறுதி செய்துள்ளார். அவரும் அங்குதான் இருக்கிறார். நரேந்திர மோடி ஆட்சியில் வேலை கிடைக்காத அவலத்தில், போர்க்களமாக இருந்தாலும் பரவாயில்லை என இளைஞர்கள் செல்லத் துணிந்திருக்கின்றனர். கொலைக்களமாக இருந்தாலும் பரவாயில்லை, வேலைக்கு அனுப்பி வைக்கிறோம் என அனுப்பிக் கொண்டிருக்கிறது பாஜக அரசு.

விடுதலை இராசேந்திரன்

Pin It