1944ஆம் ஆண்டு ஆகஸ்டு 27ஆம் தேதி சேலத்தில் கூடிய தென்னிந்திய நல உரிமைச் சங்க மாநாட்டில் தான் அமைப்பின் பெயர் திராவிடர் கழகமாக மாற்றப்பட்டது. பெரியார் எழுதி அண்hணவால் படிக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்பு மிக்க அத்தீர்மானம், ‘அண்ணாத் துரை தீர்மானம்’ என்று வரலாற்றில் அமைக்கப்படுகிறது. பெயர்மாற்றம் மட்டுமல்லாது இயக்கம் பண்பு மாற்றமும் பெற்றது. அதுவரை தேர்தலில் போட்டியிட்டு வந்த தென்னிந்திய நல உரிமைச் சங்கம் அதற்குப் பிறகு தேர்தலில் போட்டியிடாத சமுதாயப் புரட்சி இயக்கமாக மாறியது. 75 ஆண்டுகாலம் நிறைவு பெற்றுள்ளது. பெரியாரின் திராவிடர் கழகம் 1944ஆம் ஆண்டில் பெயர் மாற்றம் கொண்டு வரப்பட்ட மாநாட்டில் என்ன நடந்தது என்ற வரலாற்றுத்தகவலை ‘விடுதலை’ நாளேடு 2.9.1944இல் பதிவு செய்துள்ளது. இளைய தலைமுறையின் சிந்தனைக்காக அந்தக் கட்டுரை இங்கே வெளியிடப்படுகிறது.

16ஆவது தென்னிந்திய நல உரிமைச் சங்க மாநாடு சேலத்தில் நடத்த 1940ஆம் வருஷத்திலேயே திருவாருரில் அழைக்கப்பட்டது. அதன்பிறகு 43ஆம் வருஷம் சேலத்தில் நிர்வாக சபை கூட்டம் போட்ட காலத்தில் சேலம் சேர்மன் தோழர் ரத்தினம் பிள்ளையவர்களாலும் குகை பிரபல வியாபாரி  கே. ஜெகதீசன் அவர்களாலும், வக்கீல் தோழர் நெட்டோ அவர்களாலும் அழைக்கப் பட்டபடி ஒரு வருஷ காலமாக சேலத்தில் நடத்த முயற்சி எடுத்து வந்த மாநாடு 27.08.1944ஆம் தேதி சேலம் விக்டோரியா மார்க்கட்டில் போடப்பட்டிருந்த மாபெரும் கொட்டகையில் ஆடம்பரத் தோடும் ஆரவாரத்   தோடும் உற்சாகத்தோடும் உருப்படியான வேலைத் திட்டங்களோடும் வெற்றிகரமாக நடந்த விபரம்:

பெரியார் வருகை

மாநாட்டுக்கு முதல் நாளாகிய 26ஆம் தேதியே தோழர்கள் சவுந்தரபாண்டியன், அண்ணாதுரை, வி.வி.ராமசாமி, கெ.ஏ.பி. விசுவநாதம் ஆகியவர்களும் பல இடங்களிலிருந்து சுமார் ஆயிரம் பிரதிநிதிகளும் வந்துவிட்டனர். அடுத்த நாள் காலையில் மாநாட்டுத் தலைவர் பெரியார் ஈ.வெ.ராமசாமி அவர்களும் மற்றும் சுமார் 3000 பிரதிநிதிகளும் தமிழ் நாட்டிலுள்ள எல்லா ஜில்லாக்களிலிருந்தும் வந்து கூடிவிட்டார்கள். பெரியார் ஏறிவந்த ரயில் வந்த உடனே ரயில் மேடையில் கொடியுடன் சுமார் 200 தொண்டர்களும் 400, 500 உள்ளூர் மக்களுமாக பெருத்த ஆரவாரத்தோடு பெரியாரை வரவேற்று அவருக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தோழர் ரோசு அருணாசலம் அவர்கள் மாளிகைக்கு வாழ்த் தொலியோடு அழைத்துச் செல்லப்பட்டார்கள்.

