mohanகழகத் தலைவர் கொளத்தூர் மணி கண்ணீர் அறிக்கை

திராவிடர் விடுதலைக் கழகத் தலைமைக் குழு உறுப்பினர் மதிப் பிற்குரிய தோழர் மடத்துக்குளம் மோகன் அவர்களை நாம் இழந்து விட்டோம். இந்த கொடும் கொரோனா நோய்த் தொற்று அவரை நம்மிடமிருந்து பிரித்து எடுத்துச் சென்றுவிட்டது.

பெரியாரியல் கருத்துக்களை தன் இளமை காலம் தொட்டு தெளிவான புரிதலுடன் அழுத்தமாக மனதில் பதித்துக் கொண்டவர்.

பெரியாரியலை பரப்புவதற்காக பொதுக் கூட்டங்கள், தெருமுனை கூட்டங்கள், எளிய வடிவிலான மந்திரமல்ல தந்திரமே நிகழ்ச்சிகள், இனிமையான அணுகு முறை இவற்றின் வழியாக இளைய தலை முறையிடம் எடுத்துச் செல்வதில் அவர் எடுத்துக்கொண்ட முயற்சிகளும், அதனால் விளைந்த பலனும் அளப்பரியது. பெரியாரியல் பயிரலங்கு களிலும் பெரியாரியலை எளிய வடிவில் கற்பிக்கும் அளவு ஆழ்ந்த வாசிப்பு திறனும், கொள்கைப் பற்றும் உடையவர்.

தமிழீழ விடுதலையின் பால் பெரும் அக்கறை கொண்டவர். விடுதலைப் புலிகளுக்கு தோள் கொடுத்தவர். ஈழத்துக் கவிஞர் காசி ஆனந்தன் அவர்கள் எழுதிய ‘தம்பி ஜெயத் துக்கு’ எனும் நூலில் தோழர் மடத்துக் குளம் மோகன், ஈழ ஆதரவு செயல்பாடுகளை குறிப் பிடும் அளவு ஈழ விடுதலைக்கு தன் பங்களிப்பை செய்தவர்.

தோழர்களை ஒருங்கிணைப்பது, அவர்களை அமைப்பாய் செயல் தளத்தில் இயங்க செய்வது என உழைத்த சிறந்த ஒரு தோழர்.

அவரை இழந்து வாடும் அவருடைய கொள்கை குடும்பத்தின் வாழ்விணையர், அன்பு மகள் ஆகியோரின் துயரில் நாமும் பெரும் துயரத்தோடு இணைந்து கொள்கிறோம். திராவிடர் விடுதலைக் கழகம் தன்னுடைய ஒரு மூத்த உறுப்பினரை இழந்து நிற்கிறது.

ஈடுசெய்ய முடியாத அவரின் இழப்பை அவர் காண விரும்பிய சுயமரியாதை சமத்துவ உலகை படைப்பதில், ஈடு செய்ய முயன்று, முனைந்து பணியாற்றுவோம்!

பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன்: ‘எங்களின் எதிர்கால நம்பிக்கையை நீங்கள் இப்படி குலைக்கலாமா மோகன்?’ என்று விடுத்துள்ள துயர அறிக்கை

மடத்துக்குளம் மோகன் அவர்கள் நமது இயக்கப் பணிகளில் இருந்து விடைபெற்றுக் கொண்டு விட்டார். கொரோனா அவரையும் பறித்துக் கொண்டு விட்டது. நம்பவே முடியவில்லை, இந்த செய்தியை உள்ளம் ஏற்கவே மறுக்கிறது.

திராவிடர் விடுதலைக் கழகத் தூண்களில் அவர் ஒருவர். நமது இயக்கத் தின் எதிர்கால நம்பிக்கையாக அவரை நினைத்திருந்தோம். தலைமைக் குழு உறுப்பினர் என்ற பொறுப்பில் இருந்தாலும், அவரது இயக்கத் தொண்டு அதைவிட மகத்தானது.

