பெரியார் பெருந் தொண்டர் கோவை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் மேட்டுப் பாளையம் பா. ராமச்சந்திரன் 77ஆவது பிறந்த நாள் பாராட்டு விழா, கோவை மாவட்டக் கழக சார்பில் ஜன. 4, 2021 மாலை 5 மணியளவில் மேட்டுப் பாளையம் ஈஸ்வரியம்மாள் திருமண மண்டபத்தில் சிறப்புடன் நடை பெற்றது.
கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமை யில் நடந்த விழாவில் பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த தோழர்களும் பா. ராமச்சந்திரன் அவர்களின் உறுதியான பெரியார் கொள்கைப் பற்றையும் செயல்பாடுகளையும் பாராட்டி உரையாற்றினர்.
குட்டையூர் மா. கந்தசாமி, விழாவின் நோக்கத்தையும், பா. ராமச்சந்திரனின் தீவிர செயல் பாடுகளையும் அவரோடு இணைந்து செயல்பட்ட நினைவுகளையும் விரிவாகப் பகிர்ந்து கொண்டார். மேட்டுப்பாளையத்தில், பா. ராமச் சந்திரன் முன்முயற்சி எடுத்து நடத்திய மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலம் உருவாக்கிய தாக்கத்தைப் பலரும் குறிப்பிட்டனர்.
ம.தி.மு.க. தணிக்கைக் குழு உறுப்பினரும், பவானி நதி நீர் மற்றும் சுற்றுச் சூழல் உரிமை செயல்பாட்டாளருமான டி.டி. ரங்கசாமி, பா. ராமச்சந்திரன் அவர்களுக்கும் தனக்கும் உள்ள நீண்டகால கொள்கை உறவுகளை நினைவு கூர்ந்தார்.
நூல்களைத் தேடித் தேடி வாங்கி படிப்பதில் பா. ராமச்சந்திரன் அவர்களுக்குள்ள ஆர்வத்தை சுட்டிக் காட்டிய அவர், அத்தகைய நூல்களை தனக்கு மட்டும் வாங்காமல், நண்பர்களுக்கும் சேர்த்து வழங்கும் பண்பைப் பெருமையுடன் நினைவு கூர்ந்தார். ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ வளர்ச்சிக்கு ரூ.500 நன்கொடையை கழகத் தலைவரிடம் வழங்கினார்.
திராவிடர் கழக சார்பில் பேசிய வேலுச்சாமி, தன்னை கொள்கை ரீதியாக வளர்த்தெடுத்தவர் என்றும், களப் பணிகளில் இணைந்து செயல்பட்டதையும் வயது வேறுபாடின்றி இளைஞர்களோடு இணைந்து பணியாற்றும் அவரது கொள்கைத் துடிப்பையும் மனம் திறந்து பாராட்டினார்.
மருத்துவர் மகேந்திரன், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசினார். மேட்டுப்பாளையத்தில் அவர் நடத்தும் மருத்துவமனையின் மேல் மாடியில் பொது மக்களுக்கான இலவச நூல் நிலையம் ஒன்றை நடத்தி வருகிறார்.
அறிவு வளர்ச்சியே மானுட வளர்ச்சி என்ற பெரியார் கொள்கை வழியில் தான் செயல்பட்டு வருவதை குறிப்பிட்ட மருத்துவர், மதங்கள் சிந்தனைகளுக்கும் வளர்ச்சிக்கும் தடையாக இருக்கின்றன என்றார்.
பெரியார் கொள்கையாளராக தனது தந்தையார் செயல்பட்டார் என்றும், கரூர் நகரில் பிரபலமான ‘பெரியார் ஓட்டலை’ நீண்டகாலம் நடத்தியவர் தனது தந்தை என்றும் குறிப்பிட்டார். தி.மு.க. காரமடை ஒன்றிய செயலாளர் எஸ்.எம்.டி. கல்யாண சுந்தரம், மேட்டுப்பாளையம் வழக்கறிஞர் முனுசாமி, தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சி.ஆர். ராமச் சந்திரன் மற்றும் திராவிடர் விடுதலைக் கழக சார்பில் கழகப் பொறுப்பாளர்கள் யாழ் வெள்ளியங்கிரி, முகில் ராசு, ஈரோடு ரத்தினசாமி, சூலூர் பன்னீர்செல்வம், திருப்பூர் துரைசாமி, கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் பாராட்டி உரையாற்றினர்.