அங்கு சென்று சிற்றுண்டி அருந்தியதும் தோழர் பாண்டியன் அவர்களும், தோழர் அண்ணா துரையவர்களும் தலைவர் இருந்த ஜாகைக்கு வந்து தீர்மானங்களைப்பற்றி பேசி “குடிஅரசு”, “திராவிட நாடு” பத்திரிகைகளில் வெளிவந்த தீர்மானங்களில் பட்டம் பதவி விடுதல் என்ற தீர்மானங்கள் தவிர மற்ற தீர்மானங்கள் எல்லாராலும் ஒப்புக்கொள்ளப் படுகிறதென்றும் தெரிவித்ததோடு பட்டம் பதவி விடுகிற தீர்மானத்திலும் ஒரு சிறு திருத்தத்தோடு அதை அப்படியே ஒப்புக்கொள்வதில் யாருக்கும் எவ்வித ஆட்சேபனையில்லையென்றும் தெரிவதாக வும் தெரிவித்ததோடு இத்திருத்தத்தோடு எல்லாத் தீர்மானங்களும் மாநாட்டில் நிறைவேற்றும் விஷயத்தில் யாவரும் கட்டுப்பாடாக ஒருவருக் கொருவர் ஒத்துழைக்க வேண்டுமென்று முடிவு செய்யப்பட்டது.

ஊர்வலப் புறப்பாடு

ஊர்வலத்தில் இரட்டைக் குதிரை பூட்டிய பெரியதொரு கோச்சு வண்டியில் பெரியார், பாண்டியன், வரவேற்புக் கழகத் தலைவர் மூவரும் மாலையிட்டு அமர்த்தப்பட்டனர்.  பிறகு மாநாட்டுத் திறப்பாளரும், கொடியேற்றுபவருமாகிய தோழர்கள் கே.ஏ.பி.விசுவநாதம், பி. பாலசுப்பிரமணியம் ஆகியவர்களும் வண்டியில் உட்கார வைக்கப்பட்டார்கள். அந்த சமயத்தில் பொது ஜனங்கள் பலர் ஆட்சேபனைக் குறிகள் காட்டினார்கள் என்றாலும் பெரியார் கேட்டுக் கொண்டதின் பேரில், ஆட்சேபனை குரல்கள் அடங்கி விட்டன. ஊர்வலத்திற்கு தொடங்கிய இடத்திலேயே சுமார் 20000 மக்கள் போல் கூடிவிட்டார்கள். கோச்சு வண்டிக்கு முன்னால் ஜனங்கள் ஒரு பர்லாங்கு தூரம் வரையிலும் நெருக்கமாக நிறைந்திருக்க, 5 ஜதை பாண்டு செட்டுகளும், 10 ஜதை மேளம், 100 ஜதை தப்பட்டை, 40 கொம்புகளும், தொண்டர்கள் ஏறிய 40 குதிரைகளும், 2 யானைகளும் முன்செல்ல, 10.30 மணிக்கு ஊர்வலம் புறப்பட்டது.

ஊர்வலம் புறப்பட்டு கடைவீதிக்குள் வருவதற்குள் ஊர்வலத்தில் கலந்து கொண்ட ஜனங்களின் எண்ணிக்கை ஒன்றுக்கு இரண்டு பங்காய்விட்டது. இதில் முக்கியமாய் குறிப்பிடத்தக்கது பெண்கள் ஆயிரக்கணக்கில் ஊர்வலத்தில் கலந்துகொண்டதும், திருச்சி, பொன்மலை முதலிய ஊர்களிலிருந்து வந்த தொண்டர் படைகள் தங்கள் தங்கள் கொடி சின்னங்களுடன் தனித்தனியாக அணிவகுத்துச சென்றது மாகும்.

ஊர்வலத்தில் வழி நெடுக மாலையிட்டார்கள். தஞ்சாவூர் திராவிட சுயமரியாதைத் தோழர்களால் பெரியாரே எங்கள் தலைவர் என்றும் சூழ்ச்சியாவும் வீழ்ச்சியடைக என்றும் பொறிக்கப் பட்ட துண்டுப் பிரசுரங்கள் பதினாயிரக்கணக்கில் வழங்கப்பட்டன. வழி நெடுக பெரியார் வாழ்க, திராவிடர் கழகம் ஓங்குக, பாண்டியன் வாழ்க, துரோகிகளும் சதிகாரர்களும் அயோக்கியர்களும் அழிக என்ற உற்சாகக் குரல்கள் காது செவிடுபடத் செய்தன.

ஊர்வலம் சுமார் 11.30 மணிக்கு மாநாட்டுக் கொட்டகையை வந்தடைந்தது. ஊர்வலம் வருவதற்கு முன்னமேயே கொட்டகையில் ஆயிரக்கணக்கான பேர்கள் நிறைந் திருந்தார்கள். தோழர் அண்ணாதுரை அவர்கள் மாநாட்டுக் கொட்டகையில் நுழைந்தபோது பெருத்த ஆரவாரம் செய்தார்கள். பெரியார் அவர்கள் பெரும் கஷ்டத்துடன் பெரும் கரகோஷத்தினிடையே மேடைக்கு அழைத்து வரப்பட்டார்கள்.

