‘இந்துத்துவா’ அரசியல் வரும் தேர்தலில் எடுபடாது என்ற முடிவுக்கு வந்த பா.ஜ.க.வும், ஆர்.எஸ்.எஸ்.சும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சூழ்ச்சி வலை வீசி வாக்குகளாக மாற்றும் திட்டத்தை உருவாக்கி வருகிறது.

சர்வதேச காதலர் தினமான பிப்ரவரி 14-யை ஒன்றிய அரசின் விலங்குகள் நல வாரியம் பசு மாடு அணைப்பு தினமாக கடைபிடிக்குமாறு விடுத்த வேண்டுகோளை இப்போது திடீரென்று ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. இதற்கு மக்களுடைய எதிர்ப்பு தான் காரணம் என்றாலும்கூட இதற்கு முன்பு எப்போதும் பிடிவாதமாக இருக்கிற ஒன்றிய பாஜக ஆட்சி இப்போது திடீரென்று தன்னுடைய குரலை ஏன் மாற்றிக் கொண்டு இருக்கிறது, இதற்குப் பின்னால் ஒரு மிகப் பெரிய அரசியல் சூழ்ச்சி அடங்கி இருப்பதை நாம் கவனத்தில் கொண்டாக வேண்டும்.

பிப்ரவரி 10 ஆம் தேதி டைம்ஸ் ஆப் இந்தியா நாளேடு ஒரு முக்கிய செய்தியை வெளியிட்டிருக்கிறது, 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் “இந்துத்துவ முழக்கம்” தங்களை கரை சேர்க்காது என்ற முடிவுக்கு பாரதிய ஜனதா கட்சி அனேகமாக வந்துவிட்டது, இதற்காக ஆர்எஸ்எஸ் தலைமையிடம் கருத்துகளைக் கேட்டு வருகிறது. ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் ஜாதி அமைப்புகளை தற்போது எதிர்க்கத் தொடங்கியிருக்கிறார், ஜாதி அமைப்பிற்குக் காரணம் பிரிட்டிஷ்காரர்கள் தான் என்ற கருத்தை இதுவரை பேசி வந்த ஆர்.எஸ்.எஸ் இப்போது தன்னுடைய குரலை மாற்றிக் கொண்டு பண்டிட்கள் என்ற பார்ப்பனர்கள் தான் ஜாதி அமைப்பைக் கட்டி காத்து வருகின்றார்கள் என்று வெளிப்படையாகவே மோகன் பகவத் பேசியிருக்கிறார்.

bhagwat speech in toiஇந்த மாற்றத்திற்குப் பின்னால் உள்ள காரணங்கள் என்ன என்பதையும் ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேடு கூறியிருக்கிறது.

இந்துத்துவத்திற்கு மாற்றாக தலித் பிற்படுத்தப்பட்ட, இஸ்லாமிய மக்களை ஒரே குடையின் கீழ் கொண்டு வந்து, தங்களது ஆதரவு சக்தியாக மாற்றி அதனை வாக்கு வங்கியாக மாற்றுவதன் மூலம் தான் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் கரை சேர முடியும் என்ற முடிவுக்கு பாஜகவும் வந்துவிட்டது, ஆர்.எஸ்.எஸும் இதே கருத்தைத் தான் இப்போது வலியுறுத்திக் கொண்டிருக்கிறது.

இந்த சூழ்ச்சியின் அடிப்படையில் தான் ஒடுக்கப்பட்ட மக்களை ஏமாற்றுவதற்கான கருத்துகளை இப்போது அவர்கள் பார்ப்பனர் எதிர்ப்பு, ஜாதி எதிர்ப்பு, இஸ்லாமிய ஆதரவு என்ற முகமூடிகளோடு வந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை ஒடுக்கப்பட்ட மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

உத்திரபிரதேசத்தில் இதே தந்திரம் தான் எங்களுக்குப் பயன் அளித்தது என்று கூறும் பாஜகவினர், அங்கே கடந்த தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதற்கான காரணம் தலித் மக்களில் குறிப்பிட்ட பிரிவுகளை (கேவத் மற்றும் நிஷாத்) தங்களின் ஆதரவு சக்திகளாக மாற்றியதும் பஸ்மந்தா முஸ்லிம்களை தங்களது ஆதரவு சக்திகளாக மாற்றியதும் தான் காரணம் என்று கூறுவதாக ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேடு செய்தி வெளியிட்டு இருக்கிறது.

இதன் வெளிப்பாடே இதுவரை சனாதனப் பெருமை பேசிய ஆளுநர் ரவி, இப்போது தமிழ்நாட்டில் தலித்துகள் உரிமை பற்றி குரலை மாற்றிப் பேசத் தொடங்கியிருக்கிறார். அதேபோல் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக மோடி செயல்படுவதாக ஒரு நாடகம் அரங்கேற்றப்படுகிறது. ஒன்றிய இணை அமைச்சர் முருகன், யாழ்ப்பாணம் சென்றதும் அவருடன் ஒட்டிக் கொண்டு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையும் உடன் சென்றதையும் இத்துடன் இணைத்துப் பார்க்க வேண்டும்.

ஆக ஒடுக்கப்பட்ட மக்களுக்கும், இஸ்லாமிய மக்களுக்கும் பார்ப்பனியம் விரிக்கின்ற சூழ்ச்சி வலையில் ஏமாறாமல் ஒடுக்கப்பட்ட மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டியது மிக முக்கியம் என்பதை எச்சரிக்கையுடன் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

- விடுதலை இராசேந்திரன்

Pin It