காவலர் என்ற பதம் காவலாக இருப்பவர், பாதுகாப்பவர், ஆபத்துக்களை தடுத்து நிறுத்துபவர் என்ற அர்த்தங்களில்தான் பயன்படுத்தப்படுகிறது.

இந்தக் காவல், பாதுகாப்பு எல்லாம் யாருக்கு? மக்களுக்குத்தான்! அதனால்தான் காவலர்கள் அரசாங்க ஊழியர்களாக இருந்தாலும் மக்கள் சேவகர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். மக்கள் சேவகர்கள் என்றால்... குடிமக்களின் வாழ்க்கைக்கும் - பாதுகாப்பிற்கும் உத்திரவாதம் அளிக்க வேண்டும். ஆனால் இன்று காவல்துறையினர் எப்படி நடந்து கொள்கின்றனர் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

பாதிக்கப்பட்டு புகார் அளிக்க காவல் நிலையம் செல்பவர்களை மரியாதைக் குறைவாக - சில நேரங்களில் ஆபாசமாகப் பேசுவதில் தொடங்கி - புகார் அளித்தவர் மீதே வழக்குப் பதிவு செய்வது, செல்வாக்கு உள்ளவர்களுக்கு சாதகமாக இருந்து கொண்டு ஏழை - எளிய மக்களை மிரட்டுவது, குற்றவாளிகளோடு திரைமறைவில் கைகோர்த்துக் கொண்டு குற்றச் செயல்களில் ஈடுபடுவது, அவர்களுக்கு சட்டத்தின் ஓட்டைகளைச் சொல்லித் தருவது, படுபாதகச் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது சாதாரண பிரிவுகளின் கீழ் வழக்குப் போடுவது இரண்டு தரப்பினருக்கிடையில் ஏற்படும் பிரச்சினைகளின் போது வழக்கை முடிப்பதற்காக இரு தரப்பினர் மீதும் வழக்குப் பதிவு செய்வது - இப்படி காவல்துறையினரின் சின்சியாரிட்டியை பட்டியல் போட்டுக் கொண்டே போகலாம்.

காவல்துறை சட்டத்தை தன் இஷ்டம் போல் பயன்படுத்துகிறது என்பதற்கு இவையெல்லாம் உதாரணங்கள் தான். காவல் துறையினரின் இதுபோன்ற மக்கள் விரோதப் போக்கின் காரணமாக பலர் காவல் நிலையம் சென்று புகார் கொடுக்கத் தயங்குகிறார்கள். இதுவே குற்றங்கள் அதிகரிப்பதற்கான காரணங்களில் ஒன்றாகவும் ஆகிவிடுகிறது.

சட்டம் தன்னைத் தண்டிக்கும் என ஒருவர் உள்ளபடியே நினைத்தால் தவறு செய்வதற்கு தயங்கும் நிலை உருவாகும். ஆனால் அந்தச் சூழ்நிலையை சமூகத்தில் உருவாக்க வேண்டிய காவல்துறையினரே தவறுகளுக்குத் துணை போகும் அவலத்தை ஏடுகள் தினச் செய்திகளாக வெளியிட்டு வரும் அளவிற்குத்தான் இன்றைய நிலைமை உள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன் திருட்டுக் கேஸில் கிரிமினல் ஒருவரைத் தேடிய வாணியம்பாடி போலீசார் அக்கிரிமினலைப் பிடிப்பதற்காக அவரது குடும்பத்தினரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து துன்புறுத்தியது.

இதனை எதிர்த்து கேள்விகேட்ட இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினரை காவல்துறை அன்பாக மிரட்ட... அவர்களோ, மக்கள் போராட்டத்தை வலுப்படுத்தி ஆர்ப்பாட்டத்தை அறிவித்தனர். நிலைமை, உளவுத்துறை மூலம் காவல்துறை தலைமையகத்திற்கு எட்ட... பின்னர் அந்தக் கிரிமினலின் குடும்பத்தினரை விடுவித்து பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தது வாணியம்பாடி காவல்துறை.

வாணியம்பாடி மட்டுமல்ல, நாட்டில் பல இடங்களில் எழுதப்படாத சட்டமாகவே இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது. சட்டம் சொல்லாத ஒன்றை செயல்படுத்த காவல் துறைக்கு யார் அதிகாரம் கொடுத்தது? சட்ட வரையறையை ஏற்படுத்தி, விதிமுறைகளை வகுத்து - இதற்கேற்பத்தான் செயல்பட வேண்டும் என்கிற கட்டுப்பாடு - குற்றவியல் நடைமுறைச் சட்டம் மூலம் காவல்துறை யினருக்கு வகுத்தளிக்கப்பட்டிருந்தும் அதன் அதிகார வரம்பைத் தாண்டி செயல்படும் காவல்துறையினரும் குற்றவாளிகள்தான். சமூக விரோதிகளுக்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது?

சில தீர்ப்புகளின் போது நீதிபதிகள் கூட சீருடை அணிந்த குற்றவாளிகள் என்றும் சட்ட அங்கீகாரம் பெற்ற குற்றவாளிப் படை என்றும் காவல்துறையை கடுமையாகச் சாட இதுபோன்ற செயல்கள்தான் காரணங்களாக அமைகின்றன.

அண்மையில் தில்லி உயர்நீதிமன்றம் ஒரு அதிரடித் தீர்ப்பை வழங்கியிருப்பது சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தும் காவல்துறையினருக்கு எச்சரிக்கையாகவே அமைந்திருக்கிறது.

தில்லி பட்டேல் நகரைச் சேர்ந்த மகாதேவ் என்பவரின் மனைவி வரதட்சணை கொடுமையின் காரணமாக தற்கொலை செய்து கொள்கிறார். இதனால் கீதாவின் தந்தை மகாதேவ் குடும்பத்தினர்தான் தனது மகளின் மரணத்திற்கு காரணம். அதனால் மஹாதேவ் குடும்பத்தினரைக் கைது செய்ய வேண்டும் என்று பட்டேல் நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கிறார். இந்தப் புகாரைப் பெற்றுக் கொண்ட காவல்துறை மகாதேவ் குடும்பத்தினரை ஸ்டேஷனுக்கு அள்ளிக் கொண்டு வந்து விசாரித்து வழக்கும் பதிவு செய்கிறது. இந்த வழக்கில் முன் ஜாமீன் கேட்டு மஹாதேவ்வின் சகோதரர் ஜெயபால் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்கிறார்.

இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி சிவநாராயண் திங்கிரா, "இதுபோன்ற வழக்குகளில் கணவர் வீட்டில் உள்ளவர்களை போலீசார் துன்புறுத்தக் கூடாது. ஆதாரம் இருப்பது உறுதியாகத் தெரிந்தால் மட்டுமே அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும்" என தீர்ப்பளித்துள்ளார். 

நீதிபதியின் தீர்ப்புக்கு பிறகாவது குற்றம் சாட்டப்பட்டவரின் குடும்பத்தினரை துன்புறுத்துவதையும், அவர்கள் மீது வழக்கு பதிவு செய்வதையும் காவல்துறை நிறுத்துமா? என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்!

- ஃபைஸ்

Pin It