கூர்க்க சிப்பாய்கள் நீக்கம்

பிரதிநிதிகள் தியாகராயப் பந்தலுக்குள்  நுழைவதில், கொட்டகை வாயிலில் நேப்பாளத்திய கூர்க்க சிப்பாய்களை வைக்கப்பட்டிருந்ததில், அவர்களோடு சச்சரவு ஏற்பட்டதும் அதன் பயனாய் பெருத்த கலவரம் ஏற்பட்டதுடன் உயிர்க் கொலையும் ஏற்படும்படியான அளவுக்கு ஆத்திரம் ஏற்பட்டு விட்டது! தோழர் அண்ணாதுரை அவர்களின் அதி தீவிர முயற்சியினால் குழப்பம் ஒரு வழியில் அடக்கப்பட்டது. கூர்க்கக் காவலாளிகள் எல்லாம் அப்புறப்படுத்தப்பட்டார்கள். இது கொட்டகைக்குள் பிரதிநிதிகளை தாராளமாகச் செல்ல விடாமல் தடுப்பதற்காக செய்யப்பட்ட தந்திரம் என்று பலருக்கும் தோன்றியதாலேயே பிரதிநிதிகள் வெறி கொண்டுவிட நேர்ந்தது என்றுதான் சொல்லவேண்டும். அதன் பயனாக மாநாட்டைக் கூட்டியவர்களுக்கும் பழி யேற்பட நேர்ந்தது.

கொடியேற்றல் பிரதிநிதிகள் ஆட்சேபனை

மாநாடு கூடினதும் மாநாட்டுக் காரியதரிசி தோழர்  நெட்டோ அவர்கள் தோழர் பாலசுப்ரமணியம் அவர்களை கொடியேற்றி வைக்கும்படி பிரேரேபித்தார். சொன்ன உடனே பிரதிநிதிகள் கூட்டத்தில் இதில் எழுத முடியாத பலவிதமாக கெட்ட வார்த்தைகளும் மறுப்பு ஆட்சேபனைகளும் கிளம்பின. உடனே வரவேற்புக் கழகத் தலைவர் சேர்மன் தோழர் ரத்தினம் பிள்ளை வந்து சமாதானமாக, இந்த மாநாட்டின் பலனாய் நம் கட்சியில் ஒரு சின்ன மனிதனுக்காவது எவ்வித அபிப்பிராயபேதத்திற்கும் சிறிதும் இடமில்லாமல் எல்லோரையும் அழைத்திருக்கிறோமேயல்லாது மற்றப்படி வேறு எந்த விதமான எண்ணங்கொண்டும் நாங்கள் தோழர் பாலசுப்பிரமணியம் முதலியார்களை தருவிக்கவில்லை என்றும் அவர்கள் மிக்க ஒழுங்காகப் பேசி நேர்மையாக நடந்து கொள்வார்களென்றும் சொல்லி கொடியேற்றுவதை ஆதரித்தார். பெரியார் அவர்களும் ஆத்திரப்பட்டவர்களுக்கெல்லாம் கையமர்த்தி கேட்டுக்கொள்வதின் மூலம் சமாதானம் சொல்லி யாதொரு கலவரமும் இல்லாமல் இருக்கும்படி வேண்டிக் கொண்டார்.

பிறகு தோழர் பாலசுப்பிமணிய முதலியார் சிறிது நேரம் ஆங்கிலத்தில் பேசினார். (அது பின்னால் வரும்) பேச்சு முழுவதும் சரணாகதி பேச்சாகவும் தன்னுடைய நடவடிக்கைக்கு மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாகவும், தானும் தன் பின் சந்ததியும் என்றென்றும் பெரியார் தலைமையில் தொண்டாற்றுவோம் என்றும், நான் பெரியாருக்கு ஓய்வு  கொடுப்பதற்கு ஆகவே வேறு எந்ததெந்த ஆள்களுடைய பெயர்களை தலைமை ஸ்தானத்திற்கு குறிப்பிட்டேனோ அவர்கள் எல்லாம் குறிப்பாக சர். ஆர்.கே. சண்முகம் செட்டியார் முதலியவர்கள் எல்லாம் கட்சிக்கு துரோகிகளாய் விட்டார்கள் என்றும், பெரியார் தமிழ்நாட்டின் காரல்மார்கஸ் என்றும் ஏராளமாகப் புகழ்ந்து பேசியதோடு அவரிடத்தில் நான் குறை கண்டதாக சொல்வதெல்லாம் இன்னும் அதிகமாக வேலை செய்ய வேண்டும் என்று ஊக்கப்படுத்த வேண்டு மென்ற எண்ணத்தைக் கொண்டேயென்றும் வேறு எந்தவித மான குறை அவரிடத்தில் கண்டதில்லையென்றும் சொன்னதோடு பெரியாரே என்றென்றும் தலைவராயிருந்து திராவிடஸ் தான் வாங்கிக் கொடுத்து அதில் அவரே முதல் பிரசிடெண்டாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறேன் என்றும் அதற்காக தாம் எல்லாவிதமான தியாகங்கள் செய்யத் தயாராயிருப்பதாகவும் தெரிவித்தார்.