விடுதலை இராசேந்திரன் தனது தலைமை உரையில், “திராவிடர் விடுதலைக் கழகத்தில் ஏராளமாக இளைஞர்கள் இருக்கிறார்கள். வயதில் மூத்த தலைவர்கள் விரல்விட்டு எண்ணக் கூடியவர்களே இருக்கிறார்கள்.
ஆனாலும் பெரியார் கொள்கைகள் இளமைத் துடிப்பும் புரட்சிகர உள்ளடக்கமும் கொண்டது என்பதால், ‘தலைமுறை இடை வெளிகளைக்’ கடந்து ஒரே இயக்கத் தில் ஒருமித்த உணர்வோடு பயணிக்க முடிகிறது.
பெரியார் பெருந்தொண்டர் பா. ராமச்சந்திரன், 1962 முதலே பெரியார் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டவர். கொள்கைக் கோட்டையான தஞ்சை மாவட்டம், மன்னார்குடியைச் சார்ந்தவர். 1965ஆம் ஆண்டு பெரியாருடன் இளைஞராக அவர் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் இந்த மேடையில் வைக்கப்பட்டிருக்கிறது. தனக்கான அடையாளம் அதுதான் என்பதை அவர் பிரகடனப்படுத்தி இருக்கிறார்.
இயக்கத்தின் மூத்த முன்னோடிகள், கழகப் பேச்சாளர்கள் திருவாரூர் தங்கராசு, திருச்சி செல்வேந்திரன் போன்றவர்களோடு நெருங்கிப் பழகியவர். இயக்க முன்னோடிகளைப் பற்றி நன்கு அறிந்து வைத்திருப்பவர். அவ்வப்போது அலைபேசியில் என்னிடம் தொடர்பு கொண்டு இயக்கம் தொடர்பான வரலாற்றுத் தகவல்களையும் கழக முன்னோடிகள் குறித்தும் கருத்துகளை உணர்வு களுடன் பகிர்ந்து கொள்வார்.
பெரியார் தொண்டர்கள் வாழும் காலத்திலேயே இதுபோன்ற விழாக்களை நாம் நடத்த வேண்டும்; இதன் வழியாக இயக்க உணர்வுகளை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல வேண்டும்” என்று குறிப் பிட்டார்.
கழகத் தலைவர் கொளத்தூர் மணி உரையில், “திராவிடர் விடுதலைக் கழகம் தொடங்கப்பட்ட பிறகே பா. ராமச்சந்திரனிடம் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்தது. இளைஞர் களோடு வயது வேறுபாடின்றி பழகி களப்பணியாற்றக் கூடியவர். இந்த அழைப்பிதழில் அவர் எடுத்துக் காட்டியுள்ள பெரியார் கருத்தை குறிப்பிட விரும்புகிறேன்.
இந்த இயக்கப் பணி செய்வதால் இதில் விருதோ மதிப்போ கிடைக்காதென்று தெரியும். ஒருவர் பாக்கி இல்லாமல் எல்லோரையும் பகைத்துக் கொள்ள வேண்டியிருக்கும். ஒவ்வொருவரிடமிருந் தும் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாக நேரிடும் என்று தெரியும், தெரிந்தே தான் வந்தேன்.
- பெரியார்
எதிர்ப்புகளை எதிர்பார்த்துதான் இந்த இயக்கத்தில் தொண்டாற்ற முடியுமே தவிர, பாராட்டுகளை எதிர்பார்த்து அல்ல என்ற பெரியார் கருத்தை மிகச் சரியாக எடுத்துக் காட்டியிருக்கிறார்” என்றார்.
பா. ராமச்சந்திரன் ஏற்புரையில், “நான் பெரியார் இயக்கத்தின் சாதாரணமான கடைசித் தொண்டன்; இத்தகைய பாராட்டுகளுக்கு நான் தகுதியுடையவனா என்பது தெரிய வில்லை” என்று ஒரே நிமிடத்தில் தன்னடகத்துடன் கூறினார்.
நிகழ்வின் இறுதியில், பா. ராமச் சந்திரன் மகன் இங்கர்சால் நன்றி கூறினார். பா. ராமச்சந்திரன் மகள் தென்றல், M.A.,D.Cop., - பார்த்தசாரதி இணையரும், மற்றொரு மகள் அறிவுக் கொடி, M.Sc.,B.T.,- வெங்கடேஷ் இணையரும் பங்கேற்றனர்.
- விடுதலை இராசேந்திரன்