ilangumaranarதமிழக அரசின் திரு.வி.க. விருது பெற்ற மூத்த தமிழறிஞரான முதுமுனைவர் இரா.இளங்குமரனார் நேற்று (ஜூலை 25) இரவு முடிவெய்தினார். அவருக்கு வயது 94. இறுதி நிகழ்ச்சிகள் இன்று மாலை (ஜூலை 26) 4 மணிக்கு மதுரை திருநகர் இராமன் தெருவில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து, உடல் நல்லடக்கம் நடைபெறும். மறைந்த தமிழறிஞர் இரா.இளங்குமரனாருக்கு இளங்கோவன், பாரதி ஆகிய 2 மகன்களும், இரு மகள்களும் உள்ளனர். பேத்தி முத்தரசி ஐபிஎஸ் அதிகாரியாகப் பணியாற்றுகிறார்.

முதுமுனைவர் இரா.இளங்குமரனார் 30.1.1927 இல் நெல்லை மாவட்டம் வாழவந்தாள்புரம் கிராமத்தில் பிறந்தவர். தந்தை படிக்கராமு, தாயார் பெயர் வாழவந்த அம்மை. இளம் வயதிலேயே சொந்தமாக பாடல் இயற்றும் அளவுக்கு தமிழ் ஆர்வமும், புலமைத்திறனும் பெற்ற இவருக்கு 19 வயதிலேயே (4.8.1946) சங்கரன்கோவில் அருகில் உள்ள கரிவலம்வந்தநல்லூர் பள்ளியில் தமிழாசிரியர் பணி கிடைத்தது. பிறகு முறைப்படி புலவர் படிப்புக்கான தேர்வு எழுதி, 1951இல் சென்னை பல்கலைக்கழகத்தில் முதல் வகுப்பில் வெற்றி பெற்றார். முழுமையாக கிடைக்கப் பெறாமல், காலத்தால் செல்லரித்துப்போன குண்டலகேசி காப்பியத்தை தன்னுடைய கற்பனைத் திறனாலும், கவிதை இயற்றும் ஆர்வத்தாலும் முழுமை செய்தவர். அந்நூலினை 1958இல் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அரங்கேற்றம் செய்தார்.

1963இல் இவர் எழுதிய திருக்குறள் கட்டுரை தொகுப்பு நூலை, தமிழகம் வந்திருந்த அன்றைய பிரதமர் நேரு வெளியிட்டார். தேவநேயப் பாவாணர், பாவேந்தர் பாரதிதாசன், தொல்காப்பியர் ஆகியோரின் முழு படைப்புகளையும் தொகுக்கிற பணியும் அவர் செய்தார்.

காரைக்குடி அருகே உள்ள திருக்கோவிலூர் மடம் சார்பில், சங்க இலக்கிய வரிசை நூல்களைத் தொகுக்கும் பணி நடைபெற்றபோது அதில் புறநானூற்றை எளிய தமிழில் எழுதியவரும் இவரே. இந்தத் தொகுப்பு நூலை 2003-ம் ஆண்டு அன்றைய குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் வெளியிட்டார். இவரது நூல்கள் பலவற்றை மதுரை பாரதி புத்தக நிலையமும் வெளியிட்டுள்ளது.

திருநகர் முத்துத்தேவர் முக்குலத்தோர் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்த காலத்திலேயே, மதுரை மாவட்ட தமிழாசிரியர் கழகச் செயலாளர், தமிழ்க் காப்பு கழகச் செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளையும் கவனித்தார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றிய தமிழண்ணல், பள்ளி ஆசிரியராக இருந்த இளங்குமரனாரை பல்கலைக்கழகத்தில் தமிழ் கற்பிக்கும் பணிக்கும் பயன்படுத்திக் கொண்டார்.

திருச்சியில் திருவள்ளுவர் தவச்சாலை என்ற பெயரில் தமிழ்ப்பணி ஆற்றிவந்த இவர், அங்கே 45,000 நூல்கள் கொண்ட நூலகத்தையும் நடத்தினார். பிற்காலத்தில் அதில் 40 ஆயிரம் நூல்களை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்துக்கு நன்கொடையாக வழங்கினார்.

வயது முதிர்வு காரணமாக மதுரை திருநகருக்கே திரும்பிய பின்னரும் கூட அவர் தமிழ்ப்பணியை நிறுத்திக்கொள்ளவில்லை. மதுரை வடக்குமாசி வீதியில் உள்ள மணியம்மை பள்ளியில் மாதந்தோறும் நடைபெறுகிற கருத்தரங்குகளில் பங்கேற்றார். பல்வேறு விருதுகளைப் பெற்ற விருதுகளுக்கான பரிசுத் தொகையை தமிழ் வளர்ச்சிப் பணிகளுக்கே செலவிட்டவர் இரா. இளங்குமரனார்.

21 குண்டுகள் முழங்க இளங்குமரனார் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

- விடுதலை இராசேந்திரன்

Pin It