மற்றும் தோழர் பாலசுப்பிரமணியம் அவர்கள் நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க சங்கதி என்னவென்றால், ஊர்வலத்தில் பெரியாருடன் வண்டியில் உட்காந்திருக்கும்போது தோழர் பாலசுப்பிர மணியத்துக்கு போடுவதற்காகக் கொண்டுவந்த மாலைகள் எல்லாவற்றையும் இரண்டு கையில் வாங்கி எழுந்திருந்து பெரியாருக்கு அணிவித்து பொது மக்களுக்கு, தான் பெரியாரின் அடிமை என்பதுபோல் காட்டிக் கொண்டதாகும். தோழர் பாலசுப்பிர மணியம் அவர்கள் பேச்சு ஆங்கிலத்தில் முடிந்த உடனே, தோழர் க. அன்பழகனால் அது தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது.

திறப்பு விழா

பின் மாநாட்டைத் திறந்துவைக்கும்படி தோழர் கே.ஏ.பி. விசுவநாதத்தைக் கேட்டுக் கொண்டார்கள். தோழர் விசுவ நாதம் அவர்கள் பேச எழுந்த போதும் சிறிது எதிர்ப்புக் குறி காணப்பட்டதென்றாலும் அது உடனே பெரியார் செய்கையால் அடக்கப்பட்டது. தோழர் விசுவநாதம் அவர்கள் பேசியதும், சற்றேறக்குறைய தோழர் பாலசுப்பிரமண்யம் பேசியது போலவேயிருந்தாலும் பெரியார் சர்வாதிகாரியாய் இருப்பதைக் கூட தான் ஆதரிப்பதாகவும் பேசி, சாமர்த்தியமான முறையில் சாடைமாடையாக சில கிண்டல் சொல்லையும் சொல்ல ஆசைப்பட்டார். கூட்டத்திலுள்ளவர்களில் சில பிரதிநிதிகள் ஒருமையில் பேசி எச்சரிக்க ஆரம்பித்தவுடன் மறுபடியும் பெரியாருக்குப் புகழ்மாலை சூட்டுவதில் முனைந்து விட்டார்!

அது முடிந்ததும் வரவேற்புக் கழகத் தலைவர் சேர்மன் தோழர் ரத்தினம் பிள்ளையவர்கள் வரவேற்புச் சொற் பொழிவை நிகழ்த்தினார். அது பெரும்பாலும் பெரியாரைப் புகழ்ந்தும் அவரைத் தவிர வேறு தலைவர் திராவிடர்களுக்கு கிடையாதென்றும் ஒற்றுமையை வலியுறுத்தியும் திராவிட நாட்டுப்பிரிவினையை ஆதரித்தும் கட்சிக் கட்டுப்பாடுகளை வலியுறுத்தியும் பேசப்பட்டதாகும். பின்னர் பெரியார் அவர்களைத் தலைமை வகிக்கும்படி பிரரேபித்தார்.

தோழர்கள் நெட்டோ, பாண்டியன், ராமாமிர்தத்தம்மாள், ராவ்சாகிப் துரைசாமி பிள்ளை, கணேசசங்கரன், திருவொற்றியூர் டி. சண்முகம் ஆகியவர்கள் ஆதரித்தார்கள். தோழர் சண்முகம் அவர்கள் பேசும்போது, தோழர்கள் பாலசுப்பிர மணியம், விசுவநாதம் ஆகியவர்கள் பேசியபடி நடந்து கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் பேசிய பேச்சை ஞாபகத்தில் வைத்துக் கொள்கிறார்களா அல்லது தங்கள் வழக்கம் போல் நடக்கிறார்களா பார்ப்போம் என்றும் வெளி யில் போனதும் பழையபடி கர்ணம் போடக் கூடா தென்றும் எச்சரிக்கை செய்து, யார் தானாகட்டும் இன்றைய நிலையில் பெரியாரைத் தவிர வேறு யார் பெயரை பிரேரேபிக்கத் தயாராயிருக்கிறீர்கள் என்று கேட்டுவிட்டு ஆதரித்தது குறிப்பிடத்தக்கதாகும்.

பின், பெரிய ஆரவாரத்துடனும், வாழ்த் தொலியுடனும், நீண்ட கைத்தட்டலுடனும் பெரியார் நீண்ட சொற்பொழி வாற்றினார்.

விடுதலை 02.09.1944

Pin It