நகராட்சியில் அரசு அலுவலராக இருந்து கொண்டே திராவிடர் கழகத்தில் இணைந்து தீவிர களப்பணியாற்றி வந்தார். கோவை இராமகிருட்டிணன் திக வில் இருந்து பிரிந்து சென்ற போது அவரது தமிழ்நாடு திராவிடர் கழகத்திலும் பிறகு கழகங்கள் இணைந்து உருவாக்கிய தந்தை பெரியார் திராவிடர் கழகத்திலும் பிறகு திராவிடர் விடுதலைக் கழகத்திலும் பங்கேற்று செயல்பட்டார்.

உடுமலை, பொள்ளாச்சிப் பகுதிகளில் தனது மென்மையான அணுகுமுறைகளால் பல தோழர்களை திராவிடர் விடுதலைக் கழகத்தில் இணைத்து தொடர்ந்து களப்பணி செய்து கொண்டே இருந்தார். தன்னை முன்னிலைப்படுத்தாமல் இயக்கத்தை முன்னிலைப்படுத்தியவர். உழைப்பை மட்டும் தரவில்லை தேவையானபோதெல்லாம் தனது சொந்த பணத்தையும் வெளியே யாருக்கும் தெரியாமல் செலவிடுவார்.

பணி ஓய்விற்குப் பின் திராவிடர் விடுதலைக் கழகத்தின் முழுநேர செயல்பாட்டாளராக அவர் மாறினார். தமிழகம் தழுவிய பொறுப்புகளில் பணியாற்ற வேண்டிய தோழராக பயன்படுத்த வேண்டும் என்று பல நேரங்களில் கழகத் தலைவரும் நானும் பேசியிருக்கிறோம்.

1983 ஆம் ஆண்டில் ஈழ பிரச்சனை தொடங்கிய காலத்தில் தன்னை தீவிரமாக ஈழ விடுதலை இயக்கங்களில் ஈடுபடுத்திக் கொண்டார். விடுதலைப் புலிகளின் கண்காட்சி, அவர்களின் இயக்கத்திற்கு நிதி திரட்டுதல் விடுதலைப் புலிகளின் பத்திரிக்கைகள், நூல்களைப் பரப்புதல் என்று அவரது பணி தொடர்ந்தது. அந்தக் காலத்திலிருந்தே நான் அவரிடம் நெருக்கமாக இருந்திருக்கிறேன்.

சென்னையில் புலிகளின் ஆதரவாளர்களாக நாங்கள் நாடகக் குழு ஒன்றை உருவாக்கி புலிகளின் வீர வரலாற்றை தமிழகத்தின் பல ஊர்களில் நாடகமாக நடத்தினோம். அதன் வழியாக திரட்டிய நிதியை புலிகளின் இயக்கத்திற்கு வழங்கினோம்.

உடுமலைப் பேட்டையில் ‘தீர்வுக்காக’ என்ற நாடகம் நடத்த நாங்கள் வந்த போது நாடகம் தொடங்க வேண்டிய சில மணி நேரத்திற்கு முன் அரங்கை மாற்ற வேண்டிய கட்டாயம் ஒன்று உருவானது.

சில மணி நேரங்களிலேயே பம்பரமாக சுழன்று மோகனும் தோழர் களும் நாடக அரங்கை மாற்றுவதற்கு ஆற்றிய செயல் பாடுகள் இப்போதும் கண்முன் இருக்கின்றன. தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் தமிழக அரசியல் பொறுப்பாளராக செயல்பட்ட பேபி சுப்ரமணியமிடமும் விடுதலைப் புலி தோழர்களுடனும் மிக நெருக்கமாகப் பழகியவர் மோகன்.

