உணவுப் பொருட்களின் தரம் ஒவ்வொரு வகைக் கடைகளிலும் ஒவ்வொரு விதமாக இருக்கும். அதைப் பொறுத்து அவற்றின் விலைகளும் இருக்கும். தரமில்லாத உணவை உண்டு மக்கள் நோய்வாய்ப்பட்டு விடக் கூடாது என்ற நல்லெண்ணத்தில், தரமான உணவுப் பொருட்களைத் தான் விற்க வேண்டும் என்று அரசாங்கம் விதிமுறைகளை வைத்துள்ளது. இது மிகவும் வரவேற்கத் தக்க சட்டம் தான். ஆனால் இச்சட்டத்தைச் செயற்படுத்துவதில் கையாளப்படும் நடைமுறைகள் மிகவும் பாரபட்சமாக உள்ளன.

சில ஆண்டுகளுக்கு முன்பு கோகோ கோலா போன்ற குளிர்பானங்கள் உடல் நலனுக்குக் கேடானவை என்று அல்லல்லகோலமாய்ப் பிரச்சாரம் செய்யப்பட்டது. நட்சத்திர ஹோட்டல்கள் உட்பட பல உணவுக் கடைகளில் சில காலம் அவை தடை செய்யவும் பட்டிருந்தன. சிறிது நாட்கள் சென்ற பின், எந்த விதத்திலும் மாற்றம் இல்லாத அதே குளிர்பானங்கள் மீண்டும் விற்கப்படத் தொடங்கின. அவை சுத்தமானவை என்று அதன் உரிமையாளர்கள் விளம்பரம் செய்தார்கள். விளம்பரத்திற்கு ஆன செலவையும் சேர்த்து விலையைக் கூட்டி விட்டாரகள். குளிர்பானங்களில் உடல் ஆரோக்கியத்தைக் கெடுக்கும் பொருட்கள் உள்ளன என்று கூறிய அரசுத் துறை நிறுவனங்கள் இந்தப் பொய் விளம்பரங்களையும் கண்டு கொள்ளவில்லை; அவை மறுபடியும் விற்பனையில் இருப்பதையும் கண்டு கொள்ளவில்லை. இடையில் என்ன நடந்திருக்கும் என்பதை ஒரு அடிமட்ட இந்தியனும் எளிதாகப் புரிந்து கொண்டு இருப்பான். குளிர்பானத்தின் விலை உயர்வில் அதற்கும் பங்கு உண்டு என்பதையும் அவனால் எளிதில் புரிந்து கொள்ள முடியும்.
 
          இதே போல், தெருக்களில் தள்ளுவண்டிகளிலும், கூடைகளிலும், கதியற்ற ஏழை மக்களுக்காக உணவு வகைகளை விற்கும் கடைகளுக்கும் சோதனைகள் வரவே செய்கின்றன. அது போன்ற சோதனை 26-4-2011 அன்று, வேறு கதியற்ற சிறு வணிகர்கள் சந்திக்க நேர்ந்தது. சென்னை மாநகராட்சியின் ஆரோக்கியத் துறை (Health Department) அதிகாரிகள், தியாகராய நகர், சைதாப்பேட்டை, கோடம்பாக்கம், தண்டையார்பேட்டை, இராயபுரம், விருகம்பாக்கம், கே.கே.நகர், கீழ்ப்பாக்கம், அயனாவரம் உள்ளிட்ட நகரின் பல இடங்களில் 300க்கும் மேற்பட்ட கடைகளில்  சோதனை செய்து தரக்குறைவான உணவுப் பொருடகளைப் பறிமுதல் செய்தனர். மேலும் இது போன்று தரக் குறைவான உணவுப் பொருட்களை விற்கக் கூடாது என்று தெரு வணிகர்களைக் கடுமையாக எச்சரித்தும் உள்ளனர். வயிற்றுப் பிழைப்பிற்கு மேல் எதையும் சம்பாதிக்க முடியாத இந்த ஏழை வணிகர்கள் குளிர்பானப் பெரு முதலாளிகளைப் போல் விளம்பரம் செய்ய முடியுமா? அடிமட்ட இந்தியனுக்கும் தெரிந்த வெளிச்சமான இருட்டு வழியில் செல்லும் வசதி தான் படைத்தவர்களா? இரண்டும் இல்லாத பொழுது அம்மாதிரிக் கடைகள் மீண்டும் வந்து விடுகின்றனவே? எப்படி?
 
          இச்சிறு வணிகர்கள் கதியற்ற ஏழை மக்களைத் தான் நம்பி இருக்கிறார்கள். வருமானம் குறைவாக உள்ள ஏழை மக்களால் குறைந்த விலையில் உணவை விற்கும் இச்சிறு வணிகர்களிடம் இருந்து தான் வாங்க முடியுமேயொழிய மற்ற உணவுக் கடைகளுக்குச் செல்ல அவர்களுடைய பொருளாதார நிலைமை இடம் தராது. ஆகவே விளம்பரம் தேவையின்றியே இவ்வணிகம் மறுபடியும், அதுவும் உடனேயே தலை தூக்கும். அடிமட்ட இந்தியனுக்கும் தெரிந்த வெளிச்சமான இருட்டு வழியில் செல்லாமலேயே மீட்சி அடைகிறார்களே என்று மகிழ்ச்சி அடைகிறீர்களா? உங்கள் கணிப்பு மிகவும் தவறு. பெரு முதலாளிகள் மகிழ்ச்சி அடையச் செய்வதை விட இச்சிறு வணிகர்களால் அரசு அதிகாரிகள் அதிக மகிழ்ச்சி அடைவார்கள். எப்படி என்று கேட்கிறீர்களா?
 
          ஒரு எலியைக் கூட விரட்டி அனைத்து வழிகளையும் மறித்தால் அது வேறு வழியின்றி, சீறிப் பாய்ந்து விடும். ஆனால் பொறுமையே உருவான நம் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை முற்றிலும் இழக்கும் நிலை வந்தாலும் பொறுமையைக் காப்பார்கள். தரமான உணவுப் பொருட்களை வாங்கும் அளவிற்கு வசதி இல்லாத மக்கள் இருப்பதினாலும் தங்களிடம் உள்ள குறைந்த மூலதனத்தைக் கொண்டு இதற்கு மேல் செய்ய வழியில்லையே என்றும் அதனால் தானே குறைந்த விலையில் உணவைத் தயாரிக்க வேண்டியுள்ளது என்றும் வினாக்களைத் தொடுக்கவே மாட்டார்கள். இச்சூழ்நிலைக்குத் தாங்கள் காரணம் அல்ல எனபதையும் அரசின் அயோக்கியத்தனமான பொருளாதாரக் கொள்கைகள் தான் காரணம் என்றும் உணரவே மாட்டார்கள். மக்களின் இந்த மெளடீகம் தான் முதலாளிகளும் முதலாளித்துவ அறிஞர்களும், அரசு அதிகாரிகளும் அமைதியாகச் சுகத்தை அனுபவிக்கும் அடிப்படையாக உள்ளது. அரசு அதிகாரிகளைப் பொறுத்த மட்டில் முதலாளிகள் எவ்வளவு தான் அன்பளிப்பு கொடுத்தாலும் அதை அனுபவிப்பதற்கான அமைதியான சூழ்நிலையைக் குலைக்காமல் இருக்கும் கண்ணுக்குத் தெரியாத மக்களின் மெளடீகம் தான் எல்லாவற்றையும் விட மிக உயர்ந்த அன்பளிப்பு.
 
- இராமியா

Pin It