வழிபாட்டுத் தலங்களில் ஒலி பெருக்கி அலறலுக்கு கண்டனம்

சோனுநிகாம், பிரபல இந்தி திரைப்படப் பாடகர். பிறப்பால் சீக்கியர். மசூதி, கோயில், குருத்துவாராவில் ஒலி பெருக்கிகளைப் பயன்படுத்தி, மக்களுக்கு இடையூறு செய்வது ‘கட்டாய மதத் திணிப்பு’ என்று டிவிட்டரில் பதிவிட்டிருந்தார். மசூதிகளில் தொழுகைக்கு அழைப்பதில் ஒலிபெருக்கியைப் பயன்படுத்துவதையும், கட்டாய மதத் திணிப்பு என்று அவர் கூறியிருந்தார். இதற்கு மதவாதிகளிடமிருந்து கடும் எதிர்ப்புகள் வரத் தொடங்கின. ஒரு இஸ்லாமிய மதக்குரு, சோனு நிகாமுக்கு எதிரான தண்டனையை அறிவித்திருந்தார். மேற்கு வங்கத்தில் மைனாரிட்டி ஒருங்கிணைப்புக் குழு துணைத் தலைவராக இருப்பவர் சையத் ஷா அதொஃப் அலி அல் கொய்தாரி. அவர்வெளியிட்ட தண்டனை அறிவிப்பு இவ்வாறு கூறியது:

சோனு நிகாம் தொழுகைக்கான ஒலி பெருக்கி அழைப்புக்கு (அசான்) எதிர்ப்பு தெரிவித்துள்ளதால், “அவர் தலையை மொட்டை அடித்து, கழுத்தில் கிழிந்துபோன செருப்பு மாலை போட்டு நாடு முழுதும் அதே கோலத்தில் அவரை இழுத்து வருவோருக்கு ரூ.10 இலட்சம் பரிசு தருகிறேன்” என்று அறிவித்திருந்தார். கடந்த ஏப்.18ஆம் தேதி அந்த அறிவிப்பு வந்தவுடன் அடுத்த நாள் ஏப்.19ஆம் தேதி, நிகாம், ஆலிம் எனும் முடிதிருத்தும் கலைஞரை தனது வீட்டுக்கு அழைத்து மொட்டை அடித்துக் கொண்டார். பிறகு டுவிட்டரில் இவ்வாறு பதிவிட்டார்:

“இன்று ஆலிம் என் வீட்டுக்கு வந்து எனக்கு மொட்டை அடித்திருக்கிறார். நீங்கள் அறிவித்த 10 இலட்சம் ரூபாயை ஆலிமுக்கு வழங்க தயாராக எடுத்து வைக்கவும்” என்று அந்த இஸ்லாமிய மத குருவுக்கு பதிவிட்டார். பிறகு மொட்டை அடித்த கோலத்தில் செய்தி யாளர்களிடம் பேசினார். பிரபல முடி திருத்தும் கலைஞர் ஆலிம் ஹக்கீரும் (இவர் ஒரு இஸ்லாமி யர்) உடனிருந்தார்.

“எனக்கு ஏராளமான முஸ்லிம் நண்பர்கள் உண்டு. பிரபல பாடகர் முகமது ரஃபியை எனது தந்தையாக நான் மதிப்பவன். குலாம் முஸ்தாபாகான், முகம்மது தாஃஹிர் ஆகியோரை எனது குருக்களாக மதிப்பவன். எனக்கு பாடல் பயிற்சி தருபவரும், ஓட்டுனராக இருப்பவரும் இஸ்லாமியர்கள்தான். இவர்கள் எல்லோருமே தங்கள் வீடுகளில்தான் தொழுகை நடத்துகிறார்கள். ஒலி பெருக்கி அழைப்பை ஏற்று மசூதிக்குப் போவது இல்லை. இவர்களையும் இஸ்லாமிய எதிரிகள் என்று முத்திரை குத்துவீர்களா?” என்று நிகாம் கேட்டார்.

