கோயில் விடுதலை அரசியலா? அவசியமா? என்ற தலைப்பில் விவாத நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றிருக்கிறது. இதில் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருக்கும் ஜி.ஆர்.சுவாமிநாதன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுப் பேசியிருக்கிறார். இந்த நிகழ்வில் ரமேஷ், அமெரிக்கை நாராயணன், ரங்கராஜன் நரசிம்மன், சுமந்த் ராமன் ஆகியோர் கலந்துகொண்டு பேசியிருந்தனர். இவர்களின் பின்னணி என்னவென்று நாம் சொல்ல வேண்டிய அவசியமில்லை. முதலில் மார்க்சிஸ்ட் கட்சியின் செயற்குழு உறுப்பினர் க. கனகராஜ் கலந்து கொண்டு பேசுவதாக இருந்தது. ஆனால் அவர் இந்த விவாதத்தில் பங்கேற்கவில்லை.

நிகழ்ச்சியில் பேசிய நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், கோயில்களை அரசுப் பிடியில் இருந்து விடுவிக்க வேண்டும் என்ற கருத்து குறித்து விவாதங்கள் தொடங்கப்பட வேண்டும் என்று பேசியிருக்கிறார். ஒரு நீதிபதி இப்படி அரசியலை பேசலாமா? என்பதை சுட்டிக்காட்டி தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் துணைத் தலைவரும் மூத்த வழக்கறிஞருமான சு.துரைசாமி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் ஆகியோருக்கு கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். அதனைத் தொடர்ந்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட், நீதிபதிகள் அரசியல் கருத்துகளை பேசுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்று பேசியிருக்கிறார்.

இப்படி நீதிபதிகள் வெளிப்படையாக அரசியல் கருத்துகளை பேசி சர்ச்சைகளை உருவாக்கிவருகின்றனர். அதேபோல் மதுரை உயர்நீதிமன்றக் கிளை நீதிபதி ஸ்ரீ மதி, இந்துக்கள் அல்லாதவர்கள் இந்துக்கள் கோயிலுக்குள் நுழையக்கூடாது என்று தீர்ப்பு வழங்கியிருக்கிறார். இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி சந்துரு விழுப்புரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இது குறித்து பேசும் போது :- இப்படியொரு தீர்ப்பை வழங்கியிருக்கிற அந்த நீதிபதி இந்துக்கள் என்றால் யார் என்பதையும் விளக்கியிருக்க வேண்டும். அதை அவரால் விளக்க முடியுமா? என்ற கேள்வியை அவர் எழுப்பியிருக்கிறார். பால ராமர் சிலையை செய்த அந்த சிற்பியாலே இனிமேல் அந்த சிலையை தொட முடியாது. அதற்கு காரணம் வர்ணாசிரம தர்மம், சனாதனம். அந்த சனாதனத்தை பற்றித்தான் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். அதற்காக அவர் தலையை சீவ வேண்டும் என பேசினார்கள் என்று சுட்டிக்காட்டி பேசியிருக்கிறார் முன்னாள் நீதிபதி சந்துரு.

நீதிபதிகள் சட்டத்தில் இருந்து விலகி மதவாதத்தையும், அரசியலையும் பேச கிளம்பியிருப்பது நீதித்துறையின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை சீர்குலைத்துவிடும் என்பதை சுட்டிக்காட்ட கடமைப்பட்டுள்ளோம். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சுட்டிக்காட்டியதைக் கருத்தில் கொண்டு இத்தகைய நீதிபதிகள் மதவாதத்தையும், அரசியலையும் பேசுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்பதே மக்களின் எதிர்ப்பார்ப்பு.

- விடுதலை இராசேந்திரன்

Pin It