கீற்றில் தேட...

Periyar with Sarangabani in Singaporeதோழர் அம்பேத்கார் அவர்களின் தைரியத்துக்கு ஒரு உதாரணம் சொல்லுகிறேன். அவர் மந்திரியாக இருக்கும்போது ஒருதடவை சென்னைக்கு வந்திருந்தார். அப்போது ஒரு கூட்டத்தில் பேசும்போது,'கீதை - முட்டாள்களின் பிதற்றல்' என்று சொன்னார்.

கீதைக்கு இந்த நாட்டில் எவ்வளவு விளம்பரம் இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியும். காந்தியாரிலிருந்து, ஆச்சாரியாரிலிருந்து - பெரிய அய்க்கோர்ட் ஜட்ஜூகள், இன்னும் பெரிய மனிதர்கள் என்பவர்களெல்லாம் கீதையைப் புகழ்வதே வேலையாகக் கொண்டிருக்கிறார்கள்.

அதுமட்டுமல்ல; கீதைக்கு வியாக்கியானம் கூறுவது, கீதையை ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பது என்பது ஒரு மதிப்பு, கவுரவம் என்பதாக இந்த நாட்டில் இருக்கிறது. அப்படிப்பட்ட பெரும் விளம்பரமான நிலையிலிருக்கிற கீதையை, ‘முட்டாள்களின் பிதற்றல்' என்று அம்பேத்கார் சொன்னார்.

முட்டாள்களுடையது என்றாலே மோசம்; அதிலும் அந்த முட்டாள்களுடைய பிதற்றல் என்று கீதையை மிகவும் இழிவுபடுத்திக் கூறினார். யார் யாரை இதுபோய்ப் பாதிக்கிறது பாருங்கள்! அவர் அந்தப்படி பேசியபின் பார்ப்பனப் பத்திரிக்கைகள் அவருடைய பேச்சுக்கு மறுப்பு ஒன்றும் சொல்லாமல், ‘ஒரு மந்திரியாய் இருப்பவர் இப்படியெல்லாம் பேசலாமா ?' என்று எழுதின. அவ்வளவுதான் அவைகளால் முடியும் தவிர, அவர் சொல்லுவதை எப்படி எந்த ஆதாரத்தின் மீது மறுக்க முடியும் ?

(பெரியார், ‘விடுதலை’ 16.05.1952)