கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

நண்பர்களே வணக்கம்!

திரு. ஸ்டாலின் குணசேகரன், திரு. மயிலானந்தன், திரு. சுடலைக்கண்ணன், திரு.சுத்தானந்தன், திரு. பாலன் ஆகியோருக்கும், இங்குத் திரளாகக் கூடியிருக்கும் ஈரோடு மக்கள் அனைவருக்கும் வணக்கம். அனைவருக்கும் வாழ்த்துகள்.

abdul_kalam_500

ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவையின் ஐந்தாம் ஆண்டு புத்தகத் திருவிழா நிறைவு விழாவில் கலந்து கொண்டு உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி. இந்த ஈரோடு, கொங்கு மண்டல மக்கள் அறிவு விருத்தி பெறவேண்டும் என்று நினைத்து இந்தப் புத்தகத் திருவிழாவை நடத்தும் ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவைக்குப் பாராட்டுகள். இதில் பல்வேறு வகைகளில் பங்கேற்ற அனைவருக்கும் பாராட்டுகள்; வாழ்த்துகள்.

புத்தகக் கண்காட்சிகளின் மூலம் சமுதாயம் நல்ல நூல்களை, எழுத்தாளர்களை ஊக்குவிக்க வேண்டும். மூத்தோர்கள் இளையோரை எழுத ஊக்குவிக்க வேண்டும். எழுத்தாளர்கள் நூல்களை உருவாக்கி நல்ல எண்ணங் களையும், நல்ல இலட்சியங்களையும் ஊக்குவிக்க வேண்டும்.

இந்த வேளையில் ‘நல்ல நூல்கள் உற்ற நண்பர்கள்’ என்ற தலைப்பில் என் எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். நான் சிறுவனாக இருக்கும்போது என் மனதில் பல அச்சங்கள் தோன்றின. நான் இராமேஸ் வரத்தில் ஆரம்பப் பள்ளியில் படித்தபோது மேல்நிலைப் பள்ளிக்குப் போவேனா என்ற அச்சம் சூழ்ந்திருந்தது. நான் இராமநாதபுரம் மேல்நிலைப் பள்ளியில் படித்தபோது அங்கிருந்த பகட்டான, தெளிந்த ஆங்கிலம் பேசிய மாணவர்கள் என்னை நண்பனாக ஏற்பார்களா என்ற அச்சம் மிகுந்திருந்தது. நான் ஒன்பதாம் வகுப்பில் படித்த போது மேலும் படிப்பேனா என்று பயம் எழுந்தது. 

நான் பத்தாம் வகுப்பில் படித்தபோது இந்த அச்சங்களெல்லாம் அகன்று போய்விட்டன. காரணம் என் ஆசிரியர் சிவசுப்பிரமணிய அய்யர் நல்ல இலட்சியங் களைக் கற்பித்தார். என் இலட்சியப் பயணத்தில் புத்தகங்கள் வழிகாட்டியாகத் திகழ்ந்தன.

என் வாழ்க்கையில் மூன்று புத்தகங்கள் என்னை வழிநடத்திச் சென்றன. 1954-இல் சென்னை மூர் மார்க் கெட்டில் நான் இருபது ரூபாய்க்கு வாங்கிய புத்தகம் வில்லியம் வாட்சன் எழுதிய டுகைந குசடிஅ அயலே டுயஅயீள. இந்தப் புத்தகம் என் வாழ்வில் ஐம்பது வருடங்கள் நண்பனாக இருந்தது. இப்பொழுதும் இருந்து வருகிறது.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட, எல்லா நாகரிகங்களுக்கும் ஏற்புடைய நூல்தான் திருக்குறள். என் வாழ்வு முழுவதற்கும் நல்ல அறிவுரை வழங்கி வளம் சேர்த்த நூல் திருக்குறள். ஒரு திருக்குறள் என் வாழ்க்கையைச் செழுமைப்படுத்தியது. அதைக் கேளுங்கள்.

அறிவற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும்

உள்ளழிக்கல் ஆகா அரண்

மூன்றாவது புத்தகம் டென்னிஸ் வொய்ட்லியின்

‘நுஅயீசைந டிக அiனே’. திருவள்ளுவரின் எண்ணங்கள், கருத்துகள் செயல்வடிவமெடுத்து அறிவுப்புரட்சியால் நடக்கும் விந்தைகளை இப்புத்தகத்தில் காணலாம். நம்மோடு பயணித்து நம் வாழ்வைச் செம்மைப்படுத்தும் புத்தகம் இந்தப் புத்தகம்.

