பாரதிய ஜனதாக் கட்சி ஆட்சிக்கு எதிராக 26 எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து தங்களது கூட்டணிக்கு இந்தியா (I-N-D-I-A) என்று பெயர் சூட்டியுள்ளனர். மோடியால் இதை சகித்துக் கொள்ள முடியவில்லை, இந்தியன் முஜாகிதின், கிழக்கிந்திய கம்பெனியும் இந்தியா என்ற பெயரையே பயன்படுத்தியது என்று கூறி இந்தியா மீது வெறுப்பை உமிழ்ந்துள்ளார். அவர்களும் தங்களது பெயர்களில் இந்தியா என்று தான் வைத்திருக்கிறார்கள் என்று மோடி பதிலளித்திருக்கிறார். இந்தியா என்ற பெயர் தீவிரவாதிகளால் பயன்படுத்தப்படுகிறது என்ற கருத்தை மோடி வலியுறுத்துகிறார்.

தமிழ்நாட்டில் பாஜக பார்ப்பன தலைவர்களில் ஒருவரான ஹெச்.ராஜா ‘Anti Indian’ என்று பேசுவதை வழக்கமாக வைத்திருக்கிறார், இப்பட்டியலில் தற்போது மோடியையும் சேர்த்துக் கொள்ளலாம், இதற்கு சில வரலாற்றுப் பின்புலன்களும் உண்டு.

ஆர்.எஸ்.எஸ் என்ற சித்தாந்தத்தை உருவாக்கிய கோல்வாக்கர் Bunch Of Thoughts என்ற நூலை உருவாக்கினார். இது இந்துக்களுக்கான வேத புத்தகம் என்று சங்கிகளால் கூறப்படுகிறது, அந்த வேத புத்தகத்தில் கோல்வாக்கர் கூறுகிறார், இந்தியா என்ற சொல் இஸ்லாமியர்களையும் கிறிஸ்துவர்களையும் உள்ளடக்கிய சொல், அந்த சொல்லை நாம் பயன்படுத்தக் கூடாது, பாரதியம் என்பது மட்டும் தான் இந்துக்களை குறிக்கின்ற சொல். எனவே பாரதியம் என்ற ஒன்றை மட்டும் தான் நாம் பயன்படுத்த வேண்டும் என்று தெளிவாக குறிப்பிடுகிறார் கோல்வாக்கர். அதன் காரணமாகத்தான் ஆர்.எஸ்.எஸ் அதன் பரிவாரங்கள் எந்த அமைப்புக்கும் இந்தியா என்ற பெயரை சூட்டுவதில்லை, இந்தியா என்ற பெயரை அவர்கள் முழுமையாக தவிர்த்து வருகின்றனர். ‘இந்திய ஜனதா கட்சி’ என்பதற்கு பதிலாக ‘பாரதிய ஜனதாக் கட்சி’ என்று தான் மோடியின் கட்சிக்கும் பெயர் சூட்டப்பட்டுள்ளது. அந்த பாரதிய ஜனதா கட்சியின் துணை அமைப்புகள் எதற்கும் இந்தியா என்ற பெயரை சூட்டவே இல்லை,

நம்மைப் பொறுத்தவரை நீ பாரதியனாக இருக்க விரும்புகிறாயா? இல்லை இந்தியனாக இருக்க விரும்புகிறாயா? என்று கேட்டால் இந்தியனாக இருக்க விரும்புகிறேன் என்பதுதான் சரியான பதிலாக இருக்க முடியும். நீ இந்தியனாக இருக்க விரும்புகிறாயா? இல்லை தமிழனாக விரும்புகிறாயா? என்று கேட்டால் தமிழனாக இருக்க விரும்புகிறேன் என்று சொல்வது தான் நமது பதிலாக இருக்க முடியும்

அசாம் மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வாஸ் சர்மா, அண்மையில் தனது டிவிட்டர் பதிவில் “இந்தியா” என்ற பெயர் அரசியல் சட்டத்தில் இருந்து நீக்கிவிட வேண்டும். அது பிரிட்டிஷாரிடமிருந்து கடன் வாங்கிய சொல். இந்திய நாகரீகம் வேறு, பாரதிய நாகரீகம் வேறு” என்று வெளிப்படையாகவே பதிவிட்டிருக்கிறார்.

பாஜக மாநிலங்களவை உறுப்பினரான நரேஷ் பன்சால் என்பவர் நாடளுமன்றத்தில் பேசுகையில் “பிரிட்டிஷ் காலனி ஆட்சி சூட்டியப் பெயர் இந்தியா, நமது நாட்டின் உண்மையான பெயர் சமஸ்கிருத மொழியில் உள்ள ’பாரத்’ என்பதுதான்” அரசியலமைப்புச் சட்டத்திலிருந்தே இந்தியா என்ற சொல்லை நீக்க வேண்டும் என்றும் பேசியுள்ளார்.

இப்போது பாரதியத்துக்கும் இந்தியாவுக்கும் நடக்கும் போரில் பாரதியத்துக்கு எதிராக இந்தியா என்ற பெயரை சூட்டியிருப்பது தான் அவர்களை எதிர்ப்பதற்கான சரியான ஆயுதமாக இருக்கும் என்ற பார்வையில் நாம் பிரச்சனையை நாம் அணுக வேண்டி இருக்கிறது. 26 எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து சூட்டியிருக்கிற இந்தியா என்ற பெயர் பாஜகவை நிலைக்குலையச் செய்துள்ளது.

‘பாரதம் என்று இவர்கள் அப்போது கூறியது பர்மா, பாகிஸ்தான், ஆப்கான், இலங்கை நாடுகளை உள்ளடக்கி இருந்தது. இப்போது அவைகள் தனி நாடு ஆகிவிட்டன, இந்தியாவின் எல்லை வரையறுக்கப்பட்ட நிலையில் பாரதம் என்பதற்கு என்ன அர்த்தம் இருக்க முடியும்.

- விடுதலை இராசேந்திரன்

Pin It