29.1.11 சனி மாலை சரியாக 5.30 மணிக்கு வடலூர் பேருந்து நிலையம் அருகில் மாவீரன் முத்துக் குமார் வீர வணக்க நாள் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இன எழுச்சிப் பாடகர் தேனிசை செல்லப்பா பாடல்களோடு, நிகழ்ச்சி கடலூர் மாவட்ட அமைப்பாளர் கு. அழகிரி தலைமையில், புதுவை மாநிலத் தலைவர் லோகு அய்யப்பன் முன்னிலையில், தலைமை செயற்குழு உறுப்பினர் கலியமூர்த்தி வரவேற்புரையோடு தொடங்கியது.

முதலில் புதுவை மாநிலத் தலைவர் லோகு. அய்யப்பன் உரையாற்ற, அதைத் தொடர்ந்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அரசியல் ஆய்வுக் குழு மாநிலத் துணைச் செயலாளர் தடா மு. முருகேசன், பாட்டாளி மக்கள் கட்சி மாநில துணைப் பொதுச் செயலாளர் தி. திருமால்வளவன், ம.தி.மு.க. அரசியல் ஆய்வு மையச் செயலாளர் மு.செந்திலதிபன் ஆகியோர் உரைக்குப் பின், இறுதியாக கழகப் பொதுச் செயலாளர் கு. இராமகிருட்டிணன் உரையாற்றினார். அவரது உரையில், நாம் அத்தனை பேரும் குற்றவாளிக் கூண்டிலே நின்று கொண்டிருக்கிறோம். காரணம் முத்துக்குமார் இந்த வீர வணக்க நாளை தமிழ்நாடு நடத்தும் என்று ஆசைப்படவில்லை. தன்னை தமிழ்நாடு முழுவதும் வீரவணக்கம் செலுத்தி வணங்குவார்கள். தன் படத்திற்கு மெழுகுவர்த்தி ஏற்றி மரியாதை செலுத்துவார்கள் என்று அவன் ஆசைப்படவிலலை. அவன் ஆசைப்பட்டதெல்லாம் லட்சக்கணக்கான தமிழீழ மக்களை, தமிழ்நாடு மக்கள் காப்பாற்ற வேண்டும் என்றுதான், தன்னுயிரை தானே நெருப்புக்கு இரையாக்கிக் கொண்டான்.

முத்துக்குமார் ஒன்றும் கோழையில்லை. அவன் தற்கொலை செய்வதற்கோ, தீக்குளிப்பதற்கோ அவன் மனநோயாளி அல்ல. அவன் 32 பக்கத்திற்கு தமிழ்நாட்டிற்கு, உலக மக்களுக்கு, அய்.நா. மன்றத்திற்கு, இங்குள்ள காவல் துறைக்கு, மருத்துவர்களுக்கு, மாணவர்களுக்கு என ஒவ்வொருவருக்குமான செய்திகளை பதிவு செய்து, அந்த ஆவணத்தை மக்களிடம் அளித்துவிட்டு தீக்கிரையாக்கிக் கொண்டான் என்று சொன்னால், அவன் எவ்வளவு மன உறுதி படைத்தவனாக இருந்திருப்பான். அவன் எவ்வளவு வேதனைப்பட்டிருந்தால் வேறு யாரும் தமிழ்நாட்டிலே, தமிழ்நாட்டு மக்கள், இந்திய அரசை தட்டிக் கேட்கவில்லை. இந்திய அரசை தடுத்து நிறுத்தவில்லையே, தமிழ்நாட்டு மக்கள் முன் வரவில்லையே என்ற ஆதங்கத்திலேதான் முத்துக்குமார் தன் உயிரை தீக்கிரையாக்கிக் கொண்டான்.

தமிழ்நாட்டில் நாம் அத்தனை பேரும் திரண்டு போயிருந்தால் அனைத்து அரசியல் கட்சிகளும், தமிழ் உணர்வு இயக்கங்களும்  ஒன்றுபட்டு 2009 பிப்ரவரி மாதத்திற்கு முன்னர் குறைந்தது 10000 பேர் தெருவில் நின்றிருந்தால் முத்துக்குமார் இறந்திருக்க மாட்டார். நம்மோடு போர்க்களத்தில் நின்றிருப்பான். யாரும் போராடவில்லையே! எல்லோரும் பதிவு செய்வதோடு அடையாளப்படுத்துவதோடு நிறுத்திக் கொண்டார்களே, முதலமைச்சர் கடிதம் எழுதுகிறார் என்று சொன்னால் மற்ற தலைவர்கள் அறிக்கை விடுவதோடு நிறுத்திக் கொள்கிறார்கள் என்ற வேதனையில் தான் தன் சாவுக்கு பின்னாலாவது இந்த செய்தியை தாங்கிக் கொண்டு தமிழ்நாட்டு மக்கள் ஒன்றாக திரள மாட்டார்களா, தெருவுக்கு வந்து போராட மாட்டார்களா என்று தன்னை அழித்துக் கொண்டான் என்று குறிப்பிட்டுப் பேசினார்.  கடலூர் மாவட்ட தலைவர் வெங்கடேசன் நன்றி கூறினார்.

கூட்டம் தொடங்குவற்கு முன் பா.ம.க. மாநில துணைப் பொதுச்செயலாளர் தி. திருமால்வளவன், மாவீரன் முத்துக்குமார் நினைவுச் சுடரை ஏற்றி வைத்தார். கூட்டத்திற்கு புதுவை மாநிலத்திலிருந்து 4 வாகனங்களில் தோழர்கள் வந்திருந்தனர். கோவையிலிருந்து கழக மாநகரத் தலைவர் கோபால், மாநகரப் பொருளாளர் இரஞ்சித் பிரபு, அலுவலகப் பொருப்பாளர் சா. கதிரவன், பொள்ளாச்சி பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு மாநாடு போல் கூட்டம் நடைபெற்றது

Pin It