புத்தகம் எப்படி என் உற்ற நண்பனாக இருந்தது என்பதைக் காட்ட ஒரு நிகழ்வைப் பகிர்ந்து கொள்கிறேன். நான் 1955-ஆம் ஆண்டு ஆஐகூ-இல் இரண்டாம் ஆண்டு படித்தேன். டிசம்பர் மாத விடுமுறையில் விடுதி நண்பர் களெல்லாம் ஊருக்குச் சென்றுவிட்டனர். இராமேஸ் வரத்திலிருந்து என் மாமா அகமத் அலி டெலிபோன் செய்து இராமேஸ்வரத்தைப் புயல் தாக்கி விட்டதென்றும், என் பெற்றோர்கள் என்னைப் பார்க்க விரும்புகிறார்கள் என்றும் சொன்னார். உடனே ஊருக்குச் செல்ல மனம் துடித்தது. பயணத்திற்குப் பணமில்லை. அப்போது என் இடமிருந்த ஒரே சொத்து என் புத்தகம்தான். சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் லெட்சுமணசாமி முதலியார் சிறந்த விமானப் பொறியியல் மாணவனாக என்னைத் தேர்ந்தெடுத்துப் பரிசாக வழங்கிய The theory of elastic என்ற அந்தப் புத்தகம்தான். அப்போது அந்தப் புத்தகத்தின் விலை 400 ரூபாய். வேறு வழியில்லை. மூர் மார்க்கெட் சென்று பழைய புத்தகக் கடைக்காரரிடம் புத்தகத்தைக் கொடுத்தேன். அந்தக் கடைக்காரர் என் புத்தகத்தைப் பார்த்தார். என்னைப் பார்த்தார். உனக்கு எவ்வளவு பணம் வேண்டுமென்று கேட்டார். அறுபது ரூபாய் என்றேன். பணம் தருகிறேன். ஊருக்குப் போய்விட்டுத் திரும்பி வந்து பணத்தைக் கொடுத்துப் புத்தகத்தைத் திரும்பப் பெற்றுக்கொள் என்றார். ஊருக்குச் சென்று பெற்றோரைப் பார்த்தேன். திரும்பி வந்து பணத்தைக் கொடுத்துப் புத்தகத்தைத் திரும்ப வாங்கிய போது அளவில்லா மகிழ்ச்சி அடைந்தேன்.

புத்தகம் அறிவார்ந்த சமுதாயத்தைப் படைக்கும். அறிவின் இலக்கணம் கற்பனைச் சக்தி + மனத்தூய்மை + உள்ள உறுதி என்ற சமன்பாடு ஆகும். புத்தகங்கள் கற்பனைச் சக்தி, மனத்தூய்மை, உள்ள உறுதி ஆகியவற்றை அளிக்கின்றன; அறிவை வழங்குகின்றன. இந்தியாவை வல்லரசாக்க 54 கோடி இளைஞர்களால்தாம் முடியும். அறிவார்ந்த இளைஞர்கள்தாம் வல்லரசு இந்தியாவைப் படைக்க முடியும். அறிவைப் பெறுவதற்கு இளைஞர்கள் புத்தகங்கள் படிக்க வேண்டும்.

இனிமையான, வளமான இந்தியாவை, உலகத்திலேயே சொர்க்கபுரியான இந்தியாவைப் படைக்கப் புத்தகங்கள் படிப்போம்.

ஈரோடு புத்தகத் திருவிழாவில் பங்கேற்கும் அனைவருக்கும் என்னுடைய வேண்டுகோள் என்னவென்றால் புத்தகங்களையும் உற்ற நண்பர்களாக ஏற்றுக்கொள்ளுங்கள். ஆண்டுதோறும் ஈரோடு புத்தகத் திருவிழா கோலாகலமாக நடந்தேற என் வாழ்த்துக்கள்.

(2009ஆம் ஆண்டு ஈரோடு புத்தகத் திருவிழா நிறைவு விழாவில் அப்துல் கலாம் ஆற்றிய நிறைவுரையின் எழுத்து வடிவம்)