களப்பணி மட்டுமல்ல கழக மேடைகளில் ‘மந்திரமா தந்திரமா’ நிகழ்ச்சிகளை நடத்தி பகுத்தறிவு பிரச்சாரம் செய்து வந்தார். கடந்த கொரோனாவின் போது நாள்தோறும் திராவிடர் விடுதலைக் கழகம் இணையதளப் பிரிவு நடத்திய சுமார் 80 காணொளி கருத்தரங்கங்களிலும் மோகன் தொடர்ந்து பங்கெடுத்து வந்தார்.

பல நேரங்களில் அலைபேசியில் தொடர்பு கொண்டு என்னிடம் பேசுவார். அவருடன் உரையாடுவதே எனக்கு மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் தரும். கடந்த கால வரலாறுகளை பகிர்ந்து கொள்ளக்கூடிய விரல்விட்டு எண்ணக்கூடிய தோழர்களில் அவரும் ஒருவர்.

கடந்த கொரோனா காலத்திலும் பல ஈழ அகதிகள் முகாம்களுக்கு நிவாரணப் பணிகளை செய்து வந்தார். இப்போது மருத்துவ மனையில் இருந்த கடைசி நேரத்திலும் கூட, கொரோனா ஊரடங்கால் உணவு வழங்குவதற்கு உதவிட நிதி வழங்கி வந்ததை தோழர்கள் நெகிழ்ச்சி யுடன் கூறுகிறார்கள்.

ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர். அவரது அன்பு மகள் விவசாயத் துறையில் அரசு உயர் பதவியில் இருக்கிறார் அவர்களுக்கு ஆறுதல் கூற நம்மிடம் வார்த்தைகள் இல்லை.

இயக்கமே ஒரு செயல் வீரரை இழந்து தவிக்கும்போது நம்மால் என்ன செய்ய முடியும் யாருக்கு யார் ஆறுதல் கூறுவது? எப்போதும் போல தோழர் மோகன் குடும்ப உறுப்பினர்களும் கழக குடும்பத்தின் உறுப்பினர்கள் தான். அவர்களோடு இயக்கம் எப்போதும் துணை நிற்கும்.

மடத்துக்குளம் மோகன் பிரிந்துவிட்டாரா? அவரை இனி சந்திக்க முடியாதா? அவரோடு பேச முடியாதா? இயக்க நிகழ்ச்சிகளில் அவர் இருக்க மாட்டாரா? என்று நினைக்கும்போதே நெஞ்சம் பதறுகிறது. எங்களின் எதிர்கால இயக்க நம்பிக்கையை நீங்கள் இப்படி குலைக்கலாமா மோகன்?

இரங்கல் கூட்டம்

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் தோழர் மடத்துக்குளம் மோகன் அவர்களின் சீரிய சமுதாய பணிகளை நினைவு கூறும் வகையில், 02.06.2021 அன்று மாலை 6 மணியளவில் முகநூல் பக்கத்தில் நேரலையாக நடைபெற்றது.

கழகத் தலைவர் கொளத்தூர் மணி, கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், வெள்ளியங்கிரி (கோவை மாவட்டச் செயலாளர்), தேன்மொழி (தமிழ்நாடு மாணவர் கழகம்), விஜயகுமார் (இணையதள பொறுப்பாளர்), பரிமளராசன் (சமூக வலைதள பொறுப்பாளர்), சூலூர் பன்னீர் செல்வம் (தலைமைக் குழு உறுப்பினர்), தபசி குமரன் (தலைமை நிலைய செயலாளர்), திருப்பூர் துரைசாமி (பொருளாளர்), பால்.பிரபாகரன் (பரப்புரை செயலாளர்), இரத்தினசாமி (அமைப்புச் செயலாளர்) ஆகியோர் நினைவேந்தல் உரையாற்றினர். தோழர் மடத்துக்குளம் மோகன் இணையர் ஜோதி மற்றும் அவரின் மகள் அறிவுமதி, தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் சிவகாமி ஆகியோர் தங்களின் துயரங்களை, நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர்.

- கொளத்தூர் மணி