“மதத்தின் பெயரால் ஒலிபெருக்கிகளை அலறவிடுவது மக்களுக்கு தொல்லையாக இருப்பதை நான் தொடர்ந்து சுட்டிக் காட்டி வருகிறேன். இப்போதும் அந்தக் கருத்தில் உறுதியாக இருக்கிறேன். மதத்துக்கு ஒலிபெருக்கிகள் கட்டாயத் தேவையல்ல; நான் கோயில்களுக்கும், குருத்துவாராவுகளுக்கும் சேர்த்துதான் இதைக் கூறுகிறேன். இந்து திருவிழாக்களில் திரைக் கலைஞர்களை வைத்து பொதுவிடங்களில் பாட்டு, நடனம் என்று ஒலி பெருக்கியை அலறவிடுகிறார்கள். மக்களுக்கு பெரும் தொல்லை தருகிறது. நான் இப்போது எழுப்பும் கேள்வி சமூகம் சார்ந்தது. மதம் சார்ந்தது அல்ல. நான் அரசியலில் இடதுசாரியும் அல்ல; வலதுசாரியும் அல்ல; இரண்டுக்கும் இடைப்பட்டவன். இந்த நிலைப்பாடுதான் என்னை மைனாரிட்டியாக்கி யிருக்கிறது. வன்முறை மிரட்டலுக்கு எதிராக இப்போது நான் பேசிக் கொண்டிருக்கிறேன். இந்த மிரட்டலுக்கு எதிராக நான் போராட்டம் நடத்தப் போவது இல்லை. அந்த இஸ்லாமிய மதகுருவுக்கு சவால் விடவும் விரும்பவில்லை. மதவெறிக்கு அச்சுறுத்தலுக்கு எதிராக அமைதியான எனது எதிர்ப்பை பதிவு செய்கிறேன். எனக்கு மொட்டை அடித்தவரே ஒரு இஸ்லாமியர்தான். அதை அவர் வெறுப்புணர்வுடன் செய்யவில்லை. அன்போடு செய்தார்” என்றார் நிகாம்.

இதற்குப் பிறகு இஸ்லாமிய மதகுரு கல்கத்தாவில் உள்ள தனது இல்லத்திலிருந்து செய்தியாளர்களை சந்தித்தார். “நான் விதித்த அனைத்து நிபந்தனைகளையும் நிகாம் முழுமையாக நிறைவேற்றவில்லை. மொட்டை மட்டுமே அடித்திருக்கிறார். கிழிந்த செருப்பை மாலையாகப் போட்டுக் கொண்டு இந்தியாவிலுள்ள அனைத்து வீடுகளுக்கும் அந்த கோலத்தில் சென்று வரவேண்டும் என்ற நிபந்தனைகளை நிறைவேற்றவில்லை. எனவே ரூ.10 இலட்சத்தை தர முடியாது. நான் ‘பேத் வா’ (மதக் கட்டளை) எதையும் பிறப்பிக்கவில்லை. அறிவிப்புதான் செய்தேன்” என்றார் மவுல்வி.

“அப்படியானால் நீதிமன்றம் போயிருக்கலாமே?” என்று செய்தியாளர்கள் கேட்டனர். “நிகாம் நீதிமன்றம் போகவில்லை. எனவே நானும் போகவில்லை” என்றார் இஸ்லாமிய மதகுருவான மவுல்வி.

உச்சநீதிமன்றம் இரவு 10 மணியிலிருந்து காலை 6 மணி வரை மத நிகழ்வுகள் என்ற பெயரால் ஒலிபெருக்கிகளை அலறவிடக்கூடாது என்று ஏற்கனவே தீர்ப்பு வழங்கி யிருக்கிறது.

இந்திய அரசியல் சட்டம் ஒவ்வொரு குடிமகனுக்கும் கருத்துரிமை வழங்கியிருக்கிறது. அந்தக் கருத்துரிமையை ஏற்க மறுக்கிறது மதவாதம். குற்றம் செய்தவர்களை தண்டிக்க இந்திய தண்டனைக் சட்டம் இருக்கிறது. அந்த சட்டத்தையும் மதிக்காமல், நேரடியாகவே தண்டனை வழங்குகிறது மதவாதம். இது மதச் சார்பற்ற நாடு தானா?

Pin It