தாயினும் இனிய தனித்தலைவர் - நம்மைத்
தலைநிமிர வைத்த பெருந்தலைவர்!
ஆயிரம் காலத்துக்கு ஒருதலைவர் - அண்ணல்
அம்பேத்காரே நம்தலைவர்!

தவறு சொல்ல முடியாத
தலைவர் இங்கே யாரு?
தாழ்த்தப்பட்டோர் விலங்கொடித்த
மேதை அம்பேத்காரு!
இவரைப் போல இந்தியாவில்
படித்தவரைக் கூறு?
இன்னொரு இமயமலை
எங்கள் அம்பேத்காரு!

எத்தனையோ அவமானங்கள்
இவர் அடைந்தாரு!
இந்துமதக் கொடுமை கண்டு
இதயம் நொந்தாரு!
முத்தருமை பன்றிகட்குத்
தெரிவதே இல்லை!
மூதறிஞர் அம்பேத்காரை
மூடர் அறிவதில்லை!

விடியவிடியத் தூங்கும் மக்களை
விழிக்க வைத்தாரு!
விரல்கள் தேய எழுதி எழுதித்
தெளிவளித்தாரு!
கொடியமூடக் குழிவிழுந்த
தலித் இனத்தாரைக்
கொடுமுடியில் ஏற்றிவைத்தே
உயர்வளித்தாரு!

அடங்க மறுக்கும் சேரிப் புயலைத்
தடுக்க முடியுமா?
ஆவேசச் சினப்புலியை
அடக்க முடியுமா?
கடக்க முடியாக் கடலின் சீற்றம்
கருணை காட்டுமா?
காலமெல்லாம் சேரிசனம்
காலில் கிடக்குமா?

ஆறுவது சினம் என்பார்
அந்தக் காலம்தான்!
ஆறாத எங்கள் சினம்
நெருப்புக் கோளம்தான்!
வேரோடு சாதிமத
முள்மரங்களை
வெட்டிஎரித்து வெறியடங்கும்
சேரிசனங்கதான்!

புதியதொரு போதிமரம்
பூவுலகின் ஆதிமரம்
புரட்சியாளர் அம்பேத்கரை
உயர்த்திக் காட்டுவோம்!
உதிரமையைத் தொட்டு தொட்டு
உத்தமர்நம் அம்பேத்காரின்
ஓவியத்தைக் குடிசையயலாம்
மகிழ்ந்து தீட்டுவோம்!

Pin It